
“சொல்லிவிட்டேன், சகுந்தலா! இன்னும் ஒரு தடவை உன் தம்பி என்னிடம் வாலாட்டினான் என்றால் பார்த்துக் கொள்! பிய்த்து எடுத்துவிடுவேன்… நாற்காலி யிலிருந்து எழுந்திருந்து விட்டு திரும்ப உட்காருகிறதற்குள் அதைப் பின்னால் இழுத்து விட்டிருக்கிறான். அத்தனை பேரும் கீழே விழுந்த என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்…” என்று உறுமினான் நாராயணன்.
| சகுந்தலா தன் கைக்குட்டையை எடுத்து வாயில் புதைத்துக் கொண்டு, கிணுகிணுவென்று மணியோசை செய்வதுபோல் சிரித்தாள், “போக்கிரிப் பயல் அப்படியா செய்தான்…? உங்களைப் பார்த்தாலே அவனுக்கு விளையாட வேணுமென்று தோன்றுகிறது போலிருக் கிறது…! பாலனை நீங்கள் ஏதானும் செய்து வைக்காதீர்கள்; முரட்டுப் பிள்ளை பதிலுக்கு ஒன்று கிடக்க ஒன்று செய்து வைக்கும்!” என்று எச்சரித்தாள்.
“உன் தம்பியாக இருக்கிறானே என்று இதோடு விட்டேன்; அவனைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை; என்னைக் கண்டாலும் அவனுக்குப் பிடிக்கவில்லை! நாங்கள் ஜன்ம சத்ருக்கள்! நாங்கள் ஜன்ம சத்ருக்கள்!” என்றான் நாராயணன்.
“ஒரு சின்னப் பிள்ளையின் காரியத்துக்கு இத்தனை அர்த்தம் நீங்கள் கண்டு பிடிப்பதும், வர்மம் வைத்துக் கொள்வதும் எனக்கும்தான் பிடிக்கவில்லை!” என்றாள்
சகுந்தலா.
“சரிதான் போ! தம்பிக்குப் பரிந்து கொண்டு வருகிறாய், தெரியவில்லையா?” என்று நாராயணன் கோபமாகச் சென்று விட்டான்.
சகுந்தலா அப்படியே சற்று நேரம் நின்று அவனைப் பார்த்து கொண்டிருந்து விட்டு ஒரு பெரு மூச்சுடன் அங்கிருந்து அகன்றாள்.
பட படப்பாகப் போய்க் கொண்டிருந்த நாராயணனைப் பார்த்து, “என்ன ஸார், நம்மை கவனிக்காமலே போகிறீர்களே! ஏதானும் கோபமோ?” என்று விசாரித்தார் கோதண்டம். கோதண்டம் கதைகள் எழுதுபவர்; நாராயணனுடன் ஏற்கெனவே மிகவும் சகஜமாகப் பழகுபவர்.
“ஆமாம், ஸார்! ஒரு சின்னப் பயல் என்ன விஷமம் செய்கிறான். அடக்குவார் ஆளுவார் இல்லாமல்; நாலு வாங்கு வாங்கினால்…”
“யாரைச் சொல்கிறீர்கள்?”
“அதுதான் அந்த வாண்டுப் பயல்! சகுந்தலாவின் தம்பியாம்! எனக்கும் சகுந்தலாவுக்குமே மனஸ்தாபம் செய்து வைத்து விடுவான் போலிருக்கிறது!”
“சேச்சே! பாலனை அப்படிச் சொல்லக்கூடாது! அவன் வயசுக்கு என்ன சூடிக்கையாக இருக்கிறான் என்கிறீர்கள்! சொல்வதற்கு முன் எப்படிப் பிடித்துக் கொண்டு, கொஞ்சம் அதிகமாகவே செய்து காட்டுகிறான்! வந்து நாலே நாளைக்குள் டைரக்டர் அவன் மீது உயிரை வைத்து விட்டார் என்றால்!”
‘சரிதான், போங்கள்! உங்களிடம் வந்து தான் சொன்னேனே!” என்று போய்விட்டான் நாராயணன்.
