வேலு இராஜகோபால் / நன்றி சொல்ல நேரமில்லை

‘ராசப்பாவை ஆஸ்பத்திரியில சேத்துருக்காம்.  இன்னைக்கு மத்தியானம் போகணும்.  எங்கிட்டாவது போயிறாத’ என்று அம்மா சொன்னதும் ‘எதுக்கும்மா சேத்துருக்காங்க?’ என்றான் குணா.  அவரில்லாமல் அவன் படித்துக் கொண்டிருக்க முடியாது. மூன்றாவது வருடம் வரை ஃபீஸ் கட்டியது அவர்தான்.  இன்னும் ஒரு வருடம் படித்தால் சிவில் எஞ்சினீயராகிவிடுவான்.  ‘அவரு மயக்கம் போட்டு விழுந்து கிடந்திருக்காரு.  இன்னும் தெளியலையாம்.  பெரியாஸ்பத்திரியில சேத்துருக்காங்க.  ரொம்ப சீரியஸ்னு முருகன் போன் பண்ணாரு.  அவருதான் போன் பண்ணுதாருன்னு எடுத்தேன்.  இவரு பேசுனாரு.  திருனெலிக்குப் போகணும்’.  ராசப்பா தண்ணி அடித்துவிட்டுக் கிடந்திருக்க வேண்டும்.  

ரொம்ப நல்ல மனுஷன். ஏகப்பட்ட உதவிகள் செய்திருக்கிறார். அவர்கள் வீட்டில் ஏதாவது தேவை என்றால் உடனே வந்துவிடுவார். அம்மா ஒரு வேளை போன் செய்து கூப்பிடுவாளோ? அவன் மீதும் தங்கை மீதும் அவருக்குத் தனிப் பாசம். அந்த உறவுக்கு இன்னும் ஒரு பெயர் கிடைக்கவில்லை. அவனுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். பன்னிரண்டாங் கிளாஸ் படித்து முடிப்பதற்குள் பெரும் பாடு பட்ட அவனுக்கு படிப்பும் சொல்லிக் கொடுத்து, இஞ்சினீயரிங் படிக்கவைத்துக் கொண்டிருந்தார்.
ராசப்பா என்று அம்மாவும் அவனும் தங்கையும் அழைக்கும் அவர் முந்தியெல்லாம் அடிக்கடி வீட்டுக்கு வருவார். இப்போது குறைந்துவிட்டது. உடம்பு சரியில்லையாம். அடிக்கடி தண்ணியடித்துவிட்டு எங்காவது கிடக்கிறாராம். எல்லாம் கேள்விப்பட்டது. குணாவுக்குப் இருபது வயதாகிவிட்டது. சுற்றிலும் நடக்கும் விஷயங்களைப் புரிந்து கொண்டிருந்தான். ஆனால் யாரிடமும் எதையும் கேட்கத் தயங்கினான். ஒரு பயம், கூச்சம் தயக்கம். அவன் சம்பந்தப்பட்டது. அம்மாவிடம் தான் கொஞ்சம் தைரியமாகக் கேட்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் அதுவும் முடியாது. அவளும் அதில் சம்பந்தப்பட்டிருந்தாள். யாராவது காதில் கேட்க முடியாத விஷயங்களைச் சொல்லிடுவார்களோ?
இருவரும் இரண்டு மணிக்குப் பஸ் ஏறி திருனெல்வேலி போனார்கள். சீக்கிரம் போய்விட்டதால் ஆஸ்பத்திரி வாசலில் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. நாலு மணிக்கு மேல்தான் உள்ள பார்க்க விடுவார்களாம். கொஞ்ச நேரம் காத்திருந்த போது வயதான ஒருவர் வந்தார். அவரை குணாவுக்குத் தெரியும், ராமையா. தளர்ந்து போயிருந்தார் அவருக்கு எழுபது வயதுக்கு மேலிருக்கும். ராசப்பாவுக்கு அறுபது வயது இருக்குமா? ஏன் அதற்குள் இப்படி நோயாளியானார்? ராமையா செந்தூர் நகரில் மூன்றாவது தெருவில் இருந்தார். ராசப்பாவின் மனைவி அங்கேதான் இருந்தாள். அவர் வந்ததைப் பார்த்ததும் குணாவின் அம்மா அவரிடம் போனாள். ‘எப்ப வந்த?’ என்று ராமையா அம்மாவிடம் கேட்டார். ‘இப்பத்தான் வந்தேன். அவருக்கு என்னாச்சு? உள்ள போகக் கூடாதுன்னுட்டாங்க.’
