
சுதாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. பேருந்து இன்னும் வந்தபாடில்லை. அலுவலகத்திற்கு தாமதமாகச் சென்றால் மேலதிகாரியின் அர்ச்சனையைக் காது கொண்டு கேட்க முடியாது. ஆட்டோவில் செல்லலாம் என்றால் வசதியில்லை. லேட்டாகப் போவதைவிட விடுமுறை எடுத்து விடலாமா என்று கூட ஒரு நிமிடம் நினைத்தாள் சுதா.
அப்போது பார்த்து எதிர்பாராமல் எதிர் திசையிலிருந்து ரோடைக் கிராஸ் செய்ய முற்பட்ட ஒரு சிறுமி தடுக்கி விழுந்தாள். காலை நேர அவசரத்தில் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. சுதா இரு புறமும் கை நீட்டி ஓடிப் போய் அந்தப் பெண்ணைத் தூக்கி நிறுத்தினாள். நல்ல வேளை, அடி பலமாக இல்லை. அவளை ஆசுவாசப் படுத்தி, குடிக்க தண்ணீர் கொடுத்து அவளை பஸ் ஸ்டாப் பெஞ்சில் அமர வைத்தாள். அவளை அவளுக்காக வந்த ஸ்கூல் வேனில் ஏற்றி விட்டு மீண்டும் பஸ் வருமா என்று பார்க்கத்
தொடங்கினாள். ஷேர் ஆட்டோ வந்தது. மகிழ்ச்சியுடன் அதில் ஏறி சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்தடைந்தாள். சுதாவின் மனதில் ஒரு நிம்மதியும், மகிழ்ச்சியும்.
வழக்கம் போல் சுறுசுறுப்புடன் வேலையைத் தொடங்கினாள் சுதா.
