போப்பு/கூடாரம்

மேலத் தெரு மந்தைக்கு சின்னமனூர் சர்க்கஸ் வந்திருக்கிறது. பிள்ளைகள் எல்லாம் எப்படா மழை நிக்கும் என்று துடி துடித்துக்
கொண்டிருந்தார்கள்.
இஷ்டமில்லாமல் பெய்த மழை அடங்கியதும், ‘சீபோ’ என்றால் திரும்பி விடுகிற தயக்கத்தில் மஞ்சள் வெயில் வந்து கொண்டிருந்தது. எல்லாத் தெருப் பிள்ளைகளும் கூச்சலைக் கிளப்பிக்கொண்டு மந்தையை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
ஒன்றுக்கும் இடுப்பில் இருந்தால் மேலே இல்லை, மேலே இருந்தால் இடுப்பில் இல்லை. இடுப்பில் இல்லாததுகள் கிடுகிடுவென ஆட்டிக் கொண்டு ஓடுகின்றன. அவர்களுக்கான செய்தி எப்படியும் சீக்கிரமாக எட்டி விடுகிறது.
டயர் வைத்த லாரி, பஸ் பார்த்திருக்கிறார்கள். கட்ட வண்டி…. அதான் வீட்டுக்கொன்று இருக்கிறதே. ஆனால் நல்ல அகலமான டயர் உருளும் பெரிய கட்டை வண்டி அவர்களுக்கு புதுசு. எத்தனையோ ஊர்கள் சுற்றி பளபளப்பேறிய பனை அளவுக்கு உருட்டான, நீளமான மூங்கில் மரங்கள் புதுசு. கருப்புக்கு பதிலாக மஞ்சளும் பச்சையும் கலவையிலான கண்கள் கொண்ட பொம்பிள்ளைகள் புதுசு. அவர்கள்
பேசுவது தமிழ் போல இருந்தாலும் பாதிக்கு மேலான வார்த்தைகளும் அதன் ராகமும் புதுசு.
மந்தையில் மரங்கள் நிற்கும் பகுதி, மழை நின்ற வேகத்தில் சர்க்கஸ்காரர்களுக்குச் சொந்தமாகிவிட்டது. என்றென்றைக்கும் இருந்து கொண்டிருப்பது போல் கிளைகளில் தூளிகள் ஆடின. ஆட்டத்தில் ஒன்று இரண்டாக நீர்த்துளிகள் சொட்டின. காற்றுக்கு அணைப்பாக மண் மேடையை ஒட்டி அடுப்பு கூட்டியிருந்தார்கள். பெரியபெரிய முட்டுகளைக் கட்டி உலை கொதித்துக் கொண்டிருந்தது. நம்ப முடியாத இடங்களில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
எல்லாவற்றையும் அவசர அவசரமாக மேய்ந்து கொண்டிருந்தன பிள்ளைகளின் மின்னுகிற கண்கள். வாசிக்கத் தெரிந்த பையன்கள் தூளிக் கட்டையிலிருந்து மாட்டுக் கொம்பு வரைக்கும், ‘சின்னமனூர் சர்க்கஸ்’ என்று ப்ளூ பெயிண்டால் எழுதினதைப் படித்துக்கொண்டிருந்தார்கள். பெரிய பாத்திரங்கள்… ஒழுங்கின்மை இளக்காரமான நகைப்புக்கு இடம் கொடுத்தது.