‘மரத்தடியில் படுத்திருந்தான். தண்ணியடிச்சிட்டு, மரத்தடியில தூங்கிட்டான் போல. ரொம்ப நேரமா எந்திரிக்கல. எப்பவும் போலத்தான் கிடக்காம்னு யாரும் ஒண்ணும் கவனிக்கல. சாயந்திரம் ஆனதும், அன்பு போய் எழுப்பியிருக்கான். எழுந்திருக்கல. எப்பவும் தண்ணியடிச்சிருந்தா இப்படித்தான் கிடப்பான். அவனும் விட்டுட்டு போய்ட்டான். ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்தா அப்படியே கெடந்திருக்கான். அதனால இருக்கும்னு யாரும் அவனை கண்டுக்கிடல. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்பிப் பாத்தா பேச்சு மூச்சில்லை. அவனும் ரமேஷும் சேந்து கைத்தாங்கலா தூக்கிக்கிட்டு எங்க வீட்ல கொண்டுவந்து போட்டாங்க. முத்தம்மாவும், சரி எப்பவும் போலத்தான் தூங்குதாகன்னு நெனச்சு, அப்படியே விட்டுட்டா’ காலைலயும் எந்திருக்கல. அப்பத்தான் சந்தேகம் வந்தது. ஒரு ஆம்புலன்ஸ் கொண்டுவந்து சேத்துருக்கோம்.
ரொம்ப சீரியஸ். ஆனால் கொஞ்சம் டிரீட்மெண்ட் குடுத்துப் பாக்கலாம்னு சொன்னாங்க. மூக்கில குழாய் போட்டு மருந்து, ஆக்ஸிஜன் எல்லாம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. கஷ்டந்தான், ஆனா பிழைச்சிக்கிடலாம்ன்னாங்க’. ‘ரொம்ப நாள் வச்சிருப்பாங்களோ?’ அவளது குரல் கம்மியது. அம்மாவிடம் ஆஸ்பத்திரிக்குச் செலவழிக்கும் அளவு பணம் இல்லை என்று குணாவுக்குத் தெரியும். அவளது கவலையைப் புரிந்துகொண்டவர்போல் ராமையா சொன்னார் ‘இப்போதைக்கு பணங்கட்டிட்டேன். நான் பாத்துக்கிடுதேன். அவ வேற அங்க கிடக்கா. அவ வந்து பாக்கக் கூட முடியாது. இவனும் அவளைப் பாக்கப் போறது கிடையாது. இருந்தாலும் சமாளிச்சிருதேன். நீயும் பாத்துட்டு உடனே போயிரு. சொந்தக்காரங்க கூட்டமா வந்தா ஏதாவது பிரச்சனை வரும்’. சொந்தக்காரர்களைச் சாக்காகச் சொல்லி அவளை விலக்கப் பார்க்கிறாரா? அம்மா என்ன சொத்தையா கேட்கப் போகிறாள்? அம்மா சரி என்பது போல் கண்ணீருடன் தலையசைத்தாள். குணா அம்மாவின் பின்னால் நடந்தான். அவர்களுக்கு ராசப்பா மீது எந்த உரிமையும் இல்லை.
குணா இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரிக்கு இப்போதுதான் வருகிறான். இவ்வளவு கூட்டம் இருக்குமா? கட்டடங்களும் பெரிசு பெரிசாக இருந்தன. புதியதாக வருகிறவனுக்கு எதுவும் புரியாது. அம்மா தனியே வந்திருந்தால் சமாளித்திருக்க முடியாது. எத்தனை பேரிடம் வழி கேட்பது? உடம்பு சரியிலலமல் கிடப்பவருக்கு ஒரு ஆரஞ்சுப் பழம் கூட வாங்கிக் கொடுக்க முடியாது. அவருக்கு எவ்வளவு பணமென்றாலும் செலவழிக்கலாம். ஆனால் அவர்களிடம் கொஞ்சம் கூடப் பணம் இல்லையே!