ஜகஜ்ஜோதி ஸ்டூடியோவில் தான் மேற்குறிப்பிட்ட சம்பாஷணைகள் நடந்தன. மேற்படி நாராயணன் அந்த ஸ்டூடியோவில் நிரந்தரமாக வேலையில் இருக்கும் ஒரு நடிகன். நல்ல முகவெட்டுள்ளவன்; இனிமையான அவனுடைய சுபாவமும், பிறருக்கு ஒத்தாசை செய்யும்.
ஸ்டூடியோவிலே அவனுக்குப் பல நண்பர்களை ஏற்படுத்தி இருந்தது
இன்முகமான நடத்தையும் நாராயணன் சொன்னான் என்றால் அந்தப் பேச்சைத் தட்டுகிற பேர் கிடையாது. அவ்வளவு மதிப்பு அவன்
பேச்சுக்கு.
அவனுடைய நாயகியாக வரவேண்டியவளும் அந்த ஸ்டூடியோவிலேயே இருந்தாள். சகுந்தலா என்ற அழகிய பெயரும், அழகிய மேனியும், அழகிய குணமும் பெற்றவள் அவள். நாராயணன் அவளை எத்தனை மரியாதையுடன் நடத்தினானோ அத்தனை விசுவாசத் துடனும், பக்தியுடனும் அவள் பழகினாள். பின்னொரு காலத்திலே மணம் செய்து கொண்டு தாங்கள் இவ்வாழ்க்கை இன்பமயமாக நடத்தப் போவதைப் பற்றி இருவரும் கனவு கண்டார்கள். ஸ்டூடியோவில் டைரக்டர் முதலாக அத்தனை சிப்பந்திகளும் இவர்கள் நல்ல தம்பதி என்பதை ஒப்புக் கொண்டு, முன் கூட்டியே தங்கள் ஆசியைத் தயாராக வைத்திருந்தார்கள்.
இந்த மாதிரியானதொரு சுபகரமான சூழ்நிலையில் தான் பாலன் என்ற பாலகன் வந்து தோன்றினான். நாராயணின் அபிப்பிராயப்படி குறுக்கே நின்றான்! அவன் சகுந்தலாவின் சொந்த சகோதரன் தான்; அவளுடைய பரிபூர்ண பிரியத்துக்குப் பாத்திரமானவன்; பாலன் இரண்டு வயதாக இருக்கும்போதே. தாயை இழந்து விட்டான். சகுந்தலா பாலனுக்குத் தாயாகவும், தமக்கையாகவும் இருந்து வந்திருக்கிறாள். குழந்தையை பிறர் ஒரு வார்த்தை
சொல்லிப் பொறுக்க மாட்டாள் அவள்.
விஷமக் கொடுக்கான பாலன் சதா சகுந்தலாவுக்கு வேலை வைத்துக் கொண்டுதான் இருந்தான், அபூர்வமாக ஸ்டூடியோவுக்கு வரும் அவன் மேல் டைரக்டர் ஜகதீசன் திருஷ்டி விழுந்தது. உடனே அவனுக்கு ஒரு படத்தில் பாகம் கொடுக்க அவர் முனைந்து விட்டார். அது முதல் அடிக்கடி வரத் தொடங்கிய பாலனுக்கு, நாராயணன் மீது தனது சேஷ்டைகளைச் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்து விட்டது. தினம் ஒரு முறையாவது அவன் கூட விளையாடி, அவன் கோபத்தை மூட்டி விட்டு அதை ரஸிக்கா விட்டால் அவனுக்குப் போது போவதில்லை. அதன் காரணமாகவே நாராயணனுக்கும், சகுந்தலாவுக்கும் இடையில் சிறு சிறு வாக்குவாதங்கள் எழத் தொடங்கின.
