
கந்தசாமி தினமும் நடைபயிற்சி செய்வதை தவற விடமாட்டார். அடாது மழை பெய்தாலும் குடையுடன் கிளம்பி விடுவார். மனைவி எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார். வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவிற்குச் செல்வதே நடையோடு சேர்த்து, நண்பர்களைப் பார்த்து அரை மணி நேரம் பேசுவதற்குத்தான். அது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அது அவர் மனைவிக்குப் புரியவில்லை. அன்றும் அப்படி பூங்காவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, எதிர் பெஞ்சில் 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் தன் முகத்தை செய்தித்தாள் கொண்டு மறைத்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தார். தினம் அங்கு செல்வதால் அநேகமாக எல்லோர் முகமும் பரிச்சயம். எல்லோரிடமும் ஒரு ஸ்நேகமான புன்னகை. அவ்வளவுதான். இன்று இவர் இந்த இடத்திற்கு முதன் முதலாக வந்திருக்கிறார். முற்றிலும் புதிய மனிதர். கந்தசாமிக்கும் அவருடைய மூன்று நண்பர்களுக்கும் ஆவல் அதிகரித்தது, அருகில் சென்று அவருடன் பேச்சுக் கொடுக்கலாமா என்று. சிறிது நேரம் நண்பர்கள் உரையாடுவதை நிறுத்தி விட்டு அவரைப் பார்க்கத் தொடங்கினர். அவர் மெதுவாக பேப்பரைத் திருப்பும் போது கந்தசாமி ஒரு நிமிடம் பார்த்து விட்டார். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் விட்டார். நண்பர்கள் உலுக்கி, ” என்னாச்சுங்க?” என்று கேட்ட பின்தான் தன் நிலைக்குத் திரும்பினார். ஆம். அவர் வேறு யாரும் அல்ல. இவருடன் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாய்ப் படித்த ஜேம்ஸ். கந்தசாமிக்கு இன்றும் நன்றாய் நினைவிருக்கிறது. ஒரு முறை பத்தாம் வகுப்பு படிக்கும்போது வேதியியல் செய்முறை வகுப்பில் ஜேம்ஸ் முகத்தில் ஆசிட் தெறித்து முகம் முழுவதும் பாதிக்கப் பட்டது. உடனே டாக்டரிடம் காண்பித்து அவனுக்கு சிகிச்சை அளித்து உயிர் பிழைத்தான். நல்ல வேளை, கண்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. அதற்குப் பிறகு அவனை இப்போது இந்த 65 வது வயதில் இன்று சந்திப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை.
மெதுவாக அவர் அருகில் சென்று ” ஜேம்ஸ் ” என்று கூப்பிட்டார். விருட்டென்று பேப்பரைத் தாழ்த்தி கந்தசாமியை உற்று நோக்கினார். முகம் பாதிக்கப் பட்டிருந்தாலும் குரூரம் இல்லை. மாறாக அவர் கண்களில் கனிவும், அமைதியும். கண் இமைக்காமல் கந்தசாமியை ஒரு கணம் பார்த்து விட்டு, “கந்தா , நல்லா இருக்கியா? ” என்றார். “ம்ம்…. நல்லா இருக்கேம்பா. “நீ?”
“ம்ம்.. எனக்கென்ன குறைச்சல்…. நல்லாத்தான் இருக்கேன்… இத்தன வருஷங்கள் வெளி நாட்டுல இருந்துட்டு இப்பதான் நாலு மாசம் முன்னாடி இங்க வந்தேன். இந்த முகம்தான் இத்தன வருஷங்களா எனக்கு சோறு போட்டுச்சு.. ” என்று மூச்சு விடாமல் சொல்லி நிறுத்தினார். ” ஆமாம் கந்தா, மலேசியாவில இத்தன வருஷங்கள் சர்க்கஸில் பஃபூன் வேஷம் போட்டு நல்லா சம்பாதிச்சு , பிள்ளை குட்டிக்கெல்லாம் கல்யாணமாகி, இதோ இப்ப உன் முன்னால தல
நிமிந்து நிக்கிறேன்” ஜேம்ஸ் சொல்லி நிறுத்தினார். அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே கந்தசாமி அவர் அருகில் அமர்ந்தார். ஜேம்ஸ் கண்ணில் இருக்கும் கனிவும் அன்பும் அவர் தொழிலில் வளர்த்துக் கொண்டது என்பதை புரிந்து கொண்டார். யாராக இருந்தாலும் அவர் கண்களைப் பார்த்தால் அவரிடம் எளிதாக நட்பு கொண்டு விடுவார்கள்.
நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். நட்பு வளையம் மேலும் விரிவானதைக் கண்டு கந்தசாமிக்கு மகிழ்ச்சி.
நடைபயிற்சி முடிந்து உற்சாகத்துடன் திரும்பிய கந்தசாமியைப் பார்த்து அவர் மனைவி புன்னகைத்தாள்.
25/11/2025
