
என் பண்ணை வீ்ட்டுத் திண்ணை
ஆசையாய் அருமையாய்
பார்த்துக் கட்டிய சிவப்புத் தரையில்
அமரும் சுகமும் அது தரும் இதமும்
பாட்டுக் கேட்க சில நாட்கள்
படித்து மகிழ சில சமயம்
பார்த்து ரசிக்க பல தருணம்
கண் மூடி தியானம் செய்ய ஒரு நேரம்
மடித்த கையில் படுத்து உறங்க
வட்டமாக உட்கார்ந்து கதை பேச,
பொட்டு வைத்த மருதாணிக் கையுடன்
வேலையில்லாமல் உல்லாசமாய் உட்கார
வடாம் போட, வேப்பம் பூ காய வைக்க,
மிளகாய் உலர்த்த, அரிசி புடைக்க,
தாயமும் பல்லாங்குழியும்
நாளெல்லாம் விளையாட
அடடா ஆனந்தம்
அத்தனையும் சந்தோஷம்
தினமும் இப்படியே இங்கேயே
இருந்து விட ஆசை தான் …..
