
அந்த பயங்கரமான சம்பவம் நடந்து எட்டு தினங்கள் ஆகிவிட்டன. ஒரு மிருகத்தினிடம் சிக்கி ஒரு மனிதன் உயிர் நீத்தான் என்பதை அநேகர் சொல்லித்தான் கேட்டிருக்கிறான். தொழுவில் உள்ள பசுக்களையும், தொட்டிலில் தூங்கும் சிறு பிள்ளைகளையும் காட்டிலிருந்து விலங்குகள் கிராமத்துள் வந்து கொண்டு போகும் செய்தி அவனுக்குப் புதிதல்ல. ஆனால், அந்தக் – காட்டுப் பிரதேசத்தில் மரம் வெட்டி அனுப்புவதை மேற்பார்வையிட அவன் வந்தது முதல் அம்மாதிரியான ஒரு செய்தி அவன் காதில் விழாதபடியால், அப்படி ஒரு காலும் நேரவே நேராது என்று நம்பத் தொடங்கி விட்டான். அப்போது தான் திடீரென்று அந்தப் பயங்கர சம்பவம் நேர்ந்து விட்டது.
עகோகவிந்தன் என்ற இருபத்துநாலு வயது இளைஞன் ஒரு பொல்லாத புலிக்குப் பலியாகி விட்டான். அதுவும் தகுந்த துணை பக்கத்திலேயே இருக்கும்போது! எப்போது காட்டுக்குள் போனாலும் சங்கரன் நாயருடன் கூடத்தான் போக வேண்டுமென்று கோவிந்தனுக்குக் கண்டித்துச் சொல்லி இருந்தான் நாராயணன். துஷ்டப் புலி ஒன்று நடமாடுகிறதென்று தெரிந்து தான் சங்கரனும் கோவிந் தனும் போனார்கள். இருந்தும் கோவிந்தன் மாண்டு
போனான்.
சங்கரன் நடந்ததை விவரமாகச் சொல்லவில்லை.
எனக்குத் திரும்பி வரவே கால் எழும்பவில்லை. நாங்கள் இருவரும் தான் மரத்தின்மேல் இருந்தோம். ஏனோ தெரியவில்லை. திடீரென்று கோவிந்தன் நடுங்க ஆரம்பித்து விட்டான். ‘மேலே இருந்தால் புலிக்கு எட்டாது. நம்மை ஒன்றும் செய்து விடாது என்று எவ்வளவோ தைரியம் சொல்லியும் அவனுக்கு நடுக்கம் நிற்கவில்லை. பிடி தவறி நேரே புலி வாயில் விழுந்து விட்டான். . நான் என்ன செய்வேன்! என்று சொல்லிவிட்டு, பிறகு மௌனமானான்.
தன் கூட்டாளியான சங்கரனிடம் நாராயணன் நாயருக்கு அத்தியந்த நம்பிக்கை. அவன் திறமைசாலி, சாத்தியமாயிருந்தால் கோவிந்தனை நிச்சயம் காப்பாற்றி இருப்பான் என்று நம்பினான். ஆனாலும் – மனத்தினுள்ளே ஒரு பெரிய
தயக்கம், நாளைக்கு வரப் போகும் கோவிந்தனின் கிழ பாட்டனுக்கும் இளைய சகோதரிக்கும் என்ன பதில் சொல்லுவது! அவர்கள் துயரம் அளவு கடந்திருக்குமே! எப்படி, என்ன ஆறுதல் கூறுவது..இந்த யோசனையில் சுவரை விறைக்கப் பார்த்து உட்கார்ந்திருந் தான் நாராயணன். அங்கிருந்த நிலைக் கண்ணாடியில் சங்கரன் நாயர் குனிந்து ஆழ்ந்த யோசனையில் உட்கார்ந்திருந்த பிரதி பிம்பம் தெரிந்தது…..
