தேவன்/வால் நக்ஷத்திரம்

சில தினங்களுக்கு முன்பு வானத்தில் தோன்றிய வால் நக்ஷத்திரம் ஒன்றைப் பற்றி பத்திரிகைகளில் அநேகர் எழுதிக் கொண்டிருந்தார்கள். விஷயம் தெரிந்த சிலர், காட்டிக்கொள்ள விரும்பிய வேறு சிலர், அதனால் ஏதோ என்றார்கள்; அவர்களை விட அதிக விஷயம் தெரிந்ததாக அசம்பாவிதம் ஒன்று நடக்கப்போகிறது என்று அடித்துச் சொன்னார்கள்.

மல்லாரி ராவ் என் பக்கமாகப் பத்திரிகைத் தாளை விசிறிப் போட்டுவிட்டு வாசல் தாழ்வாரத்தில் பின் கை கட்டியபடி அங்கும் இங்கும் உலாவிய வாறே, “பார்த்தீர் களா, ஐயா?” என்று கேட்டார். நான் பார்த்துவிட்டேன் என்பது அவருக்குத் தெரியுமாகையால் என் பதிலை எதிர்பாராமல், “ஏதோ ஆகாயத்தில் வால் வைத்துக் கொண்டு ஒரு நக்ஷத்திரம் என்றைக்கோ வருகிறது; அது தன் வால் தனத்தை இந்த உலகத்தில் ஒருத்தர் மீது காட்டுகிறது என்றால் அதை நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா?” என்று கேட்டார்.

‘இல்லை; நான் நம்பவில்லை! இந்த உலகத்தில் இருபத்தேழு நக்ஷத்திரங்களு ள் ஒன்றில் பிறந்து விட்டதற்காக என்னென்னவோ யோகங்கள் வரும் என்று ஜோஸ்யம் சொல்பவர்களையே நான் நம்புவது கிடையாது, ராவ்ஜி!” என்றேன்.

மல்லாரி -ராவின் முகம் இப்போது நன்றாக மலர்ந்து  விட்டது. அவர் ஆசைப்பட்ட பதில் என்னிடம் அப்போது கிடைத்துவிட்டது.  ஆகவே விறுவிறுப்பாக,  “அப்படியானால் உங்களுக்கு ஜனார்த்தன ராவ் ஸிந்தியாவைப் பற்றித் தெரிந்திருக்க நியாயம் இல்லை!” என்றார். நரைத்த மீசையினூடே வெளுத்த பற்கள் லேசாகத் தெரிந்தன.

“உங்களுக்கு மட்டும் தெரியுமோ?” என்று நான் கேட்டு விடுவேன். ஆனால் அதற்குள் அவருடைய வலது கட்டை விரல் வேகமாக ஆடத் தொடங்கியது என் கண்ணில் பட்டுவிட்டது. ஏதாவது சொல்லி வைக்கப் போய் ஒரு   நல்ல கதையைக் கேட்காமல் விட எனக்கு மனம் வரவில்லை. ஆகவே, “நீங்கள் எங்கே சொன்னீர்கள் எனக்கு!” என்று குறைப்பட்டுக் கொண்டேன்.

மல்லாரி ராவின் உதடுகள் மேலும் விரிந்து, இரண்டு வரிசைப் பற்களும் இன்னும் நன்றாகத் தெரிந்தன. அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

ஜாகீர்தார் ஜனார்த்தன ராஜ் ஸிந்தியா குதிரை மீது ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். கரடு முரடான மலை ரஸ்தா. பழகின குதிரை யாகையால் ஒரு மாதிரி  சமாளித்துக் கொண்டு வருகிறது. இருட்டு நாலாபுறமும் கௌவுகிறது. காட்டுப் பாதையாகையால், குதிரையின் குளம்பொலி கேட்டு ஓடி ஒளியும் நரி, ஓநாய்களின் சலசலப்பு கேட்கிறது ஜனார்த்தன ராவ் எண்ணமெல் லாம் அவனுடைய ஜாகீரைப் பற்றி லயித்திருக்கிறது.

அவன் இந்த வழியே ஊரை விட்டு ஓடிப்போய் சரியாக முப்பது வருஷங்கள் ஆகிவிட்டன. அப்போது வாலிப மிடுக்குடன் அவன் இருபது வயது இளைஞன்; கட்டழகன். அவன் பெயரைக் கேட்டால் ஜாகீரில் உள்ள ஜன ங்கள் பயப்படுவார்கள்; வயது வந்த பெண்கள்

எல்லாம் கதவைச் சாத்திக் கொண்டு பதுங்கி ஒளிவார்கள்.. துஷ்டன் என்ற பெயரை எளிதில் சம்பாதித்துக் கொண்டு விட்டான் ஸிந்தியா.

‘ட்டக்   ட்டக்’ என்று குதிரை சென்று கொண்டே யிருந்தது. ஒரு முறை ஜனார்த்தன ராவ் ஸிந்தியா ஆகாயத்தைப் பார்த்தான். நிர்மலமான வானம்; சந்திரன் இன்னும் முகம் காட்டவில்லை. எண்ணற்ற தாரகைகள் அவனைப் பார்த்துப் பரிகசிப்பது போலக் கண் சிமிட்டின. கண்களை ஓட்டி வந்த ஸிந்தியா திடுக்கிட்டு, குதிரையின் லகானைப் பலமாகப் பிடித்து இழுத்தான். ஒருமுறை அவனையும் அறியாமல் அவன் நெஞ்சம் குலுங்கியது. வான முகட்டிலே அப்போதுதான் உதயமாகிக் கொண் டிருந்த ஒருவால் நக்ஷத்திரமே அவனை இப்படித்  திடுக்கிடும்படி செய்தது.

இதற்கு முன்பு வாழ்நாளில் இரண்டு முறை வால் நக்ஷத்திரத்தை அவன் கண்டிருக்கிறன். முதல் முறை கண்ட சில தினங்களுக்குள், அவனுடைய தந்தை நரேந்திர ராவ் ஸிந்தியா திடீரென்று மாரடைப்பால் இறந்து போனார். அசுபம் ஏற்படத் தோன்றிய அறிகுறி என்று குடி படைகள் எல்லாரும் வால் நக்ஷ்த்திரத்தைச் சுட்டிக் காட்டினார்கள். அவர்களுக்கு இரண்டு விதத்தில் வருத்தம்- தங்களுக்கு தந்தை போலிருந்த நரேந்திர ராவ் ஸிந்தியா காலமான ஒன்று, மகாதுஷ்டனான ஜனார்த்தன ராவ் ஸிந்தியாவுடன் காலந்தள்ள வேண்டுமே என்பது மற்றொன்று. அவர்கள் பயந்த மாதிரியே ஜனார்ததன ராவும் நடந்துகொண்டான். அவனுடைய அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. ஜமா சேர்த்துக்கொண்டு கட்டிப் பிடிப்பார் அற்றுத் திரிந்தான். அவன்மீது எத்தனையோ புகார்கள் வந்து குவிந்தன தாயாரிடம்.

