
இடம் : ஹவாய் ஹானலூலு
எனக்கு வேலை போய்விட்டது. டிரம்ப்பின் ஆட்சியில் இதெல்லாம் எதிர்பார்த்தது தான் என்றாலும் ஊருக்குப் போனதும் நாலா பக்கங்களிலிருந்தும் வரும் கேள்விக் கணைகளிலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறேனோ? இப்போதெல்லாம் ஜாதகக் கட்டங்களை விட அமெரிக்க விசாவின் காலாவதியே திருமணங்களை நிச்சயிக்கிறது.
ஹவாய் விசிட் என் கனவு. இருக்கும் டாலர்களைக் கணக்கிட்டுப் பார்த்துக் கிளம்பி வந்தேன். படு சுமாரான ஹோட்டலில் தங்கினேன். கடற்கரையில் காலாற நடக்கும்போது தான் அவளை கவனித்தேன். அவள் உடையில் ஓராயிரம் ஒட்டு. ஒரு கண் மூடியிருந்தது! வலது கண்ணில் தெரிந்த கலக்கம் என்னைக் கலங்கடித்தது. வீடற்றவளா? இங்கும் இளம்பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? எந்த வல்லூறு இவளைச் சிதைத்தது?
நான் கொண்டுவந்த ஒரே ஜாக்கெட்டையும் பத்து டாலர்களையும் நீட்டினேன்.
என் விசா பிரச்சனை மறந்தே போனது. கடற்கரையில் படுத்துக் கிடந்த அழகிகளை ரசிக்கும் மன நிலையில்லை. நடந்தே அறைக்கு வந்து சேர்ந்தேன். போலீசில் சொல்லியிருக்க வேண்டுமோ?
இருபது நிமிடங்களில் ரிசப்ஷனிலிருந்து ஃபோன். கீழே வரச்சொன்னார்கள். சட்டென்று நினைவு வந்தது. ஜாக்கெட்டில் எனது அடையாள அட்டையை வைத்திருந்தேன்! இரக்கப்பட்டு தேவையில்லாமல் மாட்டிக் கொண்டேனா? படபடப்புடன் கீழே இறங்கினேன்.
இளவரசி போல் உடையணிந்த இளம்பெண் காத்திருந்தாள். “ஹேப்பி ஹேலோவின்!” சிரித்தாள். அவள் வலது கண் அவளை அடையாளம் காட்டியது. திகைத்தேன். “ஐ ஆம் ஜீன்! சிஈஓ ஆஃப்…”என்று நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பெயரைச் சொன்னாள். சிரித்துக் கொண்டே என் ஜாக்கெட்டையும் அடையாள அட்டையையும் நீட்டினாள்.

ஆஹா நல்ல செயலுக்கு நல்ல பலன் உறுதி
வித்யாசமான , காலத்துக்கு ஏற்ற களத்தில் அருமையான கதை. வாழ்த்துகள்
கதை வித்தியாசமாக ..கதைக்களமும் வித்தியாசமாக .. இரக்கத்திற்கு ஒரு மரியாதை மதிப்பு கிடைத்ததே மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது ..நல்ல கதை வாழ்த்துக்கள்
ஹா ஹா இப்படியும்.. 👍👍
ஹா ஹா இப்படியும்.. முடிவு
வேறு மாறு பட்ட சிந்தனை
நல்ல கற்பனை மா. சில சமயம் தர்ம சிந்தனைகள் நம்மை சாய்த்து விடும். ஆனால் பெரும்பாலும் தர்மம் தலை காக்கும். இப்போ பாருங்க வேலை போகாது. தர்மம் காப்பாத்திடிச்சி.
அருமை வசந்தா. காலத்துக்கேற்ற கதை.
அதோடு அவன் காட்டிய இரக்கத்திற்கு கைமேல் பலன். இனி அவன் வேலையின்றி நாடு திரும்பத் தேவையில்லை.