மறுநாள் காலையிலே கள்ளிக் கோட்டையில் நொச்சாடு கிராமத்தின் கோடியில் தன்னந் தனியே இருந்த ஒரு கருங்கல் வீட்டண்டை ஒரு கட்டை வண்டி வந்து நின்றது. பதினேழு மைலைக் கடந்து வந்த காளை மாடுகள் ஆயாசத்துடன் பலமாக மூச்சு விட்டன. வண்டியில் கனத்த ஹிருதயத்தினளாக அமர்ந்திருந்த ஒரு மங்கை முன்னால் கீழே குதித்து இறங்கி, ஒரு கிழவனாரை மெள்ள இறங்கும்படி உதவி செய்தாள்.
வீட்டினுள்ளிருந்து நாராயணன் நாயரும், சங்கரனும் வாசலுக்கு விரைந்தார்கள். வந்தவர்கள் யார் என்று சொல்லாமலே தெரிந்து கொண்டார்கள். கிழவன் முகத்தில் சோகம் ததும்பியது. யுவதியின் கண்களில் நீர் நிரம்பி இருந்தது.
உள்ளே வந்தவர்கள் மௌனமாக உட்கார்ந்து கொண்டார்கள். பலமுறை பேச வாயெடுத்த பெரியவர் அடக்கிக் கொண்டார்.
நாராயணன் நாயர் அமைதியாக, “என்ன செய்வது! தலைவிதி அப்படி ஆகிவிட்டது! பையன் ரொம்ப புத்திசாலி, என்னைவிட சாமர்த்தியசாலியாக வருவான் என்று அடிக்கடி சொல்லுவேன். அவன் போனதிலிருந்து எனக்குப் பாதி உயிர் போனதுபோல் இருக்கிறது!” என்றான்.
“அண்ணா எப்படித் தான் போனான், சொல்லுங்கள்!” என்று விம்மினாள் அந்த யுவதி.
“சொல்லவும் கஷ்டமாக இருக்கிறது, அம்மா! முதல் நாள் புலி ஒன்று இந்த வட்டாரத்தில் அலைகிறதாகச் சங்கரன் நாயர் சொன்னார்… இதோ இவர்தான் அது. இந்தப் பக்கத்தில் புலி பிடிப்பதில் இவரைவிட சாமர்த்தியசாலி கிடையாது என்பது பிரசித்தம். இவர் கூடப் போனவர்களில் ஒருவருக்குச் சிறு காயம்பட்டது என்று கூடச் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. இவரும் கோவிந்தனும் ஜாக்கிரதையாக ஒரு மரத்தின்மேல் இருந்திருக்கிறார்கள்…
அந்தப் பெண் சுவரை வெறிக்கப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்… நிலைக் கண்ணாடி தெரிந்தது. அதில்
பிரதிபலித்தது சங்கரன் நாயரின் முகம்.
“புலி மரத்தடிக்கே வந்து விட்டது. கோவிந்தன் அதற்கு முன்பு புலி எதையும் பார்த்ததில்லை. ஆகையால் பயந்து விட்டான்; கீழே விழுந்தும் விட்டான்…”
“ஐயோ, யாரானும் பிடித்திருக்கவாவது கூடாதா?” என்று பொறுமினான் கிழவன்.
“பிடிப்பதா? ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போகிற மனிதனைக் கரை சேர்க்க முயலுகிற மாதிரிதான் அது. காப்பாற்றப் போகிறவனும் கூடவே மாண்டு போக
வேண்டியதுதான்!”
பெருமூச்சு விட்டான் கிழவன். அந்த மங்கை நிலைக் கண்ணாடிக்குள் பார்த்துக் கொண்டே இருந்தாள். சங்கரன் பிரதி பிம்பம் அதில் இன்னும் தெரிந்து கொண்டிருந்தது.