பவானி பாய் ஸ்திரீகளில் ரத்னம், வீரமராத்தியனின் தர்ம பத்நியாகையால் நெஞ்சிலே வைரம் உண்டு; வைராக்யமும உண்டு. கண்டிப்பாக இருந்தாள் தனது மகனிடம், அநேக முறைகள் நல்ல வார்த்தையாகச் சொல்லிப் பார்த்தாள். மணம் முடித்து வைத்தால்  அடங்குவான் என்று ஒரு பெண்ணையும் கூட நிச்சயம் செய்து வைத்தாள்.

இந்த சமயத்தில்தான் இரண்டாம் முறையாக வானத்திலே வால் நக்ஷத்திரம் தோன்றியது! மறுபடி  ஜாகீரின் தலைவனுக்கு ஆபத்து வந்து விட்டதென்று நேரிலும் மறைமுகமாகவும் ஜனங்கள் பேசிக்கொண் டார்கள். இந்தப் பேச்சு ஜனார்த்தன ராவ் ஸிந்தியாவின் காதிற்கும் எட்டியது. அவன் கைகொட்டி ஏளனமாகச் சிரித்தான். அவனை அந்த க்ஷணமே தண்டிக்க விதி முடிவு செய்திருந்தது! அந்த விதி அவனுடைய போக்கிரி — சகாவான நரஹரி ராவ் என்பவன் உருவத்திலே வந்தது.

நரஹரி ராவ் காதலித்த ஒரு பெண்ணைப் பலாத்காரமாகக் கொண்டு வந்துவிடுவதென்பது அவர்கள், ‘ஜமா’ ஏற்றுக்கொண்ட சாகசமான காரியம். பெண்ணின் பெற்றோர்கள் நரஹரி ராவை வெறுத்தார்கள்; தங்கள் பெண்ணை அவன் கண்ணில் படாமல் காபந்து செய்யப் பெரிய முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். “எடுத்துக் கொள்ளட்டுமே, ஜனார்த்தன ராவ்! கத்தி முனையில் நாம் கொண்டு வந்துவிடலாம். உன் சிநேகிதனாக இருந்துவிட்டு, இந்த அற்ப காரியம் கூட என்னால் சாதித்துக் கொள்ள முடியவில்லை என்றால் என்ன பிரயோசனம்!” என்று நண்பனைத் தூண்டி விட்டான் நரஹரி.

“நான் நேரில் சென்று பேசி முடித்து வைக்கிறேன்!” என்று ஜனார்த்தன ராவ் ஸிந்தியா சொன்னான். “நேரில் பேசி நடக்கிற காரியமானால், நானே சாதித்துக் கொள்ள மாட்டேனா? உன் தயவு எனக்கு என்னத்திற்கு? பெண்ணோ என்மீது உயிரை வைத்திருக்கிறாள். என்னுடன் வந்து விடத் தயாராகவும் இருக்கிறாள். பெற்றோர்கள்தான் அவளை விடாமல் ஹிம்சை செய்கிறார்கள். தண்டிக்க வேண்டும் அப்பா, அவர்களை! சரியானபடி தண்டிக்க வேண்டும்!” என்றான்.

நரஹரி ராவ் சொன்னது ஒரு பொய். அந்தப் பெண்ணும் அவனை வெறுத்தாள்! ஜனார்த்தன ராவ் ஸிந்தியாவுக்கு இது தெரிந்திருந்தால், ஒருவேளை ஒப்புக் கொண்டிருக்க மாட்டான்.

“யோசனை செய்யாதே! நீ வந்து நின்றாலே போதும்! உன்னைக் கண்டாலே அவர்கள் நடுங்கிப் போக மாட்டார்களா!” என்று உற்சாகப்படுத்தினான் நரஹரி. கடைசியில் அவனுடன் வருவதற்கு ஒப்புக்கொண்டாள் ஜனார்த்தன ராவ்.

இந்த அடாத செயலுக்கு எதிராகச் சில சக்திகள் வேலை செய்தன. பெண்ணின் குடும்பத்தினருக்கு எப்படியோ செய்தி எட்டி அவர்களை, ‘வரவேற்க’த் தயாராக இருந்தார்கள்! ஜனார்த்தன ராவ் ஸிந்தியாவும் நரஹரியும் இன்னும் சில கூட்டாளிகளுடன் திடும்பிரவேசமாக வீட்டினுள் நுழையவும், அங்கே காத்திருந்தவர்களின் எதிர்ப்புக்கு உள்ளானார்கள். ‘உறையிலிருந்து கத்தியை எடுக்கவே தேவை இராது’என்று நரஹரி சொன்னதற்கு

எதிராக, அவர்கள் அவ்வளவு பேரும் வாளை உருவிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது.

ஜனார்த்தன ராவ் ஸிந்தியா கலங்கி விட்டான். அதுவும் பல கத்திகள் மோதும் சப்தம் கேட்கவும், ஆபத்து நெருங்கி இருப்பதை உணர்ந்து கொண்டான். பொறியில் அகப் பட்டுக் கொண்டோம் என்ற கிலி தோன்றவே, வீட்டின் புழக்கடைப் பக்கம் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான். இருள் உதவி செய்ய, அங்கிருந்த பெரிய நெற் குதிரின் பின்னே ஒளிந்தவாறு கவனித்தான்.

காதுங் காதும் வைத்தாற் போல் நடைபெறும் என்று நினைத்த காரியம் பெரிய களேபரமாயிற்று. நரஹரியின் ஆட்கள் இரண்டு பேருக்குப் பலத்த காயம். நரஹரியே ஒட்டமாக ஓடி ஒரு ஸ்திரீயை (அட பாவி!) கத்திக் கொண்டு தாக்கினான். திரும்பு முன் அவனையே மூன்று பேர் வளைத்துக்கொள்ள, ஒண்டியாக சமாளிக்க முயன்று – திணறினான்.

