மதுவந்தி/பாரதி 143

எத்தனை முறை வாழ்த்தினாலும்
எத்தனை முறை கொண்டாடினாலும்
சொல்லவும் போற்றவும்
உளம் பெருமிதம் கொள்கிறது,
அம்மாவைப் பாடினாலும்
பாரதி, உன்னைப் பாடினாலும்!!!

இத்தனை சிறிய வயதில்
எத்தனை சாதனைகள் செய்து
வழி காட்டியுள்ளாய் பாரதி நீ!!!
பாரதிக்கு முன், பாரதிக்குப் பின்
எனவே தமிழ் உனக்குப்பின்
சொல்லப்பட வேண்டும்.

சிந்தனை, சொல்,செயல்
மூன்றும் ஒன்றாய்
தமிழ், தேசியம்,தெய்வீகம் என
மூன்று தூண்களில் மேலேறி
நீ பறக்கவிட்ட கொடி
பட்டொளி வீசி இன்னும் பறக்கிறது.

எளிமை, தெளிவு, புதுமை என
மந்திரம் போல் சொல்லின்பம்
கொண்ட படைப்புகள் தந்து
தமிழ், தமிழர், இந்தியாவென
அனைத்தையும் மேன்மையுறச் செய்தாய்!

வருடங்கள் கூடுவது போல
உன் படைப்புகளின் மேன்மை பற்றி
எங்கள் ஞானமும் கூடுது.
புதிய புதிய தகவல்கள்
உன் படைப்புகள் பற்றி
இன்று வரை தேடித் தேடிக்
கண்டெடுக்கப்படுகின்றன.

உன் கவிதை மகா சமுத்திரமே
இன்னும் அனுபவிக்கப்பட
காத்திருக்கும் போது,
உன் வசனம், கதைகள்,
பத்திரிகைக் கட்டுரைகள் என
அறிய வேண்டிய சமுத்திரங்களை
நினைத்துப் பிரமிப்பின்
உச்சியில் நாங்கள்.

இன்னுமொரு பிறந்த தினம்
இன்னுமொரு வாய்ப்பு
பாரதி உன்னைக்
கொண்டாடிக் கூத்தாட!!!!.
. 11.12.2025.

அதிரன்/நான் – பாரதியார் கவிதை – விருட்சம் நாளிதழ்