அரைமணி நேரம் காத்திருந்ததற்குப் பின்னால், உள்ளே விட்டார்கள். ஐ.சி.யு. வார்டுக்கு முன்னாலும் இருபது இருபத்தைந்து பேர் நின்றிருந்தார்கள். ராமையா தன் கையிலிருந்த அட்டையொன்றை அம்மாவிடம் கொடுத்தார். ‘நீ போய் பாத்துட்டு வா’ அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னார். குணாவிடம் ‘வா’ என்று சாடை காட்டினாள். கேட்டில் இருப்பவர், அவளை உள்ளே விட்டு ‘ஒரு ஆள்தான் பார்க்க முடியும்’ என்று சொல்லி அவனைத் தடுத்தார். ‘நீ போய்ட்டு வந்து அவனை அனுப்பு’ என்று அவரே அவளிடம் சொன்னார். அவன் காத்திருந்தான். அம்மா போய் ரொம்ப நேரமாகிவிட்டது.
அங்கே நின்று கொண்டிருந்தவனை கேட்டில் நின்றவர் ‘தள்ளிப் போய் நில்லுப்பா. வந்ததும் போகலாம்’ என்றார். அம்மாவை ஏன் தனியே விட்டேன்? கால்மணி நேரம் கழித்து வெளியே வந்தாள். அவள் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டிருந்தாள். எதுவும் பேசும் நிலையில் அவர் இல்லை. நிலைமை ரொம்ப மோசமோ? ஏதோ கேட்க நினைத்தவன், அட்டையை வாங்கிக் கொண்டு உள்ளே போனான்.
இரண்டாவது கட்டில். இரண்டு பக்கமும் நீலத் திரை தடுப்புப் போட்டிருந்த கட்டிலில் கொஞ்ச உயர்த்தி வைக்கப்பட்ட தலையணையில் அவர் கிடந்தார். கண்கள் மூடியிருந்தன. மூக்கையும் வாயையும் மூடி அதிலிருந்து ஒரு பிளாஸ்டிக் பைப் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருந்தது. அருகில் ஒரு மானிடரில் என்னமோ கோடுகள் வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தன. ‘கீங்’ கீங் என்ற மானிடரின் ஒலி, இந்தப் படுக்கையிலிருந்து வருகிறதா? அருகிலிருக்கும் படுக்கையிலிருந்து வருகிறதா? இரண்டு மூன்று ‘கீங்’ கீங்’ ஒலிகள் கேட்டன. ராசப்பாவின் முகத்தைப் பார்த்தான். அவருடைய மூக்கும் அவன் மூக்குப் போலவே நீண்டிருந்தது. காதுகளும் பெரிதாக இருந்தன. பக்கத்து வீட்டுப் பொன்னம்மா பாட்டி ஒரு முறை அவனிருப்பது தெரியாமல் அம்மாவிடம் கேலியாக ‘சாடை’ இருக்கு என்று சொன்னது ஞாபகம் வந்தது. ஏதாவது அவரிடம் பேச வேண்டும். முன்னால் எதைப் பற்றியெல்லாமோ கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால், இன்று எதையும் கேட்க முடியவில்லை. இனிமேலாவது கேட்கமுடியுமா?
உலகத்துக்கு அவர் அவனுடைய அப்பா அல்ல. பிறகு எதற்கு அவன் அங்கே நின்று கொண்டிருக்கிறான்? அம்மாவிடம் அவன் கேட்டதில்லை. அறியாத வயதில் ராசப்பா, அடிக்கடி வீட்டுக்கு வந்து இருந்துவிட்டு போகும் போது, நிறைய வாங்கிக் கொடுப்பார். கிடைத்த பொருள்கள் தரும் மகிழ்ச்சியில் எதையும் கேட்டதில்லை. ஆனால் ராசப்பா என்று சொல்லிப் பழகியிருந்தான். ஏதோ ஒரு வகையில் சொந்தம் என்று மட்டும் தெரிந்தது. அவரில்லாமல் அவர்கள் குடும்பம் இப்படி இருந்திருக்காது. அவனுடைய ‘அப்பா சோமு’ குடிகார மட்டை. குடித்துவிட்டு மலந்துவிடுவார். அம்மா வீட்டு வேலைகள் செய்தும், பண்டிகைக் காலங்களில் பெரிய வீடுகளுக்கும் கடைகளுக்கும் முருக்கு, சீடை போட்டுக் கொடுத்தும் பிழைத்துக் கொண்டிருந்தாள்.
