காந்தி ஜெயந்தி கவிதை


இராய செல்லப்பா

ஆகிடுவேன் ஓர் நாள் – அண்ணல்
காந்தியைப் போலே வாழ்வினில் நானும் (ஆகிடுவேன் .. )

உப்பும் மிளகும் அப்பிய கூந்தல்
ஒருநாள் உதிர்ந்துவிடும் -அதில்
செப்பழகுடைய கண்ணாடி வழுக்கை
சீக்கிரம் மலர்ந்துவிடும்! (ஆகிடுவேன் .. )

எத்தனை நாள் தான் முப்பது பற்கள்
என்னுடன் வாழ்ந்துவிடும்? -அட
பொக்கை வந்திடும்! பயிற்சி எடுத்தால்
புன்னகை வந்துவிடும்! (ஆகிடுவேன் .. )

தொப்பை இருக்குது கொஞ்சம்தான் அதைக்
குறைத்திட முயலுகிறேன்
நடத்தல் பயிற்சியும் பூசணிச் சாறும்
நல்லது செய்யாவோ? (ஆகிடுவேன்…)

உச்சி வளைந்த தாத்தாக் கொம்புகள்
வீட்டினில் நான்குண்டு – அதில்
ஒன்றையெடுத்து வண்ணம் பூசிடில்
உடன்வரத் தடையென்ன? (ஆகிடுவேன் .. )

காலுக்கணிவது பிளாஸ்டிக் வேண்டாம்
கட்டையில்தான் வேண்டும் -எனில்
காதியில் போனால் கால் சைஸ் பார்த்துக்
கவர்ந்திட லாகாதோ ? (ஆகிடுவேன் .. )

இடுப்பில் அணிந்திடக் கடிகாரமொன்று
இருக்குது என் வீட்டில் -அப்பா
எனக்கென விடுத்த சீதனமாகும்
என்ன குறை போங்கள்! (ஆகிடுவேன் .. )

எட்டு முழத்தை இரண்டாய்க் கிழித்தால்
நாலு முழமாச்சு! -அதைக்
கண்ணாடி பார்த்துக் கட்டி முடித்தால்
காந்தி மடிப்பாச்சு! (ஆகிடுவேன் .. )

அடடா ஒன்றே பாக்கி இருக்குது
ஆட்டுப்பால் வேண்டும்! -அட
சொன்னால் போதும் சொர்ணாக்கா விடம்
சூடாய்க் கிடைத்துவிடும்! (ஆகிடுவேன் .. )

இந்தியும் தெரியும் ஆங்கிலம் தெரியும்
எழுதவும் நான் அறிவேன் – செவி`
எங்கே கிடைத்தாலும் பயனுறும் சொற்கள்
என்னிடம் ஏராளம்! (ஆகிடுவேன் .. )

இத்தனை இருந்தும் காந்தியாய் என்னை
ஏற்றிட மாட்டீரோ! – அட
இருந்திடக் குடிசை இல்லை என்பதால்
ஏளனம் செய்வீரோ? -இல்லை

வேஷம் போடும் வித்தையில் திறமை
போதா தென்பீரோ? -இல்லை
சின்னத்திரையோ சினிமாத் தொடர்போ
இல்லை என்பீரோ? (ஆகிடுவேன் .. )

ஆகிடுவேன் ஓர் நாள் – அண்ணல்
காந்தியைப் போலே வாழ்வினில் நானும் (ஆகிடுவேன் .. )

One Comment on “காந்தி ஜெயந்தி கவிதை”

  1. கவிஞர். இராய. செல்லப்பா, காந்தியத்தை அவ்வளவு எளிதாக எவரும் கடைப்பிடிக்க இயலாது என்பதை தனது கவிதை வரிகளில் எதிர்மறையாகப் பதிவுசெய்யும் பாங்கு எத்தனை வல்லமையுடன் வெளிப்படுகிறது. அருமையான பதிவு.

Comments are closed.