
நேற்றோடு முடிந்துவிட்டது
ஏவி.எம்.சரவணன் அவர்களின்
பெளதிக வாழ்க்கை
இனி
நினைவின் வெளிகளில்தான்
அவரைச் சந்திக்க முடியும்
ஒரு சம்பவம் சொல்கிறேன்:
சிவாஜி படத்திற்குப்
பாட்டெழுதியதற்கு ஊதியமாக
எனக்கொரு காசோலை கொடுத்தார்
காசோலைகளை நான்
பிரித்துப் பார்ப்பதில்லை;
பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்
சில வாரங்களுக்குப் பிறகு
வேறொரு பாட்டுப் பதிவுக்காக
ஏவி.எம் கலைக்கூடத்திற்குள்
நுழைகிறது என் கார்
தன் அறையின்
கண்ணாடி வழியே
என் காரைப் பார்த்த
சரவணன் அவர்கள்
வீடு திரும்பும்போது
தன்னைப் பார்த்துச் செல்லும்படி
சொல்லியனுப்பினார்; சென்றேன்
கையில் ஓர் உறை வைத்திருந்தார்;
நான் குழப்பமானேன்
அவர் சொன்னார்:
“போனவாரம் சிவாஜிக்கு
வாலி ஒரு பாட்டெழுதினார்.
உங்களுக்குக் கொடுத்த
ஊதியத்தையே
அவருக்கும் கொடுத்தோம்;
அவரோ மேலும் ஒருலட்சம்
வேண்டுமென்று கேட்டார்;
கொடுத்துவிட்டோம்.
அவர் சென்றபிறகு யோசித்தோம்;
வாலியோடு ஒப்பிடுகிறபோது
உங்களுக்குக் குறைத்துக்
கொடுத்திருக்கிறோமே;
அது நீதியில்லையே; ஆகவே
வாலிக்குக் கொடுத்த தொகையை
உங்களுக்கும் கொடுப்பதென்று
முடிவெடுத்தோம்;
அதுதான் இந்தத் தொகை.
இதில் ஒருலட்சம் இருக்கிறது
பெற்றுக்கொள்ளுங்கள்” என்று
எழுந்துநின்று வழங்கினார்
நான் பெற்றுக்கொண்டு
“இரண்டாம் நன்றி உங்களுக்கு;
முதல் நன்றி வாலிக்கு” என்றேன்
‘ஏன்’ என்றார்
“என் சம்பளத்தை
உயர்த்தியவர் அவர்தானே;
வாலி; வாழி” என்றேன்
வாய்விட்டுச் சிரித்தார்
அந்தச் சிரிப்பையும் சேர்த்தல்லவா
நேற்று மின்மயானம் எரித்துவிட்டது
எரி மேடையில்
உடல் கிடத்தப்பட்டிருந்தபோது
காசோலையில் கையொப்பமிட்ட
அவர் கையையே
பார்த்துக்கொண்டிருந்தேன்;
கண்ணில் நீர் முட்டியது

Arumai !👏🙏