கோபமாகச் சென்ற நடிகள் நாராயணன் கூட்டமாக டைரக்டரும் இன்னும் சிலரும் நிற்கும் இடத்தைப் போய்ச் சேர்ந்தான். சேர்ந்தவுடனே, ‘ஏன் இங்கு வந்தோம்?’ என்று வருந்தினான். வட்டமாக நின்ற அவர்களின் நடுவில் நின்று பாலன் நடித்துப் பேசிக் காட்டிக் கொண்டிருந்தான். ‘சபாஷ்! சபாஷ்!’ என்று அவ்வளவு பேரும் பாராட்டிக் கைகொட்டி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கதையில் ஒரு நல்ல சந்தர்ப்பம். இளங் காதலர்கள் இருவர் ஊடல் கொண்டிருந்து, கடைசியில் ஒரு சிறு பையன் அவர்களிடையே சமாதானம் செய்து வைக்கும் கட்டம். பாலன் டைரக்டர் சொல்லிக் கொடுத்ததற்கும் ஒரு படி மேலாகவே நடித்துக் காட்டினான். அவன் தனது கண்களைப் பலமுறை திறந்து திறந்து மூடி, காதலர்களை ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்து, “எங்கே! இப்போது சிரித்துக் கொள்ளுங்கள். பார்க்கலாம்!” என்று குற்றமற்ற மழலை மொழியில் சொல்லிக் காட்டியது அபூர்வமான
காட்சியாகத்தான் இருந்தது.
“பேஷ்! பேஷ்டா!” என்று டைரக்டர் அந்தப் பையன் முதுகில் தட்டும்போது, எதிர்ப்புறமாக அங்கேயே சகுந்தலாவும் வந்து சேர்ந்தாள். தன்னுடைய தம்பிக்கு இம்மாதிரி பாராட்டுக் கிடைத்ததில் அவள் பெருமை ஆனந்த பாஷ்பத்திலும், துடிக்கும் அதரங்களிலும்
வெளியாயிற்று.
“நம்ம பாலன் ஸ்டூடியோவில் அவ்வளவு பேருக்கும் சிநேகிதன் ஆகிவிட்டான், ஸார்!” என்று யாரோ ஒருவர் சொன்னார் அங்கே.
“பாலனுடன் சண்டை போட்டுக் கொள்ள யாருக்குத் தான் மனது வரும்!” என்றார் டைரக்டர்.
“என்ன பாலன்! உன்னைப் பிடிக்காதவர்கள் கூட உண்டா?” என்று மற்றொருவர் கேட்டார்.
பாலன் அங்கிருந்தவர்களை ஒவ்வொருவராகப் பார்த்தான். அவன் திருஷ்டி நாராயணனிடம் வந்ததும் சிறிது நேரத்துக்குத் தயங்கியது. எல்லாரும் அவனையே கவனித்தார்கள். யாருமே எதிர்பார்க்காக ஒரு காரியத்தை அவன் செய்தான்.
விடுவிடென்று நாராயணனுக்கு முன்னால் போய் நின்று, “ஸார்! உங்களை நான் அனாவசியமாகச் சிரமப் படுத்தியிருக்கிறேன்; வேண்டுமென்றே துன்பப் படுத்தியிருக்கிறேன்; நடந்ததை எல்லாம் நீங்கள் மறந்து மன்னிக்க வேண்டும். மன்னித்ததற்கு அறிகுறியாக நான் கொடுக்கும், ‘ட்ரிங்’ கைச் சாப்பிட வேண்டும்” என்று விநயமாக வேண்டினான்.
அப்போது அவன் முகத்தில் இருந்த விநய பாவம் அவ்வளவு பேரையும் பிராமிக்க வைத்தது. தாராயணணும் அசந்து போய் ஒப்புக்கொண்டது போல் நிற்கவே, ஒரே ஓட்டமாக ஓடி இரண்டே நிமிடத்தில் ஒரு கண்ணாடி டம்ளருடன் திரும்பி, “இதைச் சாப்பிடுங்கள்!” என்றான்,
“அதுதான் சரி ! பேஷான பயல் பாலன்?” என்றார் ஜகதீசன்.
அடுத்த நிமிடம் அவ்வளவு பேரும் சிரித்தார்கள், கண்ணாடி டம்ளரிலிருந்த, ‘ட்ரி’ இல் ஒரு வாய் விட்டுக் கொண்ட நாராயணன் முகம் கோபத்தினால் கருத்தது. அவ்வளவையும் காறி உமிழ்ந்து விட்டு, டம்ளரையும் கீழே அடித்தான், அது சுக்கலாக உடைந்தது. ஆவேஷத்துடன் பாலனைப் பிடிக்கக் கையை வீசினான். பாலனா இருப்பான் அவன் கையில் பிடிபட பறந்து கொண்டிருந்தான். கண்ணாடி டம்ளரில் சோப்பைக் கரைத்த ஜலத்தைக் கொடுத்திருந்தான் பாலன்!
