ஜி. குமார்/காப்பகங்கள்………

நீண்ட வருடங்கள் கழித்து அந்த வெங்கலப் பானையை அடுப்பில் ஏற்றியதில் கலியாணிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி !. விறகு அடுப்பு, கரியுடன் குமுட்டி அடுப்பு , ஸ்டவ் என்று வெவ்வேறு காலகட்டங்களில் பார்த்துவிட்டு பரணில் ஏறியிருந்த அந்தப் பானையும் ஒரு வழியாக இறங்கி காஸ் அடுப்பில் இப்போது கம்பீரமாக வீற்றிருந்தது. தனது ஐம்பது வயதில் ஒரு பத்து பதினைந்து வருடங்களாவது குறைந்து விட்டதுபோல் கலியாணியும் உணர்ந்தாள். தெம்பும் உற்சாகமும் அதிகமாக வெந்துகொண்டிருந்த பருப்பை கை நிறுத்தாமல் மசித்து மசித்துக் கிளறிக்கொண்டிருந்தது.

‘ நாள் கிழமைன்னா பருப்புப் பாயசம்தான் நம்ம வீட்டு வழக்கம் …. பருப்பு வெந்தப்புறம் வெல்லத்தைப் போடு…. ! ‘
திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்தபோது மாமியார் கற்பித்திருந்தவை இன்றும் கலியாணியின் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன.

வெல்லத்தைப் பொடித்து கரைத்துக்கொண்டு கோதை நீக்கினாள். பாலை எடுத்து வைத்துக்கொண்டவள் ஏலத்தையும் பொடிக்கத் துவங்கினாள். நீண்ட நாட்கள் கழித்து அந்த வீட்டில் பாயசம் , அதுவும் நாமே செய்கிறோம் என்ற நினைப்பில் கலியாணியின் கண்களில் நீர் கசியாமலும் இல்லை! விதவைக்கோலம் பூண்டபின் இனிப்பு செய்வதில் சுவாரசியமே குறைந்திருந்தது. இப்போது மூன்று மாதக் குழந்தையாய் மகனின் வாரிசு இன்னும் சிறிது நேரத்தில் வீட்டில் காலடி வைக்கப்போகிறது என்று மனதில் ஒரு துள்ளல். சின்ன வயதில் விதவை என்ற கவலை மறைந்து சின்ன வயதிலேயே ஒரு பாட்டியும் ஆகிவிட்டோம் என்ற பெருமிதம் கலியாணியிடம் குடி புகத் தொடங்கியிருந்தது.

ஒரு சொட்டு……. ஒரு சொட்டுதான். ……. அதுவும் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் தீத்திக்கொண்டு இளஞ்சூட்டில் அந்தக் குழந்தையின் நாக்கில் தடவப் போகிறோம் என்ற களிப்பில் கலியாணிக்கு அவளையும் அறியாமல் சிரிப்பு வந்தது. சாமி பேரைச் சொல்லி பூதம் முழுங்கிய கதையாய் மற்றவர்கள்தான் அந்த பாயசத்தை ருசிக்கப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டாள்.

‘ குழந்தை முகம் பாத்து சிரிக்கத் தொடங்கியாச்சு ! ‘ என்று மருமகள் அபூர்வா இரண்டு மூன்று நாட்கள் முன் பிறந்த வீட்டிலிருந்து •போனில் சொல்லியிருந்தது வேறு கலியாணிக்கு ஒரு சிலிர்ப்பைத் தந்திருந்தது.
அந்த ஒரு சொட்டு இனிப்பு நாக்கில் பட்டதுமே சப்பிக்கொண்டு உதட்டையும் ஒரு சுழி சுழித்துக்கொண்டு பாட்டியை கவ்விக் கொள்ளுமா ? கலியாணி பரபரத்தாள்.
‘ அல்லது அழுமோ ?.. மூணு மாசத்தில வேத்து முகமும் தெரிந்திருக்காதா..? கலியாணி நெற்றி சுருங்கியது. அழுதாலும் பாட்டியின் ஸ்பரிசம் தரும் வெதுவெதுப்பு அதை உடனடியாக நிறுத்தி விடும் என்ற தன்னம்பிக்கையும் உடனே கலியாணியிடம் உதித்தது.

சுவர் கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டாள்.
ரயில் வண்டி ஸ்டேஷனில் வந்து நிற்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரியான நேரத்திற்கு வந்துவிட்டால் இன்னும் முக்கால், ஒரு மணி நேரத்தில் ஜெயராம், மனைவி அபர்ணா , குழந்தையுடன் கொண்டுவிட வந்து கொண்டிருக்கும் மாமியார் சகிதம் நுழைந்து விடலாம்………
பக்கத்து வீட்டு சுமங்கலி மாமியிடம் ஆரத்தி எடுக்க வரவேண்டியதைப் பற்றி ஞாபகப்படுத்தவேண்டும் என்று கலியாணிக்குத் தோன்றியது. சம்பந்தி அம்மாள் கூட வந்தாலும் குளித்திருக்கமாட்டார்…….

