
19/12/25
இணையக்கவியரங்கம்
கவிதை 1
அருளும் பொருளும்
மிக மிகச்சரி
பொருளில்லார்க்கு
இவ்வுலகில்லை
அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை
வள்ளுவர் வாய்ச்சொல்
பொய்யாக இருக்காது
பொருள் எம்மட்டு
நின் வசம்
கையிருப்பு அறிவிக்கும்
அருளின் இருப்பு
யாருமே அறியார்
அருள் என்பது அன்பு
ஈன் குழவி
அன்பு கனிந்தே அருள் வசமாகும்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
சொல்லேன் நீ
கனிந்த அன்பே அருள்
அருள் மட்டுமே
அவ்வுலகில் செலவாணியாகும்
பிறவன்று
அடித்துச் சொல்கிறது வள்ளுவம்
அவ்வுலகே பொய்என்கிறாய்
அன்பு பொய்யாகாது
அருளும் பொய்யாகாது.
19/12/25
இணையக்கவியரங்கம்
கவிதை 2
கவிதை 2
பெண்ணே நீ
கணவனை இழந்த
கைம்பெண் பட்ட இன்னல்கள்
சொல்லில் அடங்காது
உடன் கட்டை ஏற்றி
கணவன் சிதையில்
அவளைக் கொன்று விடுதல்
வழக்கமாக இருந்தது
கைம்பெண்ணாய் இருந்தவள் பட்ட துயரங்கள்
எழுதி எழுதி மாளாது
எல்லா கொடுமைக்கும்
மதபீடங்களின்
ஆசீர்வாதங்களுண்டு
தலையில் முடியோடு
கைம்பெண் பீடங்களைப்
பார்த்துவிட்டால்
பீடங்கள் தோஷம் பட்டுப் போவார்கள்
கைம்பெண் இறந்து போனால்
அவள் பிறப்புறுப்பில்
சாணம் பூசி சவத்தைச்
சுடுகாட்டுக்குத் தூக்கிப்
போவார்கள்
கணவனுக்கு முன்னே
சுமங்கலியாய் விடைபெற்றால் அவள்
பிறப்புறுப்பில்
மஞ்சள் பூசி
சுடுகாட்டுக்குத் தூக்கியப்
போவார்கள்
இன்றும் நாளையும்
இது அமலில் இருக்கத்தான் செய்கிறது
பெண் மத குருமார் ஆகவே முடியாது
எந்த மதமானாலும் சரியே
பிராமணன் பூணல்
போட்டுக்கொள்கிறான்
பூணல் போட்டுக் கொண்ட எல்லோரும்
பிராமணர்கள் இல்லை
பிராம்ணப்பெண்
பூணல் அணிவதில்லை
பின் எப்படி அவள் பிராமணத்தி
பார்ப்பனப் பெண் மணமான பின்னாலே
பிராமணத்தி ஆகிறாள்
அதுவரை அவள் யார்
பிராமணத்தி இல்லை
விடேன் அதோடு.
கவிதை 3
முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களில்
உறுதிமொழி எடுப்பது
காலை இறைவணக்கத்தோடு கட்டாயமாக.
இப்போது உறுதிமொழி ஏற்பு காணோம் எங்கும்
உறுதிமொழி எடுப்பானேன் அதைப்
பின் விடுவானேன்
அக்காடா என்று அதை
விட்டு விட்டவர்கள்
விபரம் தெரிந்தவர்கள்
சரக்கு விற்றுக் காசு
பார்த்தவர்கள்
சர்வகலாசாலைத்
துவக்கிக் கல்லா கட்டுகிறார்கள்
அரசுப்பள்ளியில் ஆரம்பநிலை ஆசிரியர்களின் அரைச்
சம்பளம் கூடப் பெறாச்
சுயநிதிக் கல்லூரி ஆசான்கள்
கோடி கோடியாய்க் கல்விக்கொள்ளையர் முன் தண்டனிட்டபடி
சொச்சமாய்த் தெரிந்த
தேசிய கீதத்தோடு
மொத்தமாய்த் தெரியாத தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடிக்கொண்டு
கல்விக்கூடங்கள் தொடர்கின்றன
வல்லரசாக வேண்டும்
தாய்நாடு அகண்ட நாம்
பஜனை எங்கும் நடக்கிறது
இடைவெளி ஏதுமில்லாமல்.
எஸ்ஸார்சி
கவிதை 4
குறள் நமது ஆசான்
அவர் முகத்திலிருந்து தோன்றியவர்கள்
பிராமணர்கள்
தோளிலிருந்து தோன்றியவர்கள் க்ஷத்ரியர்கள் தொடையிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள்
கால்களிலிருந்து தோன்றியவர்கள்
சூத்திரர்கள்
வேதம்
இப்படிச் சொல்கிறது
கீதை தந்த கண்ணன்
நான்கு வர்ணத்தையும்
படைத்தேன் நான்
செய்வோர் சிறப்பும்
செய்தொழிலும் ஆதாரங்களாயின
விளக்கம் சொல்கிறான்
வேற்றுமை தெரிந்த
நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால்
ஒருவனும் அவன்
கட்படுமே
என்கிறது புறநானூறு
வள்ளுவம் சொல்கிறது
பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும்
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்
குறளே நமக்கு என்றும்
ஆசான்
கலங்கரை விளக்கமும்
அதுவே
வேதமும் கீதையும்
எந்தக் கதையோ
சொல்லிப் போகட்டும்.