“வாசல் கதவைச் சாத்து! இன்னும் யாரோ ஒருவன் ‘எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறான்… விடக்கூடாது !’ என்று ஒரு குரல் பலமாக எழுந்தது.

ஜனார்த்தன ராவ் ஸிந்தியாவுக்குத் தான் செய்த பிசகு தெரிய வந்தது. எத்தனையோ துஷ்டக் காரியங்கள் செய்தவன் எனினும், இம்மாதிரி ஒன்றில் இதுவரை தலையிட்டதில்லை. இனி தப்புவது எப்படி? அந்த இக்கட்டான நிலையிலும் தெய்வம் வழி காட்டியது போல் அவன் ஒளிந்து கொண்டிருந்த இடத்தின் அருகே ஒரு இளம் பெண் ஓடி வந்தாள். அவனை அவள் கவனிக்க வில்லை. நாலாபுறமும் பார்த்தாள். இதுவரை அவன் கண்ணில் படாமல் இருந்த ஒரு சிறு கதவைத் திறந்தாள்…

இத்த சந்தர்ப்பத்தை விட்டால் இனி கிடைக்காது என்று எண்ணி விட்டான் ஸிந்தியா. திடீர் என்று தாவி அவளை அப்பால் தள்ளி, தானே அந்தக் கதவு வழியே வெளியே பாய்ந்தான். அவன் இப்போது நின்றது தட்டுமுட்டு சாமான்கள் அறை. அதன் கோடியில் இன்னொரு கதவு. அதையும் திறந்தான். தோட்டத்திற்கு வந்து விட்டான். தோட்டத்து மதில் சுவர் தெரிந்தது. ஒரே பாய்ச்சலில் வெளியே தாவிக் குதித்துவிட்டான். அவன் தாவிக் குதிக்கும்போதே அவன் தள்ளி விட்டு வந்த பெண்ணின் கூச்சல் ஒலி கேட்டது!

நிற்க நேரம் இல்லை; நினைக்க நேரம் இல்லை. வீட்டைச் சுற்றி ஓடினான். அவன் குதிரை நின்று கொண்டிருந்தது. ஒரே மூச்சு! அதன் மீது உட்கார்ந்து, வந்த சுவடு தெரியாமல் ஓடிவிட்டான்… டடாக்…டடாக்…

ஆனால், தப்பி விட்டானா? அது தான் இல்லை என்பது வெகு சீக்கிரத்திலே தெரிந்துவிட்டது…. பின்னால் துரத்துகிறார்கள் ஏழெட்டுப் பேர்கள்! ஓடினான், ஓடினான்… அப்படி ஓடிக் கொண்டே இருந்தான்! வானம் இருண்டு விட்டது. அங்குமிங்கும் மேகங்கள். அவைகளின் இடைவெளி வழியே ஒரு நக்ஷத்திரம் அவன் கண்களுக்குத் தெரிந்தது- அவனுக்காகவே போல் தெரிந்தது… அதுதான் அந்த வால் நக்ஷத்திரம்!

அவன் ஓட ஓட துரத்துபவர்கள் நிற்கவில்லை. அகப்பட்டுக் கொண்டால், யார் என்று நிதானிக்க மாட்டார்கள். வெட்டி வீழ்த்தி விட்டுத்தான் முகத்தைப் பார்ப்பார்கள். அவனுடைய ஜாகீர் எல்லையையும். தாண்டியாகி விட்டது. மலை ரஸ்தா மேலும் மேலும் காடு முரடாகிக் கொண்டு வந்தது. குதிரையின் கால்கள் பலமுறை வழுக்கின. பின்னால் துரத்துபவர்களும்  சளைக்காமல் பின்பற்றினார்கள்.  இதே நிலையில் சென்று கொண்டிருந்தால், வெகு சீக்கிரத்தில் அவன் குதிரை.. களைப்படைந்துவிடும், அவனும் சிக்கிக் கொள்ளுவான்.

தப்பிப் பிழைக்க ஒரே வழிதான் உண்டு. அடுத்த ஜாகீரை எப்படியேனும் எட்டிப் பிடித்து   எங்கேயேனும் ஒண்டிக்கொள்ள வேண்டியதுதான். ‘அடுத்த ஜாகீரின் தலைவர் நரஸிம்ம ராவ் ஹோல்கார். பெயருக்கேற்றபடி கோபக்கார மனிதர். அவரை  நெருங்கிப் பேசவே எல்லாரும் பயப்படுவார்கள்.    இன்னொரு சுபாவம் அவருக்கு, பிறர் சொல்வதைத்  தடுத்துச் சொல்வது. “நரேந்திர ராவ் ஸிந்தியா நல்ல ம னுஷர்!” என்று யாராவது சொன்னால், “என்ன ஐயா  நல்லவர்? காரியமாகத்தான் அவர் நல்லவராக இருக்கிறார்கெட்டவராக இருந்து பார்க்கட்டுமே. முடியுமா!” என்பார். ஜனார்த்தன ராவ் துடுக்கான பிள்ளை” என்றால், பின்னே, பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டுமாம்! இந்த வயதில் இப்படி இருப்பதுதான் சரி! எனக்கு அவனைப் பிடித்திருக்கிறது” என்று சொல்லுவார். அவருடன் பேசிப் பழகத் தெரிந்தவள் ஒருத்திதான்.    அவருடைய அருமை மகள் – ஏகபுத்திரி பத்மாஸனி பாய். குறிப்பிட்ட தினத்தில் நரஸிம்ம ராவும், பத்மாஸனியும்

மேல் மாடத்திலே உட்கார்ந்து ஆகாயத்தைப் பார்த்துக்  கொண்டிருந்தார்கள். இதர நக்ஷத்திரங்களை விடப்  பிரகாசமாக ஒரு வால் நக்ஷத்திரம் கிளம்புவதைக்   கண்டதும் பத்மாஸனி பாய், “அப்பா! அதைப் பார்த்தீர்களா?    இது நல்லதிற்கில்லை!” என்று கூறினாள். கரஸிம்ம ராவ் சிரித்தார்;    “நமக்கு எப்படித் தெரியும்.

பத்மா? நல்லதற்காகவும் இருக்கலாம்; கெட்டதற்காகவும் இருக்கலாம்… அல்லது, இதற்கு ஒன்றுமே அர்த்தம் இல்லாமலும் இருக்கலாம் – அற்பத்திலும் அற்பமான ஒரு மனிதனுக்காக இயற்கை ஒரு பெரிய வால்- நக்ஷத்திரத்தை அனுப்பி வைக்க முடியுமா?” என்று கேட்டார்.