பக்கத்து வீட்டில் அழைப்பு மணியை அழைத்ததுமே ‘ வந்தாச்சா ? ‘ என்று கேட்டபடி அவர் கிளம்பத் தொடங்கினார்.
‘ இல்ல ! இல்ல ! மறுபடியும் ஒரு தடவை சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன் ! ‘ கலியாணி தயக்கத்துடன் இழுத்தாள்.
கலியாணியின் அவசரத்தை கவனித்த மாமியிடம் ஒரு புன்முறுவல் எழுந்தது.
‘ பேரன் வரப்போற சந்தோஷத்தில உங்க கால் தரையிலேயே பாவல ! வந்தவுடனேயே ஒரு குரல் கொடுங்கோ ! ஓடி வந்துடுவேன் ! வாசல்லயே நிக்க வைக்கமாட்டேன்!’

தலையை ஆட்டி விட்டு கலியாணி வெட்கத்துடன் நகர்ந்தாள். வாசலில் போட்டிருந்த கோலத்தில் காலை வைத்து மிதித்து விடாமல் கவனமாக வீட்டிற்குள் மறுபடியும் நுழைந்தாள்.

ராகு காலம் மெதுவாக கடந்து கொண்டிருந்தது. ஏகப்பட்ட தடவை சொல்லியாச்சு.. பையன் ஜெயராம் அப்படி ஒன்னும் முற்போக்கு இல்லை. அவனுக்கும் அவன் குழந்தை நல்லபடியாக இருக்கனுங்கற ஆசையிருக்காதா…….. கடியாரத்தைப் பாத்தபடிதான் நுழைவான்……. கலியாணி தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

வாசலில் ஏதோ ஆட்டோ வந்து நிற்கும் ஒரு ஓசை. எட்டிப் பார்க்க விரைந்தாள். மனசுக்குள் அவர்கள் இருக்காது என்று தோன்றாமலும் இல்லை. காசு பணத்துக்கு ஜெயராமனோ மருமகளோ கஞ்சப்படுவதில்லை என்பது அவளுக்குத் தெரியும். இரண்டு பேரும் வேற சம்பாதிக்கிறார்கள். டாக்ஸியில்தான் வருவார்கள்.. ஏமாற்றத்துடன் எட்டிப் பார்த்துவிட்டு மனதையும் சமாதானப்படுத்திக் கொண்டாள்.

மேசை மேல் எடுத்து வைத்திருந்த காகிதம் மின் விசிறியின் சுழற்சியால் படபடத்துக்கொண்டு அவள் கவனத்தை ஈர்த்தது. பாயசம் முடிந்த திருப்தியில் அடுப்பை அணைத்து விட்டு வந்தவள் மீதி வைத்திருந்த சாமான்களின் பட்டியலை எழுதி முடிக்கத் தொடங்கினாள். ஆலிவ் எண்ணெய், பச்சைக் கடலை மாவு, சாம்பிராணி …… பட்டியல் நீண்டு கொண்டிருந்தது. ஜெயராமிடம் சொல்லி குளிச்சு சாப்பிட்டதும் வாங்கி வரச் சொல்லனும் என்று நினைத்துக்கொண்டாள்.

ஆலீவ் எண்ணெய் மசாஜ் குழந்தைக்குத் தர வேண்டுமென்ற துடிப்பு மருமகள் அபூர்வாவிற்கு இருப்பது கலியாணிக்குத் தெரியாத ஒன்றில்லை. யாரை வைக்கலாம் என்ற ஒரு கேள்வியும் அவள் மனதில் இருக்கலாம். அழுந்தவும் தேய்க்க வேண்டும், நம்முடைய குழந்தை என்ற உணர்வும் இருக்க வேண்டும் என்று அவளுக்குச் சொல்லி தானே முனைந்து செய்ய வேண்டும் என்று பாட்டியான கலியாணிக்கு ஒரு ஆவல்.

‘ உங்களுக்கு ஏன் இந்த சிரமம் ? ‘ என்று படித்து வேலைக்குப் போகும் பெண்ணாய் மருமகள் வாக்குவாதம் புரிவதையும் கற்பனை செய்துகொண்ட கலியாணிக்கு அவளை அறியாமல் இதழ்க்கடையோரம் ஒரு புன்னகையும் எழுந்தது.