“நடந்தது நடந்து விட்டது… பெரிய துக்கம்தான். ஆனால், பேசி என்ன பயன்! எப்படியோ மனதை ஆறுதல் செய்து கொள்ள வேண்டியதுதான்… இந்தத் தள்ளாத வயதில் பெரிய துயரச் சுமையுடன் நீங்கள்கூட இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டாம். போன உயிர் திரும்பப் போறதில்லையே!” என்றான் நாராயணன்.
“நானும் அதைத்தான் சொன்னேன்… இந்தப் பெண் ஒரே பிடிவாதமாக அண்ணன் செத்த இடத்தைக் கண்ணாலாவது பார்க்க வேணுமென்று துடித்தது… புறப்பட்டு வந்தேன்” என்றான் கிழவன்.
யுவதி பதில் சொல்லவில்லை. கண்ணாடியில் தெரிந்த பிரதி பிம்பத்தைப் பார்த்தாள்.
மேலும் நாலைந்து தினங்கள் சென்றன. பாட்டனும், பேத்தியும் அங்கேயே தங்கள் சொந்த வீடு போல் தங்கிவிட்டனர். நாராயணன் நாயர் அவர்களுக்கு வேண்டிய சௌகர்யங்களைச் செய்து கொடுத்தான். முக்கியமாக கிழவன் வந்த அதிர்ச்சி தாங்காமல் ஜுரமாகப் படுத்து விட்டபடியால் நாராயணனின் பொறுப்பு அதிகமாயிற்று. வேலை நேரம் போக இதர நேரங்களில் யுவதியுடன் அளவளாவினான். அவள் சங்கடத்தைக் குறைக்கவும் முயன்றான்.
அவள் பெயர் விசாலாட்சி. அண்ணனை சம்பாதிப்பதற்காக வெளியே அனுப்புவதில் அவளுக்கு இஷ்டமே இல்லை. அண்ணன் தான் முரட்டுத்தனமாக இங்கே வந்து விட்டான்.
‘அண்ணனுக்கு என்மேல் உயிர். நான் லெட்டர் போட்டாலும் போடாவிட்டாலும் அது போட்டுக் கொண்டே இருக்கும். அது செத்து விட்டது என்று உங்கள் தந்தி வந்த அன்னைக்குத் தான் காலையிலே அவன் கடைசிக் கடுதாசியும் வந்தது!” என்றாள். அவள் நீண்ட கண்களில் நீர்த்திரையை நாயர் கவனித்தான்.
“அடாடா! அடாடா!” என்றான் அனுதாபத்துடன்.
“ஒரோரு கடுதாசியிலேயும் உங்களப்பத்தி அது நாலு வரியாவது எழுதும்… நீங்க ரொம்பப் பிரியமா இருக்கீங்கன்னு சொல்லும். ”
“நல்ல பிள்ளை… உம்ம்…”
“அது இல்லை என்றவுடனே உங்களை நேரிலே பார்த்து, என் ஒரே அண்ணன் கிட்டே விசுவாசமா இருந்ததுக்கு என் நன்றியைச் சொல்லணும் தான் என் தாத்தாவைக் கூட்டிக்கிட்டு வந்தேன்!”
“ஓ!” என்றான் சுருக்கமாக நாராயணன் நாயர். பிறகு விசாலாட்சியைக் கூர்ந்து பார்த்தான். அவள் அழகு உயர்ந்த ரகத்தைத் சேர்ந்தது என்று எண்ணிக் கொண்டான்.
நாளுக்கு நாள் அவர்களை அறியாமல் மனம்விட்டுப் பேசிக் கொண்டார்கள். தங்கள் சுக துக்கங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.
இன்னொரு சமயம் பேசும்போது, “உங்களைப்பற்றி அண்ணன் எல்லா சமாசாரமும் எழுதியிருக்கு… நீங்க கல்யாணம் செஞ்சுக்கிறதாக இருந்தீங்கன்னு கூட எழுதியிருக்கு…” என்று நிறுத்தினாள் விசாலம்.
