வளவ. துரையன்/ஆண்டாள் அருளிச் செய்ததிருப்பாவை – பாசுரம் 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று(ம்) நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ(டு) ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கருத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்(று) அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் (4
)

பொருள்

கண்ணனின் நிறத்தை ஒத்த கரு மேகமே! உன்னிடம் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூடத் தேக்கிவைத்துக் கொள்ளாதே. கடல்நீர் முழுவதையும் உறிஞ்சி மேலே எடுத்துக்கொண்டு பிரபஞ்சத்தின் மறைவுக்குக் காரணமான பரமாத்மனின் வண்ணத்தைப்போல அடர்ந்த கருப்பு நிறத்தை எய்துவாயாக! பத்மநாபனின் வலிமையான தோள்களில் உள்ள ஒளிவீசும் சக்கரத்தைப் போல மின்னல் ஒளிவீசட்டும்; அவன் கையில் உள்ள வலம்புரிச் சங்கு ஒலிப்பது போல இடி ஒலியெழுப்பட்டும்; பகவானது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து இடைவிடாமல் பொழியும் அம்பு மழையைப் போல நீ மழை பொழிவாயாக! அந்த மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக!

அருஞ்சொற்பொருள்

ஆழி – கடல்
ஆழி மழைக்கண்ணன் – கடல் போல் விரிந்து பரந்து உலகு முழுதும் பொழியும் மழைக்கு அதிபதியாகிய வருணதேவன்
கை – கொடை
கைகரவேல் – கொடுக்கப்பட வேண்டிய பொருளை (மழை நீரை) ஒளித்து வைக்காதே
புக்கு – நுழைந்து
முகந்து கொடு – முகந்து கொண்டு
ஆர்த்து ஏறி – ஆர்ப்பரித்த வண்ணம் உயரே சென்று
ஊழி முதல்வன் – பிரபஞ்ச முடிவு காலத்துக்கு (பிரளயம், ஊழி) அதிபதியாகிய பரம்பொருள்
பாழி அம் தோள் – விசாலமான அழகிய தோள்கள்
ஆழி போல் மின்னி – சுதர்சன சக்கரத்தைப் போல் சுழன்றும், ஒளிவீசியும்
வலம்புரி – மகாவிஷ்ணு கையில் தரித்திருக்கும் சங்கு
சார்ங்கம் – மகாவிஷ்ணு தரித்திருக்கும் வில்
தாழாதே – தாமதியாமல்
மழைக் கண்ணா என்பதை மழைக்கு அண்ணா என்றும் பதம் பிரிக்கலாம். மழைக்கு அண்ணன், அண்ணாவி, தலைவன் என்ற பொருள் கிடைக்கும்.
வாழ உலகினில் பெய்திடாய் – ஜீவன் உடல் தரித்திருக்கிறான். உடலுக்கு ஆதாரம் உணவு. உணவுக்கு ஆதாரம் நீர். எனவே, பூவுலகில் ஜீவர்கள் வாழ மழை இன்றியமையாதது.

r
மொழி அழகு

தமிழின் உன்னதங்களில் ஒன்று ழகரம். அதை இந்தப் பாசுரத்தில் மிக லாவகமாகக் கையாண்டிருக்கிறாள் ஆண்டாள். மழை நீர் வழுக்கிக் கொண்டு பாய்ந்து போவது போன்ற ஓசை நயத்தை இந்த ழகரம் தருகிறது. ஆர்த்து ஏறி, ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, சார்ங்கம் உதைத்த சரமழை ஆகியவை ஒவ்வொன்றும் மழையின்போது ஏற்படும் பொழிவு, மின்னல், இடி முதலிய ஓசைகளுடன் ஒத்துப் போவது நோக்கத்தக்கது.
இந்தப் பாசுரத்தைப் படிக்கும்போது இடி மின்னலுடன் கூடிய பெருமழைக் காட்சி நம் கண் முன்னே விரிகிறது.

திருவெம்பாவை பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.

பொருள்: ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண், “”அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்றாள். எழுப்ப வந்தவர் களோ, “”அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்தனர்.
விளக்கம்: இறைவனை அடைய “நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட வேண்டும். அதை விட்டுவிட்டு, “அவன் என்ன செய்கிறான், இவன் என்ன செய்கிறான்? அவனைப் போலவே உண்டியலில் லட்சம் ரூபாய் போட்டால் கடவுளை அடைந்து விடலாமா?இவனைப் போல் தியானத்தால் அடைந்து விடலாமா? என்று யோசனை செய்து கொண்டிருப்பதால் எந்தப் பலனுமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனித் தன்மையை வளர்த்துக் கொண்டு இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

வளவ.துரையன் – விருட்சம் நாளிதழ்

One Comment on “வளவ. துரையன்/ஆண்டாள் அருளிச் செய்ததிருப்பாவை – பாசுரம் 4”

Comments are closed.