மாலை மஞ்சள் வெயில் மெதுவாக மங்கி; வானம் சிவப்பும் நீலமும் ஊதாவுமாக வண்ணக் கோலம் காட்டி, அந்தி மயங்க ஆரம்பித்தது.
நிதானமாக அந்த சிவப்பு நிற கார் காந்தி சிலை பக்கமாக நின்றது. ராணி மேரி கல்லூரி வளாகம் வெறிச்சோடி இருந்தது. இன்னும் பரவலாக ஐ.ஜி ஆஃபிஸ் என்றே பரவலாக அறியப்படும் டி.ஜி.பி ஆஃபிஸ் வளாகத்தில் பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறிய வண்ணம் இருந்தன.
அவர் தன் காரை விட்டு மெதுவாக இறங்கினவர். பார்க்க முதியவராக தெரிந்தவர், காரை லாக் செய்துவிட்டு திரும்பினார்.
அவருடைய நடவடிக்கை சற்றே வினோதமாக இருந்தது. காரை வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் சுற்றி வந்தவர்; அவரது வயதிற்கு ஒவ்வாத காரியம் ஒன்றை செய்ததை தாரிணி பார்த்துக் கொண்டே இருந்தாள்.
ஒரு செகண்டில் கார் பேனட்டின் மேல் ஒரே துள்ளலில் ஏறி உட்கார்ந்து; அலைகடலை பார்க்க ஆரம்பித்தார்.
அசையாத சிலை போல் நெடுநேரம் அலைகடலை வெறிக்கப் பார்த்தவர்; குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.
அவரை கவனித்துக் கொண்டே இருந்த, தாரிணி;'என்ன; ஏது?' என்று அவர் அருகில் போய் விசாரிக்க எத்தனித்த, அதே நிமிடம், அவர், அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தவர்; காரிலிருந்து குதித்து 'இதோ வரேன்!' என்று சொல்லியபடி , தன் கையிலிருந்த ஃபோன் நழுவியது கூட அறியாமல்; அலைகடல் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
கீழே விழுந்த அவருடைய அலைபேசியை எடுத்தவள், ஓட்டமும் நடையுமாக அவரை பின் தொடர்ந்தாள்.
அவருடைய வேகம் தாரிணிக்கு சற்றே அச்சமூட்டியது.
முன்னே சென்றவர் தனது ஷர்ட்டையும், பேன்ட்டையும். கழற்றி கீழே வீசி எறிந்தது; அவளுக்கு ஆச்சரியமாகிவிட்டது.
அப்படியே மணலில் சரிந்து உட்கார்ந்தவர்; அப்படியே மல்லாக்கப் படுத்து. கண்களை மூடினார்.
இமையோரத்தில் துளிர்த்து பூத்த கண்ணீர் துளி , அழுகையின் மிச்சமா; சிரிப்பின எச்சமா?
ஒரு நிமிஷத்தில் கண்ணைத் திறந்தவர் முகம்; வெறுமையாக இருந்தது.
சிரிப்பின் மலர்வோ; அழுகையின் துயரமோ; எஞ்சியிருப்பதாக தோன்றவில்லை.
வெற்று முகம் காட்டியது; மனத்தின் விழைவற்ற நிலை; திறனற்ற ஒரு முற்று; முடிவற்ற ஒரு இறுதி; வலியோ வலிமையோ இல்லா ஒரு கடை நிலை; நிலைகுத்தி நிற்கும் பார்வையில் மர்மமான மரணத்தின் ஓலம்; தாரணியால் தாங்க இயலவில்லை.
'சார் ! சார்!' என்று கூப்பிட்டதும் சற்றே நிகழ் நிலைக்கு வந்தவரிடம், ' உங்கள் பெயர் என்ன; நீங்கள் எங்கே போகவேண்டும்?' என்று விசாரிக்க ; அவர் மலங்க மலங்க விழித்தாரே தவிர ஏதும் பேசவில்லை.
அவரிடம் சொல்வதற்கு ஒரு மொழியோ, நினைவோ, சொல்லோ இல்லாதது போல் இருந்தது; அவள் கையிலிருந்த அலைபேசி போல்.
தாரிணி அவரை மெதுவாக எழுப்பி; அவரது உடுப்பு களை சேகரித்தவள்; அவரை காரை நோக்கி நடத்தி கூட்டி வந்தவள்; அவரை இருக்கையில் இருத்திப் பின் காரை திருவல்லிக்கேணி காவல் நிலையம் மற்றும் நோக்கி செலுத்தினவளுக்கு; ஒரே கேள்வி மனதில், ' இத்தனை நேரமும் அவரது தொலைபேசியில் ஏன் ஒரு அழைப்பு கூட வரவில்லை? ' என்பதே.
மனிதம் புரியாத புதிர்