இதற்கும் டைாக்டர் ஜகதீசன் சிரித்தார்: “சபாஷ்! என்ன நடிப்பு நடித்து விட்டான் வாண்டுப்பயல்? நான்கூட நம்பி விட்டேன்! என்ன நாராயணன்! அவ்வளவு கோபம் வரும்படி அது என்ன, ‘டிரிங்க்’?” என்று கேட்டார்.
பதிலுக்குப் பல்லைக் கடித்து விட்டு, ஒன்றுமே பேசாமல் விடுவிடென்று போனான் நாராயணன்.
இதற்கு மறுநாள் பிற்பகல் இரண்டரை மணி. நாராயணன் ஸ்டூடியோவின் ஒரு மூலையில் சாத்தப் பட்டிருந்த கதவு ஒன்றின் பின்னால் ஒளிந்து யாருடைய வருகைக்கோ காத்துக் கொண்டிருந்தான். அரை மணிக்குப் பிறகு அவன் எதிர்பார்த்த ஆத்மா நிச்சிந்தியாக ஒரு பம்பரத்தில் கயிற்றைச் சுற்றிக்கொண்டு வந்தது. பாலன்தான்; வழக்கமாக அவன் இடைவேளையில்
அங்கேதான் விளையாடவும், பொழுது போக்கவும் வருவான்.
பதுங்கியிருக்கும் பூனை எலியின்மீது ஆக்ரோஷத்துடன் பாயும் பாய்ந்து அவனைப் பிடித்து, பளார் பளார் என்று முதுகில், ‘கோட்டை’ அறைகளாக இரண்டு வைத்தான். சிறிதும் எதிர்பாராத காரணத்தினாலும், அறைகள் விழுந்த வேகத்தினாலும் திணறிப் போன பாலன் செயலற்றுப் போய் விட்டான். மூன்றாவது அறையும் தொடர்ந்து விழுந்திருக்க வேண்டும்.
“நிறுத்துங்கள்! குழந்தையை அடிக்க நீங்கள் யார்?” என்று அதட்டும் குரல் கேட்டு நாராயணன் கையை அடக்கி நிமிர்ந்து பார்த்தால், மகர காளியின் கண்களைப் போல் கோபாக்னி ஜ்வலிக்க சகுந்தலா வந்து கொண்டிருந்தாள்.
“எதற்காகக் குழந்தையைப் போட்டு இப்படிக் கொலை செய்கிறதாம்? கேட்பாரற்று அனாதை யாயிருக்கிற பிள்ளை என்றா?” என்று கேட்டாள் ஆத்திரமாக.
“கெட்ட நாயைச் செருப்பால் அடிக்க வேணும்! எனக்கு சோப்பைக் கரைத்து, ‘ட்ரிங்க்’ கொண்டு வருகிறான்… ஹும்! நீ வரவில்லை என்றால் குறைந்தது அரை டஜன் கொடுத்திருப்பேன்!”
கொடுத்திருப்பீர்கள்…! “கொடுத்திருப்பீர்கள், கொடுத்திருந்தால் அப்புறம் தெரியும்.”
“என்ன ஆகியிருக்கும்?”
“ஒரு பச்சைக் குழந்தைக்கு எதிராக ஆண்மை பேசுகிறது ரொம்பப் பெருமை தான்! நாலு பேரிடம் சொல்லிப் பாருங்கள்!”
“இது பச்சைக் குழந்தையோ! குட்டி ராட்சதன்!
வேண்டிய மட்டும் பொறுத்துப் பார்த்தாச்சு; அப்புறம் தான்..”
“யோசனையாகக் காரியம் செய்து புகழ் வாங்கி விட்டீர்கள்…! நல்ல வேளை! உங்களைப் பற்றி என்ன வெல்லாம் நினைத்து விட்டேன் நான்! இப்போதல்லவா உள்ளே இருக்கிற சொரூபம் தெரிகிறது!”
“என்ன சொரூபம்?”
“நான் உங்களிடம் இந்தச் சின்னப் பிள்ளை போல் அகப்பட்டுக் கொண்டு, உங்கள் மனதுக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்துவிட்டால், உயிருக்கு மன்றாட வேண்டித்தான் வரும்…”
“பெரிய ஞானோதயம்! அதற்காக இனி என்ன செய்யப் போகிறாய்?”