புடவையை முழங்கால் வரை வழித்துக்கொண்டு அந்த இளம் தளிரை தன் கால்கள் மேல் குப்புறப் படுக்க வைத்துக்கொண்டு இளம் சூட்டில் தண்ணீர் விட்டு கடலை மாவு தேய்த்து மணக்க மணக்க குளிப்பாட்டும் காட்சியும் அது அழ அழ குழந்தையின் வாயில் தப்பித் தவறிப்போன நீரை அதன் உதட்டைப் பிடித்துக்கொண்டு ஒரு விரலால் அவள் வழித்தெடுப்பதும் கலியாணி கண் முன்னால் இப்போதே நிழற் படமாய் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு குழந்தையை மட்டும் வளர்த்தாலும் மாமியாரின் பயிற்சி அவளுக்கு மறக்கவில்லை.

‘ வேலை பாக்கிறதால ஒரு குழந்தையோட நிறுத்திடாதே ! ஒன்னுக்கொன்னு துணை வேணும் ! நா[ன்] இருக்கறப்ப நீ கவலையே படவேண்டாம் ‘
ஜாடைமாடையாய் இறங்கியதுமே மருமகளுக்குச் சொல்லிவிட கலியாணிக்கு நாக்கு துறுதுறுத்தது.

சின்ன வயதில் பையன் ஜெயராமிற்கு கருகருவென தலைமுடி அதிகம். பின்னிப்பூ வைத்து அதிக நாள் வளர்த்திருந்தாள். அந்த •போட்டோவையே நீண்ட நாள் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு வழக்கமாயிருந்தது. இப்போது பேரனுக்கும் தலைமுடி அதிகம் என்று மருமகள் பெருமையுடன் சொல்லியிருந்தாள். முடி இறக்கும் வரை வளர்க்கலாம்… சாகுந்தறுவாயில்தான் கலியாணியின் மாமியார் கலியாணிக்கு குல தெய்வம் பற்றி எங்கெங்கே முடி இறக்குவது குடும்பத்திற்கு வழக்கம் என்றெல்லாம் விவரித்திருந்தார்.. ..
நமக்கு சொல்லி கூட்டிப் போகற அளவு தெம்பும் வயசும் இருக்கு….. நினைத்துக்கொண்ட கலியாணிக்குப் பெருமையாயிருந்தது.

விடிகாலையிலேயே எழுந்து நல்ல வேளை குளிக்கும் வழக்கம் இருக்கு. அபூர்வா ஆபீஸ் கிளம்பறத்துக்கு முன்னாடியே எல்லா கடன்களையும் முடிக்கனும்.. குழந்தை தூங்கறதேன்னு அசிரத்தையா இருக்க முடியாது…… கொஞ்ச நாளைக்குத் தாய்ப்பாலை நிறுத்தாதேன்னு வேற சொல்லனும்……..பாட்டில், நிப்பிள் வென்னீர்ல காய்ச்சனுங்கற வேலையே வேண்டாம். …. ஒரு டம்ளரும் ஸ்பூனுமே போதும்…… பொறுமையா தர எனக்கு முடியாதா என்ன…… பாலக்காடு மாதிரி நேந்திரங்கூழ் தந்தா கொஞ்சம் எடையும் ஏறலாம்………….. குழந்தை படுக்கையை நனைக்க கூடாதுன்னு நாப்கினைக் கட்டிவிட்டு குழந்தையைச் சித்திரவதை செய்யறதையும் தடுக்கனும்……….மொட்டு வளையைப் பாத்தபடியோ வேண்டா வெறுப்போட அந்த டிவி பெட்டி முன்னாடி கூட இனிமே அதிகம் உட்காரவேண்டாம்……… ஆப்பிள், பப்பாளி பழங்களைக்கூட மெல்லிய ஸ்பூனால் கீறிக்கீறி குழந்தை கொஞ்சம் உட்காரத் தொடங்கியதும் தரலாம்…
சில மாதங்களில் மையப் பிசைந்த பருப்பு சோற்றை கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு பேரன் பின்னால் தான் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியும் கல்யாணி கண் முன்னால் இப்போதே தெரிந்தது

அழைப்பு மணி அலறியது.
பகற் கனவில் நேரம் மறந்த குற்ற உணர்வு மேலிட கதவைத் திறக்க கலியாணி வாசலுக்கு விரைந்தாள். பத்து மணிகளை கடிகாரம் அடித்துவிட்டு ஓய்ந்திருந்தது. ஒரு வழியாக ஆரத்தி முடிந்ததும் சம்பந்தி அம்மாளை வாய் நிறைய ‘ வாங்கோ ! ‘ என்று அழைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றவள் ஆசையுடன் மருமகளிடமிருந்து பேரனை வாங்கிக்கொண்டாள்.

