ஜி. குமார்/முதுமையின் இறைஞ்சல்…

‘ ஓடக்கூடாது! நிதானம் அவசியம் ! காலையில் பூஜையிருப்பதால் செங்கற்களும் மணலும் வேண்டும் . சாக்குப் பையில் ஒவ்வொன்றாக செங்கற்களை எடுத்து வை ! பிறகு மணல் அள்ளிப் போடலாம். இங்கேயே வைத்து விட்டுப் போனால் யாராவது எடுத்து வருவார்கள் ‘
லட்சுமிப்பாட்டியின் அறிவுரை பரத்தைத் தடுத்து நிறுத்தியது.

கிராமத்தில் பாட்டியுடன் கோவிலுக்குச் சென்ற அந்த இளந்தளிருக்கு பழக்கப்பட்ட நகர வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுதல். அதிக ஆட்கள் அரவமும் வாகனங்களின் இம்சையுமில்லாத சாலையில் விரைய ஒரு இயற்கையான நாட்டம்… பாட்டியின் மெது நடை பொறுக்க முடியாமல் தொலைக்காட்சி முன் தாத்தாவுடன் அமர வேண்டுமே என்ற உள்ளத் தவிப்பும் கூட….
பாட்டியின் கைப்பிடி இறுகினாலும் அதில் இருந்த பாசத்தை அவனால் உணர முடிந்தது; வலி தெரியவில்லை..

‘ பாட்டி இந்த பூஜை எதற்கு ? ‘
‘ உன் தாத்தாவிற்கு எழுபது வயது முடிந்துவிட்டது. எனக்கு அறுபத்தி ஐந்து வயதாகிறது . பீமரத சாந்தி என்று சொல்லி எங்களின் ஆயுள் அபிவிருத்திக்கு உன் தகப்பனார் முதல் சித்தப்பாக்கள் வரை எல்லோரும் சேர்ந்து செய்கிறார்கள் ‘

அவர்களின் விருப்பம் அது என்று சொல்லாமல் சொல்லி பாட்டி சிரித்தது பரத்திற்குப் புதுமையாக இருந்தது.
‘ இந்த செங்கற்களை நான்கு புறமும் அடுக்கி வைத்துவிட்டு நடுவில் மணலைப் பரப்பி விராட்டிகளையும் சுள்ளிகளையும் நடுவில் இட்டு மந்திரம் சொல்லி அக்னியை எழுப்புவார்கள். அந்தச் சூடு தரைக்குப் பரவாது ; தரையும் கெடாது. ‘

கற்களைப் பொறுக்கியபடியே தன் மனதில் இருந்த கேள்விக்கு பதில் சொல்லிய பாட்டியின் சாதுரியத்தை பரத் ரசித்தான். தன்னைவிட கிட்டத்தட்ட ஆறுமடங்கு மேல் அதிகம் வயதில் பெரியவர் என்ற உண்மை புரிந்து அவனை வியப்பில் ஆழ்த்தியது..

கண்களை அகல அகல விரித்துக்கொண்டு அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தான்..
கோவில் பிரகாரத்தைச் சுற்றிவரும்போதுதான் அவரிடம் எவ்வளவு அமைதி.. .. ?
லிங்கம், நாயன்மார்கள்பற்றி விடாமல் கேட்ட போதெல்லாம் எரிந்து விழாமல் பதிலளித்துவிட்டு நாம் புரிந்துக்கொண்டோமா என்று எப்படி கவனிக்கிறார்.. ?
பாட்டி அதிகம் படித்ததில்லை என்று கேள்விப்பட்டிருந்தான். ஆனால் அவர்தான் எவ்வளவு விஷயங்களை கோர்வையாக நமக்குத் தெரிவிக்கிறார் … ?
வீட்டிலும் மற்றவர்கள்போல் தொலைக்காட்சிப் பெட்டியை நாடுவதில்லை; டிவி பார்க்காமல் இவரால் எப்படி இருக்க முடிகிறது.. ? சந்தேகம் அவன் மனதில் எழாமலும் இல்லை !

‘ புழுக்கம் , காற்றேயில்லை !’ என்ற வந்தவர்கள் எல்லாம் அலுத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருக்கும்போது எந்தவித சலனத்தையும் அந்த மூதாட்டியிடம் அவன் காணவில்லை.

பூஜை அறையில் பஞ்சு மாலை செய்வது, ஸ்லோகம் படிப்பது முதல் கிழிந்த தன் துணிகளைத் தானே தைத்துக் கொள்வது, சமையல் அறையில் அனைவருக்குமான உணவு சமைத்துப் பரிமாறுதல் வரை தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த பாட்டி களைத்தே இந்த இரண்டு நாட்களில் பரத் பார்க்கவில்லை !