“முன் ஒரு தடவை வந்த போது, நீங்களே நரேந்திர ராவைக் குறித்து வந்ததாகச் சொல்லி இருக்கிறீர்களே, அப்பா!” என்று கேட்டாள் மகள்.

நரஸிம்ம ராவ் மறுபடி சிரித்தார். “அப்பப்பொழுது சொன்னதை அப்பப்பொழுது நீ விட்டு விட வேண்டும். நீ சிறு குழந்தை, உனக்கு இத்தனை ஞாபகம் உதவாது!” என்றார் தமாஷாக.

பத்மாஸனி இறங்கி வந்தாள். அவள் வந்த படிக்கட்டு அவர்கள் மாளிகையின் பின் புறத்தில் கொண்டு விட்டது. அவள் அங்கிருந்த வாசலைத் தாண்டும் சமயம், வெளியே ஒரு குதிரை வந்து நிற்பதை உணர்ந்தாள். மறு கணம் கதவு இடிக்கப் படவே, திறந்தாள். அவள் முன் ஜனார்த்தன ராவ் ஸிந்தியா சோர்ந்து போய் நின்று கொண்டிருந்தான்.

“மிக அவசரம்! என்னைச் சீக்கிரம் உள்ளே அனுமதித்துக் காப்பாற்ற வேண்டும்…இது என் வேண்டு கோள்… பின்னால் எதிரிகள் துரத்தி வருகிறார்கள்!” என்றான் ஸிந்தியா.

“என் தகப்பனாரிடம் ஒரு வார்த்தை சொல்லி விடுகிறேனே!” என்றாள் யுவதி.

“உங்கள் தகப்பனாரிடம் சொல்லிவிட்டு வருமுன் என்னைத் துரத்தி வருபவர்கள் பிடித்துக்கொள்வார்கள், என் உயிர் அப்புறம் இருக்காது. நான் யார் என்பதும்,

எதற்காக ஓடி வருகிறேன் என்பதும் விசாரித்துக் பாண்டிருக்க இது சமயம் இல்லை!” என்றான் ஸிந்தியா.

 “நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியும். எதற்காக ஓடி வருகிறீர்கள் என்பதுதான் தெரியாது… உங்கள் ஆபத்தான  நிலையை முன்னிட்டு நானாகவே அனுமதிக்க முடியும்… இப்படி வாருங்கள்!” என்றாள் பத்மாஸனி.

மறுகணம் குதிரையும் ஜனார்த்தன ராவும் உள்ளே   பிரவேசிக்க, கதவை அடைந்தாள் பத்மாஸனி. அவளைப்  பின்பற்றி வரும்படி சமிக்ஞை செய்து, இரண்டு தாழ்வாரங்களைக் கடந்தாள். “உங்கள் குதிரை இங்கே இருக்கட்டும். நீங்கள் என்னுடன் வரலாம்!” என்றாள்.

ஒரு விசாலமான அறையில் திவ்யமான மஞ்சத்தைக்  கா ட்டினாள் பத்மாஸனி. “இங்கே நீங்கள் பயமின்றி இருக்கலாம். உங்களுக்கு ஆகாராதிகளுக்கு நான் ஏற்பாடு செய்து விட்டு, என் தகப்பனாரிடமும் சொல்கிறேன்!” என்று கூறினாள்.

 நரஸிம்ம ராவிடம் பத்மாஸனி சென்றதும், “என்ன, எனக்கு ஒரு சேதி கொண்டு வந்திருக்கிற மாதிரி உன் முகம் காட்டுகிறதே!” என்று கேட்டார் அவர்.

“ஆமாம்! நம் வீட்டில் புழக்கடைப் பக்கமாக ஒரு வீரன்

வந்து நின்று, ‘என்னைக் காப்பாற்றுங்கள்!’ என்று கேட்டான். உங்களிடம் வந்து சொல்லக்கூட அவகாசம் இல்லை   அந்த நிலையில் அவனை எப்படி நான் உள்ளே   அனுமதிப்பது ?” என்று கேட்டாள

“காப்பாற்று என்று கேட்டால், யாராக இருந்தாலும் நீ  காப்பாற்றித்தான் ஆக வேண்டும்! நீ அவனை அனுப்பியிருந்தால் அது பெரிய பிசகு!” என்றார் நரஸிம்ம ராவ்.

“அப்பா! அவர் ஜனார்த்தன ராவ் ஸிந்தியாவாக இருந் துவிட்டால் கூடவா?”

“பேஷாக! நம்மிடம் அடைக்கலம் புகுந்தவனை கைவிடக் கூடாது…’

“அப்படியானால் நம் கோட்டையில் பெரிய  அறையைக்கூட அவருக்கு ஒழித்துத் தர வேண்டும் என்பீர்கள் போலிருக்கிறதே, அப்பா!”

“அப்படித்தான் செய்வேன்! நீயானாலும் அதையே தான் செய்ய வேண்டும்… யார் அவன்? எங்கே இருக்கிறான்,” என்று வினவினார் அவர்.

பத்மாஸனி தகப்பனாரை அழைத்துக் கொண்டுபோய்  ஜனார்த்தன ராவ் ஸிந்தியாவிடம் விட்டாள். “ஓ!” என்றர் நரஸிம்ம ராவ். “என்ன காரணமோ இந்த ஓட்டம்?” என்று விசாரித்தார்.

“என்மீது வீண் பழி சுமத்தி என்னை ஒழித்துவிட  சதிகாரர்கள் முயலுகிறார்கள். உங்கள் மகளால் நான் இன்று  தப்பிப் பிழைத்தேன்!”

நரஸிம்ம ராவ் தமது வழக்கத்தை ஒட்டிச் சிரித்ததார்.   “இன்னும் தப்பிவிடவில்லை. அந்த ஆட்கள் இங்கே சுற்றிக் கொண்டிருப்பார்கள்… கவலையில்லாமல்   1  வாரம் இருந்துவிட்டு ஊர் திரும்பலாம்!” என்றார்.

பத்மாஸனி அப்போது அவனைப் பார்த்த பார்வையில்  “ஒரு வாரம் என்ன, இங்கேயே எப்போதும் இரு விடலாம்!” என்ற அர்த்தத்தை ஜனார்த்தன ராவ் கண்டான்.