வழக்கம் போல பிள்ளைகளை எதையும் பார்க்கவிடாமல் துரத்திய அய்யாக்கள், சாட்டைக் கம்பாக திண்ணென்று இருந்த குட்டிகள் தரைக்கு கொஞ்சம் மேலே கோழி எறகு பறப்பது போல் இயங்குவதை, ‘இதுக பொம்பளப் பெறப்பு தானா’ என்று பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
முன்னெல்லாம் வருசத்திற்கொருமுறை சித்திரை வைகாசியில் இதுவோ திருச்சூர் பாரத் சர்க்கஸோ வரும். இப்போது நான்கைந்து வருட இடைவெளியில், ரெண்டும் கெட்டானாக ஆவணியில் வந்திருக்கிறது.இப்போது முன்னேற்பாடு தோது பண்ணுகிற ஆட்கள்தான் வந்திருக்கிறார்கள். இன்னும் நான்கைந்து நாட்களில் ஒவ்வொன்றாக வந்து இறங்கும். சுத்துப்பட்டிகள் எல்லாம் போய் வருகையை அறிவித்துவிட்டு பிள்ளைகள் அடம் பிடிக்க ஏற்பாடு பண்ணிவிட்டு நாளை நாளான்னைக்கு ம
யானை வரும். டிக்கட் நன்றாகப் போவதற்கான அறிகுறிகள் இருந்தால் அடர்த்தியான மூத்திர மற்றும் மாமிச கவிச்சி வாடையுடன் சிங்கம், புலி கூட_வாடகைக்கு எடுத்து வரப்படும். –
நெருப்பு வளையங்களில் ஐந்து நிமிடம் தாவிக்குதிக்க வரும் போது அவை இஷ்டத்திற்கு நீட்டி நெளிந்து கொள்ளும். மற்றபடி காடுகளைச் சுற்றிய கால்கள் கூண்டுக்குள் அடை பட்ட தவிப்பில் ராப்பகலாய் உறுமுவது இரண்டு மூன்று ஊர்களுக்கு கேட்கும். ஜாமத்தில் மூத்திரம் பெய்ய எழும் தாய்மார்கள் உறுமல் சத்தம் கேட்டு. “அய்யோ பாவம்” என்று சொல்லிக் கொண்டு படுப்பார்கள்.
ஒரு நாளைக்கு ஒரு ஊர் வீதமாக, மிருகங்களைப் போல ஒலி எழுப்பிக் கொண்டு மாணவர்கள், சிறப்புக் காட்சிக்கு வாத்தியார்களின் பாதுகாப்புடன் வருவார்கள். ஆசிரியர்களுக்கு இலவசம்.
இந்த இரண்டு மூன்று வாரத்திற்கு உள்ளூர் பிள்ளைகள் எதுவும் வீடு அடங்க மாட்டார்கள். காட்டுக்கு கஞ்சி கொண்டு போக, கோழி பிடிச்சி அடைக்க என்று சின்னச்சின்ன கை வேலைகளுக்கு சிக்காமல் கூடாரத்தையே சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
சர்க்கஸ் ஆட்கள் பள்ளிக் கூடத்திற்குப் பின்னால் உள்ள சிலம்புத்திடலை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் விதமாக இதுதான் சமயம் என்று இளவட்டங்கள், ‘பாஷிங் ஷோ’ சிகரெட் பெற்று புகைத்துக் கொண்டார்கள். சிகரெட் தண்டத்துக்குத் தான் ஓசி போகிறது.
“சர்த்தானப்பா.. எங்க தோள்லயா செமக்கப் போறோம். சும்மா கெடக்குற பொட்டல்தான. செடி செத்தய சுத்தம் பண்ணி, உங்க தோலுக்கு செம்ம செஞ்ககுச்கியநடுங்க ” என்று உத்தரவு தரவேண்டிய நாட்டாண்மை போன்ற தலைக்கட்டுப் பெரிசுகள் எல்லாம் காட்டும்
திக்கம் போயிருங்கிறார்கள்.
“நல்லா இருட்டிக்கிட்டு வந்தது. போக்கு காட்டீட்டு போயிருச் த்தான் போல்க அங்கிட்டாச்சும் பெஞ்சதா இல்ல அங்கயும் இதே பூனமுஞ்திரம்தானான்னு பாத்திட்டு வரலாம்” என்று மேகங்களைத்
துரத்திப் பிடிக்கிற ஆத்திரத்தில் போனார்கள்.
இப்பிடி கழுதப்பொட்டு பண்ணுனா எப்பிடி, இங்க இருக்குற உகர்ல்லாம் மண்ணத்தின்னா ஜீவிக்கிறது?”
