கழனியூரன்/இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்

செவலைப் பசு

இந்த உலகில் நல்லவர்களும் இருக்கின்றனர். கெட்டவர்களும் இருக்கின்றனர். வெட்கம் இல்லாமல் நயவஞ்சகம் செய்பவர்களும் இருக்கின்றனர்.
சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா கெட்ட நேரம் காரணமாக அது போன்றவர்களின் பிடியில் சிக்கினாள். அவள் ஒரு அனாதை.
கெட்டவர்கள் அவளை வளர்த்தனர். நிற்க முடியாமல் களைத்துப் போகும் வரை அவளை வேலை செய்யச் செய்தனர்.
அவள் நூற்றாள்; நெய்தாள். அனைத்துக்கும் அவள் பதில் கூற வேண்டியதிருந்தது.
வீட்டு எஜமானிக்கு மூன்று மகள்கள் இருந்தனர். மூத்த மகள் ஒரு கண்ணி என்றும்,இரண்டாவது மகள் இருகண்ணி என்றும்,இளைய மகள் முக்கண்ணி என்றும் அழைக்கப்பட்டனர்.
மூன்று சகோதரிகளும் நாள் முழுவதும் வேலை எதுவும் செய்யாமலிருந்தனர். எப்போதும் வாசலில் இருந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்காக சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா தைத்தாள், நூற்றாள், நெய்தாள். ஆனால், அவர்களிடமிருந்து ஒருபோதும் ஓர் அன்பான சொல்லை அவள் கேட்டதில்லை.
சில சமயங்களில் சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா வயலுக்குச் செல்வாள். கைகளினால் அவளுடைய செவலைப் பசுவின் கழுத்தைக் கோர்த்துக்கொண்டு அவளுடைய துயரங்கள் அனைத்தையும் அதனிடம் கொட்டித் தீர்ப்பாள்.
‘எனது அன்பான செவலைப் பசுவே, அவர்கள் என்னை அடிக்கிறார்கள், வைகிறார்கள். அவர்கள் எனக்குச் சாப்பிடப் போதுமான உணவு தருவதில்லை. அவர்கள் நான் அழுவதற்குக்கூட தடை விதிக்கின்றனர். நாளைக்கு நான் ஐந்து சிட்டம் நூல் நூற்று, நெய்து விட வேண்டும்” என்று பசுவிடம் அவள் கூறுவாள்.
“எனது அழகிய பெண்ணே! நீ என்னுடைய இரண்டு காதுகளில் ஒன்றுக்குள் ஏறி மறுகாதின் வழியே வெளியே வந்தால் போதும். உனக்காக உணவு செய்து முடிக்கப்பட்டிருக்கும்” என்று செவலைப் பசு பதில் கூறியது. பசு கூறுவது போலவே நடந்தது. அவள் ஒரு காதின் வழியாக ஏறி மறு காதின் வழியாக வெளியே வருவாள். உடனே, அங்கு நெய்யப்பட்டு, வெளுக்கப்பட்டு சுற்றப்பட்ட துணி கிடைக்கும்.
பின்னர் சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா அந்தத் துணிச் சுருள்களை எடுத்துக் கொண்டு அவளுடைய எஜமானியிடம் செல்வாள். அவள் அவற்றைப் பார்ப்பாள். முணுமுணுத்துக் கொண்டே அவற்றை ஒரு பெட்டியில் எடுத்து வைப்பாள். பின்னர் சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சாவுக்கு அதைவிடப் பெரிய வேலையைக் கொடுப்பாள்.
சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா செவலைப் பசுவிடம் போவாள். கைகளால் அதன் கழுத்தை பின்னிக் கொண்டு அதைத் தட்டிக் கொடுப்பாள். பின்னர் அதனுடைய காதுகளில் ஒன்றுக்குள் மறுகாது வழியாக வெளியே வருவாள். தயாராக ம் துணியை எடுத்துக் கொண்டு மீண்டும் அவளுடைய எஜமானியிடம் செல்வாள்.
ஒரு நாள் வீட்டு எஜமானி அவளுடைய மகள் ஒரு கண்ணியை அழைத்தாள். “எனது நல்ல குழந்தாய், எனது அழகிய குழந்தாய், அந்த அனாதை அவளுடைய வேலையைச் செய்ய யார் உதவுகிறார்கள் என்று போய்ப் பார். பஞ்சை யார் நூற்றுகிறார்கள், துணியை யார் நெய்து சுற்றுகிறார்கள் என்று போய்ப் பார்’ என்று அவள் கூறினாள்.
