கணேஷ்ராம்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில் – 1ஆசிரியர்: அழகிய சிங்கர்

பாட்டுடைத் தலைவனான அழகிய சிங்கர் பற்றி அரை நாள் பேசலாம். அரைமணி நேரத்தில் பேசுவது கஷ்டம். அரை நாழிகை என்பது அநியாயம்.
முன்னுரையோடு முடிந்து விடுவதில்லை முன் ஜென்மத்தில் இருந்து எழுதிக் கொண்டு இருப்பவரின் இலக்கிய வாழ்வு.
அழகிய சிங்கர் அநியாயத்திற்கு அழகாகத் தலைப்புகள் வைப்பதில் சமர்த்தர். கல்யாண்ஜிக்கு அப்புறம் அழகிய சிங்கருக்கு அந்த வரம் கிட்டியிருக்கிறது.
யாருடனும் இல்லை, ஞாயிற்றுக் கிழமை தோறும் தோன்றும் மனிதன் என்று அநேகம். அந்த அழகுணர்ச்சியை இந்தப் புத்தகத்தின் தலைப்பில் பார்க்க முடியவில்லை. அது இடம் பெயர்ந்து புத்தகத்தின் உள்ளே போய் ஒளிந்து கொண்டு விட்டது.
என் வரையில் அழகிய சிங்கரின் புத்தகங்களிலேயே மிகவும் சுவாரஸ்யமான புத்தகம் இது தான் என்று தோன்றுகிறது.
அழகிய சங்கர், நவீன விருட்சம் என்னும் கவிதைகளுக்கு முன்னுரிமை தரும் சிற்றேடுகளின் சாமுத்ரிகா லட்சணங்களோடு ஒத்துப் போகிற ஒரு இதழை முப்பத்து ஆறு வருடங்களாக தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இது ஒரு தனி மனிதனின் இலக்கியத்தின் மீதான தகர்ந்து விடாத ஈர்ப்பின் சாட்சி.
இந்த முயற்சியில் இவருக்கு யாருடைய உதவியும் கிட்டுவதில்லை. சொந்த செலவில் ஊரெங்கும் நாடெங்கும் தேடித் தேடி கவிதைகளை வாங்கி வாங்கி வாசித்து தேர்ந்தெடுத்துப் பதிவிடுகிறார். முப்பத்தி ஆறு வருடங்கள். நூற்றி முப்பது இதழ்கள் தொய்வில்லாமல் அன்றைக்கு இன்று பழுதில்லாமல் அதே மோஸ்தரில் வந்து கொண்டு இருக்கிறது.
முப்பத்து ஐந்து வயதில் துவங்கிய மோகம் இன்று வரை தீரவில்லை.
சாமானியராக இருந்திருந்தால் இந்த முப்பத்து ஆறு வருடங்களில் அழகிய சிங்கர் அழுகிய சிங்கர் ஆகியிருப்பார்.
அவர் அசாதரணமான கொள்கையை உடன்பிறந்த பிடிவாதமாகக் கொண்டு இருப்பதில் நாளுக்கு நாள் மெருகேறி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
கொஞ்சம் அழகிய சிங்கரைத் தாண்டி நூலுக்குள் சென்று பார்க்கலாம்.

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்- தொகுதி-1.

தொகுதி 1 என்று இருப்பதாலும், இது ஆசிரியர் நடத்தும் பத்திரிக்கையில் ஒவ்வொரு இதழிலும் பிரசுரமாகும் அவரது கட்டுரைகள் என்பதாலும், தொகுதிகள் முடிவில்லாமல் நீளும் அல்லது நீள வேண்டும் என்று தான் அர்த்தமாகிறது.
இந்தத் தொகுதியில் மொத்தம் அறுபது அத்தியாயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் நவீன விருட்சம் பத்திரிக்கையின் ஒவ்வொரு இதழின் கடைசிப் பக்கத்திலும் இடம் பெற்ற ஆசிரியரின் கிட்டத்தட்ட தலையங்கம் என்று நம்ப இடம் இருக்கிற சுவாரசியமான கட்டுரைகள்.
இதை ஒரு புதுமையாக ஆசிரியர் கையாண்டு இருக்கிறார்.