தன் ஜாகீரில் நடைபெறுவது என்ன என்பதை அறியாமலேயே ஒரு மாதம் தள்ளி விட்டான் ஸிந்தியா. பத்மாஸனியின் சங்கீதமும், சங்கீதத்தை வென்ற பேச்சும் அவனை ஆட்கொண்டன. அவள் அகன்றபொழுதெல் லாம், இதயத்தில் இருள் சூழ்ந்து கொண்டது போன்ற உணர்ச்சியே அவனுக்கு ஏற்பட்டது. இடையிடையேதான் ஜாகீர் சமாசாரத்தை விசாரிப்பான். பத்மாஸனி பயங்கரமான செய்திகள் கொண்டு வந்து சொல்வாள்: “அங்கெல்லாம் ஒரே குழப்பமாம். உங்களைத் தேடித் தேடித் துழாவுகிறார்களாம். உங்களைக் கண்டால் உயிருடன் விடுவதில்லை என்று சபதம் செய்திருக்கிறார்களாம்… ஏன், இங்கே கூடச் சிலர் சந்தேகப்பட்டு வழியெல்லாம் சுற்றிச் சுற்றி வேவு பார்க்கிறார்களாம்…” என்று கூறுவாள்.

இதில் ஒரு பாதிதான் உண்மை; மறு பாதி, அவனை அங்கே இருத்தி வைத்துக்கொள்ள காதல் வசப்பட்ட அவள் கற்பனை. முழுசாக இரண்டு மாதங்கள் ஓடின. அவள் கூட இருப்பதிலே இன்பம் கண்டான் ஜனார்த்தன ராவ். அவனுடைய வாழ்நாளிலே கிட்டாததொரு போகம் கிடைத்து விட்டதாக அகமகிழ்ந்தான். நரஸிம்ம ராவும் உள்ளந்தரங்கத்தில் அவனை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ள ஒரு எண்ணம் வைத்திருந்தார். இதை மறை முகமாக அடிக்கடி சொல்லுவதும் உண்டு.ம் ஒரு நாள் பத்மாஸனி தன் காதலனிடம் உண்மையைக்   கூறி விட்டாள். “உங்கள் மீதுள்ள பாசத்தினாலேயே நான் பல பொய்களைச் சொல்லி இருக்கிறேன். நீங்கள் இனி துணிவுடன் வெளியே வரலாம். அப்பாவின் ஆசீர்வாதத்துடன் நாம் இருவரும் கல்யாணம் செய்து கொள்வோம்!”  என்றாள்.

ஜனார்த்தன ராவ் ஸிந்தியா இரு கண்களையும் துடைத்துக் கொண்டான். “உன் காதல் எத்தனை ஆழ்ந்தது அது உன்னைப் பொய் சொல்லும்படி கூட அல்லவா தூண்டியிருக்கிறது! இருக்கட்டும்! நீ இப்படிச் செய்தபின் என் காதலை நான் உனக்கு நிரூபித்துக் காட்ட வேண் டாமா…? பார்த்துக்கொண்டே இரு!” என்றான்.

மறு தினம் காலையில் பத்மாஸனி அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பெரிய அறையினுள் கால் வைத்தவுடன் திடுக்கிட்டாள். அது காலியாக இருந்தது; ஓட்டமாக ஓடி லாயத்தைப் பார்த்தாள். அங்கே அவன் வந்த குதிரையைக் காணவில்லை. ஆள் அனுப்பி, அவனுடைய ஜாகீரில் விசாரிக்கச் சொன்னார் நரஸிம்ம ராவ் ஹோல்கார்.   அவன் ஊரைவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன் ஓடியவன் திரும்பவே இல்லை என்ற செய்தியே கிடைத்தது.

இரண்டாம் முறை வால் நக்ஷத்திரம் வந்து காட்டிய பலன் அதுவே…

 இதெல்லாம் முப்பது வருஷங்களுக்கு முன் நடந்த கதை. ஜனார்த்தன ராவ் ஸிந்தியாவின் மனக் கண்ணிலே பத்மாஸனி பாயின் அழகிய முகம் நின்று ஆடியது. அன்று வாலிப மிடுக்கிலே ஓடி வந்து விட்டான். முற்றிலும் நம்பிய இளம் உள்ளத்தை எவ்வளவு தூரம் அவன் மறைவு வருத்தியிருக்குமென்று அவனால் நினைக்க முடியவில்லை.

 இப்போது திரும்பி வருவது அதே ஜனார்த்தன ராவ் ஸிந்தியாதான்.  இவனிடம் அந்த இளைஞனின் அலட்சிய பாவம் இல்லை; ஆனால், பிடிவாதம் இருந்தது. உடம்பில் பழைய வலு இல்லை; எனினும் தீர்மானம் இருந்தது

ஊரைவிட்டுச் சென்ற பின், தனது தாயாரைப் பற்றிய விருத்தாந்தங்களைக் கேட்டு அறிந்து கொள்ள அவன்

முயற்சி  செய்யவில்லை. அந்த நாளில் அவளும் கலங்கியே  போயிருந்தாள்.  திடசித்தமுள்ளவளாகையால் துணிவுடன்

நடந்து கொண்டாள். “குடும்பத்தின் பெயரைக் கெடுக்க முயற்சித்த மகனைச் சேர்ப்பதில்லை” என்று உறுதி கூறிச்

 சமாளித்துக் கொண்டாள்.

ஒரு வருஷத்துக்குப் பிறகு மகனை அடியோடு மறந்துவிட்டவள் போலவே காணப்பட்டாள்.

தனது  வைராக்கியத்தை மெய்ப்பிப்பது போன்று அவள் செய்கை என்றும் இருந்தது ; ஏதோ ஒரு குழந்தையை எடுத்துவைத்து அவள் வளர்க்கிறாள் என்ற செய்தி ஊரில் பரவியது. இதை ஊர்ஜிதம் செய்வது போல் அடிக்கடி ஒரு அழகிய சிசுவுடன் ய அவள் காணப்பட்டாள். ஐந்து வருஷங்களில் அந்தப் பிள்ளை எல்லோருக்கும் அறிமுகமானான். பத்து வயதில் பள்ளியில் கெட்டிக்காரன் என்ற பெயர் பெற்றான். சிவாஜியை அன்னை ஜிஜிபாய் வளர்த்த மாதிரி’ என்று பவானிக்கு உபமானம் சொல்லிப் பேசிக்கொண்டார்கள்  ஜனங்கள்.