பதில் கிடைக்காத கேள்வியை ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கேட்டுக் கொண்டார்கள். ஊரை அனல் காற்று சுத்திச்சுத்தி வருகிறது. வேலிக்கருவேலம் கிளைகள் படர்ந்து வந்து அடைகாப்பது போல ராத்திரி நேரங்களிலும் அனலை ஊருக்குள் காத்து வைக்கிறது. எப்போதும் உனக்கா எனக்கா என்று விறைத்து நிற்கிற பனைமரம் கூட தோற்று முண்டமாகி விட்டது. மாடு கன்னுகள் ஓடைக் கரைகளில் புல்லின் வேர்களை கொம்பால் முட்டி முட்டி எடுத்து அசை போடுகின்றன. எல்லாம் புட்டம் வற்றி நெரு நெருவென மணல் சாணியாய் கருப்பாக கழிந்து கொண்டு திரிகின்றன. நிலைமையை புரிந்து கொண்டு நாய்கள் கூட தெருக்களைச் சுற்றி வருவதில்லை. விடிந்து வெயில் ஏறுமுன் கம்மாய்களுக்குள் ஓடிவிடுகின்றன.
மனங்குளிர நீள்கிற அம்மாக்களின் கைகள் திகைத்துப் போயின. மூலையில் நிற்கிற அடுக்குப் பானைகளில் கடைசி ஐந்தாழ தானியமணிகளை விட்டு நீங்கள்தான் விழித்திருந்து தரித்திரப்பேய்கள் புகுந்து ஆட்டங்கட்டாமல் காத்துக் கொடுக்கவேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்கள்.
மேற்கு கம்மாய்க்குள்ளிருந்த இருட்டைக் கையோடு கூட்டிக் கொண்டு ஊருக்குள் வந்தார் ஊர் நாட்டாண்மை. அவருக்கு உள்ளே, ‘போன வருசமும் பெய்யல இந்தப் பட்டமும் தள்ளிப் போச்சு’ என்ற நோதலும், பக்கத்தில் ஐந்தாறு ஊர்ப் பெருந்தலைகளும் இருந்தன. சர்க்கஸ் வரவு, ‘அங்க ரெண்டு கொடும ஆடிக்கிட்டு வந்ததாம்’ என்பதாக இருந்தது.
அப்பறம் ஆவி பறக்கும் யானைச் சாணியை பாதங்களுக்கிடையே போட்டு மிதித்துக் கொண்டிருக்க முடியுமா, “பொங்கல் சாட்டவே வகையத்துப் போய் ரெண்டு வருசம் தள்ளிப் போட்டாச்சி. இந்த லட்சணத்துல பத்துநூறு ஜீவன் வந்துட்டு வயிறு குழி பாய்ஞ்சு திரும்புனா அம்புட்டுத்தேன். ஊர் தரிசா பொறிஞ்சிரும்.”
“அது கெடக்கட்டும் நாலு சாதியும் கூடிப்பேசி முடிவுக்கு வருவோம். இளந்தாரிக வாங்கப்பா! வந்ததுகளுக்கு ராச்சோத்துக்கு வழி பண்ணியாச்சா இல்லியா. ? இதக்கூட எங்க மொட்டத் தலையிலே செமக்கணுமா…… அதான் வானம் கிழிச்சிக்கிட்டு கொட்டுது”
“ஊர்ப் பொது விருந்தாளிகளுக்கு தர்மக் கஞ்சி ஊத்துங்கம்மோ.”
பையன்கள் சூடு அலையடிக்கிற குரலை முறுக்கிக் கொண்டு கூவினார்கள். மூன்று நான்கு பெரிய பாத்திரங்கள் எல்லா சாதி தெருக்களுக்கும் போய் வந்தது.
ஊர் நாடி வந்த யாருக்கும் இப்படி எடுத்து ஊற்றுவது வழமை. வந்தவர்கள் சொந்தக் கை ஊன்றி கர்ணம் போடத் தயாராகிறவரை இது நடக்கும். உள்ளதில் வயித்துக்கு அரை அகப்பையை குறைத்துக் கொண்டாவது சலிப்பில்லாமல் ஊற்றி விடவேண்டும்.
