
சமீபத்தில், மூத்த எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் இவ்வாறு எழுதியிருந்தார்:
“பிரபல பதிப்பகங்களில் குறிப்பாக மேற்குலகில், ஒருவர் செவ்விதாக்கம் செய்வாரெனக் கேள்விப்படுகிறேன். பிறிதொருவர் அதனைச் செய்யும்போது மூல ஆசிரியரின் படைப்பு மாற்றத்திற்குள்ளாகும் நிலையில், பிறகு அவரது பெயரை மட்டும் போடுவது சரியாகுமா என்ற ஐயம், எனக்கு நீண்டகாலமாக உள்ளது; இருவரின் பெயரைப் பாவித்தால் பொருத்தமாகலாம். இங்கு ஷோபாசக்தியின் செவ்விதாக்கம், மூல ஆசிரியரின் ஆக்கமொன்றை அவருடையதல்லதாக்கிவிட்டுள்ள ( உண்மையை) அவலத்தை, உணரமுடிகிறது! செவ்விதாக்கம் அதன் சொந்தப் படைப்பாளியால், அவர் திருப்திகாணும் வரை மேற்கொள்ளப்படுதலே முறையானது!”
அ.யேசுராசா அவர்கள் குறிப்பிடுவது போன்று, உலக மொழிகளில் இயங்கும் மதிப்புறு பதிப்பகங்கள் அனைத்துமே ஒரு பிரதியை வெளியிடும்போது ‘எடிட்’ செய்தே வெளியிடுகிறார்கள். அந்தப் பதிப்பகங்களிலேயே ‘எடிட்’ செய்வதற்கு என்று ஒரு குழு இருக்கும். சில பதிப்பகங்களில் ‘எடிட்’ குழுவில் ஆறுபேர் வரை இருப்பதுண்டு.
என்னுடைய நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும் பிற மொழிகளில் வெளியாகியபோது, ‘எடிட்’ செய்தே வெளியிடப்பட்டன. உள்ளடக்கத்தில் மட்டுமல்லாமல் தலைப்புகளில் கூட எடிட்டர்கள் மாற்றங்களைப் பரிந்துரைப்பார்கள். என்னுடைய ‘ம்’ நாவல் ஆங்கிலத்தில் ‘Traitor’ என்ற தலைப்பிலும் ‘இச்சா’ நாவல் பிரெஞ்சில் ‘La Sterne rouge’ (சிவப்பு ஆலாப் பறவை) என்ற தலைப்பிலும் வெளியாகின. எடிட்டர்களின் திறனிலும் அவர்களின் பரிந்துரைகளிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது.
ஒருவர் எழுதிய பிரதி எடிட்டர் ஒருவராலோ அல்லது ஒரு குழுவாலோ எடிட் செய்யப்படுவது உலக இலக்கியத்தில் மிக அவசியமான மற்றும் வழக்கமான நடைமுறையே. நாங்கள் பரவசத்தோடு வாசிக்கும் உலகமொழி இலக்கியங்கள் பெரும்பாலனவை மூல ஆசிரியர் அல்லாதவரால் எடிட் செய்யப்பட்டு செம்மையாக்கப்பட்ட இலக்கியப் பிரதிகளே.
தமிழில் இந்த ‘எடிட்’ நடப்பதில்லையா என்று கேட்டால் அது நடக்கிறது. உதாரணத்திற்கு குறிப்பிடுவதானால், ஜெயமோகன் ‘விஷ்ணுபுரம்’ நாவலை எழுதிவிட்டு சுஜாதாவிடம் கொடுத்து ‘எடிட்’ செய்து தருமாறு கேட்டிருக்கிறார். சுஜாதா செய்யாததால், எம்.எஸ்ஸிடம் நாவலைக் கொடுத்து எடிட் செய்து தருமாறு ஜெயமோகன் கேட்டிருக்கிறார். எம்.எஸ்ஸின் உதவியுடன் அது நாவல் வடிவம் பெற்றது. இதை ‘உள்ளே இருப்பவர்கள்’ என்ற தன்னுடைய கட்டுரையில் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் இயங்கும் பல பதிப்பகங்களும் தாங்கள் வெளியிடும் பிரதியை ‘எடிட்’ செய்தே வெளியிடுகின்றன. பிரதிகளை ‘எடிட்’ செய்வதில் க்ரியா ராமகிருஷ்ணன் தலை சிறந்தவர் என்பது தமிழ் இலக்கிய உலகம் அறிந்த பேச்சு. ‘க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர்’ என்று கவிஞர் ஆசை ஒரு கட்டுரையே எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையிலிருந்து இரண்டு பந்திகள் வருமாறு:
1.”பதிப்புத் துறையில் ஒரு நல்ல எடிட்டரின் பணிகள் என்னென்ன? தனக்கு வரும் நூல்களை முதலில் படித்துப் பார்த்து, அவை பிரசுரத்துக்குத் தகுதியானவைதானா என்று முடிவெடிப்பது முதல் வேலை. ஒரு பிரதி நல்ல படைப்பு சாத்தியங்களையும் விஷய கனத்தையும் கொண்டிருந்து மொழி நடை, கட்டமைப்பு போன்றவற்றில் ஏதும் பிரச்சினைகள் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைகளையெல்லாம் சுட்டிக்காட்டி அவற்றை எழுத்தாளரைக் கொண்டு சரிசெய்யச் சொல்வது மிக முக்கியமான பணி. இதற்கு எழுத்தாளர்-எடிட்டர் இருவருக்கிடையிலான தொடர்ச்சியான, சரியான தகவல் தொடர்பு முக்கியம். நேரடிச் சந்திப்புகள் அதைவிட முக்கியம்.”
