
‘எங்களுக்கு காசு பணம் நகைன்னு எதுவும் வேண்டாம்னு மறுபடியும் சம்பந்தி வீட்டில சொல்லிட்டாங்க!’
வரதன் சொல்லிவிட்டு மனைவியின் முகத்தையே நோக்கினார். தனம் வழக்கம்போல வாளாவிருந்தாள். பெண்ணின் கலியாணப் பேச்சை நல்லபடியாக முடித்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டில் ஒன்றும் எதிர்பார்க்கவில்லையென்று தெரிந்தது. காலம் மாறுவது என்னவோ உண்மை. ஆனாலும் எதுவும் வேண்டாம்னு யார் சொன்னாலும் உடனே இயல்பாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
அவர்களுக்கு கல்யாணம் முடிந்து நீண்ட நாட்கள் கழித்துப் பிறந்த பெண். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக என்று எண்ணி மங்களா என்று பெயர் சூட்டினார்கள். மங்களம் பாடி முடித்ததுபோல் ஆனால் அவளுடன் அவர்கள் குடும்பமும் அடங்கியது.
மற்ற குழந்தைகளைப்போல மங்களா பள்ளிப் படிப்பு முடிந்ததும் பெற்றோரை ஆன்லைன் கவுன்சிலிங் என்று அலைக்கழிக்கவில்லை. அழகாக பிகாம் முடித்துவிட்டு பேங்கில் ஒரு வேலையையும் தேடிக்கொண்டாள். குமாஸ்தா வேலைதான். ஆனால் சில வருடங்களில் ஆபிஸராக முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. மாப்பிள்ளைப் பையன் சீனிவாஸ் பக்கத்து ஊரில் சொந்த வியாபாரம் செய்வதாச் சொல்லியிருந்தார்கள்.
‘படிச்சு நல்ல வேலையில இருக்குதுங்க நம்ப பொண்ணு மங்களா.. பாக்கவும் லட்சணமா இருக்கு…அவங்களுக்கு இந்த சம்பந்தம் அமைஞ்சா போறும்ன்னு இருந்திருக்குங்க…’
தனமும் எதையோ சொல்லி கணவரின் நீண்ட மௌனத்தைக் கலைக்க முயன்றாள். அவள் சகோதரர் சந்துரு மூலம் வந்த வரன்…..
ஒரே பெண்… கலியாணமாகி நாள் கடந்து பொறந்த பெண்.. வரதன் அப்பா அம்மா இன்னும் ஆனா உயிரோடதான் இருக்காங்க.. சொத்துன்னு சொல்லிக்க ஒன்னுமில்லை… அவருக்கும் கொஞ்சம் சிகரெட், புகையிலைன்னு பழக்கம் இருக்கு…ஆனா நல்ல குடும்பம்… தங்கமான மனுசன்..சம்பந்தம் செய்யலாம்… சந்துருவும் ஜாடை மாடையா வரதன் குடும்பத்தின் சிலவுகளையும் பொறுப்புகளையும் காட்டி நடுத்தர வர்க்கம்னு மாப்பிள்ளை வீட்டில சொல்லியிருக்கலாம்..
‘கொஞ்சம் இரு…வந்துடறேன்… ‘
யோசனையுடன் வரதன் வாசலுக்கு விரைந்தார். முக்குக்கடைக்குப் போய் வருவார் என்று தனம் அறிவாள். நண்பர்கள் கூட்டம் அங்கு குழுமியிருக்கும். அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பார்கள். மேலும் வரதன் அம்மா அப்பா முன்னால் புகைப்பதில்லை. புகையிலையை மட்டும் சாப்பிட்டுவிட்டு வாசலில் அமர்ந்து அடக்கிக்கொள்வார். மரியாதை கலந்த வேண்டாத பழக்கங்கள்.!
ராத்திரி பூராவும் லொக் லொக் என்று இருமல். தாயார் கிழவியும் நெய் காய்ச்சி மிளகுடன் தரச் சொல்வார். சரியாகாவிட்டால் ஆஸ்பத்திரிக்குப் போக வற்புறுத்திவிட்டு வாட்டமடைவார். வீட்டுச் செலவுகளுக்காக வரதன் மங்களாவிடமிருந்து ஒரு பைசா வாங்க மாட்டார். அதிலும் பிடிவாதம். கவலைகள் தனத்தை தினந்தோறும் அரித்துக் கொண்டிருந்தன. மங்களா கவனிக்காதபடி கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு சமையலறைப் பக்கம் விரைந்தாள்.
