கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதைகள்

8.
வா! வா! வா!
உற்சாக வரவேற்பு!
கணினியின் பின்புறத்திலிருந்து தலையை நிமிர்த்தி;
வானதி! எடு!
ஜிகர்தண்டா பாட்டிலை!
அவளுக்கு எப்போதும்
குளிர்பானம் தான்..
வெயிலிலும், குளிரிலும்’
வெண்ணிற கோட்
அணிந்த ஒரு நீல புறாவிடம்
‘நன்றி மா’ என்று சொல்லி
என்னுடன் கூடப் படித்த பொண்ணு
இப்ப கிழவிஆயிட்டா’ என்று சொல்லி
என்னை ஒரேயடியாக காலி செய்தான்;
என் நண்பன்!
அருகில் அவன் மனைவி எழுந்து தன்
இருக்கையைக் கொடுத்தவாரே ‘
எப்படி இருக்கீங்க! என்று விசாரிப்புடன்.
என் கையிலிருந்த
மல்லிகை பொதியை
தன்னிச்சையாக
கைநீட்டி எடுத்துக் கொண்டவள்;
‘ அவர் மாறவே இல்லை, இல்லையா,’
என்று வினவினாள்!
மணி என்னும் புரட்சி மணி;
தன் மருத்துவ பரிசோதனை நிலைய
வேலைகளுக்கு இடையே; பேசிக்கொண்டும்;
உரக்க சிரித்துக் கொண்டும்…
இரண்டு மணிநேரம்
இரண்டு நிமிடமாய் கரைந்துபோக!
எழுந்திருக்கும் நேரத்தை கணித்து,
அவன் மனைவி அவனை வந்து
பிடித்துக் கொண்டாள்.
என் புருவங்கள் நெறிந்து
வளைந்து ஏறியதற்கு,
பதிலாக அவள் சொன்னாள்;
‘ரொம்ப நேரம் உட்கார்ந்தால்
எழுந்திருக்கும் போது
ஒரு ‘கை’ வேண்டியுள்ளது, அவருக்கு’
அவன் சொன்னான்:
‘வயது ஒரு எண் மட்டும்தான்! தைரியமாயிரு!
மாப்பிள்ளை நல்லாதான் இருப்பாரு..
தொண்ணூறு வரை’
என்று திரும்பி
அவள் கையை பற்றிக் கொண்டு எழுந்தவாறே;
‘ நீயும் அவருக்கு ஒரு கை கொடு, அப்பப்ப.’
அவரை ஆரத் தழுவி விடை கொடுத்தான்
9.இறையின் இறையும், இறையும்🙏
நேற்றும் இன்றும்
கோவில் பல சென்று கும்பிட்டு வருபவளைச்
சுற்றி வருகிறது!
பூனையார் கூட்டம்!
சிறிதும் தயக்கமின்றி
அம்மன் தோளிலிருந்து
வெகு வேகமாக இறங்கி
தாம்பூலத் தட்டைத் தாண்டி
அங்கு பாய்ந்து கொண்டிருந்த
எலியைக் கவ்விய பூனையை
மிரட்ட வந்த அர்ச்சகர்
நந்தியின் மேல் கால்
தடுக்கி விழுந்து
தலையில் காயம்!
பூனையார் திடுக்கிட்டு
எலியாரை நழுவ விட்டு;
கீழே விழுந்த அர்ச்சகர் மேல் பாய; அவர் மயக்கமுற:
எனக்குத் தோன்றியது;
தினமும் படியளக்கும்
தன் இறையை,
இறை கைவிட்டது ஏன்?
எலியாரை பூனையாரிடமிருந்தும்,
பூனையாரை அர்ச்சகரிடமிருந்தும்,
காப்பாற்ற கருணை கொண்ட அம்மன்;
தன் கோயிலை சுத்தமாக வைக்கத் தவறிய
அர்ச்சகர் மேல் சினந்தாளோ?
- வீடு
அவர்கள் அந்த வீட்டில்
இன்னமும் இருக்கிறார்கள்!
ஒருவர் துடிக்கும் உதடுகளுடனும்:
உதறும் விரல்களுடனும்;
இன்னொருவர்
சாய்வு நாற்காலியில்
கையில் தொலைக்காட்சியின் தொலைஇயக்கியுடன்.
எதுவும் பார்க்கவில்லை;
அங்கும் இங்கும் இடையுறா தேடல்கள்!
உடுத்திய உடைகளில் அக்கறையின்மை;
பொருளற்ற பார்வையில் வெறுமை;
மௌனம் கூட மௌனித்து விட்டிருந்தது.
கதவின் ஓரம்
எவரும் அறியாமல்
அமையும் தூசியும் தும்பும் போல்;
தன்னோக்கில் சுவர்களின் மூலையில்
பரவி காற்றில் அலையும் ஒட்டடை போல்;
உட்சுவற்றில்
சுவடில்லாமல்
பரவும் கரையான் போல்;
தனிமையின் பயம்
மெல்ல மெல்ல…
தன் வேலையைக் காட்ட..
அவர்கள்
விட்டு விலகிக் கொண்டே போனாலும்;
வீடு
அவர்களை எப்படியோ தாங்குகிறது.
‘வேண்டாம்’ என
அவர்கள் ஒதுக்கிய
வெளி உலகம்
பார்க்கிறது, அவர்களை;
மிரட்சியுடனும்,
கண்ணீருடனும்,
துயரத்துடனும்.
பாவம்!
அந்த வீடும்,
அவர்கள் உலகமும்.

Very good poems