வீட்டில், பொறுப்பில்லாதவர்கள் என்று பெயர் வாங்கிய, முகத்தில் முடிமுளைக்காத பையன்கள் விளையாட்டுப் போல இதைச் செய்துவிடுவார்கள், வீட்டு ஆம்பளைகளிடம் பேசப் பிடிக்காத பொம்பளைகள் கஞ்சியெடுக்கிற பையன்களிடம், ஊர் விருந்தாளிகள் நிலவரம் கேட்டறிந்து கொள்வார்கள். ஏகதேசம் வீடுகளில் ஒருநேரம் மட்டுமே அடுப்புப்பற்ற வைப்பதால் அந்த நேரம் எடுப்பதைக் கொண்டு ஊருக்கு தக்கன எந்த முணுமுணுப்பும் இல்லாமல் அதிதிகள் அனுசரித்துக் கொள்ளவேண்டியதுதான்.
வில்லுப்பாட்டு பாடுகிறவர்கள், பாவைக்கூத்து நடத்த வந்தவர்கள், சைக்கிள் சுத்துகிறவர்கள் என யாருக்கும் அது உண்டு. துண்டு விரித்து நாலு காசு பார்க்கும் வரையிலும் வயிறு காய விடாமல் குளிரச் செய்வது சாதி பாகுபாடு இல்லாமல் ஊரின் பொறுப்பாக இருந்தது. வந்தவர்கள் திரும்பும் போதும் மனம் வெதும்ப இடம் கொடுத்து விடக்கூடாது.
ஏழெட்டு வருசம் முன்னர்… எண்பது வயசு கிழவன் முதல் ஒரு பச்சை குழந்தை வரையான ஒரு பெரிய குடும்பம் வந்து பிள்ளையார் கோயில் மரத்தடியில் பேச்சு மூச்சு இல்லாமல் குன்னிப் போய்க்கிடந்தது. எல்லாரும் பதறிப் போய் முகத்தில் தண்ணியடித்து பானகம் கரைத்துக் கொடுத்தார்கள். அந்தக் குழந்தை மூடின கண் மூடினபடியே இருக்க எத்தனையோ முலைகள் மாற்றிப் பால் குடித்தது.
அவர்களின் தார்பாய்ச்சிக் கட்டும், பொம்பளங்களின் கத்தாழைப்பழ நிறப் பாவாடையும் முக அம்சமும் ரெம்ப தூர தேச ஆட்கள் என்றும், வெறும் வயித்துப் பாட்டுக்கு வந்தவர்கள் அல்ல என்றும் சொல்லியது. அவர்களுக்குத் தெரிந்த ஒன்றிரண்டு தெலுங்கு வார்த்தைகளைக் கொண்டும், ஊரிலேயே சில மாதங்களாகத் தங்கிவிட்ட, இமயமலை எல்லாம் சுற்றிவந்த சாமியாருக்குத் தெரிந்த பாஷைகளைக் கொண்டும் கொஞ்சங் கொஞ்சமாக தெளிவு
கிடைத்தது.
ராமேஸ்வரம் தீர்த்தமாட ஒரிசாவிலிருந்து வந்திருக்கிறார்கள். பணப்பை எங்கேயோ கை தவறிவிட்டது “யாரும் கன்னம் வச்சி எடுத்திருப்பாங்களோ?” என்று கேட்டதற்கு,
“எம் மனசறியாம நான் அப்படி சொல்ல மாட்டேன்” என்றார் அந்தப் பெரியவர்.
ஊரிலேயே நாலு நாள் தங்க வைத்து உடம்பிலே தெம்பேற்றினார்கள். கோதுமை ரொட்டி திங்கிறவம்சம் அது என்று மேரி டீச்சர்கூட கோணமாணையாக சுட்டுக் கொடுத்தார்கள். வீட்டுக்கு வீடு காசுசேர்த்து வழிச் செலவுக்கும் கொடுத்து விட்டார்கள்.