மதியம் சாப்பிட்டு முடிந்ததும் வரதன் மீண்டும் மங்களா கலியாணம் பற்றிய பேச்சையே துவங்கினார். ஆனால் அவர் பேச்சில் உற்சாகம் பொங்கியது.
‘மங்களா! நீயும் வா ஒக்காந்துக்க..! ‘
மற்றபடி வீடு அமைதிப் பூங்காதான்..
‘உனக்கே தெரியும்… மாப்பிள்ளை வீட்டில ஒன்னும் கேக்கல.. ஆனா உனக்கு அதிக பட்சமா கை வளையல், கழுத்துச் செயின், ஒட்டியாணம், காதுத் தோடுன்னு போட நெனைச்சு ஒரு குத்து மதிப்பா மூணு லட்சம் எடுத்து வச்சிருக்கேன்.. அத ஒனக்கு தந்துடறேன். அவங்க கேக்காட்டி என்ன… ஒனக்குன்னு நான் தயார் செஞ்சு வச்சிருக்கிறத நான் தரப்போறேன்…நீ ஒன்னும் வெறுங்கையோட போக வேணாம். நமக்கும் கவுரவும்னு ஒன்னு இருக்கில்ல..’
அப்பாவுடன் அதிகம் வாயாடும் மங்களா அன்று மௌனமாக தலை அசைத்துக்கொண்டிருந்தாள்.
‘அப்பறம் முக்குக்கடையில பேசிக்கிட்டிருக்கும்போது கூட வேலை பார்க்கிற சந்தானம்தான் சொன்னார். இந்த காலத்தில கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுங்க திருமணத்துக்கு முன்னாடி கையில மருதாணி வச்சிகிட்டு, சங்கீதம், பாட்டுன்னு தோழிங்களோட ஒருநாள் சந்தோசமா இருப்பாங்கன்னு சொன்னார். கொஞ்சம் நெருங்கின சொந்தங்களையும் கூப்பிடுவாங்களாம்.. உனக்கு அந்தமாதிரி ஆசையிருந்தா சொல்லு. கலியாணத்தில செலவான எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு லட்சம் வரைக்கும் புரட்டி வச்சிருக்கேன். நீயும் வேலை பாக்கிற.. ஆபிஸ்ல, படிச்ச காலேஜ்லன்னு நெறைய தோழிகள் இருப்பாங்க.. உனக்குத் தந்துடறேன்… சின்ன சத்திரம் இல்லைன்னா ஒரு ஹோட்டல்ல வச்சுக்கலாம்.
‘இல்லைப்பா.. எனக்கும் அந்த மாதிரி விருப்பம் இல்ல.. திருமணம் எளிமையாவே இருக்கட்டும்.
தனம்தான் அதிகம் கவலைப்பட்டாள். கணவர் அகலக் கால் வைக்கிறாரோ..?
அப்பறம்.. ஆபீஸ்ல இடம் மாத்தலுக்குச் சொல்லிட்டியா?… அவங்க இருக்கிறது நம்ம ஊரைவிட்டு ஒட்டி இருந்தாக்கூட பக்கத்து ஊர் தானே…. மாப்பிள்ளை வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற பிராஞ்சில கெடைச்சிட்டா வசதி.. நீயும் வண்டி கிண்டின்னு எதுவும் ஓட்டறதில்ல..
இல்லைப்பா.. மாத்தலுக்கு கலியாண பத்திரிகை நகல் ஒன்னு வச்சு மனு குடுக்கனும். பத்திரிகை அடிச்சு வந்தப்பறம் செய்யறேன்..
சரி…பாத்துக்கோ…
மூன்று மாதங்கள் கடந்த வேகம் யாருக்கும் புரியவில்லை. வரதன் நெற்றிச் சுருக்கங்கள்தான் அதிகரித்திருந்தன. முகூர்த்த நாளும் நெருங்கியது. மங்களா இப்போதெல்லாம் அதிகம் சிந்தனை வாய்ப்படுவதாக தனம் நினைத்தாள். மங்களா அவள் வயதுப் பெண்களைப் பர்க்கும்போது கொஞ்சம் வித்தியாசமானவள்தான்.. மிதமான பேச்சு..மென்மையான குரல்.. அதிகம் செல்பேசியோடும் உறவாடிப் பார்த்ததில்லை.. ஆனால் சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஒரு மடிக்கணிணி மட்டும் வாங்கிக்கொண்டாள். வலைப்பின்னலில் அவள் படிக்காத தலைப்புகள் கிடையாது என்று சொல்லலாம். அவ்வப்போது சாப்பிடும் சமயத்தில் அப்பா அம்மாவுடன் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்வாள். தனம் பெருமைப்படுவாள். வரதனும் வாயை அகலமாகத் திறந்துகொண்டு அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பார்.