நாராயணன் நாயருடைய முகத்தில் தோன்றின குறி, இந்தப் பெண்ணுடன் சகஜமாகப் பேசலாமா?’ என்ற சந்தேகத்தைக் காண்பிப்பதாக இருந்தது. விசாலத்தில் கண்களில் தோன்றிய ஒளி, ‘அவளை நம்பலாம்’ என்று தைரியமூட்டவே. “இவ்வளவு தூரம் நீ தெரிந்துகொண்ட பிறகு, நானே சொல்றேன்… உன் அண்ணன் உனக்கு எழுதுவான் என்று தெரிந்திருந்தால் நான் அவனிடம் கூடச் சொல்லி இருக்கமாட்டேன்” என்று லேசாகச் சிரித்தான்.
“என் அண்ணன் என்னிடம் எந்த ரகசியத்தையும் மறைக்காது” என்று இமையைத் தாழ்த்தி கூறினாள் மங்கை.
“என் பழையக் கதை சோகக் கதை. நான் கட்டிக் கொள்கிறதாக ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து, நகையும் போட்டுப், பணமும் கொடுத்துவிட்டேன். பெண்ணைப் பெற்றவர்கள் சம்மதப்பட்டு முகூர்த்தமும் வைத்தார்கள். ஆனால், கல்யாணம் நடக்கவில்லை. அன்று பெண்ணைக் காணோம்!”
‘அண்ணன் எழுதி இருந்தது.”
” பெண் இருந்து, என்னைக் கட்டிக்க இஷ்டமில்லை என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் கூட ஒரு மாதிரியாக இருக்கும். வேறு எவனுடனோ ஓடிவிட்டாள் என்ற போது எனக்கு அவமானம் தாங்கவில்லை. ஒருத்தர் கண்ணிலேயும் முழிக்காமல் ஒருபுறமாக இங்கே வந்து விட்டேன்!”
“அந்தப் பெண் அப்படிச் செய்தது பெரிய துரோகம். அவள் படத்தைக்கூட இன்னும் வைச்சிருக்கீங்களாம். நீங்கள் அண்ணனுக்குக் காட்டினீங்களாமே!”
“அப்படியானால், ஒன்று விடாமல் உன் அண்ணன் எல்லாமே எழுதி விட்டான் போலிருக்கிறதே!” என்றான் நாராயணன்.
“அது மட்டுமில்லை. உங்கள் மனசு என்ன கஷ்டப் பட்டிருக்கும் என்று கூட, கதை எழுதுகிறாப் போல் மனம் உருக எழுதியிருந்தது. அவள் யாருடன் ஓடினாள் என்று இன்னும் உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியாது… தெரிந்து என்ன உபயோகம் இனிமேல்…? அவள் வினையை அவள் அனுபவித்து விட்டாள். எங்கோ குளத்தில் விழுந்து மாண்டுபோனாள்…!”
“ஐயோ பாவம்…! ஆனால், அவள் புத்தியை மயக்கி வாழ்வைக் கெடுத்து, இழுத்துச் சென்றவன் யார் என்று தெரிந்தால், அவனை நீங்கள் சும்மா விடமாட்டீர்களே!”
“அதையெப்படி இப்போது நான் சொல்ல முடியும்?” என்றான் நாராயணன்.
விசாலம் ஏதோ சொல்ல வாயெடுத்தாள், அப்போது அங்கே வந்து விட்டான் சங்கரன். “எதை இப்போது சொல்ல முடியாது ?” என்று கேட்டுக் கொண்டே.
“கோவிந்தனைக் கொன்றதே புலி. அது வேறு யாரையாவது கொல்வதற்குள் பிடிபடுமா என்று நான் கேட்டேன். இப்போது எப்படிச் சொல்ல முடியும் என்கிறார் இவர். வேறொன்றுமில்லை!” என்றாள் விசாலம்.
