
’’காற்று வந்து
ஜன்னலைச்
சாத்திச் சென்றது’’…….
இன்று காலை நண்பன் கவிஞர் பழநிபாரதியின் கைப்பேசியின் அழைப்பு வந்த போது, வழக்கமான அழைப்பென்றுதான் நினைத்தேன். ஆனால், அவன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைந்துவிட்டார் என்று சொன்ன செய்தி என்னை நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய என் துவக்கநாள் இலக்கிய வாழ்நிலத்திற்குள் தள்ளிவிட்டது. காலையிலேயே அவரைப் பற்றி மற்றும் அவருடனும் அவரது குடும்பத்தாருடன் 1981இல் துவங்கி எனக்கிருந்த ஆழ்ந்த உறவை இங்கு எழுத முடியாமல், பலமுறை கணிணியை திறந்து முகநூலில் இரண்டொரு வரிகளுக்கு மேல் எழுத முடியாமல் ஸ்தம்பித்து மூடிவிட்டேன்.
சற்றுமுன் தமிழன்பன் ஐயாவின் இல்லம் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினேன். அவரது மூத்த மகன் பாப்லோ நெருடா அவர்களை பல பத்தாண்டுகள் கழித்து இப்படியொரு துயர கணத்தில் சந்திக்க நேரிட்டது, அவரிடம் விசாரித்தது, பாப்லோ, அண்ணா என் மனதில் இளம்பிராயத்தில் பதிந்த அதே உருவத்துடன் இருக்கிறீர்கள் எனறு என கரங்களைப் பிடித்தார். தம்பி பாரதிதாசன் எப்போது வருகிறார் என்றேன் திங்கள் அமெரிக்காவிலிருந்து சென்னை வருகிறார்,ஐயாவின் துணைவியார் அவர்கள் அழுதபடி இருந்தார்கள், நான் கையைப் பிடித்ததும் சண்முகம் எப்படிப்பட்டவர் அவர்; என்னை விட்டு திடீரென்று பிரிய எப்படி மனம் வந்ததோ என்று விழிநீர் தேங்கச் சொன்னார்.
1981இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் துறை மாணவனாக சேர்ந்திருந்தேன். எனக்கிருந்த கவிதை எழுதும் ஆர்வத்திற்கான வழிகாட்டுதலின்றியும் எழுவதை செம்மைப்படுத்து கரமன்றி திகைத்திருந்த பருவம். எனது பால்ய நண்பன் கண்ணப்பன் சென்னை புதுக்கல்லூரி மாணவன், அவன் உன் கவிதைகளை பிரசுரிக்க தனது வகுப்பு நண்பனான இராஜ ராஜனை அறிமுகப்படுத்தினார். அவர் ’’இதழ்’’ என்ற கவிதைக்கான கையெழுத்து பத்திரிகையை நடத்திவந்தார். ராஜராஜன் என் கவிதைகளை வாசித்துவிட்டு அடுத்த நாள் சென்னை வால்டாக்ஸ் சாலையில் ஒரு பள்ளியில் நிகழும் கவியரங்கத்திற்கு கூட்டி சென்றார். அங்கு கையெழுத்து பத்திரிகைகளின் கூட்டமைப்பு சார்பில் நிகழ்ந்த கவியரங்க நிகழ்வில் கலந்து கொண்டேன்.
கவியரங்க தலைமை கவிஞர் ஈரோடு தமிழன்பன், அதில் கவிஞர் பழநிபாரதி கவிதை வாசித்தார். நிகழ்ச்சி முடிந்ததும் ஐயா தமிழன்பன் இறங்கி வந்தார் மெல்ல என்னை இராஜராஜன் சார் இவர்தான் நான் சொன்ன எஸ். சண்முகம் இந்த இதழில் இவருடைய கவிதையை பிரசுரித்துள்ளோம் என்றார். மென்முறுவலுடன் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டார், நான் உங்களை சந்திக்க வேண்டும் என்றேன், அப்படியா மாலை நாலு மணிக்கு மேல் லாயிட்ஸ் குடியிருப்பு L4 வாருங்கள் என்றுதும், தங்களிடம் புத்தகங்கள் பெற்று வாசிக்க வேண்டுமென்றேன், ஐயா தனது கையில் வைத்திருந்த ‘’Poetry and Democracy” நூலை தந்து வாசியுங்கள், நாளை வாருங்கள் என்று விடைபெற்றார். அடுத்து அன்றே தமிழன்பன் முன்னுரைய்டன் ’’நெருப்பு பார்வைகள்’’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்த பழநிபாரதியை இராஜராஜன் அறிமுகப்படுத்தினார், அன்றுமுதல் பழநிபாரதி என் வாழ்நாள் நண்பனாக தொடர்கிறான்.