ஒரு கண்ணி சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சாவுடன் காட்டுக்குள் சென்றாள். சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சாவுடன் அவள் வயலுக்குச் சென்றாள். ஆனால் அவள் தனது தாயின் கட்டளையை மறந்து விட்டாள். அவள் புல்தரையில் படுத்து வெயிலில் குளிர்
காய்வாள்.
“தூங்கு, சின்னஞ்சிறு கண்களே, தூங்கு” என்று சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா முணுமுணுப்பாள். ஒரு கண்ணி அவளுடைய கண்ணை மூடிக்கொண்டு தூங்கி விடுவாள்.
அவள் தூங்கும் போது செவலைப் பசு துணியை நெய்து கொடுத்து விடும்.
எஜமானியினால் எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவள் தனது இரண்டாவது மகள் இரண்டு கண்ணியை அழைத்தாள். “எனது நல்ல குழந்தாய், எனது அழகுக் குழந்தாய், அந்த அனாதை அவளுடைய வேலையைச் செய்ய அவளுக்கு யார் உதவுகிறார்கள் என்று போய்ப் பார்த்து வா” என்று அவளிடம் கூறினாள்.
இரண்டு கண்ணி சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சாவுடன் சென்றாள். ஆனால், அவள் தனது தாயின் கட்டளைகளை மறந்தாள். புல்தரையின் மீது படுத்து அவள் வெயில் காய்ந்தாள்.
“தூங்கு சிறிய கண்ணே! தூங்கு மற்றொரு சிறிய கண்ணே!” என்று சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா முணுமுணுத்தாள்.
இரண்டு கண்ணி கண்களை மூடித் தூங்கினாள். அவள் தூங்கும் போது செவலைப் பசு துணியை நெய்து கொடுத்தது.
எஜமானி மிகவும் கோபமடைந்தாள். மூன்றாவது நாள் அவள் தனது மூன்றாவது மகள் முக்கண்ணியை அழைத்தாள். சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சாவுக்கு எப்போதையும் விட
அதிக வேலையைக் கொடுத்து அவளுடன் வேலையைச் செய்வதற்கு அவளுக்கு உதவுவது யார் என்று பார்த்து வருமாறு முக்கண்ணியிடம் கூறினாள்.
முக்கண்ணி நன்றாகக் களைத்துப் போகும் வரை வெயிலில் குதித்தும் ஓடியும் விளையாடினாள். பின்னர் அவள் புல்தரையில் படுத்து விட்டாள்.
“தூங்கு சிறிய கண்ணே! தூங்கு மற்றொரு சிறிய கண்ணே!” என்று சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா முணுமுணுத்தாள். ஆனால், அவள் முக்கண்ணியின் மூன்றாவது சிறிய கண்ணை முற்றிலும்
மறந்து விட்டாள்.
முக்கண்ணியின் இரண்டு கண்கள் தூங்கி விட்டன. ஆனால், அவளுடைய மூன்றாவது கண் விழித்துக் கொண்டிருந்தது. அனைத்தையும் அது பார்த்தது. சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா பசுவினுடைய காதுகளில் ஒன்றுக்குள் ஏறுவதையும், மற்றொரு காது வழியாக அது வெளியே வருவதையும், தயாராக இருந்த துணியை எடுத்துக் கொள்வதையும் அது பார்த்தது.
முக்கண்ணி வீட்டுக்கு வந்தாள். பார்த்து எல்லாம் அவள் தனது தாயிடம் கூறினாள்.
எஜமானி பெரும் மகிழ்ச்சி அடைந்தாள். மறுநாளே அவள் அந்தச் செவலைப் பசுவைக் கொல்லுமாறு கணவனிடம் கூறினாள். எஜமானியின் கணவர் ஆச்சரியமடைந்தார். மனைவியை சமாதானப்படுத்த முயன்றார்.
“முதியவளே, நீ அறிவு இழந்து விட்டாயா?” என்று அவர் கேட்டார். ‘அது மிகவும் நல்ல பசு. இன்னும் அது இளமையாக இருக்கிறது” என்று கூறினார்.
‘அதைக் கொல்லுங்கள், வேறு எதுவும் பேசாதீர்கள்” என்று எஜமானி பிடிவாதமாகக் கூறினாள். எஜமானின் கணவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர் கத்தியைத் தீட்டத் தொடங்கினார்.
சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா அதை அறிந்தாள். அவள் வயலுக்கு ஓடி தனது கைகளினால் செவலைப் பசுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
“செவலைப் பசுவே, எனது அன்பே” என்று அவள் கூறினாள். “அவர்கள் உன்னைக் கொல்ல விரும்புகிறார்கள்” என்று அவள் சொன்னாள்.
“எனது அழகிய பெண்ணே வருந்தாதே. நாள் சொல்வது போல செய் எனது எலும்புகளை எடுத்து அவற்றை ஒரு கைக்குட்டையில் வைத்துக் கட்டி, தோட்டத்தில் அதைப் புதைத்து தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்று. எனது கறியைத் தின்னாதே. ஒரு போதும் என்னை மறக்காதே” என்று பசு கூறியது.

  • எஜமானின் கணவர் பசுவைக் கொன்றார். சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா பசு அவளிடம் கூறியது போலச் செய்தாள். அவளுக்கு மிகவும் பசியாக இருந்தது. ஆனாலும் அவள் பசுவின் கறியைத் தொடவில்லை. அவள் பசுவின் எலும்புகளைத் தோட்டத்தில் புதைத்து அதற்குத் தினமும் தண்ணீர் ஊற்றினாள்.
    சில நாட்களுக்குப் பின்னர் அந்த எலும்புகளிலிருந்து ஒரு ஆப்பிள் மரம் வளர்ந்தது. அது ஒரு மிகச் சிறந்த மரம். அதன் ஆப்பிள்கள் உருண்டையாகவும் ருசி நிறைந்தனவாகவும் இருந்தன. அந்த மரத்தின் அசையும் கிளைகள் வெள்ளியினாலானவை. சலசலக்கும் இலைகள் தங்கத்தினாலானவை. அந்த வழியாகச் சென்றவர்களெல்லாம் நின்று அந்த மரத்தைப் பார்த்தார்கள். அதன் அருகே வந்தவர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.
    எவ்வளவு காலம் ஆனதோ யாருக்கும் தெரியாது. ஒரு நாள் ஒருகண்ணி, இருகண்ணி, முக்கண்ணி ஆகிய மூன்று சகோதரிகளும் தோட்டத்துக்கு உலாவச் சென்றனர். அப்போது ஓர் அழகிய பணக்கார இளைஞன் அந்த வழியாக குதிரையில் வந்தான்.
    செழிப்பான ஆப்பிள்களைப் பார்த்து அவன் நின்றான். ஆப்பிளை பறித்துக்கொண்டு வரும் உங்கள் மூன்று பேர்களில் ஒருத்தியை நான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று
    கூறினான்.
    மூன்று சகோதரிகளும் ஆப்பிள் மரத்தை நோக்கி ஓடினார்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களை முந்த முயன்றனர். ஆனால், மிகவும் எளிதாக எட்டக் கூடியவையாகத் தோன்றிய, சகோதரிகளின் தலைகளுக்கு மேலே உயர்த்தப்பட்டன. தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருந்த ஆப்பிள்கள் காற்றினால்
    சகோதரிகள் அவற்றைக் கீழே தள்ள முயன்றனர். ஆனால், இலைகள் மழை போலப் பொழிந்து அவர்களுடை கண்களை மறைத்தன. ஆப்பிள்களைப் பறிக்க அவர்கள் முயன்றனர். ஆனால், கிளைகள் அவர்களுடைய சடைகளில் சிக்கிக்கொண்டு அவற்றை உயர்த்தி விட்டன. அவர்கள் எவ்வளவு முயன்றும் ஆப்பிள்களைத் தொட முடியவில்லை. அவர்களுடைய கைகள் காயமடைந்ததுதான் மிச்சம். பின்னர் சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா அந்த மரத்தின் அருகே நடந்து சென்றாள். உடனே கிளைகள் வளைந்து தாழ்ந்தன. அவள் ஓர் ஆப்பிளை அந்த அழகிய அன்னிய இளைஞனிடம் கொடுத்தாள். விரைவிலேயே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
    அந்த நாளிலிருந்து அவள் துயரத்தை அறியாமல் அவளுடைய கணவருடன் ஆண்டுக்கு ஆண்டு மிகுந்த ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், வளமாகவும் வாழ்ந்து வந்தாள்.