
இன்றைய (19.12.2025) இணைய வழிக் கவியரங்கில் வாசித்த கவிதை.1
மழைபெய்து கொண்டிருக்கும் போதெல்லாம்
உள்ளிருக்கும் சின்னப் பெண்
துள்ளலுடன்
வெளியில் வந்து விடுகிறாள்
முழுதுமாய் ஆடைகள் நனைய
பாதகொலுசுகள் மண் அப்பிக்கொள்ள
முகமெங்கும் பூத்துக் கிடக்கும் நீரின் துளிகளுடன்
இங்கும் அங்கும் அலைந்து
மழையின் மீதான பிரியத்தை
வெளிப்படுத்துகிறாள்
புறவெம்மையின் தாக்கத்தில்
காய்ந்து விடாமல்
அந்த ஏகாந்த ஈரத்தைத்
தக்க வைத்துக் கொண்டிருப்பதில்
பெரு மகிழ்ச்சி அடைகிறாள்
மனக்கண் வழியே வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருக்கும் வளர்ந்தவள்.