அவள் எதையோ மறைக்கிறாள் என்ற தோரணையில் அவநம்பிக்கையுடன் அவளை நோக்கினான் சங்கரன் நாயர். அவன் முகத்திலிருந்த சாயல், நாராயணன் அந்தப் பெண்ணுடன் நெருங்குவதில் அதிருப்தியைக் காட்டியதோ என்று கூடச் சொல்லும்படியாக இருந்தது.
மேலும் இரண்டு தினங்கள் ஓடி விட்டன. கிழவன் உடல் நிலை அநேகமாக சரியாகி விட்டது. ‘இனி ஊருக்குக் கிளம்பவேண்டும்” என்று அவசரப்படுத்தினான். ஆனால், விசாலம் அவசரப்படவில்லை. அவள் வந்த காரியம் ஆகவில்லை போல் தயங்கினாள்.
அந்தப் பிராந்தியத்தில் இரவு நேரம் சுகமாக இருந்தது. மெல்லிய காற்று ஜிலு ஜிலுவென்று வீசியது. மொட்டை மாடியில் தனியே உட்கார்ந்து நக்ஷத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தாள் விசாலம், “அவள் அண்ணன் எவ்வளவு நல்லவன், ஏன் ஒரு நக்ஷத்திரமாக ஆகி இருக்கக் கூடாது!” என்று நினைவு ஓடியது. பெருமூச்சு சப்தம் கேட்டு திரும்பினாள்.
“ஒரு ஜோஸ்யம் சொல்கிறேன். நீ உன் அண்ணனைப் பற்றித்தான் இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறாய், அல்லவா?” என்று கேட்டான் நாராயணன். சந்தடி செய்யாமல் பின்னால் வந்திருக்கிறான் அவன்.
“அதுவும் தான்… அதோடு, நாளை ஊருக்குக் கிளம்பி விடலாமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”
“நாளைக்கா?’
“நாளைக்குத்தான்/ என்?”
”நீ ஊருக்குப் புறப்படு முன் உன் அண்ணனைக் கொன்ற மிருகத்தைக் கொன்று விடுகிறதென்று நான் சபதம்
செய்திருக்கிறேனே!”
”அது எங்கே, இப்போது நடக்கிற காரியமா”
அது
”இல்லை… இன்றைக்கு – இப்போதே முடிந்தாலும் முடியும்… பக்கத்தில் இரண்டு மைலுக்குள் புலி பதுங்கியிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது… ஆட்கள் எல்லாரையும் தருவித்து விட்டேன். அநேகமாக, புலியுடன் திரும்புவேன்…”
“ஜாக்கிரதையாகப் போங்கள்.
“ஒருகால் நான் திரும்பா விட்டால், உன் அண்ணனையாவது போய்ச் சேருவேன்!”
“என்ன அசட்டுப் பேச்சு! சங்கரன் நாயர் உங்கள் கூடவே வருகிறாரா?”
“ஏன்?”
“கெட்டிக்காரர் என்கிறீர்களே! அவர் வந்தால் ஆபத்தில்லை என்று சொன்னீர்களே!”
“அவன் முன்னால் போயிருக்கிறான்… உனக்கேன் கவலை?”
“ஒரு கவலையும் இல்லை… அவரைப் பற்றி நீங்கள் அத்தனை நம்பிக்கையாகப் பேசினதால், வெகு நாளைய நண்பராக இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.’
இரண்டு வருஷப் பழக்கம் தான்… உனக்கு அவரிடம் பிடித்தம் இல்லையா?”
“அதுபற்றி யோசிக்க அவசியமே வரவில்லையே! அவசரமும் நேரவில்லை. எதற்கும் புலியை நீங்கள் கொன்றுவிட்டு வாருங்கள்!”
‘நான் வருகிறேன், விசாலம்
அவன் கீழே இறங்கியதும் மறுபடி அவள் ஏதோ யோசனையோடு ஆகாயத்தை நோக்கினாள். வெகுநேரம் மெய்ம் மறந்து போனாள்.