பிரியும் போது பெரியவர் கம்மாக்கரையில் நின்று கையை உயர்த்தி தாரைதாரையாகக் கண்ணீர்விட்டார். அந்தக் கண்ணீர்தான் மூன்று வருசமாக மடைதிறக்க விடாமல் வயல்களில் மீன்கள் துள்ளும் மழையாக ஊத்திக்கொட்டியது.
அப்படி நம்பிக்கை பாய்ந்த ஊர்.
ஊரை நம்பி பிழைப்புக்காக வருகிறவர்களில் பொறுப்பானவர்கள் முன்னிரவில் பொதுச் சாவடிக்கு வந்துவிட வேண்டியது. வேலைகளை ஒழுங்கு செய்துவிட்டு ஊரிலுள்ள அத்தனை சாதிக்குமான முக்கியஸ்தர்கள் ஒவ்வொன்றாக பாக்கு கொடுப்பார்கள்.
பரஸ்பரம் நலம் விசாரிக்கிற வகையில் எல்லாமே பேச்சுக்குள் வந்துவிடும். வந்தவர்களும் எதையும் வேண்டுதலாக இல்லாமல் நிலவரத்தைச் சொல்வார்கள். ஊரும் அண்டி வந்தவர்களாக இல்லாமல் விருந்தினர்களாகவே மரியாதை செய்யும்.
வந்தவர்கள் எவ்வளவு பேர், ஆண் எத்தனை பொண் எத்தனை. வயசுப் பையன்கள் உண்டா ? எல்லாம் விசாரிப்பார்கள்.
போனமுறை வந்ததுல ஒரு பையன் கோழிகள் வெங்காயத் தூண்டில் போட்டு பிடிச்சு, உப்பு மௌகா தடவி வாட்டித் தின்னும் புட்டான்ல்ல’.
‘நம்பகிட்ட அப்பிடி பையன்களுக்கு இடமில்லிங்க அய்யா, பொழைப்புக்கு வந்திட்டு கைய நீட்டுனா தொழில் நிவைக்காதுங்க, தவறியும் நடந்துட்டா நாங்களே அவுலுகளப் பிடிச்சு கட்டி
வச்சிருவோம்.
‘அட, நா அதுக்கு சொல்லப்பா… உங்களப்பத்திதான் தெரியமே. ஒத்தப் பையன் மூணு கோழிய தின்ன கூத்து நௌப்புக்கு வந்திச்… மசங்குன பின்னாடி பொண்ணுங்க ஒதுங்க வேண்டாம். வந்தவங்க முன்னாடி நாங்க தல குனிஞ்சு நின்னுட்டா என்னென்னைக்கும் நிமிர முடியாம போய்டும். இதுக்கு முன்ன எந்த ஊரு?”
‘செட்டிக்குறிச்சிங்க, நாலு வாரம் நல்ல ஓட்டம் முடிச்சன்னைக்கி ரெட்டியார் கையால எல்லாத்துக்கும் துணிமணி ஒரு மூட்டைக் கம்பு- ‘உண்டும் உண்டும். சூன்னாவேன்னா எப்பேர்க்கொத்தயனுசன் அதுசரி… அந்த ஊர் வெள்ளாம வாசி அப்பிடி, காவாய்ய பானம். ஜனக்கட்டும் இருக்குமில்ல அதுக்கு தோதா, நம்மூர்ல ரெண்டு வாரம் போதும் இல்ல…?’
இப்படி நடந்திருக்க வேண்டிய பேச்சுக்கு காலம் இடந்தரவில்லை. பெருந்தலைங்கெல்லாம் கிழக்கே எட்டுக்கால் மண்டபத்துக்குப் போய்விட்டார்கள். ஊர்த்தொட்டி பரமனிடம் சர்க்கஸ் மாடுகளுக்கு ஒருசுமை வைக்கோலைக் கொடுத்தனுப் பி நாளைக்கு பேசுவதாகச் சொல்லிவிட்டார்கள் எட்டுகால் மண்ட பத்தைச் சுற்றி நின்ற மரங்களில் இலைகள் சோகத்தில் தொங்கிக் கிடந்தன. பாண்டியர் காலத்து மண்டபம் சரிந்து விடும் போல பெரிசுகள்
தங்கள் மனப்பாரத்தைத் தூணில் சாய்த்து உட்கார்ந்திருந்தார்கள். எல்லாம் பேசிமுடித்த பின்னும் அசங்க முடியவில்லை. நம்ப நிலைமை இப்பிடி ஆச்சே. மூஸ்மூஸென்று வெறும் பெருமூச்சுதான் விட முடிந்தது.
