
19-12-25 –இல் வாசித்த 4 கவிதைகளையும் அனுப்பி இருக்கிறேன்.
1.
உற்சாகம்
காலையில் எழுந்ததும் மனைவி
காப்பி இல்லையென்றாள்.
காப்பிப்பொடி தீர்ந்துவிட்டதாம்.
எங்கே வரும் உற்சாகம்?
காய்கறிக்காரி வந்தார்
காய்கறிகள் எல்லாமும்
கால்கிலோ இருபது ரூபாய்
எங்கே வரும் உற்சாகம்?
செய்தித்தாள் விழுந்தது
சேர்த்தெடுத்துப் படித்தேன்
முதல் பக்கம் நகைக் கொள்ளை
இரண்டாம் பக்கமோ
இளஞ்சிறுமி வன்புணர்வு
மூன்றாம் பக்கம்
மூன்று கொலைகள்.
எங்கே வரும் உற்சாகம்?
அஞ்சல்காரர் வந்தார்
ஆறேழு சிற்றிதழ்கள்
அழகாய் வந்தமர்நதன.
அவற்றைப் புரட்டினேன்
அனைத்துக் கவிதைகளும்
அடியேனுக்குப் புரியவில்லை.
எங்கே வரும் உற்சாகம்?
ஆனால்
இதோ இதோ இவற்றால் எல்லாம்
இங்கொரு கவிதை பிறந்ததே
மனத்தில் உற்சாகம்! உற்சாகம்!
முதல்கல்
2.
முதல் கல்லை எறியும்போதுதான்
சற்று அச்சமாக இருக்கும்
யாரேனும் பார்க்கிறார்களா
என்ற பதற்றமும் இருக்கும்.
பிறகு கண்கள்
தாமாக இமைப்பது போலப்
பழகிவிடுகிறோம்.
அடுத்த கல்லெறிதல்கள்
உற்சாகத்தையும் உள்ளே
ஒரு மகிழ்ச்சியையும் தருகின்றன.
அணை உடைந்துவரும்
அடர்வெள்ளம் போல
கல்லெறிதல் மிக வேகத்துடன்
பீறிட்டுக் கிளம்புகிறது.
ஏனெறிந்தாய் என்று கேட்க
எவருமே இல்லாத போது
தொற்றுநோய் போலத்
தொடர்கிறது.
செய்துகொண்டே இருக்கிறாய்
பின்னால் வரும்
கற்களைக் கவனிக்காமல்
யட்சி
3.
அந்தச் சுடுகாட்டுப் பாதையின்
வழியெங்கும் பிச்சிப்பூக்கள்
பூத்துச் சிரிக்கின்றன.
அங்கு அவை மட்டுமே
சிரிக்க இயலும்.
அருகிலுள்ள ஆலமரத்தடிதான்
கணக்குகள் தீர்த்துப்
பஞ்சாயத்து செய்யும் இடம்.
அரசு செலவில் அமைந்த
கொட்டகையைச் சுற்றிப்
பயணம் வந்தவரின் பாடைகள்;
ஆடு தின்ற மீதிப் பூக்கள்.
உள்ளே பல சாம்பல்கள்
எலும்புகள் ஏதுமில்லை
பாலுக்குப் போயின போலும்.
உடைந்து கிடந்த
பானையின் சில்லுகள்
உலக உண்மையைச்
சொல்லாமல் சொல்லின,
உண்மையாகவே அழுத
உள்ளங்களின் கண்ணீர்
உறைந்த தடம் தெரிகிறது.
எப்பொழுது காரியம் முடியும்
போகலாம் என்று
காத்திருக்கும் ஒரு சிலர்.
காலம் வரவேண்டுமே!
மரத்தின் மீதுள்ள யட்சி
அனைத்தையும்
பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறது.
4.
யட்சி
அந்தச் ச…
வெளிச்சம்
இருளைக்கண்டுதான்
இங்கே எல்லாரும்
அச்சப்படுவார்கள்.
ஆனால் எனக்கோ
அதிக வெளிச்சம்
தயக்கம் ஊட்டுகிறது.
இருளுக்கு வெளிச்சத்தைக்
கொடுப்பதைவிட
வெளிச்சத்துக்கு இருள்
தருவது அரிதான ஒன்று.
வெளிச்சத்தின் நிறம்
வெண்மை என்கிறார்கள்.
உற்றுப் பார்த்தால் அதன்
உள்ளே ஒளிந்திருக்கும்
எல்லாமும் தெரிய வரும்,
வெளிச்சம் என்பது
நமக்கு நாமே
ஏற்படுத்திக் கொள்ளும்
ஒரு போதை விளக்கு.
எப்பொழுதும் அது
அணைந்து விடலாம்.
எனவேதான்
வெளிச்சத்தைக் கண்டு
நான் அச்சமடைகிறேன்.
