அனுராதா ஜெய்ஷங்கர்/ பிறந்தநாள் பரிசு


“ராம், ஒவ்வொரு வருஷமும் புருஷ லட்சணமா என் பிறந்த நாளை மறந்துட்டு வருத்தப் படறீங்களேன்னு தான் இந்த முறை ஒரு வாரம் முன்னாடியே எனக்கு என்ன பரிசு வேணும்னு சொல்லிட்டேன்”.
“தேங்க்ஸ் டியர். இந்த வருஷம் உன்னை எப்படி அசத்துறேன் பாரு. ’என் மனதில் என் மனைவி’ என்கிற தலைப்புல படம் வரைஞ்சு தர சொல்லி இருக்கே. ஜஸ்ட் வெயிட் “.
“பேருதான் பெரிய ஓவியர். என்னை எப்படி வரையறீங்கன்னு பார்ப்போம். என் ஆபிஸ் பிரண்ட்ஸ் கிட்ட வேற பெருமையா நீங்க என்னை வரையப் போறீங்கன்னு சொல்லி வச்சிருக்கேன்”.
வினயாவின் பிறந்தநாள் வந்தது.
” டட்ட டாங் !! வினயா, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அங்கிருந்தே பாரு “. ராம் படத்தின் திரையை விலக்கினான்.
“ஆ ….”என்று அலறினாள் வினயா.
” என்னை வரையச் சொன்னா எதுக்குங்க பத்து கையோட கல்கத்தா காளியை வரைஞ்சு இருக்கீங்க?”
” என் பைத்தியமே, கிட்ட வந்து பாரு”.
ராமின் முகமும் மனமும் பாராட்டையும் நன்றியையும் எதிர்பார்த்து விம்மிக் கொண்டிருந்தன.
” ஆக இப்படிதான் நான் உங்க மனசில் இருக்கேன்”.
” ஆமா, உண்மையில இதுல பாதி வேலை நான் செஞ்சாலும் உனக்கு கிரெடிட் கொடுக்க எல்லா வேலையையும் நீயே மேனேஜ் செய்யறா மாதிரி போட்டேன்”.
” ரொம்ப ஏமாற்றமா இருக்குங்க. தொடப்பக்கட்டை , மாப் ஸ்டிக், தோசை கரண்டி இத்தனையும் என் கையில சொருகி படம் போட உங்களுக்கு எப்படி மனசு வந்தது? என்னதான் படம்னாலும் போட்ட உடனே உங்களுக்கு வருத்தமாகி இந்த கையெல்லாம் அழிச்சிட்டு உங்க கையா மாத்தி வரைஞ்சு இருக்கலாம் இல்ல?”
ராமுக்கு தலை சுற்றியது.
” என்னம்மா இப்படி சொல்ற?” என்றான் பரிதாபமாக.
“இதைப் போய் என் பிரெண்ட்ஸ் கிட்ட காமிச்சா இத்தனை வேலையும் உன்னை செய்ய சொல்லிட்டு சும்மா இருக்கிற கல்நெஞ்சக் காரரா உன் ஹஸ்பண்டுன்னு உங்கள தப்பா நினைக்க மாட்டாங்களா ? இதையே என்ன நடுவில் போட்டு இந்த 10 கையையும் உங்க கையா போட்டு இருந்தா உன்ன தாங்குற ஹஸ்பண்ட் என்று உங்களை பெருமையா பேசி இருப்பாங்க. போங்கங்க ” என்றபடியே நகர்ந்து விட்டாள்.
“மனைவியிடம் சொதப்புவது எப்படி” ன்னு ஒரு புஸ்தகம் எழுது என்று கல்கத்தா காளி ராமைப் பார்த்து சொல்லிச் சிரிப்பது போல் அவனுக்குத் தோன்றியது.
**

8 Comments on “அனுராதா ஜெய்ஷங்கர்/ பிறந்தநாள் பரிசு”

Comments are closed.