(1981) அந்நாள் துவங்கி பத்தாண்டுகளுக்கு மேல் என் கல்லூரி வகுப்பு முடிந்ததும், கவிஞர் ஈரோடு தமிழன்பன் இல்லம் மாலை நான்கு மணிக்கு சென்றால், அவருடன் காபி அருந்திய பின்னர், தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க கிளம்பி பிரதான சாலையில் ஆட்டோவில் ஏறும்வரை பேசிக் கொண்டே வருவேன். அவரும் என்னுடைய பிள்ளமையான இலக்கிய ஐயங்களுக்கு விடையளிப்பார். அவரிடமிருந்து ‘’ Leaves of Grass” – Walt Whitman புத்தகத்தை பெற்று இரண்டு மாதங்கள் வைத்து படித்துவிட்டு தந்தேன். அடுத்தது, ” Modernism” – (Penguin Publisher) புத்தகம் கேட்டு பெற்றேன். அந்த புத்தகம் விரிவாக Imagism, Symbolism, Surrealism, மற்றும் Avant Garde கலை இயக்கம் பற்றிய விரிவான அறிமுகத்தை தந்தது. Yevgeny Yevtushenko – Zima Junction , Aimé Césaireஇன் கவிதை புத்தகங்களை அவரால் வாசிக்க நேர்ந்தது. அப்போது நான் மாணவன் புத்தகங்களை வாங்கும் பொருளாதாரம் இல்லை.
ஐயாவின் கையெழுத்து சங்கிலி போல் இருக்கும், ஏறக்குறைய பத்து தமிழன்பன் அவர்களின் பத்து தொகுதிகளை நான் தான் படியெடுத்தேன். நான் அவரை சந்தித்த போது ‘’காலத்திற்கு ஒருநாள் முந்தி – அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் – திரும்பி வந்த தேர்வலம் – நிலா வரும் நேரம் – சூரிய பிறைகள் – ஊமை வெய்யில்.. என அத்தனை தொகுதிகளையும், அங்கேயே அமர்ந்து படியெடுப்பேன். பின்னர் ’தாய்’ பத்திரிகையில் அவர் எழுதிய உலகக் கவிஞர்கள் பற்றிய கட்டுரைத் தொடரும் இதில் அடங்கும். எனக்கு கவிதை எழுதுவதற்கான ஒரு பயிற்சியாகவே அமைந்தது
நான் எழுதும் கவிதைகளை வாசிக்கத் தருவேன், அதில் திருத்தங்கள் செய்வார். எனது முதல் கவிதை அச்சு வடிவில் பிரசுரிக்க ஐயா அவர்கள்தான் காரணம் ‘’அரும்பு’’ பத்திரிகையில் அவரது கவிதையுடன் எனது கவிதை ’’வெள்ளை வசந்தம் ‘’ பிரசுரிக்க செய்தார். 1981 துவங்கி 1983 வரை எழுதிய கவிதைகளின் தொகுதியான ‘’புகைந்த மழைப்பொழுது’’ தமிழன்பன் அவர்கள் ஒரு முன்னுரையும் எழுதி பூங்கொடி பதிப்பகத்தில் பிரசுரிக்க செய்தார். அதன் வெளியீட்டு விழா சென்னை சோவியத் கலாச்சார் மையத்தில் நிகழ்ந்தது, அதற்கும் ஐயா தலைமை ஏற்றார்.
மேலும் தமிழன்பன் தலைமையேற்கும் பல கல்லூரிகளில் நிகழ்ந்த கவியரங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒருமுறை ஒரு கவியரங்க நிகழ்வில் அவர் சொன்ன
’தமிழ் எழுதும் விரல்களுக்கு தங்க மோதிரம் தேவையில்லை பாருங்கள் அதனால்தான் நான்கூட அணிவதில்லை’’
என்ற வரிகளுக்கு அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பியது. இன்னும் நிறைய சொல்லலாம். புதுக்கல்லூரி தமிழ்த்துறைக்கு தமிழன்பன் அவர்கள் தலைமையில் இயங்கிய ‘’சென்னை நகர கல்லூரி மாணவர் கவிதை இயக்கம்’’ என்ற அமைப்பின் செயலாளராக இருந்தேன், அதன் ஒரு கவிதை நிகழ்வு குறித்து பேசுவதற்கு, அவரை சந்திக்க சென்று அவரது இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த பேராசிரியர் யாரை பார்க்க வந்தீர்கள் என்றார் தமிழன்பன ஐயாவை என்று சொன்னேன். வகுப்பை முடித்துவிட்டு வந்தவர் இவர் யார் தெரியுமா? இவர்தான் கவிஞர் இன்குலாப் என்று அறிமுகப்படுத்தினார். மதிய உணவு இடைவேளையில் நான் கிளம்பினேன், இன்குலாப்பும் உடன் வந்தார் அவரது இல்லம் ஜானி ஜான் கான் தெருவில் இருந்தது, என் இல்லம் அடுத்த தெருவான முகமது உசேன் தெரு. அன்றுமுதல் மக்கள் கவிஞர் இன்குலாப் உடன் பழகத் துவங்கினேன். அவர் நடத்திய ’’புதிய மனிதன்’’ பத்திரிகையில் என்னை தொடர்ந்து கவிதைகள் மற்றும் பின் அட்டையில் கறுப்பு கவிதை என்று தொடர்ந்து எனது நீக்ரோ கவிதை மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.