“நானும் என் தம்பியும் உங்கள் பக்கத்தில் வராமல், முகத்தில் விழிக்காமல் பிழைத்துக் கொள்ள வேண்டியது; எங்களால் அப்படி இருக்கவும் முடியும்!”
நாராயணனுக்கும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. “ரொம்ப நல்லதாகப் போயிற்று. மடியில் தேளைக் கட்டிக் கொண்டதுபோல், உன்னுடன் இதையும் வைத்துக் கொண்டு யார் திண்டாடுவது ?” என்றான்.
சகுந்தலா அவனை வெட்டுகிறாப் போல் பார்த்தாள். பிறகு தன் தம்பியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.
“அவன் கெட்டுப் போவது பூராவும் உன்னால் தான்!” என்று நாராயணன் சொன்னதைக் காதில் வாங்காமலேயே
அங்கிருந்து போய்விட்டாள்.
நாராயணனுக்கும், சகுந்தலாவுக்கும் இடையே நடந்த இந்த மனஸ்தாபம் பற்றி ஸ்டூடியோவில் விவரமாக அறிந்தவர்கள் யாருமில்லை. ஏதோ விஷயம் உண்டு என்று மாத்திரம் சந்தேகப்பட்டார்கள்; காதலர்கள் ஊடல் பற்றிப் பரிச்சயம் உள்ளவர்கள் ஆகையால் ஒரு வாரத்திற்கு மேல் தாங்காது என்றும் பேசாமல் இருந்து விட்டார்கள்.
சுரத்தின்றி நாராயணன் அலைந்தான். தன் செய்கையில் பூரா நியாயமும் இருப்பதாகவும், சகுந்தலா பரிந்து பேசியது அபத்தம் என்றும் அவன் தீர்மானமாக எண்ணிக் கொண்டிருந்தான்.
“என்ன, இரண்டு மூன்று நாளாகவே, ‘ஒரு மாதிரியாக இருக்கிறீர்களே!” என்று கேட்பவர்களின் உபத்திரவம் தாங்காமல் தனிமையை நாடினான். தனிமையில் இருக்கும் போதும் சகுந்தலாவின் நினைப்பு வந்து நின்றது. தலைகுனிந்து சிந்தனையில் ஆழ்ந்து போனான்.
அப்படி அவன் உட்கார்ந்திருக்கிற போதுதான், “ஸார்!” என்ற சிறிய குரல் கேட்டுத் திடுக்கிட்டான். எதிரில் வந்து நின்றான் பாலன்.
“உங்களிடம் ஒன்று கேட்கலாம் என்று வந்தேன், ஸார்! நீங்கள் கேட்பதானால்…” என்று ஆரம்பித்தான் அவன்.
”நீ போ! இங்கே நிற்காதே! என்ன போக்கிரித்தனம் செய்து வேஷம் போட்டுக்கொண்டு வருகிறாய், மறுபடி?”
“இல்லை, ஸார்! நிஜம் சொல்லிக் கொண்டு வருகிறேன். உங்களுக்கும், அக்காவுக்கும் சண்டை உண்டாக்கினவன் நான் என்று எனக்குத் தெரியும்… எப்படியாவது சிநேகம் செய்து வைக்கவேண்டும் என்று தான் பார்க்கிறேன்.”
‘நீ ஒன்றும் பண்ண வேண்டாம். மேலும், என்னைப் பயித்தியக்காரனாக்கப் பார்க்கிறாயோ, குரங்கு?”
“இல்லவே இல்லை ஸார்! உங்களுக்கு நான் சொல்கிற படி கேட்க இஷ்டமானால் அப்படிச் செய்யுங்கள்; இல்லாவிட்டால் வேண்டாம்!”
நாராயணன், ‘சொல்’ என்றும் சொல்லவில்லை; ‘வேண்டாம்’ என்றும் சொல்லவில்லை. கேட்க மட்டும் தயார் ஆனான். பாலன் வெளியிட்ட, ‘பிளா’னும் மிக எளிதானது தான்.