அறுபது கட்டுரைகளும் உரையாடல்களாக அமைந்து இருக்கின்றன. முதல் பத்து அத்தியாயங்களில் வெறும் கேள்வி பதில்களாக இருப்பது அடுத்த அறுபது அத்தியாயங்களில் மூன்று கதாபாத்திரங்களின் நடுவே நடைபெறும் உரையாடல்களாக விரிகிறது. ஜெகன், மோகினி என்று யுவர்களாகக் கருதக் கூடிய இரண்டு பேர் அழகிய சிங்கரோடு உரையாடுகிறார்கள். அநேகமாக, இந்த உரையாடல் இரவு பத்து மணிக்கு மேல் தான் நடைபெறுகிறது.
2017 முதல் 2023 வரை வெளிவந்த விருட்சம் இதழ்களில் இருந்து தொகுக்கப் பட்டவை இவை.
முதல் கேள்வி மற்றும் பதிலிலேயே தான் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் நிரம்பியவர் என்பதை அழகிய சிங்கர் கோடிட்டுக் காட்டி விடுகிறார்.
கேள்வி: இப்போது நடக்கும் ஆட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: நான் யார் நினைப்பதற்கு? நான் சாதாரணக் குடிமகன்.
இந்தத் தொனி கடைசி வரை நீள்கிறது.
இதன் நீட்சியாக 12 ம் பக்கத்தில் ஒரு கேள்விக்குப் பதிலாக கருத்துரிமை பற்றிச் சொல்கிறார்:
உண்மையான கருத்துரிமை என்றால் எதுவும் எப்போதும் சொல்லாமல் இருப்பது.
இது அவருடைய சுபாவத்தைத் தான் காட்டுகிறது. ஆனால், உலக நடப்பில் இருந்து விலகி ஓடுபவராக இல்லை. அவசியம் இல்லாதவற்றில் கவனம் கொள்ளாதவராக தன்னை அடையாளம் காட்டிக் கொள்வது.
வாழ்க்கை இவருக்கு வெகு எளிதானதாக இருக்கிறது.
(ப 10) வாழ்க்கை என்றால் என்ன?
ப: வாழ்க்கை என்றால் திங்கள், செவ்வாய், புதன், வியாழன்….
இதனைத் தாண்டிய வாழ்வை வாழ வேண்டிய அவசியம் இல்லை என்பதாக ஒரு தோற்றத்தை நிறுவ முனைகிறது இந்த பதில்.
என்றாலும் நீண்ட காலத்திற்குப் பிறகு பேரன் பேத்தி பற்றி மகிழ்வுடன் ஆங்காங்கே பிரஸ்தாபிக்கிறார்.
இவரது நாட்பட்ட, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் நீண்டு வியாபித்திருக்கும் இலக்கிய வாழ்வில் இவரது மகனையோ மகளையோ மனைவியையோ விவாதிக்காதவர், தந்தைக்குப் பெரிய அளவில் இடம் தந்தவர், அவருக்குப் பின் அந்த இடத்தை பேரப் பிள்ளைகளுக்குத் தந்து விட்டார் என்று தோன்றுகிறது.
சமீப கால விருட்சம் இதழ்களின் அட்டைப் படங்களை அவரது பேத்தி வரைகிறார்.
உங்கள் பேரன் என்ன செய்கிறான்?
ப: நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை பால்கனியில் இருந்து கீழே எறிகிறான்.
அதில் அவ்வளவு சந்தோஷம் அவருக்கு. இந்த இருவரில் யார் குழந்தை என்பதை சந்தேகத்திற்குரியதாக்குகிறது இந்த பதில்.
சில கேள்வி பதில்கள் புத்தகத்தின் அந்தஸ்துக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கின்றன.
கே: இந்த மழையால் உங்கள் வீட்டில் கொசு வந்து விட்டதா?
ப: ஆமாம். எங்கள் வீட்டில் கொசுவே வராது. என்னவோ அதிகமாக வந்து விட்டது.
கே: மூட்டைப் பூச்சி இப்போது இல்லையா?
ப: ஆமாம்.
இதே மனிதர் தான் தேவதச்சனின் கவிதையைப் பிரசுரித்து அட்சரம் அட்சரமாக சிலாகிக்கிறார்.
மனுஷ்யபுத்திரன் 2000 பக்கங்களுக்குக் கவிதை எழுதியிருக்கிறார் என்று ஆச்சரியப்படுகிறார். தமிழவனைப் பற்றி வெகுவாக உயர்த்திப் பேசுகிறார். இன்னமும் மேலே போய் அவருக்கு சாகித்ய அகாடமி விருது தரப் பட வேண்டும் என்று பிரியப் படுகிறார். விக்ரமாதித்மனுக்கும்.