இதொன்றும் ஜனார்த்தன ராவுக்கு அப்போது தெரியாது.  அவன் வெகு தொலைவில் சென்று, ராஜ ஸேவையில் ஈடுபட்டான். தஞ்சாவூர் அரண்மனையில் அவனுக்கு நல்ல தொரு ஸ்தானம் கிடைத்தது- பொருளீட்டுவதில் முனைந்தான். ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ என்னும் அபவாதம் நீங்குவதற்குத்தான் உழைக்கிறான் என்று எண்ணும்படி உழைத்தான். ஸ்திரீகள் பால் அவன் இச்சை சென்றதில்லை. பணம் குவிப்பது ஒன்றே குறியாக இருபது வருஷம் ஓட்டி, இன்று அவன் ஒரு பெரிய தனவானாகி விட்டான். பழைய ஜாகீரைப் போன்ற மூன்று ஜாகீர்கள் வாங்கும் வல்லமை அவனுக்கு இருந்தது. ஊர்     விவகாரம்  தெளிவாகத் தெரியாது. எனினும், தாய் இருக்கிறாள். அவளுடைய வளர்ப்புப் பிள்ளை ஜாகீரைப் பார்த்துக் கொள்கிறான் என்பது மட்டும்

எட்டியது. காதுக்கு

இப்போது பழைய மண்ணுக்குத் திரும்பி, தனது உரிமைகளை ஸ்வீகரித்துக் கொள்ள வருகிறான். நான் அன்று ஒரு குற்றமும் செய்து விடவில்லை.   அதற்காக ஓடி இருக்கவும் தேவை இல்லை. கத்தியை வீசியது நான்   அல்ல. ; அந்தக் காரியமாகவும் செல்லவில்லை என்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டு விட்டான்.  குற்றம் செய்த நரஹரி ராவ் தண்டனை அடைந்திருப்பான். தவிர, இன்று அவன் பணம் படைத்தவன். உலகில்  பணம் எத்தனையோ குற்றங்களை  மறைத்துவிடுமே! தன் ஸ்தானத்தில் வீற்றிருக்கத்  தாயார் அமர்த்தியிருக்கும் ஆளை அகற்றி விட்டுத் தானே உட்காருகிறது என்ற உறுதியுடன் வந்தான். அப்படி வரும்போதுதான் வானத்திலே அவன் கூறியபடி – வால் நக்ஷத்திரம் உதயமாகி இருந்தது. வாழ்விலே அதைக் காண்பது மூன்றாம் முறையாக.அவன் செல்லச் செல்ல வால் நக்ஷத்திரம் வான வீதியில் உயர்ந்து கொண்டே வந்தது.

ஜனங்களுடைய ஞாபக சக்தி மிகவும் குறைவானது பெரும்பான்மையான பேருக்கு இன்று பெருங் குற்வ செய்தவனை அடுத்த வருஷமே மறந்துவிடும் இயல்பு உண்டு. ஜனார்த்தன ராவ் ஸிந்தியாவை அறிந்தவர்கள்  இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சொற்பமானவர்கள்களே. ஆகவே, அவன் தனது ஜாகீருக்குள் வந்து ஜாகையில்

அமர்ந்துகொண்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண் டான். அநேகர் வந்து பார்த்தார்கள்; அவன் செல்வத்துக்கு மரியாதை செய்தார்கள்.

காலையிலும் மாலையிலும் அநேக மநேகம் உள்ளூர்ப் பிரமுகர்களை, ‘பேட்டி’ கண்டான். தன்னுடைய தனத்தைப் பற்றி அளந்தான்; தன் பெருமைகளை எல்லாம் சொன்னான்; வெகு குதூகலமாகக் காணப்பட்டான். எனினும், தன்னைப் பார்க்க வருபவர்களில் முக்கியமாக எந்த ஒருவரை எதிர்பார்த்தானோ, அவர் வரவில்லை! அதுதான் அவன் தாயார்

பார்த்தான். இரண்டு வாரங்கள் சென்று விட்டன. அவள் பவானி பாய்! காத்திருந்து வரவே இல்லை! அவனாகப் போய்ப்  பார்ப்பதற்கும் மனம் இடம் கொடுக்கவில்லை.

நாளாக ஆக, தாயே தன்னை அலட்சியம் செய்து விட்டாள் என்ற ஆத்திரம் மட்டும் நெஞ்சில் வளர்ந்து கொண்டிருந்தது. அவள் அமர்த்திய ஊர் பேர் தெரியாத ஒரு பயல், தான் அனுபவிக்க வேண்டிய போக பாக்கியங்களைச் சுகித்துக் கொண்டிருப்பதா என்று மனம் எரிந்தான்.

ஜாகீரின் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்த இளைஞனுக்கு வயது இப்போது முப்பது. மிகவும் திறமையுடன் நடந்து கொண்டு நல்ல பெயரும் வாங்கிக் கொண்டு வருகிறான் – என்பதை அவன் கேள்விப்பட்டு விட்டான். எத்தனையோ அறிவாளிகள் அவனுக்குப் பக்க பலமாக இருக்கிறார்கள் என்பதும் தெரிந்து கொண்டான். “அதற்காக என் உரிமையை நான் கைவிடுவதா?” என்று உறுமினான்.

ஊரிலே பிளவு செய்யும் வேலையில் அவன் மூளை தீவிரமாக ஈடுபட்டது. அதற்காக அவனுடைய செல்வத்தைத் தாராளமாகச் செலவு செய்யத் தொடங்கிவிட்டான்.  

ஜனார்த்தன ராவ் ஸிந்தியா ஜாகீரை விட்டு ஓடும்போ இருபது வயது இளைஞன். இப்போது வயது ஐம்பது.    அன்று எந்த விதமான அட்டகாசங்களுக்குப் பெயர் வாங்கியிருந்தானோ அந்த குணாதிசயங்கள் கேவலம் வயதாகி விட்டதால் மட்டும் மறைந்து விடவில்லை என்பதை நிரூபிக்கத் தொடங்கி விட்டான். அவன் பணமும் வேலை செய்தது.

அவன் வந்து ஒரு மாதமாகி விட்டது. பல இடங்களில் நின்று ஜனங்கள் பேசினார்கள் . “பவானி நல்லவள்தான்  ஐயா! யார் இல்லையென்றது…! சொந்தப் பிள்ளை வந்த பிறகு சொத்தை ஒப்புவிக்க வேண்டியதுதானே?”  என்று சிலர் சொன்னார்கள்.