மட மடவென்று மனிதன் மேலேறிவரும் காலடிச் சப்தம் கேட்டு நிமிர்ந்தாள் விசாலம். வந்தவன் சங்கரன் நாயர். ஒரே கண்ணோட்டத்தில் அங்கே அவளைத் தவிர யாரும் இல்லை என்பதைப் பார்த்துக் கொண்டான்.
“இங்கே நாராயணன் வந்துவிட்டுப் போனானா, விசாலம்?”
“போய் விட்டார்… நீங்கள் முன்னால் போயிருப்பதாகச் சொன்னாரே!’”
“அவன் அப்படி நினைக்க வேண்டுமென்று தானே நான் ஏற்பாடு செய்தேன்…! சரி, விசாலம், இப்படி வா!”
“ஏன்!”
“வா என்றால் வரவேண்டும்… சங்கரன் நாயரிடம் எதிர்ப் பேச்சு யாரும் பேசுவதில்லை” – சங்கரன் குரல் அதிகாரமாக இருந்தது. வெறியனாக முன்னேறி நடந்தான்.
“அப்படித் தானே நின்று பேசுங்கள்! ஜாக்கிரதை!” என்று சீறிக் கொண்டு எழுந்தாள் அவள். அவள் முகத்தில் திடீரென்று ஜ்வலித்த கோபம், ஒரு பெண் புலியை அவனுக்கு ஞாபகப்படுத்தியது.
நின்றான் சங்கரன். “ஓஹோ! என் அருகில் வரப் பிடிக்காதோ உனக்கு… அவன் தான் வேண்டி இருக்கிறதோ…? உன் அண்ணன் வர்ணித்ததுமே உன்னைப் பற்றி நான் தீர்மானித்து விட்டேன்!”
விசாலம் துளிக்கூட அஞ்சினவளாகத் தோன்ற வில்லை. ”நானே உன்னிடம் வந்து ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று இருந்தேன். நீயே வந்து விட்டாய்! எனக்கு எல்லாம் தெரியும்!” என்றாள்.
“என்ன தெரியும்!”
“என் அண்ணன் கீழே விழவில்லை. நீ பிடித்துத் தள்ளினாய் என்பதைத் தான் சொல்கிறேன்!”
“ஹஹ்ஹா! புதுசாக இருக்கிறதே இது…! அந்த அப்பாவியிடம் எனக்கு என்ன பயமா?”
“பயம்தான்! உன் ரகசியத்தை அவன் வெளிப்படுத்தி விடுவான் என்று!”
“என் ரகசியமா?”
“ஆமாம்! உன் ரகசியம். உன் துரோகம்! ஒரு காலத்தில் நாராயணன் மனைவியாக வர வேண்டியவளை துர்போதனை செய்து இழுத்துக் கொண்டு ஓடினவன் நீதான் என்பதை என் அண்ணன் கண்டுபிடித்து விட்டான். உன் பெட்டியிலிருந்த கடிதமும், படமும் அவன் கண்ணில் பட்டு விட்டன. எல்லாம் அவன் எனக்குக் கடைசியாக எழுதி விட்டான். ‘ஐயோ, அவன் உயிருக்கு ஆபத்தாயிற்றே!’ என்று நான் நடுங்கினேன்; ‘புலி வாயிலில் செத்தான்’ என்று தந்தி வந்தது…”
‘பேத்தல்! பேத்தல்! அப்படியானால் வந்தவுடனே சொல்வதற்கென்ன?”
“உன்னை வந்தது முதலே கவனிக்கிறேன்! உள்ளை கண்ணாடியில் உன் மூஞ்சியைப் பார்த்துக்கொண்டே நேரில் கவனித்தால் நீ சந்தேகப்படுவாய் என்று இருந்தேன், உனக்குத் தெரியாதா?”
“அப்படியானால் நீ இங்கே இருப்பது அபாயமாச்சே! உன் அண்ணனுடன் தான் நீ இருக்க வேண்டும்!” என்றான் சங்கரன்.
