
- தூது நடந்த தெரு
சிதம்பரமும் திருவாரூரும் நமது தமிழ்நாட்டின் சரித்திரங் களுக்கு வேண்டிய மிக முக்கியமான கல்வெட்டுச் சாசனங்களைக் காப்பாற்றி வந்திருக்கின்றன. சோழ மன்னன் ராஜராஜன் காலத்திலிருந்து பல அரசர்கள் ஆட்சியில் அவ்வப்போது நிகழ்ந்த சில தருமங்கள், கட்டளைகள், வழக்குகள், தீர்ப்புக்கள், ஆணைகள் என்பன இந்தச் சாசனங்களில் அழியாத கல்லெழுத்துக்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் சிலவற்றைப் படித்தபின் சேக்கிழார் பெரியபுராணம் பாடிய காரணத்தைப் பற்றிச் சிந்திக்கச் செய்கிறது.
சேக்கிழார் மந்திரிப் பதவி வகித்தது அநபாயன் என்ற இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு. அந்த அரசன் சமண இலக்கியமாகிய சீவக சிந்தாமணியைப் போற்றியதைக் கண்ட சேக்கிழார் சைவ நாயன்மார்களது வரலாறுகளை எடுத்துச் சொல்லி சைவத்தின் சிறப்பை விளக்கியபின் அந்த வரலாறுகளைக் காப்பிய மாகப் பாடச் சொன்னான் என்பது கதை. உமாபதி சிவாசாரியார் எழுதிய சேக்கிழார் புராணத்தில் இந்தக் கதை ஆரம்பித்தது.
ஆனால் திருவாரூர் பூங்கோயிலிலுள்ள பல கல்வெட்டுக்களைக் கொஞ்சம் நுணுகி ஆராய்ந்து பார்த்தால் சில உண்மைகள் புலப்படும். அநபாயச் சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி செலுத்திய காலம் கி.பி. 1123 முதல் 1146 வரை. இவன் தந்தை பரகேசரிவர்மன் விக்கிரமசோழன் ஆட்சிக்காலம் கி.பி. 1118 முதல் 1133 வரை. தந்தையும் மகனும் 1123 முதல் 1133 வரை ஒன்றாயிருந்தே ஆட்சி செய்தார்கள் என்று புலப்படுகிறது. விக்கிரமசோழன் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டிலே, அதாவது கி.பி. 1122இல், திருவாரூர் கோயில் இரண்டாம் பிராகாரத்தின் வடக்குச் சுவரில் பொறித்துள்ள கல்வெட்டில் மனுநீதிச் சோழன் வரலாறு காணப்படுகிறது. சேக்கிழார் இதைத் தமது புராணத்தில் நகரச் சிறப்புக் கூறும்போது விவரிக்கிறார். அதே கல்வெட்டில் ‘தூது நடந்த தெரு’ என்ற
பெயரும் காணப்படுகிறது. சுந்தரமூர்த்திக்காக இறைவன் தூது நடந்த சம்பவம் பல ஆண்டுகளாகத் தெரிய வந்திருந்த விஷயம் என்பது காணப்படுகிறது. பூங்கோயில் ஆண்டு தோறும் ஐம்பத்தாறு புலனாகிறது. அநபாயச் சோழன் பெயரே பல கல்வெட்டுக்களில் திருவிழாக்களை நடத்துவதுபற்றி ஒரு கல்வெட்டிலிருக்கிறது. அநபாயனின் ஆட்சியின் ஏழாம் ஆண்டிலே அவன், “ஆளுடைய நம்பி சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் அவர் மனைவி பரவையாருக்கும், ஆளுடைய பிள்ளையார் என்ற திருஞான சம்பந்தருக்கும் வாக்யாதிபதி என்ற திருநாவுக்கரசருக்கும் ஆரூர் கோயிலில் சில தர்மங்களைச் சாசனம் செய்துள்ளான்” என்று ஒரு வடமொழிக் கல்வெட்டு கூறுகிறது. இந்தத் தர்மச் சொத்துக்களைத் தனக்குப் பின்வரும் அரசர்களும் காப்பாற்ற வேண்டுமென்று அந்தக் கல்வெட்டிலேயே ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுடைய நம்பியின் தாயார் இசைஞானியார் பிறந்த ‘லக்ஷ்மி ஆலய’த்தில் இந்தக் கல்வெட்டு பதிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறது. திரு-ஆர்-ஊர் என்பது லக்ஷ்மி ஆலயம் அல்லது கமலாலயம்.