‘ரங்கநாத ராவ் கெட்டிக்காரப் பையன்தான்…இப்போது யார் என்ன செய்யச் சொல்லி விட்டார்கள்!  ஜாகீரை ஒப்புவித்து விட்டு, அவனும் ஊரில் இருக்கிட்டுமே!” என்று பேசினார்கள்.

“பவானி பாய்க்கு அதிகாரம் இல்லை” என்றார்கள். ‘ஜனார்த்தன ராவ் ஸிந்தியா என்ன குற்றம் செய்து விட்டார்! ஒன்றும் இல்லை! அந்த நாளில் இதைவிடப் பெரிய குற்றம் செய்தவர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள்!”   என்றார்கள் இன்னும் சிலர்.

சிற்சில இடங்களில் அடிதடிகள் நடைபெற்றன.  ஜனார்த்தன ராவ் ஸிந்தியாவின் கட்சிக்காரர்கள் ரங்கநாதராவின் ஆட்களை அடித்தார்கள், காயப்படுத்தினார்கள்  என்று செய்திகள் வரத்தொடங்கின. மற்றும் ஒரு வதந்தி பலமாக உலாவியது  “ரங்கநாத ராவ் மரியாதையாக வெளியேறாத பக்ஷத்தில் அவன் உயிருக்கே ஆபத்து நடப்போகிறது” என்பதுதான் இந்தப் பயங்கர வதந்தி.

இதற்கேற்றாற் போல், ரங்கநாத ராவ் வெளியே சென்ற சமயம் அவனைச் சிலர் வழி மறித்து, கடைசி முறையாக  எச்சரித்து விட்டுத்தாகவும் சொல்லிக்கொண்டார்கள்.

ஜனார்த்தன ராவின் பணம் இதையும் செய்யும், இதற்கு  மேலும் செய்யும்  என்று ஊரில் பலர் நம்பினார்கள்.   என்னென்னவோ நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்தார்கள். நல்லவர்கள் நடுங்கினார்கள்; ஜனார்த்தனராவிடம்  

ஒரு தூது கோஷ்டியாகச் சென்று பேசிப் பார்ப்பதென்று தீர்மானித்து , பிறகு அந்த எண்ணத்தையும் கைவிட்டார்கள்.  அன்றிரவு ரங்கநாத ராவ் ஜாகையில் எப்படியோ தீப்பற்றிக் கொண்டது; அவன் உயிருடன்   தப்பிப்  பிழைத்ததே தெய்வாதீனமாயிற்று.

‘இனி ஜாகீரை விட்டு ஓடி விடுவான்! அப்படியும் இல்லையென்றால் கட்டிக்கொண்டு போய் நாங்கள்   கண்காணாத இடத்தில் போட்டு விடுகிறோம்” என்று ஜனார்த்தனனுடைய ஆட்கள் பகிரங்கமாகப் பேசினார்கள்.

தன் காரியம் விரைவில் பலித்துவிடுமென்று இறுமாந்தான் ஜனார்த்தன ராவ். அன்றிரவு தன் ஜாகையின் மேல் பாடத்தில் உட்கார்ந்து உதயமாகிக் கொண்டிருந்த வால் நக்ஷத்திரத்தையே அடிக்கடி உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சரியம்! வால் நக்ஷத்திரத்திற்கும் இந்த ஜாகீரில் ஸிந்தியா வம்சத்திற்கும் எத்தனை ஒற்றுமை! ஒருமுறை அது வந்தால், ஒருவர் உலகை விட்டோ, ஜாகீரை விட்டோ ஓடும்படி இருக்கிறது! இரண்டாவது அவனே ஓடினான்; மூன்றாவது, ரங்கநாத ராவை அது அடித்து விரட்டப்போகிறது…! ஹஹ் ஹஹ் ஹ…”

திரும்பினான் ஜனார்த்தன ராவ் ஸிந்தியா. திடுக்கிட் டான். அவன் பின்னால் அவனுடைய தாயார் பவானி பாய் சந்தடி யின்றி வந்து நின்று கொண்டிருந்தாள்!

“அம்மா…! நீங்களா வந்தீர்கள்?”

“நான்தான்!”

“என்னைப் பார்க்கவா வந்தீர்கள்?”

“உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்! உன்னுடன் பேச வேண்டும்!”

“என்னைப் பார்க்க வரவே மாட்டீர்கள் என்று எண்ணிவிட்டேன், அம்மா!”

“உன்னைப் பார்ப்பதில்லை என்று தான் நானும் இதுவரை பிடிவாதமாக இருந்தேன்!” என்றாள் அவள்.

“நான் ஒரு குற்றமும் செய்யவில்லை அம்மா, அப்படி நீங்கள் செய்யும்படி!”

“நீ செய்துவிட்ட குற்றங்களுக்காக மட்டும் நான் அப்படிச் சொல்ல மாட்டேன். உன் தாயாகிய நான் அதெல்லாம் சிறுபிள்ளைத்தனம் என்று மன்னித்து விட்டேன், ஜனார்த்தனா!”

“இப்போது, நீங்கள் மன்னிக்க முடியாத குற்றமாக, ரங்கநாத ராவை விலகும்படி செய்கிறேனாக்கும்?”

 “ஆமாம். நீ அவன் பக்கத்திலும் போகக்கூடாது! அது என் இஷ்டம்!”

“அது நடக்காத காரியம், அம்மா! என் சொத்தை நான்

அனுபவிக்க வேண்டாமா? அதில் பிசகா? தடையா?”

 “இரண்டும் இல்லை; எனினும் ரங்கநாத ரால் தான் இந்த ஜாகீருக்குத் தலைவனாக இருக்க வேண்டும்”

“நான் ஒப்புக்கொள்ள முடியாது. அம்மா  நீங்கள் எடுத்து வளர்த்துவிட்டதற்காக என் உரிமை அவனுக்கு வந்து விடுமா?  தானாகக் கொடுப்பான் என்று   எதிர் பார்த்தேன்; அவகாசம் அளித்தேன். அவன் வழிக்கு  வரவில்லை. இப்போது நானாக எடுத்துக் கொள்கிறேன். என்னை நிறுத்த முடியாது! குறுக்கே நின்றால், பலா பலன்களை அவன் அனுபவிக்க வேண்டியது தான்” என்றான் ஜனார்த்தன ராவ்.

