மாலா மாதவன்/கலவை மனம்

அகல்யா கை போன போக்கில் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தாள். அம்மா வீட்டுக்கு வந்ததில் இருந்து ஆழ்கடல் அமைதியாய் அவள் மனம் இருந்தது.
“என்னம்மா திடீர்னு! உன் வீட்டுக்காரர் கூட இல்லாம?” அம்மா பயத்துடன் கேட்ட போது கூட அவள் பதில் சொல்ல வில்லை.
“ஏங்க அகல்யா வந்து ஒரு மாதமாகப் போகுது. அறைக்குள்ளயே தான் இருக்கா. எப்பப் பார்த்தாலும் ஒரே மாதிரி ஏதோ ஒண்ணு அதை வரையறா. மன அழுத்தத்தில் இருக்காளோன்னு தோணுது.”
அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
புத்திசாலி அம்மா! என் மன அழுத்தம் வரை கண்டு பிடித்திருக்கிறாள்.
“அது போகட்டும் வாசுகி! இன்னிக்கு சமையலென்ன இப்படி கூட்டஞ்சோறும் அவியலுமா? தனித்தனியாப் பண்ணினா நிறைய நாள் வருமுல்ல. இப்படி ஒரே நாள்ல எல்லாத்தையும் சேர்த்துக் கொட்டினா எப்படி?” அப்பா வேறு விஷயத்துக்குத் தாவினார்.
“அவியலோ கூட்டாஞ்சோறோ அதுலயும் காய்கறி தானே இருக்கு. கலவையும் ருசி தானே? அதுக்குத் தனி குணமோ மணமோ இருக்கா என்ன? அதையதை அப்படியே ஏத்துக்கணும். அப்பத் தான் ருசிக்கும்.”
அம்மாவின் பதிலில் அகல்யாவுக்கு வாழ்க்கை பிடிபட்டது. கலவை மனிதனான தன் கணவனை மாடர்ன் ஆர்ட்டாக வரைந்து கொண்டிருந்த அவள் அதை தள்ளி வைத்து விட்டு தன் புகுந்த வீட்டுக்குக் கிளம்பினாள்.

4 Comments on “மாலா மாதவன்/கலவை மனம்”

Comments are closed.