எஸ். சண்முகம்/மெய்மறத்தல் – பார்வையாளனை ஈர்த்தல்…..

மெய்மறத்தல் – பார்வையாளனை ஈர்த்தல்…..

அன்றாடம் காலை மெய்யெழுதலுடன் நீடிக்கும் மனமூட்டத்திலிருந்து விடுபட வழக்கம்போல் ஜாஸ் அல்லது புளூஸ் இசை கேட்டபடியே தன்னியல்பை மீட்டெடுப்பது என் வழக்கம். இன்றுமட்டுமல்ல பெரும்பான்மையான நாட்கள் Miles Davis இன் ‘’Sketches of Spain” இசைக்கோர்வைதான் ஒலித்து கொண்டிருக்கும்.

கைபேசியில் ஒரு அழைப்பொலி யாரிடமிருந்து வருகிறது என்று பார்த்துவிட்டு, அழைப்பை ஏற்றதும் சண்முகம் இன்று வீட்டில்தானே இருப்பீங்க, நான் பார்க்க வரேன் என்றார், ஓவியர் சந்ரு. அடுத்த அரைமணி நேரத்தில், அவரது சீடரான கவிஞர் ப்ரியம் அழைத்து மாஸ்டர் இன்று உங்களை பார்க்க வருவதாக சொன்னார் என்றது இப்போதுதான் பேசினார் என்றேன்.

1981ஆம் ஆண்டின் இறுதி மாதங்கள் ஒன்றில் அவருடனான முதல் சந்திப்பு சோவியத் கலாச்சார மையத்தில் கிட்டியது. அப்போது நான் பச்சையப்பன் கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவன். அந்நாள் முதல் இந்நாள் வரை எங்கள் ஆப்த நட்பின் அன்பிழை அறுபடவே இல்லை. உறையாத கலையியக்க நீட்சியின் மெய்யுரு சந்ரு. இவரைச் சந்தித்த அங்குதான் என் வாழ்நாள் நண்பர்களான கவிஞர் பழநிபாரதி, மற்றும் தமிழிசை அறிஞர் நிழல் திருநாவுக்கரசு இருவரையும் சந்தித்தேன்.

பலநாட்கள் ஓவியம் சிற்பம் மற்றும் கவிதை குறித்து நிறையவே சந்ரு உரையாடுவார். கவிதைகளும் எழுதுவார். வாரத்தில் ஓரிரு நாட்கள், சோவியத் கலாச்சார மையத்தின் வாசலில் பேசிய பின்னர், நடந்து கொண்டே என் இல்லத்திற்கு வருவார், இரவுமுழுவதும் பேசிய பின்னர், அவருடனே கிளம்பி அயனாவரத்திலுள்ள சந்ருவின் நண்பரின் மரதொட்டியில் அமர்ந்து அன்றிரவு வரை பேசுவோம். சந்ரு பேசுவதோடு அல்லாமல் அடுத்த நாள், அவர் பணியாற்றிய சென்னை ஒவியக் கல்லூரி பீங்கான் கைவிணை துறையில் அமர்ந்து, தனது பையிலுள்ள முழுத்தாளில் வரைந்து, அதன் வரைக்கோட்டியக்கத்தினை விளக்குவார். கவிதை குறித்தும் நிறையவே விவாதிப்பார்.

குறிப்பாக அப்போது என்வீட்டிலிருந்த சிவவாக்கியர் பாடல்கள் உரையுடன் கூடிய இரத்தின நாயக்கர் சன்ஸ் பதிப்பை எடுத்து சென்றார். அவருக்கு பிடித்த சித்தர் பாடல்கள் அவை. புதுமைப்பித்தன் கதைகளில் சிற்பியின் நகரம் சிறுகதையில் உள்ள மாற்று அல்லது எதிர்-அழகியல் பற்றி பேசுவோம். இந்திய மரபு சிற்பக் கலையழகியல் குறித்த சந்ருவின் தன்னிகரற்ற தனித்துவமான மேதமையை இங்கு சொல்ல வேண்டும்.

சிற்பத்திலுள்ள வடிவங்களின் அசைவியக்கங்களை அபிநயித்து காண்பித்து, கலையின் மெய்மறத்தலை பிறனில் கடத்துவார். பழம்சிற்பங்களிலுள்ள வடிவ இடைவெளிகள்தான் முக்கியம் என நம்மை உணர வைப்பார். மேலும் வடிவவியல் சார்ந்த முப்பரிமாணங்களை, கோட்டோவியங்களாக வரைந்து காண்பிப்பார். சிற்பம்/பார்ப்போன், ஆகிய இரண்டின் கோணங்களைத் தாண்டிய- எதிர்பாராத கோணமும் அதிலுள்ளது என்பார். சந்ருவை நான் பேட்டி கண்ட ’அந்நூல் 100 பக்க அளவில் கலைஞன் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது.

