
கவிதை நேரத்தில் படித்த என் 4 கவிதைகள் கீழே
- நம்பிக்கை
தொலை தூர நடை பயணம்
வறண்ட நீர் நிலை
பிளந்த நிலம்
கரடு முரடான பாதை
வெட்டப்பட்ட மரங்கள்
பசுமையற்ற மலை
நடந்து கொண்டே இருந்தேன்
தூரத்தில் பார்வையற்ற மனிதன்
முடவனுக்கு உணவளிக்கும் காட்சி
மனித மனதில் வற்றாத ஈரம்
இயற்கையும் துளிர்க்கும் ஓர் நாள்
நடை தொடர்ந்தேன் நம்பிக்கையுடன் !
- சுவர்க்கம் !
அனுதினம் விடியலில்
புள்ளினங்கள் இசை மயக்கும் சரசாங்கி
சன்னலோர அணிலின் பக்க வாத்திய இசை
பனி படர்ந்த புல்லில்
நுணல் பாடும் பண்
தெருவோர ஆலய
நாதஸ்வரத்தில் தென்றலாய் பூபாளம்
சுவற்றில் பல்லியின்
பாவனி ராகம்
தென்னை மர உச்சியில் பாளையின் அசைவு
செவிக்கினிய
சண்முகப்பிரியா
என் அன்னையின் இனிய ஆபேரி
இதை விட சுவர்க்கம்
வேறுண்டோ இப்புவியில் !
- மௌனம்
மௌனம் சாலச் சிறந்தது
மௌன மொழி அறிவது கடினம்
மௌனம் பழகுதல் அவசியம்
மௌனம் விலை உயர்ந்தது.
மௌனத்தின் அறிகுறி சினம் அடக்குதல்
மௌனத்தின் அருமை இருந்தால் தெரியும்
மௌனத்தின் பெருமை ஞானிகள் வடிவில்
மௌனம் வாழ்க்கையில் நிம்மதி
மௌனம் திறன்
வளர்க்கும்
மௌனம் இறை தேடலுக்கு வழி
மகான்களின் மௌனம் வீடு பேறு
இறையருள் இருப்பின்
மௌனம் வசப்படும் !
- சித்திரம்
அரூபமாய் நீ வானில்
அழியாத கோலமாய்
என் மனதில்
உன் புகைப்படம் சித்திரமாய் சுவரில்
அலங்கரிப்பு
உன் வாசம் நாசித் துவாரம் வழியே
உடல் முழுதும் பரவ
பரவச நிலையில் பட்டாம்பூச்சியாய்
நான் வானில் சிறகடித்துப் பறக்க
என் புகைப்படத்தை
சித்திரம் தீட்ட எவருமில்லை
இப்புவியில் !

Arumai mam ! ❤️🙏👏🙇♀️