
காரிடாரில் நடக்கும்போது பாதி திறந்திருந்த சன்னல் வழியாக அந்த உருவம் பார்த்து அதிர்ந்து போனேன். கயிற்றால் கட்டப்பட்டு விரிந்த கூந்தலுடன் கவிழ்ந்து கிடந்த அந்தப் பெண்ணின் முகம் பரிச்சயமானதாய்த் தெரிந்தது.
தீவிர யோசனையோடு பிரகாஷ் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் அந்த வீட்டினுள்ளே நுழைவதைப் பார்த்தேன். பிரகாஷ் கதவைத் திறந்தான். என் கண்கள் அந்த வீட்டிலேயே பதிந்திருந்ததைப் பார்த்தான். “உள்ள வா சொல்றேன்!” கைபிடித்து இழுத்தான்.
அவன் மனைவி சைந்தவி “வாங்கண்ணா, அண்ணி எப்படி இருக்காங்க? டெலிவரி டேட் எப்ப?”
குரலில் வழக்கமான உற்சாகம் இல்லை. இடுப்பில் இருந்த பான்விக்குட்டிகூட பயத்தில் உறைந்த மாதிரி இருந்தது.
மூடியிருந்த கதவையும் மீறி அந்தப் பெண்ணின் அலறல் கேட்டது. அதைத் தொடர்ந்து அழுகை. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் தேய்ந்தது.
“அவ யாருன்னு தெரியுதா? நம்ம காலேஜ் கனவுக்கன்னி தேஜஸ்வி. இரண்டு மாசம் முன்னதான் அந்தக் குடும்பம் இங்க குடி வந்தாங்க. இவளைப் போனவாரம் தான் பார்த்தேன். பிரசவத்துல அவ பெண் குழந்தை இறந்து போனதுல ஹிஸ்டீரியா வந்திருக்கு. நார்மலாத்தான் இருப்பா. குழந்தைங்களைப் பார்த்தா உடனே தூக்கிட்டுப் போயிடுவா. இரண்டு நாள் முன்ன ஒரு குழந்தையத் தூக்கிட்டுப்போய் ஷவர்ல குளிப்பாட்ட ஆரம்பிச்சுட்டா. கதவைப் பூட்டி வைச்சாலும் திறந்துட்டு வந்துடறா. இன்னிக்கு பான்விக்குட்டியைத் தூக்க வந்தா. சைந்தவி அவகிட்டேருந்து குழந்தையைப் போராடிப் பிடுங்கிட்டா. அதுக்கப்புறம் அவ ஆர்ப்பாட்டம் அதிமாயிடுச்சு . மனநல மருத்துவமனைக்கு ஃபோன் பண்ணிட்டாங்க போல!”
தேஜஸ்வியின் துணிச்சலான முகம் நினைவுக்கு வந்தது. என் குழந்தை நல்லபடியாகப் பிறக்க வேண்டுமே என்ற பிரார்த்தனையும் வந்தது.

மனம் நெகிழ்வான கதை அருமை
நெகிழ்ச்சி
நெகிழ வைக்கும் கதை, சூப்பர்
அந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கக் கற்பனைக் குதிரை ஜோரா ஒரு ரவுண்ட் ஓடியிருக்கு. பொருத்தமான, அருமையான கற்பனை. அழகா எழுதியிருக்கீங்க.