அவனும் தங்கையும் படித்துக் கொண்டிருந்த தனியார் பள்ளியில் ஃபீஸ் கட்ட முடியவில்லை. மேலாளர் ‘டி.சி. வாங்கிட்டு வேற இடத்துல சேத்துக்குங்க. முனிசிபல் ஸ்கூல்ல சேத்துக்கோங்க’ என்று ஆறுமாதமாக சொல்லிக் கொண்டிருந்தாள். அம்மா அவர் முன் கூனிக் குறுகி நிற்பதை குணா பார்த்துக் கொண்டிருந்தான்.
ராசப்பா அந்தப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அடிக்கடி அம்மாவும் பையனும் வந்து கைகட்டி நிற்பதைப் பார்த்திருக்கிறார் ‘நானும் இப்படித்தான் இருந்தேன். எங்க அப்பாவால் என்னைப் படிக்கவைக்க முடியவில்லை. கடனைத் தீர்க்க என்னை கல்யாணிக்குத் திருமணம் செய்துவிட்டார். என்னை மாதிரி உன் வாழ்க்கையும் பாழாகிவிடும். நான் ஃபீஸ் கட்டுகிறேன்’ என்று அவனிடம் சொல்லி அதே பள்ளியில் படிக்க வைத்தார். பள்ளியில் பத்தாங்கிளாஸில் கணிதப் பாடம் எடுத்தார். மற்றவர்களுக்கு டியூஷன் எடுத்துவிட்டு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்து அவனுக்கு கணிதமும், மற்ற விஞ்ஞானப் பாடங்களையும் பத்து மணிவரை பாடம் எடுத்தார். எந்த சப்ஜெக்ட் என்றாலும் சிரத்தை எடுத்துச் சொல்லிக் கொடுத்தார். சில நாள்கள் அங்கேயே படுத்துக் கொண்டார். பல நாள்கள் போய்விடுவார். கல்லூரியிலும் அவர்தான் சேர்த்து ஃபீஸ் கட்டினார். தங்கச்சிக்கும் ஃபீஸ் கட்டுகிறார். அம்மாவின் வருமானத்தில் இதுவெல்லாம் சாத்தியமில்லை. படித்திருக்கவே முடியாது. ஏதாவதொரு கடையில், கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்திருப்பான். இன்னும் இரண்டு வருடம் உயிரோடிருந்தால் அவன் அவர் கட்டிய ஃபீஸ் எல்லாவற்றையும் சம்பாத்தித்துத் திருப்பிக் கொடுத்து விடுவான். அப்படித்தான் நினைத்திருந்தான்.
குணா வெளியில் வந்த போது, அம்மா ராமையாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவருடன் முருகையாவும் நின்றிருந்தார். ரொம்ப நாள் கழித்து அவனைப் பார்த்த முருகையா கேட்டார் ‘என்னப்பா படிக்கிற?’ ‘பி,டெக்’ ‘சரி நல்லாப் படிச்சு அம்மாவைப் பாத்துக்க. அப்பா நிலைமை ரொம்ப சீரியசாக இருக்கிறது. எப்படியும் போகலாம். என்ன ஆகும்னு தெரியல’ கசப்பான உண்மையைச் சொல்லிவிட்டார். அவனுக்குக் மனம் கலங்கியது. அதன் ஈரம் கண்களில் வழிந்தது.
‘சரி, நீங்க கிளம்புங்க. ஏதாவதுன்னா தகவல் சொல்றோம். வெளியிலே தான் நாள் பூராவும் உட்கார்ந்திருக்கணும். ராத்திரி ஆனா இருக்க இடமில்ல. நாங்களும் ஒரு ஆளு இருந்துட்டு கிளம்பிருவோம். முடிஞ்ச வரை பார்ப்போம். அதுக்கு மேல என்ன செய்ய?’ என்றார் ராமையா.
பஸ் ஸ்டாண்டில் டீ குடிக்கும் போதுதான் குணா அம்மாவின் கண்களை நேராகப் பார்த்தான். அவள் குனிந்து கொண்டாள். ஏதோ சொல்ல வந்தது போலிருந்தாலும் அமைதியாக இருந்தாள். பஸ்ஸில் வரும் போது கண் கலங்கிக் கொண்டிருந்தாள். ‘எப்படியாவது சமாளித்துவிடுவோம். இன்னும் ஒரு வருஷம். அப்புறம் சம்பாதிக்கத் தொடங்லகிவிடுவேன்’ என்று சொல்ல நினைத்தான். சொல்லவில்லை. அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியுமா? அவளிடம் வேறு ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும்.
