
“இந்தப்படமும் நீ வரைஞ்சதும் ஒண்ணா இல்லையே கிஷோர்” என்றார் கண் டாக்டர் கார்திகேயன்.
“இல்ல டாக்டர் எனக்கு அப்படித்தான் தெரியுது” என்றான் கிஷோர்.
கிஷோரின் அம்மா கொஞ்சம் கலவரமான முகத்துடன் “டாக்டர் கண்ணக் கொஞ்சம் நல்லா டெஸ்ட் பண்ணிப் பாருங்களேன். இவன் நல்லாத்தான் வரைஞ்சுட்டிருந்தான். எந்தப் படம் குடுத்தாலும் நல்லா வரைவான். கொஞ்சம் காமெடியா இருக்கும் பார்க்க. இப்ப இந்தப் படம்கூட பாருங்க இந்த அழகான நடிகையோட படம்.
இவன் நண்பர்கள் இவனை வரைஞ்சு தரச் சொல்லிருக்காங்க. இவன் பாருங்க எப்படி அலங்கோலம் பண்ணிருக்கான்னு. கேட்டா எனக்கு எப்படி தெரிஞ்சுதோ அப்படி வரைஞ்சேன்னு சொல்றான்.”
“நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க. நான் கூப்பிடறேன்.” என்றார்.
அம்மா வெளியே போனதும் கிஷோரிடம் கேட்டார், “மனுசங்க படம் வரையற போது மட்டும் இப்படி தெரியுதா? இல்ல பொருள், இயற்கைக் காட்சி எல்லாம் வரையும்போதும் இப்படித்தானா?”
“நான் ஒரு கேரிகேட்சர் ஆர்டிஸ்ட் டாக்டர். பெரும்பாலும் அதுலதான் நான் பயிற்சி எடுக்கறேன். இயல்பாவே நான் கொஞ்சம் கோணல் மாணலா நையாண்டிக்காக போடுவேன். ஆனா இப்பல்லாம் எனக்கு ஒருத்தருடைய படத்தைப் பார்த்தா அவங்களுடைய குழப்பமான மனசுதான் தெரியுது”.
“நானே இதை எப்படி சரி பண்ணறதுன்னு யோசிச்சிட்டிருந்தேன். இந்தப் படம் என்னை உங்ககிட்ட கூட்டிட்டு வந்துருச்சு.”
“ஹெல்ப் பண்ணுங்க. அடுத்தவங்க மனசை அதுவும் அழுக்குகளை, குழப்பங்களைப் பார்க்கறதுலேர்ந்து என்னைக் காப்பாத்துங்க”.
“சரி நான் சொல்ற டாக்டரைப் போய்ப் பாரு உங்க அம்மாவோட. உனக்கு கொஞ்சம் கௌன்சலிங்க் தேவைப்படுது.”
“நன்றி டாக்டர்”.
“ஒண்ணு புரிஞ்சுக்கோ அழகு உள்ளயும் முழுமையா இருக்காது, வெளியவும் முழுமையா இருக்காது. இருக்கறதை இருக்கறபடி பாரு. அது நல்லது.”
“சரி டாக்டர்”.
“அம்மாவைக் கூப்பிடு” என்று சொல்லி, அவளிடம் தன் நண்பரின் விலாசம் தந்து அழைத்துப் போக சொன்னார் டாக்டர்.
“ஒண்ணும் பயமில்லையே டாக்டர்” என்ற அம்மாவிடம், “அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா” என்று அனுப்பினார் டாக்டர்.