திருமணம் நிச்சியமானதும் கூட மங்களா செல்போனை எடுத்துக்கொண்டு பேச வாசலுக்கு அதிகம் ஓடியதில்லை. மாப்பிள்ளைப் பையனும் அடிக்கடி அழைத்ததாகத் தெரியவில்லை. தனம் அக்கம் பக்கத்தில் சொல்லக் கேட்டிருக்கிறாள். நிச்சியம் ஆனவுடனேயே வார முடிவிலேயோ அல்லது அடிக்கடியோ மாப்பிள்ளை பையன் வீட்டுக்கு வருவதும் பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெளியில் போய்விட்டு வருவதும் வழக்கமாகியிருந்தது. பெண் வீட்டிற்கு நேரத்திற்கு வரும் வரை அம்மாக்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பதுபோல் காத்திருப்பதும் இருந்தது. எப்படா திருமணம் முடியும் என்று தவிக்கும் நிலை. குறைந்தபட்சம் மங்களாவும் சீனிவாஸும் அவர்களை அந்த நிலைமைக்கு ஆளாக்கவில்லை.
பெண் பார்க்க வந்தபோது கூட பையன் தனியாக அவர்கள் வீட்டிலேயே மங்களாவை தனியாக சந்ததித்துப் பேச விருப்பம் தெரிவித்தான். மங்களாவிற்கும் அந்த ஆசை இருப்பது தெரிய வந்தது. பக்கத்து அறையில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தனம்தான் இருப்புக்கொள்ளாமல் தவித்தாள். மங்களாதான் அதிகம் பேசியதாகத் தெரிந்தது. தனம் ஆச்சரியப்பட்டாள். இருவரும் புன்முறுவலுடன் வெளியில் வந்தபோது பெற்றோர்களுக்கு என்ன முடிவு என்று தெரிந்துதான் இருந்தது.
பின் ஏன் இப்படி..அதிக சந்தோஷம் இல்லாதவள் போல் மங்களா இருக்கிறாள்.. திருமணம் முடிந்ததும் பெற்றோரைப் பிரிந்து போக வேண்டுமே என்ற கவலை ஒருவேளை இருக்கலாம்… தனம் சமாதானம் செய்துகொண்டாள்.
திருமணம் நல்லபடியாகத்தான் நடந்தது. மாப்பிள்ளை வீட்டார் மிகப் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்கள். தனம், வரதன் இருவருக்குமே அளவுகடந்த களிப்பு. மாலையும் கழுத்துமாய் அமைதியாகவும் அடக்கமாகவும் அமர்ந்துகொண்டு மங்களா தாலிகட்டிக் கொண்டது அவர்களுக்கு திருப்தியாக இருந்தது.
மறுநாள் மங்களா புகுந்தவீடு கிளம்ப வேண்டும்…கலியாணம் விசாரித்த விருந்தாளிகளுடன் பேசிக்கொண்டே தனம் நினைத்துக்கொண்டாள். அழுகை அப்போதே பொத்துக்கொண்டு வந்தது. அருகில் வரதன் பொறுமையாக அமர்ந்து கொண்டு பந்தல் கட்டியவர்கள், சமையல்காரர்கள் என்று ஒவ்வொருவருக்கும் கணக்கு தீர்த்துக் கொண்டிருந்தார். வாழ்த்துச் சொல்ல வந்த கூட்டம் சாப்பாடு முடிந்து கரைந்துகொண்டிருந்தது. தனம் அப்போதுதான் கவனித்தாள். ஒரு மூலையில் மங்களா அமர்ந்துகொண்டு புகுந்த வீட்டாரோடு மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அதற்குள் அவ்வளவு அன்னோனியமா…? இன்னும் இவள் ஏன் தன் துணிமணிகளை அடுக்கிக்கொண்டு புகுந்த வீடு போக தயாராகவில்லை..? திருமணப் புடவையைக்கூட மாற்றிக்கொள்ளவில்ல.. மனதில் எழுந்த கேள்விகளோடு தனம் மங்களா பக்கம் நகர முற்பட்டாள். அதற்குள் மங்களாவே மாப்பிள்ளை மாமனார், மாமியார் சகிதம் அவர்களை நோக்கி வருவது தெரிந்தது.