‘அந்த அம்மா எங்க இருக்கா?’
‘கல்யாணி ராமையா வீட்ல இருக்கா. அவள் படுத்த படுக்கையா இருக்கா. நெனவு கிடையாது. சொன்னாலும் புரியாது. அவளும் பாவம். புருஷனப் பாக்க முடியாதவ’ கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அவனும் கேள்விப்பட்டிருக்கிறான். பிறந்ததிலிருந்தே மனநிலை சரியில்லாதவள். அவளுக்கு ஏன் ராசப்பாவைக் கல்யாணம் பண்ணி வைத்தார்கள்?’
அவன் மனதில் எழுந்த கேள்வியைப் புரிந்து கொண்டவள் போல் அம்மா பதில் சொன்னாள் ‘அவரோட அப்பா பெரிய முதலாளி. ஜவுளிக்கடை வச்சு நஷ்டமாகி, கடன் பட்டு கஷ்டப்பட்டுருக்காரு. கடங்காரங்க எல்லாத்தையும் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம். மூணு வேளை சோத்துக்கே வழியில்ல. ராசப்பா, பன்னிரண்டாங் கிளாஸ் படிக்கும் போதே அந்த அம்மாவைக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. “என் மகளைக் கட்டிக்கிடட்டும். நான் கடனை அடைச்சிருதேன்”னு அவரோட மாமனாரு சொல்லியிருக்காரு. அந்த அம்மா, ராசப்பாவை விட நாலு வயசு மூத்தது. வேற யாரும் அதைக் கல்யாணம் பண்ண மாட்டாங்க. ராசப்பாவோட அப்பா தன் கடனை அடைக்க அவரை மாட்டிவிட்டுட்டாரு. அவரு நல்லாப் படிக்கிறவரு. கல்யாணம் முடிச்சப்பறம் மாமனாரு படிக்க வச்சாரு. ஆனால் நல்ல வேலை எதுவும் கிடைக்கல. மாமனார் நினைச்சா வேலை வாங்கிக் கொடுத்திருக்காலம். ஆனால் விட்டுட்டு ஓடிப் போயிருவாருன்னு வேலை வாங்கிக் கொடுக்கலை அப்படீம்பாரு.
மாமனார் வீட்ல நல்ல வசதி. வீட்டோட இருந்துக்கிட்டாரு. ஆனா இவரு கொஞ்ச வருஷம் கழிச்சுப் போற நிறுத்திட்டாரு. பேருக்குத்தான் புருஷன் பொண்டாட்டி. பிள்ளையும் பிறக்கல. ஒரு சுகமும் கிடையாது. அவளுக்கும் கிடையாது இவருக்கும் கிடையாது. யார் செத பாவம்னு தெரியல. அவளைக் கண்டாலே அவருக்குப் பிடிக்கல. பள்ளிக் கூடத்தில் வேலை பாக்கும் போது, உனக்கு ஃபீஸ் கட்ட முடியாம டி.சி. குடுக்கிறோம்னு சொன்னாங்க. இவர்தான் உனக்குப் ஃபீஸ் கட்டினாரு. இல்லைன்னா! அவளால் தொடர முடியாதாப்டி குரம் கரகரத்தது. சில நிமிடங்கள் தூரத்தில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அதுல இருந்து எனக்குப் பழக்கம்.’ அம்மா முந்தானையை எடுத்து வாயை மூடிக் கொண்டாள்.
கொஞ்ச நேரம் பஸ் போகிற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. இன்னும் சொல்லுவாள் என்று குணா காத்திருந்தான். வயதானபின் அதுவும் இதுமாதிரி சூழலில் அம்மாக்கள் சில விஷயங்களைச் சொல்ல முடியாது. யார் வாழ்க்கையின் குழப்பமான சங்கிலித் தொடர் அவன் வரை நீண்டிருக்கிறது. மன நிலை சரியில்லாத பெண்ணிடம் இருந்து தொடங்கியது அவனுடன் முடிந்துவிட வேண்டும். ராசப்பா அவனுக்கு மூன்று வருடங்களும் ஃபீஸ் கட்டிவிட்டார். எங்கயாவது கடன் வாங்கி மூன்றாவது வருஷப் ஃபீஸ் கட்டி விடுவாள் அம்மா. அவனுக்கு விடுதலைக்கு வழி இருக்கிறது.