“பலாபலன்களை அனுபவிப்பது அவனுக்கு மட்டும் ஏற்பட்ட சட்டம் இல்லை, ஜனார்த்தனா! உனக்கும் அது உண்டு. நீ துஷ்டத்தனம் செய்துவிட்டு ஊரை விட்டு ஓடிய குற்றத்தை நான் குறிப்பிடவில்லை. அதைவிடப் பெரிய தொரு குற்றத்தை நான் இப்போது சொல்கிறேன். உன் தாய் என்கிற முறையில் அந்தக் குற்றத்தையும் இதுவரை மறைக்க முயன்றேன். நீ செல்லும் வழியைப் பார்த்தால் அது முடியாதென்று எனக்குத் தோன்றுகிறது. ஆகையாலேயே நான் வந்தேன்!”

அவன் கடகடவென்று சிரித்தான்; “நான் என்ன பாதகம் செய்துவிட்டேன், உங்களுக்குத் தெரிந்து…?”

பவானி பாய் தன் மகனை உறுத்துப் பார்த்தாள். “இங்கிருந்து ஓடின உனக்கு அடைக்கலம் கொடுத்தாள் பெண் குலத்தைச் சேர்ந்த ஒரு உத்தமி. அவள் வீட்டில் நீ இரண்டு மாதம் இருந்தாய். பிறகு அங்கிருந்தும் ஓடினாய்.

“ஆமாம், அம்மா! திரும்பி வந்தால் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்று தோன்றியது.     என்  பாதுகாப்புக்காக நான் ஓடினேன்…”

“அப்போது அந்த அபலையின் பாதுகாப்பைப் பற்றி சிந்திக்கவில்லை; அவள் நிலையை நீ உணரவில்லை. சென்ற மூன்றாவது நாள் நரஸிம்ம ராவ் ஹோல்கா ஹிருதயக் கோளாறினால் இறந்தார். அவருடைய ஜாகீ  தாயாதிகள் கைப்பற்றிக் கொண்டு,

பத்மாஸனியை அங்கிருந்து விரட்டினார்கள். அவள் நிற்க இடமின்றி தவித்துக் கடைசியில் இந்த ஊரில் ஒரு குடிசையில் வந்து  தங்கினாள்…”

“உம்ம்ம்…” என்றான் ஸிந்தியா.

“அவளை அகஸ்மாத்தாக நான் கண்டேன். அவள் நிலையைத் தெரிந்துகொண்டேன். உன்னைப் பற்றி எல்லாம் அவள் சொன்னாள். நீ அவளைக் கைவிட்டாய் அது மகாபாதகம்!”

“உம்ம்ம்…’

“அதன் பலாபலனை நீ அனுபவிக்கக் கூடாதென்று நான் முயன்றேன். அதற்காகவே அவள் என் கையில் கொடுத்த உன் பிள்ளையை எடுத்துக் கொண்டு வந்து வளர்த்தேன். அந்தப் பிள்ளைதான் ரங்கநாத ராவ். என்னிடம் பொறுப்பைக் கொடுத்தவுடன் தகப்பனார் சென்ற வழி அவள் போய்விட்டாள்.”

“நிஜமாகவா, அம்மா?”

“இரு ! உன் பாபம் உன்னை விடமாட்டேனென்கிறது. இன்று அந்தப் பிள்ளையையே வேரறுக்க நீ சதி செய்கிறாய். உன் பணத்தை அதற்காகச் செலவழிக்கிறாய்..நன்றாக நடந்துவரும் இந்த ஜாகீரை…உன் தகப்பனார் .. . செம்மையாக வைத்து விட்டுப் போன ஜாகீரை

 – பிளவு செய்யப் பார்க்கிறாய். உன் தகப்பனாருக்கும் பாதகம்; உன் பிள்ளைக்கும் பாதகம்; தெரிந்ததா?”

“நீங்கள் சொல்கிற விஷயம் ஒன்றும் எனக்குத் தெரியாது. அம்மா! பத்மாஸனியின் பிள்ளையா ரங்கநாத ராவ்?”

“உன் பிள்ளைதான் அவன்! அவனுக்கு நீயே எமனாக வரும்போது என்னால் சும்மா இருக்க முடியவில்லை. என் வைராக்கியத்தை விட்டு இங்கே வந்தேன்!”

பவானி பாய் வேகமாகத் திரும்பினாள். “அம்மா! சற்று நில்லுங்கள்…!” என்றான் ஜனார்த்தன ராவ் பரபரப்புடன்.

“நான் நின்று பேச அவசியமே இல்லை! நீ ஒரு குடும்பத்தைக் குலைக்கச் சென்றதாக முதல் குற்றம் உன் மீது சுமத்தினார்கள்; அதை நான் பொருட்படுத்தவில்லை. பத்மாஸனியின் வாழ்நாளைப் பாழ்படுத்தினதாக அறிந்தேன்; அப்போதும்கூட என் தாயுள்ளம் மன்னிக்கத் தயாராயிற்று. இன்று உன் பிள்ளையையே ஒழிக்க நீ சம்பாதித்த செல்வத்தைப் பிரயோகித்த பின் என் நெஞ்சு கேட்கவில்லை. அப்புறம் உன் இஷ்டப்படி செய்து கொள்!” என்றாள். கூறிவிட்டு, மளமளவென்று இறங்கிப் போய்விட்டாள்.

மறுநாள் இரவு மலைப் பாதையில் ஒரு குதிரை, ‘டடாக் டடாக்’ என்று ஜனார்த்தன ராவ் ஸிந்தியாவைச் சுமந்து கொண்டு ஊருக்கு வெளியே ஓடிற்று. வெகு தொலைவு சென்ற பின் அவன் திரும்பிப் பார்த்தான். நேற்று வரை

பிரகாசமாக இருந்த வால் நக்ஷத்திரம் இன்று மங்கு மறைந்து கொண்டிருந்தது. “அடடா! என்னை விரட்டு வதற்கல்லவா இது வந்திருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டு குதிரையை மேலும் வேகமாக முடுக்கி விட்டான்.

மல்லாரி ராவின் கட்டை விரல் ஆட்டம் நின்றது. ஒரு பெரிய சிமிட்டா பொடியை எடுத்து அவர் உறிஞ்சினார். “இப்போது என்ன சொல்கிறீர்கள்?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“நான் ஒன்றும் சொல்லவில்லை. என் மனைவிதான், ‘இத்தனை நேரமாக என்னதான் பேச்சு வேண்டியிருக்கிறதோ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்!” என்று எழுந்து வந்தேன்.

தேவன்/நடிகன் நாராயணன் – விருட்சம் நாளிதழ்

One Comment on “தேவன்/வால் நக்ஷத்திரம்”

Comments are closed.