ஈரோடு தமிழன்பன் கவிதைத் தொகுதிகளில் மிகவும் வித்தியாசமானது ‘’காலத்திற்கு ஒருநாள் முந்தி’’. அதில் இடம்பெற்ற ஒருசில கவிதைகள் கவிஞர் ஆத்மாநாம் நடத்திய ‘’ழ’’ சிறுபத்திரிகையில் வெளியாகியிருந்தது. எனக்கு வித்தியாசமாக எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திய கவிதையை இங்கு ஞாபகத்திலிருந்து சொல்கிறேன்..
காற்று வராதா என்று
ஜன்னலைத்
திறந்து வைத்தேன்,
காற்று வந்து
ஜன்னலைச்
சாத்திச் சென்றது.
தொகுப்பு: காலத்திற்கு ஒருநாள் முந்தி
ஈரோடு தமிழன்பன்
அவருடைய கவிதையின் எண்ணிக்கையிலிருந்து இன்னும் நவீனத்துவ பண்புகளைக் கொண்ட பல வித்தியாசமான கவிதைகளை உதாரணமாகச் சொல்லலாம். பெருநகர மத்தியதர வர்க்கதின் நிறைவேறாமயை அகப்படுத்தும் இக்கவிதையைக் குறித்து நிறையவே எழுதலாம். மேலும் ’’தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு ‘’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடு பிரசுரமான புத்தகம் மிக முக்கியமானது.
நண்பர் இராஜராஜனின் தாயார் திரு. ஜான்சி அவர்கள் திராவிடர் கழக மகளீர் அணியில் உயரிய பொறுப்பில் இருந்தவர், சரியாக நினைவில் இல்லை 1982 அல்லது 1983 இல், அண்ணாவின் நினைவாக ஒரு கவி அரங்கம் தமிழன்பன் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது, அதில் நான் பேரறிஞர் அண்ணாவை வாசித்த கவிதை அடுத்த ‘’உண்மை’’ இதழில் பிரசுரமானது, அதைக் கண்டு ஐயா அவ்வளவு மகிழ்ந்தார். அடுத்து நடந்த தந்தை பெரியார் கவி அரங்கிலும் கவிதை வாசித்தேன்.
அவருடைய எழுத்து பாணியில் இருந்து வித்தியாசப்பட்டு நான் எழுதும் கவிதைகளையும் வாசித்து திருத்தங்கள் கூறுவார் ஊக்குவிப்பார்.
நிற்க……
நான் எண்பதுகளின் பிற்பகுதியில் பேராசிரியர் திரு. தமிழவன் அவர்களது அறிமுகம் கிடைத்த பின்னர், அமைப்பியல் , பின் அமைப்பியல் , பின் நவீனத்துவம் ஆகிய கோட்பாட்டு இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதத் துவங்கிய பின்னர் சிறுபத்திரைகைகளில் வரும் கட்டுரைகளை வாசித்துள்ளார், மேலும் தீராநதியில் கோணங்கியின் குறுநாவல் பற்றிய கட்டுரையை வெகுவாக பாராட்டினார்.
சில கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் அவருடன் மேடையில் நானும் பங்குபெற்ற போது , என் மாணவர் என்று பேரன்பு பொங்க அறிமுகப்படுத்துவார். பல கவிதை தலைமுறைகளை கண்டவர். சில நாட்கள் முன்பாக முகநூலில் கவிதை எழுதிக் கொண்டுதான் இருந்தார். தான் உயரிய ஈடுப்பாட்டுடன் நேசித்த கவிஞர்களின் பெயரையே தனது மகன்களுக்கு சூட்டியுள்ளார். மூத்த மகன் பாப்லோ நெருதா, இளைய மகன் பாரதிதாசன் இருவரும் இன்று புகழ்மிகு மருத்துவர்கள்.
பாரதிதாசன் கொடிமரபில் எழுத துவங்கி வானம்பாடி வழியே புதுக்கவிதை எழுதி, பின்னர் இன்றைய நவீன கவிதையின் இழையுடனும் தொடர்ந்தவர் பேராசிரியர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.
அவர்களது மாணவர்களில் ஒருவனாக எனது ஆழ்ந்த இரங்கல்களைச் சமர்பிக்கிறேன்.