அதை விட, முபின் சாதிக்காவின் தமிழவன் கதைகள் பற்றிய கட்டுரைகளில் இருந்து மிகவும் சிக்கலான “பிளாஸ்டிக் எதார்த்தம் “ பற்றி விளக்க வேறு செய்கிறார்.
ஏற்கனவே சொன்னது போல் அழகிய சிங்கர் இந்த உரையாடல்களில் மூன்று நபர்களாக உலா வருகிறார்.
ஒருவர் நமக்கு மிகவும் அறிமுகமானவர். அழகிய சிங்கர். அவர் மொழியிலேயே சொல்வதானால் மிகவும் பயந்த சுபாவம் உடையவர். அசோக் நகர் அனுமார் கோயிலில் பொங்கல் வாங்கி உண்ணும் ஆத்திகர்.
(இவரது துளிகள் என்ற புத்தகம் பற்றி முனைவர் இரா.பன்னிரு கை வடிவேலன் அவர்கள் எழுதிய விமர்சனம், இவர் மேற்கு மாம்பலத்தில் எந்தெந்த கோவில்களில் என்னென்ன வேளைகளில் என்னென்ன பிரசாதங்கள் கிடைக்கின்றன குறிப்பிட்டு இருப்பதாக சொல்கிறார். அதைவிட அழகிய சிங்கரின் கூற்றாக “மேற்கு மாம்பலத்தில் உள்ளவர்கள் ஓட்டலுக்கும் போக வேண்டாம்; வீட்டிலும் சமையல் செய்ய வேண்டாம் “.)
இந்த விமர்சனம் தினமலரில் வந்திருந்தது.
ஆசிரியர் ஒரு துளியில் “இன்று பிற்பகல் கட்சி மாறிய அந்த அரசியல்வாதியின் பெயர் பலவேசம். இவரை விடப் புத்திசாலி இந்தப் பெயரை வைத்த அவரது அப்பா அம்மா தான் “ என்று எங்கிருந்தோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரசியல்வாதியைக் கிண்டல் செய்கிறார்.
ஞானக்கூத்தன் கவிதைகளை ஒரு கெயிட் போல வாசிக்க வேண்டும் என்று உபதேசிக்கும் அதே சமயம் கதைகளுக்குத் தாவி “கதைகளை எல்லோரும் தயாரிக்கிறார்கள் “ என்று தீவிரமாக வாதிடுகிறார்.
புத்தகம் நெடுக ரசிகர்களின் வாசிப்புத் திறன் குறைந்து விட்டதைப் பற்றிய கழிவிரக்கமே மேலோங்குகிறது.
அதிலும் விருட்சத்தின் புத்தகங்களுக்கு வரவேற்பு இல்லாமல் இருப்பது, சுய விமர்சனமாக விருட்சம் புத்தகம் விற்பனையாகாமல் கொர்ரென்று தூங்குவது, இதழை ஆரம்பிக்கும் பொழுது இருக்கும் உற்சாகம் முடிக்கும் போது நீர்த்துப் போவது என்று வருத்தங்களை இறைத்துக் கொண்டே செல்கிறது.
இது ஒரு வயதாகிக் கொண்டிருக்கும் ஒரு இலக்கியவாதியின் திண்ணைப் பேச்சாக இல்லாமல் அதற்குப் புத்துயிர் ஊட்ட அவர் முனைந்திருக்கும் வழிகளைப் பற்றியும் சுய தம்பட்டமாக இல்லாமல் ஏதேனும் அற்புதம் நடந்து விடாதா என்று எதிர்பார்க்கும் சாமானியனின் இறைஞ்சலாகவே தென்படுகிறது.
அஞ்சலட்டைக் கதைகள், என்பா, தொடர்ச்சியாகக் “கதைஞர்களைக் கொண்டாடுவோம்” என்ற நிகழ்வின் மூலமாக நூற்றுக்கும் அதிகமான கதாசிரியர்களின் கதைகளை எடுத்து வாசிப்பது என்பதை ஒரு வேள்வியாகவே செய்து வருகிறார் அழகிய சிங்கர். அவர் அதற்காகத் தெரிந்திருக்கும் கதாசிரியர்களில் பேதம் பார்ப்பது இல்லை.
கல்கியை வாசித்த அதே நாளில் பஞ்சாட்சரம் செல்வராஜின் கதைகளும் வாசிக்கப் பட்டன.