அன்று மாலையில் ஐந்து மணிக்கு அவனுக்கு, ‘ஸெட்’ தயாராகிறது. அந்த சமயம் பார்த்து அவன் குறிப்பிட்ட ஒரு மூலையில் உள்ள சிறு கட்டடத்தின் மாடியில் போய்ப் படுத்துக் கொண்டு உறங்கி விட்டதுபோல் பாசாங்கு செய்வான். எல்லாரும் அவன் இல்லாத இடமெல்லாம் தேட, சகுந்தலா தனியாகத் தவிப்பாள். நாராயணனுக்கு மட்டும் ஏற்கெனவே அவன் ஒளிந்திருக்கும் இடம் தெரியுமாகையால், கடைசி நிமிஷத்தில் வந்து அவனை அழைத்துப் போக வேண்டியது. அதிலிருந்து நாரா யணனும், சகுந்தலாவும் சிநேகமாகி விடலாம்.
”அடேய்! இதிலும் ஏதாவது குறும்புத்தனம் செய்தாயோ, உன்னை லேசில் விடமாட்டேன்!”
“நீங்கள் பாருங்களேன்… இது பலித்தால் எனக்கு நீங்கள் ஒரு பரிசு கொடுக்க வேண்டும். கொடுக்கவிட்டால் உங்களை லேசில் விடமாட்டேன்!” என்றான்.
நாராயணன் எதிர்பார்த்தபடி சரியாக நாலு மணிக்கு, ‘பாலனைக் காணோம்’ என்ற பேச்சு மெள்ள மெள்ள ஆரம்பித்தது. சிலர் தேட ஆரம்பித்தார்கள். நாலரை
மணிக்கு யாரைப் பார்த்தாலும், “பாலன் எங்கேயாவது இருக்கிறானோ?’ என்று கேட்டுக் கொண்டு சுற்றினார்கள். எல்லாரும் ஒருமுகமாக அவனைக் காணோம் என்றே
சொன்னார்கள்.
“மிஸ்டர் நாராயணன்! பாலனைக் கண்டீர்களா?” என்று விசாரித்தார் டைரக்டர்.
“எங்கேயானும் திரிந்து கொண்டிருப்பான்… நான் அந்தப் பயலுடன் பேசுகிறதுகூட இல்லையே!”
“பாருங்கள், ஸார்… ! காணோமென்றால் கவலையாக இருக்கிறதே!”
அரை மனதுடன் புறப்படுபவன்போல் நாராயணன் அசைந்து கொடுத்தான். இதற்குள் நாலாபுறத்திலும் பாலனைப் பலர் தேட ஆரம்பித்திருந்தார்கள்.
நாராயணன் குறிப்பிட்ட கட்டடத்தை நோக்கிச் சென்றடைந்த போது, அங்கே யாரும் வரவில்லை என்பதை ஊகித்தான். ஸ்டூடியோவில் உபயோகித்ததும் உபயோகமற்றதுமான, பண்டங்களை அங்கே கொண்டு தள்ளி இருந்தார்கள். தூசும் தும்பட்டையுமாக இருந்தது. நாராயணன் நெருங்கின போது, மேல் வராந்தா ஜன்னல் ஒன்றிலிருந்து புகை வருவது தெரிந்தது. அதன் வாசற் படியை அடைவதற்குள் குப்பென்று பெரும் புகை வந்தது.
“இதென்ன விளையாட்டு!” என்று நாலு எட்டில் மாடியை அடைந்தான். வராந்தாவைத் தாண்டித் தான் குறிப்பிட்ட அறைக்குச் செல்ல வேண்டும். வழியில் இருந்த மரக் குப்பைகள் கனலில் கருகிக் கொண்டு, புகைப் படலத்தைக் கிளப்ப, வழி மறைந்து போயிருந்தது!
நாராயணனுக்கு வர்மம் மறைந்து விட்டது;
வைராக்கியம் வந்து விட்டது! குழந்தை அகப்பட்டுக் கொண்டிருக்கிறான்! அவனைக் காப்பாற்ற வேண்டும். அவ்வளவே நினைப்பு! உள்ளே ஓடும்போதே .
பல இடங்களில் சுரீர் சுரீர் என்று சுட்டது.
அறைக்குள் ளெல்லாம் சுடும் மணம் ஒன்று வீசியது. கண்ணைத் திறக்க முடியாதபடி புகைச்சல் அடித்தது. நீர் பொழியும் கண்களினால் நாராயணன் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டு திடுக்கிட்டான்.