“கொலைகாரா! நில்!!” என்று கூவினாள் விசாலம்.
நெருங்கி விட்டான் சங்கரன், அவள் புலிபோல் பாய்ந்து அவனை அப்பால் தள்ளினாள். ஒரு க்ஷணம் ஸ்தம்பித்த அவன், எழுந்து மறுபடி தாக்கினான். இப்போது அவள் விழுந்தாள். அவள் நெஞ்சில் கையை வைத்து அமுக்கிச் சங்கரன் நாயர் மூச்சு முட்டச் செய்தான். கண்முன் எல்லாம் சுழல்கிறது. இருளையும் விடக் கூரியதொரு அந்தகாரம் சூழ்கிறது. திடுதிடுவென்று இடிப்பது போன்ற சப்தம் எங்கேயோ கேட்கிறது.
மறுபடி கண் விழித்து நின்ற விசாலம் இருவர் பலமாகச் சண்டை போடுவதைக் கண்டாள். சங்கரனும், நாராயணனும் அடித்துக் கொள்கிறார்கள். சங்கரன் நாராயணனைக் கீழே தள்ள முயற்சிக்கிறான். மாடியின் முனையில் ஐந்து நிமிஷ காலம் யார் விழப் போகிறார்கள் என்ற நிலையில் தத்தளித்தார்கள். நாராயணன் கால் ஒரு முறை இடறிற்று, விழுந்து விட்டான் என்று கண்களை மூடிக்கொண்டாள் அவள். ஆனால் மறுகணம் எப்படியோ நாராயணன் உயரே ஏறி வர, சங்கரன் மாடியிலிருந்து நிலை தடுமாறி தலை குப்புறக் கீழே விழுந்து கொண்டிருந்தான். ‘கீழே கேட்டது ஒரு பயங்கர கர்ஜனை. கனத்த மிருகம் ஒன்று சுமக்க முடியாத சுமையுடன் ஓடுவது தெரிந்தது.
இருவரும் கீழே நோக்கினார். பெரிய புலி ஒன்று புதருக்குள் மறைந்து கொண்டிருந்தது.
”உன் அண்ணனைக் கொன்ற மிருகத்தை இன்று கொல்லுவேன்!” என்ற நாராயணனின் வாக்கு பலித்து விட்டது…
காலையில் கதிரவன் ஒளி அறையெங்கும் வீசியது. சத்தம் செய்யாமல் அறையினுள் வந்தான் நாராயணன் நாயர். விசாலம் கண்ணாடி எதிரில் உட்கார்ந்து அதனுள் அவன் வருவதைப் பார்த்தாள்.
“விசாலம்! நான் உன்னிடம் ஒன்று கேட்கலாமா?”
“இன்று ஊருக்குக் கிளம்பாதே என்று தானே சொல்வீர்கள்?”
‘“உனக்கு எப்படித் தெரியும் அது?”
“அப்புறம் நானும் உன்னுடன் வந்து விடுகிறேன் ஒரே வாரத்தில் என்பீர்கள் அல்லவா?”
“உனக்கு எப்படித் தெரியும்?”
“உங்கள் முகத்திலிருந்து தெரிகிறது.”j
“என்னைத்தான் இன்னம் பார்க்கவே இல்லையா?”
“உங்களைப் பார்க்கா விட்டால் என்ன? உங்கள் பிரதி பிம்பத்தைக் கண்ணாடியில் பார்க்கிறேனே!”
‘நீ என் வேண்டுகோளை மறுக்க மாட்டாய் என்று எனக்கும் தெரியும்… ஏனென்றால், உன் முகத்தை நானும் கண்ணாடியில் பார்த்தேன்!” என்றான் நாராயணன்.
இப்போது இரண்டு பேரும் சட்டென்று கண்ணாடியைத் தவிர்த்து ஒருவரையொருவர் நேரில் பார்த்துக் கொண் டார்கள். வெகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