இங்ஙனமாக அநபாயன் காலத்திலும் அவன் தந்தை விக்கிரம சோழன் காலத்திலும் நாயனார்களைப் பற்றிய கதைகள் வழிவழி நினைவிலும் வழிபாட்டிலும் வந்துகொண்டிருந்தன. பத்தாம் நூற்றாண்டிலேயே ராஜராஜ சோழன் பல கோயில்களில் தேவார நாயன்மார்களின் ‘திருப்பதியம்’ பாடவேண்டுமென்று கட்டளை பிறப்பித்திருந்தான். அதன்பின் ராஜேந்திர சோழன் காலத்தில் தேவார நாயன்மார்களோடு, மெய்ப்பொருள் நாயனார், சிறுத் தொண்ட நாயனார் முதலிய அடியார்களின் விக்கிரகங்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் வடித்து வைக்கப்பெற்றன. அதைத் தொடர்ந்து மற்றும் பல கோயில்களிலும் அறுபத்துமூன்று நாயனார்களில் சிலருடைய விக்கிரகங்கள் வழிபாட்டுக்குரியவையாக வைக்கப் பெற்றன. அநபாயச் சோழனின் பத்தாவது ஆட்சியாண்டில் நிறுவப்பட்ட ஒரு கல்வெட்டில் தேவாசிரிய மண்டபத்தில் கூடும் அந்தணர்களுக்கு, திருவாரூர் சுவாமியின் உபயோகிப்பதில் வரி விதிக்க வேண்டியதில்லை என்று சாசனம் கூறுகிறது. இந்தச் சூழ்நிலையில் அநபாயச் சோழன், தனது ஆட்சிக் காலத்து ஏழாம் ஆண்டிலேயே நாயனார் வழிபாட்டில் ஈடுபட்டவன், ‘சமண இலக்கியத்தில் ஈடுபட்டிருந்தான்” என்று சொல்வது நம்பத்தக்கதாயில்லை. சமண காவியமாகிய சீவகசிந்தாமணி போன்ற ஒரு சைவ காவியம் இயற்றும்படி சேக்கிழாரை அவன் ஊக்குவித் திருப்பான் என்று ஒருவேளை சொல்லலாம். இதுவே பொருத்தமா யிருக்கும். கம்பராமாயணத்தைப் பற்றிய கதையை அப்படிச் சொல்வதுண்டு. ஆனால் அது பெரியபுராணத்துக்குப் பின்னர்தான் எழுதப்பட்டது. (கம்பன்-9ஆம் நூற்றாண்டினன்)
திருவாரூரின் புராதனத் தன்மையைத் திருநாவுக்கரசு நாயனார் தமது தாண்டகங்களில் பல இடங்களிலே குறிப்பிடுகிறார். சுந்தர மூர்த்தி இங்குள்ள இறைவன் தமக்குத் தோழனாகிப் பரவை நாச்சியாரைத் தந்தான் என்று ஒரு தேவாரத்தில் வெளிப்படை யாகவே சொல்கிறார்.
கிருஷ்ணதேவராயர் காலத்தில் திருவாரூரில் சில விரும்பத் தகாத காரியங்கள் நடைபெற்றன என்று தெரிகிறது. கோயில் அர்ச்சகர்கள் தமிழ் நாட்டிலே சில சில தலங்களைச் சேர்ந்த குடும்பங்களின் வாரிசுகளாயிருக்கக் காணலாம். ஒரு காலத்தில் திருவாரூரில் திருவீழிமிழலை அந்தணர்கள் பூசை விஷயங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவிழா ஒழுங்காக நடத்தாமலே அங்குள்ள பட்டர்கள் சிலர் கொடியிறக்க எத்தனிக்க, அதனைக் கண்டு தத்துவப் பிரகாசர் என்ற சைவப் புலவர் மனஞ்சகியாமல், கிருஷ்ணதேவராயருக்கு முறையிட்டாராம். அவர் பாடிய பாடல்கள் சில கிடைத்துள்ளன.