இதைப் பற்றிய குறிப்புகளில் தென்படும் பெருமிதம் ஆசிரியரின் தலைக் கனமாக இல்லாமல் நிறையப்பேர் அதிகம் பேருடைய படைப்புகளை வாசிக்கிறார்கள் என்பதில் ஏற்படும் திருப்தியாகத்தான் இருக்கிறது.
பொதுவாகவே, ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியை ஒப்புக் கொள்வது இல்லை.
ஐந்நூறு கவிதைகள் எழுதி இருப்பார் அழகிய சிங்கர். நூறு கதைகள்? இருக்கலாம். பத்திரிக்கை ஆசிரியர் வேறு.
நியாயமாக இவருக்கு இராவணன் போல பத்துத் தலைகள், முழுக்க முழுக்க கர்வம் நிரம்பியதாக இருக்க வேண்டும். அனல் வாதம் புனல் வாதம் செய்து சக எழுத்தாளர்களை சக பத்திரிக்கைகளைத் தூற்றிக் கொண்டே இருப்பது தான் லட்சணமாகக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
ஆனால், இவர் சகட்டு மேனிக்கு, சகலரையும் புகழ்ந்து தள்ளுகிறார்.
நாகார்ஜுனா, தமிழவன், மனுஷ்யபுத்திரன், க நா சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், தேவதச்சன், ஆலந்தூர் கோ மோகனரங்கன், விஷ்ணு குமார், அம்பை, ராஜம் கிருஷ்ணன், ஞானக்கூத்தன், கடற்கரய், சிட்டி, ஆர் ராஜகோபாலன், ஜி நல்லகண்ணன், சிவசங்கரி, சித்ர தீபா அருணாசலம், விக்ரமாதித்யன், சி சு செல்லப்பா, எம் டி முத்துக்குமாரசாமி என்று ஆசிரியரின் புகழ்ச்சிக்கு ஆளாகும் எழுத்தாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
அதேபோல எல்லா சிற்றேடுகளையும் சஞ்சிகைகளையும் புகழ்ந்து தள்ளுகிறார்.
மணல் வீடு, கல்குதிரை, வேட்கை, தீம் தரிகிட, பூபாளம், உயிர்மை, முன்றில், தமிழவனின் சிற்றேடு, செந்தூரம், கவிதா சரண், சிறகு என்று இங்கும் பட்டியல் நீள்கிறது.
ஒரு அத்தியாயத்தில் அமலா பாலின் ஆடை (இல்லாத) நடிப்பைப் புகழ்வது தூக்கி வாரிப் போடுகிறது. பார்த்தால் கொஞ்ச தூரம் முன்னோ பின்னோ ரமணரோடு நான் யார் என்று விசாரம் செய்யப் போய் விடுகிறார்.
இதில் ஒரு இடத்தில் அங்கதம் வேறு.
கே: நீங்கள் யார்?
ப: ரமணர் தான் நான் யார் என்று விசாரணையில் இறங்கினார். என்னைப் போயி கேக்கறீங்க? நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் யார்?
துயரத்தின் உச்சம் இன்னொரு துயரம் என்று கூறி திடுக்கிட வைக்கிறார். நிறைய மறைவு செய்திகள், இரங்கல் கூட்டங்கள், தற்கொலைகள்.
இவரது வங்கி நண்பர் ஒருவர், ஏதோவொரு விருட்சம் பிரதிக்கு மூன்றாம் தேதி சந்தா கட்டியவர், பத்து நாட்களுக்குப் பிறகு பாத்ரூம் கழுவ வைத்திருந்த ஆசிடைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
அது எந்த மாதத்து விருட்சம் இதழ் என்பதையும் தெரிவித்து இருக்கலாம்.
சமயங்களில் நாமும் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் அமைகிறது. அலமாரியின் தட்டுகளில் விருட்சம் இறைந்து கிடக்கிறது. பாத்ரூம் கழுவும் ஆசிடும் கண்ணில் சுலபமாகப் படும்படி வைக்கப் பட்டிருக்கிறது.
பின் நவீனத்துவத்தையும் விட்டு வைக்கவில்லை. எழுதி முடித்தவுடன் ஒவ்வொரு எழுத்தாளனும் அவனுடைய எழுத்துக்கு ஒரு வாசகன்தான் என்ற கருத்தோடு சுலபமாக ஒத்துப் போகிறார்.
