சசிகலா விஸ்வநாதன் 6 கவிதைகள்

14-11 2025 அன்று அழகிய சிங்கரின் இணைய கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட என் 6 கவிதைகள்.

நான் ஓரு மனிதி
(1)
நான் வெறும் மனிதி
ஒரு கண்ணசைவு
ஓரு கையசைப்பு
முகத்தில் ஒரு சுளிப்பு
உதட்டின் ஒரு சுழிப்பு
போதும் போதும்
பஞ்சணைந்த தீ போல்
பலதும் ஏன் பகருகிறாய்
கிளை தாவும் கடுவனோ
சினம் கொண்டு
சீறும் அரவமோ
நான் அல்ல
வெறும் மனிதி
வெறுப்பையும் விருப்பையும்
அறிந்து கொள்ளவும்,
புரிநது நடக்கவும்.
படையிலா வீரன் போல்
பதுங்ககவும் தெரியும்
சிரம் மறைககும்
கூர்மம் போல்

🌞நவக்கோள் நாயகன்🌞
(2)
ஆதவன் ஒருவன்;
ஆதி தெய்வம்!
பூதலம் புகழும்
முதலோன்!
ஏகன்! அநேகன்!
தானியங்கி
தரணி இயக்கும்
தாமிர சூரியன்!
தாமரை மணாளன்!
செம்பரிதி செம்பியன்!
செழுமை,அவன் வழமை!
வளமை, அவன் முறைமை
உலகத்தின் கண்
அகிலத்தின் வாசி
அனலன் ;அவன் என்றும் கனன்றாலும்;
அவன் கனல் இன்றி
அவனிக்கு அவனின்றி
உயிர்ப்பும் இல்லை;
உயிரும் இல்லை;
உன்னதமும் இல்லை;
மானதமும் இல்லை;
மன்பதை சிறக்க,
மாண்புகழ்,மன்புகழ்
மன்னன்!நன்னன்!
நலம் பெருக்கும் நளன்!
வளம் விளைவிக்கும் வளவன்!
வளம் தரும் வளன்!
அவன் வெம்மை சேர்ந்த
தண் செங்கமலரடித்
தாள் அடி போற்றுவோம்; என்றும்.

அடைவதும் பெறுவதும்
(3)
உயர் பெற்றோர் வாய்க்க;
நற் கல்வியொடு
நற் புகழ் பெற்றேன்.

நல் இணையுடன்
இன்பமும், துன்பமும்;
சீர் செல்வமும்’
வறுமையும்; பெற்றேன்.

பெற்ற மக்கள்
பெரும் வாழ்வு, கண்டதையும் பெற்றேன்.

முதிர் அகவை எழுபத்தாறில், என்
உடல் நலம்
சற்றே ஊசலாடியும்.
அடுப்படி வேலையை,
அலுக்காமல் செய்கிறேன்.

இன்னும் பெற எனக்கு இனிதென்று
ஏதேனும் ஒன்றும் உண்டா; என்ன?

🌕உறக்கம்🌕
(4)
உறக்கம் நன்றாகவே வருகிறது; எனக்கு!

கரந்த வாழ்வு என்றும் எனக்கில்லை!

மறைக்க வேண்டியது எனக்கு எதுவுமில்லை!

மறக்க வேண்டியதை, மறந்தும் நினைப்பதில்லை!

உறக்கம் வேண்டி இமை மூட,

பிறக்கம் தரும் மாமணியின் வெம்மையின்

கனிவில் உறக்கம் வந்திறங்கியது;

இன்றும்,நேற்றும், என்றும்.

🌹மழலையர் தினம்🌹
(14 – 11-2025)
நேரு மாமா
(5)
‌நேரு மாமா
கனவில் வந்தார்

வெள்ளை உடையில்
துள்ளல் நடையில்
கள்ளமற்ற சிரிப்புடன்
கனவில் வந்தார்
நேரு மாமா

கையசைத்து
‘வருக’ என்றார்
பை நிறைய
புத்தகம் கொடுத்து
‘படி’ என்றார்

‘உரமாய் இரு.
ஊக்கமாய் உழை.
பிறன் நலம் பேண்
தேசம் நேசி’

மாண்போடு இருக்க
பண்போடு வாழ்
உண்மை பேசி
வண்மையாய் வாழ்

ஏமாற்றிப் பிழைக்காதே
ஏமாறவும் ஆகாது
பிறர் நலம் கருதி
தன் நலம் பேண்

இத்தனை அறிவுரை
உனக்கேன்?
சுருங்கச் சொல்லி
விளங்க வைப்பேன்.

வள்ளுவம் கல்.
பாரதி படி.
மூத்தோர் சொல் கேள்.
பகுத்தறிவு கொண்டு
புரிந்து செயலாற்ற;

பாரோர் உன்னை
‘எவர் இவள்?’ என்றே
திரும்பியே பார்ப்பர்.
விரும்பி உன்னைப் போற்றுவர்

என்றே சொல்லி
கன்னம் தட்டி;
ரோஜா ஒன்றை
கையில் அளித்தார்.

நினைவு போல்
கனவில் இன்று
நேரு மாமா
வந்தார்.

  நாங்கள் 
          (6)

கண்டால் கல்லெறிந்து
காயப்படுத்தும் ‘கனவான்’களை

அச்சப்படுத்தவே நாங்கள்
குரைக்கிறோம்.

மிச்சம் மீதியான
எச்சமாய் இருக்கும்

உணவுக்காகத்தான் அவர்கள் பின்னே ஒடி வருகிறோம்

எங்கள் குழாத்தில்
எல்லோரும் பசியுடன் தான் இருக்கிறோம்!

பசி இருக்க; பத்தும் பறக்க

புரியாமல்தான் குரைக்கிறோம்!
கூட்டமாகக் துரத்துகிறோம்

பசியை உங்களுக்கு வேறு எப்படி சொல்வது?