மருவு புகழ்க் கிருட்ண மகராச ராணை
அரிய படமலையா ராணை- திருவாரூர்
பாகற் கொடியறுப்பார் பாதந் திருவாணை
தியாகக் கொடியிறக்காதே.
(தியாகராஜருடைய உற்சவங்களிலே பாகற் கொடி யறுத்தல் அல்லது பாகல் வேட்டை என்ற விழாவும் ஒன்று கிருஷ்ணதேவராயருக்கு புலவர் தத்துவப் பிரகாசர் உடனே
விண்ணப்பித்தார்:
ஊழித்துலுக்கல்ல ஒட்டியான் தானுமல்ல
வீழித்துலுக்கு வந்து மேலிட்டே- ஆழி
சிறந்ததிரு வாரூர்த் தியாகருடைப் பூசை
இறந்ததே கிருட்டிண ராயா
(ஊழித்துலுக்கு- முகமதியர்; ஒட்டியான் வீழித்துலுக்கு – திருவீழிமிழலைப் பிராமணர்,)
கிருஷ்ணதேவராயர் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு உடனே விசாரணை செய்து திருவீழிமிழலையாரை அங்கிருந்து அகற்றி விட்டார். இங்ஙனம் நடவடிக்கை எடுத்தபின் தத்துவப் பிரகாசர் பாடினார்.
உண்ட வயிற்றி லுமிக்காந்த லிட்டதே
தொண்டரே வீழித் துலுக்கரே- பண்டெல்லாம்
அப்பம் அவல் என்று அதிரசமும் தோசைகளும்
கப்புவது போச்சே கவிழ்ந்து.
பின்னொருமுறை அறுபத்து மூவர் விக்கிரகங்களில் இரண்டை நாகராச நம்பி என்ற அர்ச்சகரோ அல்லது அதிகாரியோ வெட்டி யுருக்கியதைத் தத்துவப் பிரகாசர் அறிந்து கிருஷ்ணதேவராயருக்கு
அறிவித்தார்:
முன்னாளறுபத்து மூவர் இருந்தார் அவரில்
இந்நாளிரண்டுபேர் ஏகினர்- கன்னான்
நருக்குகின்றான் விற்றுவிட்ட நாகரச நம்பி
இருக்கின்றான் கிருட்டிண ராயா!
பழைய பஞ்சலோகப் படிமங்கள் இப்படி அந்தக் காலத்திலேயே திருட்டுப் போனவைதான்!
திருவாரூரில் சுந்தரமூர்த்தியைப் பின்பற்றி வந்த சமயத்தில் இப்படிப் பல ருசிகரமான செய்திகள் கிடைத்தன. சுந்தரமூர்த்தி இங்கு சில நாள் தமது காதலி பரவை நாச்சியாருடன் தங்கியிருக்க விட்டு நாம் புறப்படுவோம். அவரது அடுத்த யாத்திரையில் மீண்டும் சந்திப்போம். இதற்கிடையில், சீர்காழியில் நமது குழந்தை நாயனார் ஞானசம்பந்தரைச் சந்தித்து, அவருடன் பல தலங்களுக்கு யாத்திரை செய்ய வேண்டும். சேக்கிழார் நமக்கு வழிகாட்டுவார். அங்கங்கே மற்றும் பல நாயன்மார்களையும் சந்திப்போம். பின்னர் அப்பர் சுவாமிகளையும் சந்திக்க வேண்டும். ஆகையால் இப்போது திருவாரூரில் நண்பர் தக்ஷிணாமூர்த்திக்கும் வித்வான் இரத்தின தேசிகருக்கும் நான் நன்றி கூறிவிட்டுப் புறப்படுகிறேன். சீர்காழியில் சிட்டியும் வேணுவும் காத்திருப்பார்கள். வண்டியைத் தயார் செய்து தன் வழக்கமான அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் பதறாமல் நகருகிறார்! கொஞ்சம் அவசரமாகப் போகவேண்டும், எண்பது கிலோ மீட்டரைத் தொடுங்கள் என்றால் ராதாகிருஷ்ணன் அவர் கால் மிதிக்க மறுத்துவிடும். அது அவர் சுபாவம். வேகமே தெரியாத மனுஷன்!