அழகிய சிங்கருக்குள் திளைத்துக் கொண்டிருக்கும் வியாபாரி லேசாகத் தலை காட்டுகிறார். பொதுவாக இந்த முகம் கலங்கிய கண்களைக் கொண்டு தான் இருக்கும்.
அந்த முகம் சொல்கிறது “முதலில் நான் ஒரு விற்பனையாளன். அதில் தோல்வி அடையும் போது படைப்பாளி. அதன் பின் அதுவே வாசகனாக மாறி விடுகிறது “.
அழகிய சிங்கரின் சாதனை தான் என்ன? சேவை. தமிழுக்கு அவர் செய்த சேவகம் போல அவர் காலத்தில் வேறு யாரும் முயலக் கூட இல்லை. மகாமகாபாத்யாய உ வே சா அவர்களின் ஓலைச்சுவடி சேகரிப்பைப் போன்றது இவரது கவிதைகள் சேகரிப்பு.
முப்பத்தி ஆறு வருடங்கள். தனி மனித எத்தனத்தில் ஒரு இலக்கியச் சிற்றேடு அவரது ஓய்வூதியத்தின் கணிசமான பங்கை விழுங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது.
கவிதைகளை சேகரிப்பதில் அழகிய சிங்கருக்கு இல்லாத கூச்சம், சந்தாவைப் புதுப்பிக்கக் கோரும் போது வந்து விடுகிறது.
சி சு செல்லப்பா அவரது எழுத்து பத்திரிக்கையை 120 இதழ்கள் நடத்தினார். ஆனால், அழகிய சங்கர் தன் நவீன விருட்சத்தின் 130 வது இதழையும் அதே பொலிவோடு கொண்டு வந்திருக்கிறார்.
மிகப் பெரிய ஆளுமைகள், அசோகமித்திரன் தவிர்த்து ஞானக்கூத்தன், பிரமிள் என்று வேறுபட்ட கண்ணோட்டம் கொண்ட அல்லது கண்ணோடு கண் நோக்காத எழுத்தாளர்களோடு ஒரே தளத்தில் பழகியும் அதற்காக கர்வம் கொள்ளாதவர்.
இவரால் பயனடைந்தவர்கள், இவரால் அறிமுகப் படுத்தப்பட்டவர்கள், இவரிடம் ஆதரவு பெற்றவர்கள் என்ற பலரில் பலர் இவருக்கு அறிமுகமே கூட இல்லாதவர்கள்.
தமிழை மட்டுமே முன்னிறுத்தி எந்தவொரு வியாபார நோக்கமும் இல்லாமல் சொந்த செலவில் ஒரு மனிதர் தன் வாழ்நாளை அடகு வைக்கிறார் என்பது தான் எவ்வளவு பெரிய ஆச்சரியம்?
இந்தத் தன்னலமற்ற முயற்சி சாகித்ய அகாடமி பெறுவதற்குத் தகுதி வாய்ந்தது. கொடுக்கலாம்.
சக்தி கிருஷ்ணசாமி விருது கொடுத்தார்கள். கேடயம். அது கொலு பொம்மை ஆகிவிட்டது. விருதினால் பெரிய லாபம் இல்லை.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்

ஒரு மனிதன் தனி ஒருவனாக பொது வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறான். அந்த மனிதனுக்கு நாம் கைலாகு கொடுக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
எப்படி?
இவ்வளவு நேரமாக உரையாடிக் கொண்டிருக்கும் இந்த நூல் ஒரு உதாரணம்.
நூற்றி இருபத்தி ஆறு பக்கங்கள். படிக்க இலகுவானது. சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. ஒரே மூச்சில் படித்து விடலாம்.
இதைப் போல் எவ்வளவோ புத்தகங்களை பிரதிபலன் பாராது பதிப்பித்து இருக்கிறார். அநேகமாக எல்லாமே நல்லி 100, மில்லி 100 மாதிரி நூறு பக்கங்கள் கொண்டவை தாம்.
இதோ இந்தப் புத்தகத்தின் விலை நூற்றைம்பது ரூபாய் தான். ஒரு வாரத்திற்கான ஒருவேளைக் காப்பியின் விலை. ஒரு தேங்காயின் விலை ஐம்பது ரூபாய்.
நம் வீடுகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளில் தேங்காய்க்குப் பதிலாக இந்த மாதிரி புத்தகங்களை அன்பளிக்கலாம்.
புத்தகங்களால் தமிழ் வாழ்வதை விட அதைப் பிரசுரிப்பவரால் நிச்சயம் தமிழ் வாழும். வாழவேண்டும்.