அவரைப் பற்றியும் ‘அந்த அம்மாவைப்’ பற்றியும் சொன்ன அம்மா, தன்னைப் பற்றிச் சொல்லவில்லை. குணாவின் அப்பா சோமு, பாரம் தூக்குகிறவர். நல்லா சம்பாதிப்பார். தினமும் லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவார். நன்றாகக் குடித்திருப்பார். தினமும் நானூறு அறூநூறு கிடைத்தாலும் வீட்டுக்கு இருநூறு ரூபாய்தான் கொடுப்பார். அவருக்கும் அம்மாவுக்கும் பதினைந்து வயது வித்யாசம். இருபது வயதுப் பையனுக்கு இதுவெல்லாம் எங்கே கொண்டுபோய்விடும் என்று தெரியும்.
இரண்டு நாள் கழித்து ராசப்பா இறந்துவிட்டார் என்று தகவல் வந்தது. குணாவிடம் அம்மா சொன்னாள்.
‘நீ போய்ட்டு வந்திருப்பா’
‘ஏம்மா, நீயும் வந்தா என்ன?’
‘ராமையாதான் சொன்னார். நீ வராத. ஏதாவது தகராறு ஆயிரும். அசிங்கமாப் போயிரும். அவ வேற நினைவில்லாமக் கெடக்கா. பையன மட்டும் அனுப்பிவைன்னாரு.’
‘ஏன்யா, சாமி, கடைசி தடவையா நான் தூர நின்னுட்டுப் பாத்திட்டு வந்திர்றேன்னேன். வீட்ல ஒரே கூட்டமாயிருக்கு. யாராவது ஏதாவது சொல்லிட்டாங்கன்னா. அதான் யோசிக்கேன்ன்னாரு. நேத்து ராத்திரி, பத்துமணிக்கு ஆட்டோ பிடிச்சி பாத்துட்டு வந்துட்டேன். அவ்வளவுதான் நமக்குக் கொடுத்து வச்சது. நீயே போயிட்டு வந்திரு’
குணா கிளம்பினான். மீண்டும் ‘குணா, குணா’ என்று அம்மா அவனைக் கூப்பிட்டாள். வாசல் வரை போனவன் திரும்பி வந்தான்.
‘என்னம்மா?’
‘அவங்க நீர்மாலை எடுக்காங்களாம். நீ எடுக்கக் கூடாதாம். சும்மா பாத்திட்டு வந்திரணுமாம். கண்டிப்பா சொல்லிட்டாங்க. கோபப்பட்டுராதப்பா.. ஏதாவது கேவலமாயிரும்’ அவளுக்குக் கண்ணீர் பொங்கிக் கொண்டுவந்தது. ‘நீ அப்படிப் பையன் கிடையாது. ஒண்ணும் செய்ய மாட்டேன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்றேன்’.
‘இல்லைம்மா. நான் ஒண்ணும் செய்ய மாட்டேன். சும்மா கூட்டத்தோட கூட்டமாப் போய்ட்டு வந்திர்றேன்’.
குணா இழவு வீட்டுக்குப் போன போது பெருங்கூட்டமாக இருந்தது. இவனுக்குத் தெரிந்தவர்கள், ராமையாவின் வீட்டாள்கள் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார்கள். அவனும் தள்ளியே நின்று கொண்டான். அவர்கள் வீட்டார் நீர்மாலைக்குச் செல்லும் போது கூட்டத்தோடு அவனும் போனான். எரியூட்டப் போகும் போது உடல் வைத்திருந்த வேனின் பின்னால் நடந்தே கிராமத்துக்குள் இருந்த சுடுகாட்டுக்குப் போனான். அவருக்காக அவனால் செய்ய முடிந்தது அவ்வளவுதான். அவர் என்னவெல்லாம் அவர்கள் வீட்டுக்காகச் செய்தார் என்பதை மட்டும் நினைத்துப் பார்த்தான். அது நீண்டு கொண்டே போனது. வீடு வரும் வரை. வீட்டில் அவர் போட்டோவை வைத்து மாலை போட்டு வைக்கலாம். அதுவும் நடைமுறையில் சாத்தியம் இல்லை. அது பல கேள்விகளை எழுப்பும். இன்று விடை கொடுத்துவிட்டான். இனிமேல் அவருக்கு நன்றி சொல்லக் கூட முடியாது
***