தமிழின் விளிம்புநிலை மற்றும் தலித் அழகியல் முன்னோடியென சந்ருவின் கோட்டோவியங்கள் மிகமுக்கியமானவை. ஒருவகையில் தமிழ் ஓவிய புலத்தில் எதிர் மேலாண்மை அழகியலை நிறுவிய பெரும்பங்கு இவருடையது. அவருக்கென்று உள்ள தனியில்பே, மேற்கத்திய நவீனத்துவ ஓவியர்கள் மற்றும் சிற்பிகளின் படைப்புகளை நமது மரபு சிற்பங்களுடன் ஓப்பீட்டு இரண்டிலும் உள்ள ஒப்புமைகளை சொல்வதுதான். சந்ருவின் சிறப்பு அவர் சார்ந்த கல்விப்புலம் சாராத வெளிகளிலேயே பெறிதும் இயங்கி வந்தார். சந்ரு தனது சமகாலத்து ஒவியர்களின் கலையியலுடன் பிணங்கியே வந்துள்ளார்.

எண்பதுகளில் வெளிவந்த எனது துவக்க கால கவிதைத் தொகுதிகளான, ‘’ஒரு பழைய கதவு’’ மற்றும் ‘’பொம்மை அறை’’ இரண்டிற்கு முகப்போவியம் தந்தார். அது மட்டுமல்லாது, அவ்விரு தொகுதிகள் வெளிவருவதற்கான பொருளாதாரத்திலும் பங்களித்தார். அவரது அக்காலத்திய கவிதைகள் பெரும்பான்மையானவைகளை; நான் முதல் வாசகனாகவும், சில மாற்றங்களை சொல்பவனாக இருந்தேன்.

நிற்க..

இன்று மாலை 4மணியளவில் நான் வசிக்கும் பாடிய நல்லூரி, ஆட்டங்தாங்கல் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்தார். என் துணைவியாரிடம் நலம் விசாரித்து விட்டு, தேநீர் அருந்திய பின்னர், இப்போது அவர் செய்து கொண்டிருக்கும் 8அடி நீள (பெளத்த) பெண் சிற்பத்தின் புகைப்படத்தை பார்க்குமாறு காண்பித்தார். அதன் உடல் கோணங்களை எனது எழுத்தட்டையில் இருந்த காகத்தில் வரைந்து விளக்கினார். மேலும் ஒரு பெளத்த ஸ்தூபியில் புத்தரை வணங்கும் பெண்ணின் முகம், புத்தரை நோக்காமல், பார்வையாளனை நோக்குகிறது பார்த்தீர்களா என்று கேட்டார். நெடுநேரம் பார்த்தபின் எனக்கு அவரது சிற்பத்தில் எனக்கு தோன்றிய விநோதமான அம்சத்தை சொன்னேன். அவரது கையொப்ப நகைப்பொலியுடன், எழுந்து நின்று மெய்மறத்தல், பார்வையாளர் கவனம் ஈர்த்தலை அச்சிற்பம் எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளது என்பதை அதை தனது உடலில் நிகழ்த்திக் காட்டினார்.

அப்போது 41 வருடங்களுக்கு முன்பு உரையாடும் தருணங்களில் கண்ட, ஒளிமினுங்கும் விழிகள். உலகின் பழமையான தாய் தெயவம், லட்ஜா, யக்சி சிலைகள் – மெக்சிகன் சக்மூல், ஹென்றி மூரின் சிற்பங்கள், கியூபிசம் ஆகிய கூறுகள், பெளத்தம் சிற்பத்தில் உள்ளார்ந்திருப்பதை வரைந்து விளக்கினார். உங்களின் இச்சிற்பம் கண்காட்சிக்கு வரும் நாளில் சிற்பம் குறித்த சிறுநூல் ஒன்று நிச்சயம் வெளியிட வேண்டும் என்றேன்.

நிச்சயம், அடுத்தமுறை வரும்போது காரனோடைக்கு அழைத்து செல்கிறேன். அங்கு அந்த சிற்பத்தை பாருங்கள் என்றார். சந்ருவின் கலையியல் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம், விவாதிக்கலாம், அவர் நிகழ்த்த காணலாம்.

மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஒருமுறை தேநீர் பருகிவிட்டு, காரில் ஏறும் முன்னர், இன்றைய விமர்சகர்கள் நமது மரபை பற்றி ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டு, ஆரத்தழுவிய அக்கணத்தில் ஒரே குரலில் இருவரும் ரொம்ப மகிழ்ச்சி என்றோம்.

மீண்டும் வருகிறேன் என்று விடைபெற்றார்.

3/11/2025