தரையில் அமர்ந்துகொண்டு கலியாணி மடியில் குழந்தையை கிடத்திக்கொண்டாள். பாயசத்துடன் இருந்த பாலாடையை அருகே நகர்த்திக்கொண்டவள் மகன் ஜெயராமிடம் மெதுவாக வினவினாள்.
‘ வண்டி லேட்டா ? ‘
‘ இல்லைம்மா ! சரியான நேரத்துக்குத்தான் வந்தது. ‘
‘ பின்னே வீடு வந்து சேர ஏன் இவ்வளவு நேரம் ? டாக்சி கிடைக்கலையா ?
அபூர்வாவும் ஜெயராமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். நீங்களே சொல்லுங்கள் என்பதுபோல் அபூர்வா கணவனை நோக்கினாள்.

‘ அபூர்வா நாளைக்கே வேலையில சேரணும். பிரசவ லீவ் அதிகம் எடுத்தாச்சு ! அவளோட அப்பாவை தனியாவிட்டு வந்திருக்கிறதால அவளோட அம்மாவும் சீக்கிரம் ஊர் திரும்பனுமாம். லீவில இருந்தப்பவே அபூர்வாவோட கூட வேலை பாக்கிற ஒரு பெண் ஆபீஸ் பக்கத்தில இருக்கற ‘ கிரச் ‘ பத்தி சொல்லியிருந்தா. அந்தப் பெண்ணும் அவ குழந்தையை அங்கதான் விட்டு வளக்கறாளாம். சாப்பாடு நேரத்தில கூடப் போய் பார்க்க முடியுமாம். சின்னக் குழந்தையா இருக்கும்போதே விட்டு வளர்த்தா பழக்கமாயிடுமாம். டாக்டர், வசதிகூட செய்ய முடியுமாம். அதிகமா தொந்தரவு யாருக்கும் தர வேண்டாம்னு அபூர்வாவும் நெனைக்கறா ! அதனால அங்க மொதல்ல போய் பணங்கட்டிட்டு வந்தோம்……………
ஜெயராம் பேசிக்கொண்டே போனான். தாயாரின் கண்களைத்தான் சந்திக்க அவனுக்குத் திராணியில்லை போலிருந்தது.

துக்கம் தொண்டையை அடைக்க பேச்சே எழும்பாமல் பாயசத் துளியை குழந்தை நாக்கில் கலியாணி தீத்திக்கொண்டிருந்தாள். கண்களில் திரையிட்டிருந்த நீரை மறைக்க அரும்பாடு படவேண்டியிருந்தது. அன்பு அழுந்தி இருக்கும் இடத்தில் ஆவேசம் பிறப்பதில்லையோ… ? வாக்குவாதத்தில் ஈடுபடவோ இறைஞ்சவோ மனது விழையாதோ.. ? பணமும் கட்டிவிட்டு வந்துவிட்டோம் என்ற வார்த்தைகளே கலியாணியின் வாயில் பெரும் பூட்டை மாட்டியிருந்தன.

நாக்கை இழுத்துக்கொண்டு குழந்தைதான் பாட்டியை ஆனால் உற்றுப் பார்த்தபடியே இருந்தது.
‘ எனக்கும் மட்டுமில்லை. உனக்கும் பக்கத்திலேயே ஒரு முதியோர் இல்லம் என்னோட அம்மா, அப்பா பாத்து வச்சிருக்கா.. ..! குளிக்க வென்னீர், இரண்டு வேளை காப்பி, மத்தபடி சாப்பாடு, டிவி ன்னு எல்லா வசதியும் இருக்கும். கவலைப்படாதே! அதுகூட என்னோட கிரச் பக்கத்திலதான்…. நீயும் நானும் பக்கத்து பக்கத்துலதான் இருப்போம்…..அவங்க இரண்டு பேருக்கும் வேலையில முன்னேறி நிறைய சம்பாதிக்க ஆசை!……அப்பப்போ கூட வேலை பாக்கறங்களையும் கூட்டி வந்து வீட்டில பார்ட்டி தர ஆவல்… ‘
என்றெல்லாம் குழந்தை பேசமுடியாமல் எதையோ புரிய வைக்க மட்டும் முயன்றதோ…….?

குழந்தையை தோளில் சார்த்திய வண்ணம் சமையல் அறைப்பக்கம் கலியாணி நகர்ந்தாள்.
நான் அதிகம் எடையே இல்லை பார் என்பதுபோல் குழந்தை நெளிந்து கொண்டிருந்தது.
கலியாணியின் மனசுதான் கனத்தது.

ஜி. குமார்/முதுமையின் இறைஞ்சல்… – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஜி. குமார்/காப்பகங்கள்………”

Comments are closed.