பாலனை ஒரு கையால் அணைத்தவாறு சகுந்தலா நின்று கொண்டிருந்தாள்! இன்னொரு கையை, உதவி செய்ய யாருமில்லையா என்ற பாவத்தில் உயர்த்தி இருந்தாள்.
சகுந்தலா இங்கு வந்தது எப்படி? ஏன் வருகிறாள்? இப்போது அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க நேரம் இல்லை. நிமிஷத்திற்குள் நெருப்பு ஜ்வாலை அதிகமாகி விட்டது.
“வா, சகுந்தலா! முன்னாடி உன்னைக் கொண்டு விடுகிறேன்!”
“முன்னாடி பாலனைக் கொண்டு விடுங்கள் வெளியே!”
“சொன்னபடி கேள்! அவனை அடுத்தபடியாக…”
“நான் சொன்னபடி, நீங்கள்…’
“என்னுடன் வாக்குவாதமா செய்கிறாய் சகுந்தலா? புறப்படு!”
“நீங்கள் என்னுடன்… ”
கீழே இருந்து ஆரவாரம் மேலே கேட்டது. ‘அவுட் ஹௌஸி’ல் தீ யென்று யாரோ சொல்லி, அவ்வளவு பேரும் கீழே கூடி விட்டார்கள்
நாராயணன் முரட்டுக் காரியமாக ஒன்று செய்தான். குபீரென்று சகுந்தலாவின் மீது பாய்ந்து அவளை இறுகக் கட்டினான். அவள் கால் கைகளை உதறினாள், திமிறினாள்; அவன் லஷ்யம் செய்யாமல் நெருப்பிலே புகுந்து மாடிப் படிகளில் இறங்கினான்.
வெளியே இருவரும் வந்தபோது, மறுபடி அவள் நெருப்புக்குள் புகுந்து விடாமல் நாலு பேர் பிடித்துக் கொள்ள வேண்டி இருந்தது. நாராயணனை நோக்கிச் சபித்தாள் சகுந்தலா. அவனோ எதையுமே காதில் வாங்க வில்லை. ஒரு கணம் களைப்பாறுபவன் போல் நின்றான். மறுகணம் தலையைக் கோதி விட்டுக் கொண்டு பற்றியெறியும் வீட்டினுள் புகுந்து விட்டான். அவனை நிறுத்த யாருக்கும் தோன்றவில்லை.
ஆச்சர்யத்துடனும், பயத்துடனும் காத்திருந்த சகபாடிகள் எதிரே வெற்றி வீரனாக கரி படிந்த முகமும், பொசுங்கிய கேசமுமாக, பாலனைத் தாக்கிக் கொண்டு வெளியே வந்து விட்டான், நாராயணன்.
“பலே! பலே!” என்று கரகோஷம் வந்தது. சகுந்தலா ஆனந்தக் கூச்சலுடன் முன்னே ஓடி வந்தாள். ஏக காலத்தில் காதலர்கள் பாலனின் கன்னங்களில் இருபுறமும் முத்தமிட்டார்கள்.
என்ன சகுந்தலா, எனக்குத் தான் பாலன் ஒரு, ‘பிளான்’ சொல்லிக் கொடுத்து பரிசு ஒன்றும் கேட்டான். உன்னையும் கேட்டானா?” என்று கேட்டான் நாராயணன்.
“பரிசு கேட்கத்தான் கேட்டான். அதற்கு முன்பு, என்னை வந்து, ‘அவுட் ஹௌஸ்’ மாடியில் அவன் பின்னால் ஒளிந்திருக்கச் சொன்னான். நீங்கள் அவனைத் தேடிக் கொண்டு வருவீர்கள் என்றும் அப்போது அங்கேயே
சிநேகம் பண்ணி வைப்பதாகவும் சொன்னான்… ஆனால், எப்படி நெருப்புப் பற்றிக் கொண்டதென்றுதான் தெரியவில்லை” என்று சொன்னாள் அவள்.
அந்த மர்மம் யாருக்குமே தெரியாது. ஏனென்றால் விளையாட்டுப் பிள்ளையாக பாலன் கையோடு கொண்டு வந்து சுட்ட ஒரு, ‘எலெக்ட்ரிக்’ மத்தாப்பு தான் அந்தக் கைங்கரியத்தைச் செய்திருந்தது!