மலைமலையா தானியங்களை அடித்துக் குவித்த ஊர்தானா இது. பிதுங்கப் பிதுங்க பருத்தித் தாட்டுகளைக் கட்டி பெருமைப்பட்ட ஜனங்களா நாம்.
சாலையெல்லாம் மிளகாய்நெடி கமற சாரைசாரையாக விருதுநகருக்கு வண்டி ஓட்டிப்போன காலமெல்லாம் முடிஞ்சு போனதுதான. நம்ம சீவன் நிம்மதியாப் பிரியாதா.
அடுத்தநாள் வெயில் தாழ சர்க்கஸ் ஆட்களில் பொறுப்பானவர்கள் மூன்று பேரைக்கூட்டிக்கொண்டு திரி குத்துகிற சூதாடிகள் போல் கம்மாய் மரங்களுக்குள் போனார்கள். ரெண்டும் அஞ்சுமாக சேர்ந்த இருநூத்தி சில்லரை ரூபாய்களை வெற்றிலைக்குள் அடக்க முடியாமல் வைத்துச் சொன்னார்கள், ‘அய்யா புண்ணியவான்களே ஒங்களக் கையெடுத்து கும்பிடுறோம்’. இதோட மாட்டுக்கு நாலு நாள் தீவனமும் அரை மூடைக்கு கொறையாம தானியமும் தர்ரோம். வெள்ளி மொளைக்கு முன்ன ரெண்டாம் பேருக்குத்தெரியாம கிளம்பிப் போயிருங்கைய்யா. எங்க ஆயுசுக்கும் இப்பிடிக் கண்டதில்ல.
கூடாரத்தப் போட்டு வெத்து டப்பாவ தட்டிக்கிடு இருந்திங்கின்னா அந்தக் கொடுமையத் தாங்காம இருக்குற கொஞ்ச நஞ்ச பச்சையும் பொசுங்கிப் போய்ரும். கண் காணாத தேசத்துக்கெல்லாம் கூட வெளைய வச்சத கட்டுப்படியாச்சோ இல்லியோ நல்ல மனசாத்தான்
அனுப்பி இருக்கோம்.
யார்யாரோ நல்லா இருக்காங்க. மண்ணக்கட்டிப் பொரள்ற நாங்க இப்பிடியாகிப் போனோம்.எங்கள நம்பி வந்த உங்கள இப்பிடி அனுப்புறது ஞாயமில்லதான். என்ன பண்ண…? மண்ணு குப்புறப் படுத்துக்கிச்சே…!”
“எப்பிடியாச்சும்…’
“அய்யா… நீங்க ஒண்ணும் பேசப்படாது. நடங்க… போகும்போது நல்ல வார்த்தை சொல்லாட்டாப் போகுது எதுவும் சபிச்சீடாதீங்க..”
பரமனுக்கு கண்காட்ட, அவன் காக்கி ட்ரவுருக்குள் இருந்து பாட்டிலை எடுத்தான்.
“இந்தாங்க மனத் தைரியத்துக்கு இத ஊத்திக்கிடுங்க”.
இன்றிரவும் பிள்ளைகளின் உறக்கத்தில் கனவு வரும், கனவில் சோம்பல் நெளித்துப் பிளக்கும் புலியின் வாயில் பட்டாணியை எறிவார்கள். சர்க்கஸ் டிக்கட்டுக்காகவும், யானைக்கும் குரங்குக்கும் தர வாழைப்பழம் வாங்கவும் காசு சேர்க்க ஓடிஓடி வேப்பமுத்தும் புளியமுத்தும் பொறுக்கிக் கொண்டிருப்பார்கள்.

போப்பு/மழைக் கஞ்சி – விருட்சம் நாளிதழ்