2.”ஒரு பிரதி தற்போது இருப்பதைவிட மேலும் பல சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது; ஆனால், அந்த எழுத்தாளர் அதைத் தவறவிட்டிருக்கிறார் என்றால் ஒரு நல்ல எடிட்டர் அதைச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளார். திறந்த மனதுடைய எழுத்தாளர் என்றால், தனது ‘ஈகோ’வைவிட தனது படைப்பு முக்கியமானது என்று நினைக்கும் எழுத்தாளர் என்றால் அந்தச் சவாலை ஏற்றுத் தன் படைப்பைச் செழுமைப்படுத்துவார். எடிட்டர்கள் என்றாலே கொடுங்கோலர்கள், ஆசிரியரின் பிரதியை முழுவதும் தாங்களே எழுதிவிடுபவர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள்கூட தாங்கள் எழுதியதைத் தங்கள் நண்பர்களிடம் கொடுத்துக் கருத்துக் கேட்பதில்லையா? அந்த நண்பர்கள் கருத்து சொல்வதில்லையா? அதில் சிலவற்றை ஏற்றுக்கொண்டு அந்த எழுத்தாளர்கள் தனது படைப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்வதில்லையா?”
அ.யேசுராசா “மூல ஆசிரியரின் படைப்பு மாற்றத்திற்குள்ளாகும் நிலையில், பிறகு அவரது பெயரை மட்டும் போடுவது சரியாகுமா என்ற ஐயம், எனக்கு நீண்டகாலமாக உள்ளது; இருவரின் பெயரைப் பாவித்தால் பொருத்தமாகலாம்” என்கிறார். என்னால் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏனெனில், நூலை எழுதியவர்தான் ஆசிரியர். நூலை ‘எடிட்’ செய்தவரது பெயரை நூலில் ‘எடிட்டர்’ என்றுதான் குறிப்பிட வேண்டும். நூலை எடிட் செய்தவர்கள் பதிப்பகத்தார் எனில் ‘எடிட்டர்’ எனத் தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை. பதிப்பகம் என்பது அச்சகமோ, பதிப்பாளர்கள் அச்சு இயந்திர முதலாளிகளோ அல்ல. தாங்கள் பதிப்பிக்கும் பிரதியைச் செம்மைப்படுத்தி வெளியிடுவது அவர்களது கடமை.
நான் இதுவரை ‘குழந்தைப் போராளி’, ‘அகாலம்’, ‘தனுஜா’, ‘படுபட்சி’ என நான்கு நூல்களை ‘எடிட்’ செய்திருக்கிறேன். இந்த நான்கு நூல்களுமே மிகப் பரவலாக வாசகக் கவனத்தைப் பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியே. நான் க்ரியா ராமகிருஷ்ணன் போன்று பதிப்பாளரல்ல. நூலாசிரியர்கள் எனது நண்பர்கள் என்பதாலும் நான் ‘எடிட்’ செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையில், மேற்சொன்ன நான்கு நூல்களின் ஆசிரியர்களிலும் ‘அகாலம்’ ஆசிரியர் புஷ்பராணி அக்கா மட்டுமே எனக்கு ஏற்கனவே நண்பராக இருந்தவர். மற்றைய மூன்று எழுத்தாளர்களும் ‘எடிட்’ செய்த காலங்களில் அவர்களை நேரில் சந்தித்ததாலும் அடிக்கடி உரையாடியதாலும் எனக்குப் பிற்காலத்தில் நண்பர்களானவர்கள். நான் ‘எடிட்’ செய்த நான்கு பிரதிகளுமே அரசியல்ரீதியாக மிக முக்கியமான பிரதிகள். அவை குழந்தைப் போராளிகளையும், விடுதலை அரசியலையும், பால் சமத்துவத்தையும், இன ஒடுக்குமுறையையும் குறித்துப் பேசும் பிரதிகள் என்பதாலேயே ‘எடிட்’ செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.
முதல் மூன்று நூல்களிலும் ‘பதிப்பாசிரியர்’ என்று எனது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். எனினும் ‘பதிப்பாசிரியர்’ என்பது ‘எடிட்டர்’ என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல்லாக இப்போது எனக்குப் படவில்லை. ‘தொகுப்பாளர்’ என்பதும் சரியானதல்ல. ‘செம்மையாக்கம்’ எனச் சொல்லலாமா என்றும் ஒரு யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது. இலக்கியப் பிரதி எடிட்டர் என்பதற்கு என்னதான் பொருத்தமான தமிழ்ச் சொல் என்று இன்னும் தேடிக்கொண்டேயிருக்கிறேன். எனவே, நான்காவது நூலில் Edited by Shobasakthi என ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். நான் ‘எடிட்’ செய்யும் நூல்களிலே எனது பெயரைப் போடாமலேயே விட்டால்தான் என்ன? GhostWriting செய்வதில்லை என்பது போல, நான் GhostEditing-கும் செய்வதில்லை!
க்ரியா ராமகிருஷ்ணன் மறைந்தபோது, இலக்கியப் பிரதி ‘எடிட்டிங்’ என்பது ஒருமுறை தமிழ் இலக்கிய உலகில் உரையாடலுக்கு உள்ளானது. அ.யேசுராசா அவர்களது இப்போதைய கருத்து இலக்கியப் பிரதி ‘எடிட்டிங்’ குறித்த உரையாடலை இன்னொருமுறை ஆரோக்கியமாகத் தொடக்கி வைக்கும் என்றே நம்புகிறேன். அவருக்கு எனது நன்றி.

அருமை,, புதிய சொற்தேடல்… வாழ்த்துக்கள் ஷோபா சக்தி அவர்களே.. 🙏📚🇨🇭📖