மௌனமாக மங்களா அந்த அறைக் கதவையும் தாழிட்டுவிட்டு அவர்கள் முன்னால் அமர்ந்து அமர்ந்து கொண்டாள். வரதன், தனம் இருவரும் ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
‘அப்பா ! உங்களோட கொஞ்சம் பேசனும்.’
என்ன சொல்லப்போறே என்று பார்வையாலேயே கேட்டவர் மனைவி தனத்தையும் குழப்பத்துடன் பார்த்தார்.
‘என்னோட கல்யாணத்தில என்ன வரதட்சணை போறீங்க.. ?
ஒரு தயக்கமும் தாமதமும் இல்லாமல் மங்களாவிடமிருந்து கேள்வி வந்தது.
வரதனுக்குப் பக்கென்றிருந்தது, ஒரு கணம் ஆடிப்போய் விட்டார். இது என்ன புது பிரச்சனை…? அதுவும் பெத்த பெண் மூலமாகவே…
‘அம்மா அதுதான் சொன்னேனே… சம்பந்தி வீட்டில ஒன்னும் எதிர்பார்க்கல.. அதனால கல்யாண செலவுக்குன்னு ஏற்பாடு செஞ்சு வச்சிருக்கிற ஒரு நாலு லட்சத்தை உனக்குக் கொடுத்துடறேன்..;
சம்பந்திகளைப் பார்த்துக்கொண்டே வரதன் கவனமாக பதில் அளித்தார். வாய்தான் கொஞ்சம் குழறியது.
‘அது எங்களுக்கு வேண்டாம்… ‘
இப்போது என் என்பது எங்கள் என்று ஆகியிருந்தது. வரதனுக்குப் புரியாமலில்லை.
என்னதான் வேணும் என்று கேட்பதுபோல மங்களாவையே பாவமாகப் பார்த்தார். சம்பந்திகள் முன்னால் பெண் கேட்டுக் கொண்டிருப்பது அவருக்கு சங்கடமாக இருந்தது.
‘ஆயுசுக்கும் இனிமே புகையிலயைத் தொடமாட்டேன்…பீடி, சிகரெட் பிடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் குடுங்க.’
வரதன் திடுக்கிட்டு நிமிர்ந்தார். தனத்திற்கு மூச்சு வந்தது.
‘நீங்க தரதா சொன்ன நாலு லட்சத்தையும் நீங்களே வச்சுக்குங்க.. கடன் இருந்த அதை முதல்ல அடையுங்க.. இல்லைன்னா ஏதாவது ஓய்வூதியத்தில முதலீடு செய்யுங்க. .நான் இதுவரை சேத்து வச்சிருக்க பணத்தையும் உங்களூக்கே தந்துடறேன்.. மறுக்காம ஏத்துக்குங்க.. பிடிவாதம் பிடிக்காதீங்க.. இல்லன்னா சொல்லுங்க..நான் உங்க வீட்டிலேயே இருந்திடப் போறேன்.. வாழாவெட்டின்னு உலகம் சொன்னா நான் கவலைப்படப் போறதில்ல.. ‘
மங்களா உறுதிப்படப் பேசினாள்.
‘என்னம்மா சிறுபிள்ளைத் தனமா பேசிக்கிட்டு… நீங்களே உங்க மருமகளுக்கு புத்திமதி சொல்லுங்க…’
வரதன் சம்பந்திகளைப் பார்த்தார்.
‘மங்களா சொன்னது எங்களுக்கும் நியாயமாப் படுது.. அவ சொன்னபடி சத்தியம் செஞ்சு குடுத்துட்டு எங்க மருமகள எங்களோட அனுப்பறத்துக்கு வழி செய்யுங்க..’
சம்பந்தி இறைஞ்சுவதுபோல் இருந்தது. மங்களா புகுந்த வீட்டில் முன்பே அனைவரிடமும் சொல்லி சம்மதம் வாங்கியிருப்பது தெரிந்தது.
தனத்திற்கு இரட்டை சந்தோஷம். கணவரிடம் ஆரோக்கிய பழக்கங்கள் திரும்பி வாழ்க்கை வளம்பெறும்… மங்களா புகுந்த வீட்டிற்குப் பிரியமான மருமகள்.. ஏன் மகளாகவே ஆகிவிட்டாள்.
ஆளுமையுடன் கூடிய பெண்தான் எவ்வளவு உயர்ந்தவள் ? பையன் இல்லையே என்ற குறையும் மறைந்ததுபோல இருந்தது. கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டாள்..
