
“இந்தக் கொழாய் வாழ்க்கை முடியப்போகுதாடா சம்முவம்?” என்றாள் தாய்க்கிழவி.
“ஆமாம் மா நேத்துகூட அந்த அதிகாரி கண்டீசனா சொல்டாரு, நாளைக்கு அந்த கட்டடத்துக்கு போகணுமாம். அரசாங்கம் கட்டியிருக்காம்”.
“போனமுறை ஏதோ படுதா போட்டு மறைச்சாங்களேடா நம்ம அழுக்கெல்லாம் தெரியக்கூடாதுன்னுட்டு?” என்றவளிடம் மருமகள்,
“இந்த முறை யாரும் வரல அத்தை. ஏதோ இஸ்மார்ட்டு சிட்டீயாமாம். கொழாயி, குடிசை, டெண்ட்டு ஒண்ணும் இருக்கக்கூடாதாம். அதுக்குத்தான் வூடாவே குடுத்துப்புட்டாங்கோ” என்றாள்.
“அப்ப இந்த ஜிம்மியும் வருமா ம்மா” என்றது தரையில் புழுதிக் குளியலில் இருந்த சின்னது.
“பின்ன இவனெல்லாம் இல்லாமலா. வுட்டா ரேசன்கார்டுல கூட சேர்த்துக்கலாம் இவன” என்றபடி மூன்று குழந்தைகளுடன் அவனை நான்காவதாக ஏற்றவள் சிரித்தாள்.
வண்டி வந்து நிற்க. “ஹ்ம் ஹ்ம் ஏறுங்க. என்ன சாமான் உங்களுக்கு? கொழாயில இருக்கற மூட்டைய அள்ளிக்குங்க. சீக்கிரம் வண்டியில ஏறணும் சொல்டேன். இந்த நாயி… உங்களுதா?”
“அது ஜிம்மி” என்றது சின்னது!
“சரி சரி அதான் நாயி. இதுகளுக்கே கஞ்சியில்லன்னாலும் இந்த் அஜிம்மி, ஜிக்கின்னுக்கிட்டு என்றபடி அலுத்துக்கொண்டு, அதையும் கவுறக்கட்டி புடிச்சுக்குங்க. சும்மா இருந்தா நாயிவண்டியில ஏத்திப்புடுவேன்” என்று மிரட்டிவிட்டுப் போனான் வண்டியின் ஓட்டுனர்.
“பேசாம அந்தப் பசுமாட்டையும் எடுத்துக்குவமா” என்ற பெரிய மகனிடம் தாய்க்கிழவி சொன்னாள், “இதுவரைக்கும் திருடல, அதனாலதான் இந்த வீடு இப்பவாச்சும் கிடைச்சிருக்கு. போய் ஏறுடா வண்டியில. மட்டிப்பயலே” என்று.
17/12/25

நல்ல கருத்துள்ள கதை. அருமை.