‘ நீ சாப்பிட்டதுபோதும்’ என்று அம்மாகூட சலிப்படைவது உண்டு ; ஏதேதோ கதைகள் சொல்லி தன் வாயில் சோற்றை அடைக்கும் பாட்டிதான் எவ்வளவு பொறுமைசாலி.. .. ?
வெறும் சாதாரண நூல் புடவையில் எளிமையாக எப்படி காலம் தள்ளுகிறார்… ?
இவருக்கென்று ஆசைகள், தேவைகளே இல்லையா… ?
பரத்திற்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் !

அப்படிப்பட்ட பாட்டி மனம் கோண நடப்பது தவறு என்று பரத்தின் உள்மனது சொல்லத் தொடங்கியது.
இன்னும் நாலைந்து நாட்களில் இந்த கிராமத்தையும் பாட்டியையும் விட்டுவிட்டு பெற்றோருடன் ஊர் திரும்பவேண்டும் என்ற நினைப்பு வேறு பரத்திற்கு வெறுப்பைத் தந்தது.
மறுநாள் பாட்டியை திருமணகோலத்தில் பார்க்கப்போகிறோம் என்ற எண்ணத்தில் பரத்திற்குத் தூக்கமே வரவில்லை. என்னையும் விரைவில் எழுப்பி விடுங்கள் என்று பத்து முறையாவது தாயாரிடம் சொல்லிவிட்டுத்தான் படுத்துக்கொண்டான்.

விடியற்காலையில் எழுந்த மந்திர சப்தம் பரத்தை ஒரு உலுக்கு உலுக்கியது. அந்த வேதகோஷம்தான் மனதிற்கு எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது.. ? மந்திரத்திற்கு அழகே அந்த சப்தம்தான் என்று பாட்டி எவ்வளவு அழகாக கோவிலைச் சுற்றி வரும்போது குறிப்பிட்டார் …?
அந்தச் சூழலில் ஒரு நிமிடம் மனதைப் பறிகொடுத்தவன் அரக்கப் பறக்கக் குளித்துவிட்டு பூஜை நடக்கும் இடம் நோக்கி விரைந்தான்.
சமித்துக்கள் எரியும்போது எழும் புகை கண்களுக்கு மிகவும் நல்லது என்ற பாட்டியின் வார்த்தைகள் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்க அருகில் சென்று அமர முயன்றான்.

‘ நெருப்புப் பொறி பறக்கும் ! சற்று தள்ளி உட்கார்ந்துகொள் ! ‘ சிறுவனைப் பார்த்து எச்சரித்த புரோகிதருக்கு தூக்கக் கலக்கமில்லாமல் அவன் வந்ததே நம்ப முடியாததாக இருந்தது.
‘ நமஸ்தே !’ என்ற பொடியனை மேலும் ஆச்சரியத்துடன் நோக்கினார்.
‘ வடநாட்டில் வளரும் பேரன் ! அங்கிருக்கும் பழக்கம்போல் பெரியவர்களைப் பார்த்ததும் வணக்கம் சொல்கிறான் ! ‘
பாட்டி பரத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்திவிட்டு அருகில் அமரச் செய்தார்.
‘ நல்ல வளர்ப்பு ‘ என்ற சான்றிதழுடன் புரோகிதர் தலையை அசைத்தார்.

பரத் மௌனமாக பாட்டியின் தோற்றத்தைத்தான் ரசித்துக் கொண்டிருந்தான்.
அந்த சிவப்புப் புடவையில் காதுத்தோடும் மூக்குப்போட்டும் மின்ன அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார்.. ? நரைத்த தலைமுடிகள் வெள்ளிக் கம்பிகளாய் அதிகம் மெருகூட்டிவிட்டன.

முகச் சுருக்கங்கள் இல்லை ; செயற்கை அலங்காரங்களும் கிடையாது. பெரிய குங்குமப் பொட்டும் இலேசான மஞ்சள் பூசும் அவரிடம் ஒரு தெய்வீகக் களையை உண்டுபடுத்தியிருந்தது. கூப்பிய கரங்களும் கழுத்து மாலையுமாய் தாத்தாவின் அருகில் சாந்தமாய் அமர்ந்திருந்ததை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பூஜை முடிந்ததும் பேரனை மற்ற குழந்தைகளுடன் அக்னியை வலம்வரச் சொல்லி நமஸ்கரிக்கவும் செய்தார்.
வேகவேகமாக அவர் சொன்னபடி முடித்துவிட்டு வந்த பரத்தை தன்பக்கம் இழுத்துக் கொண்டார்.
‘ நன்றாக வேண்டிக்கொண்டாயா ? ‘
தலையை அசைத்தான் பரத். ‘ நீங்கள் கூறியதுபோல் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்காமல் நன்றாக விளையாடுவதற்கும் படிப்பதற்குமான மனநிலை வரவேண்டும் என்று பொதுவாக வேண்டிக்கொண்டேன் ‘
கற்பூரம்போல் ஒருமுறை சொல்லியதை அப்படியே பிடித்துக்கொண்ட பேரனை ‘ சமர்த்து ‘ என்றபடி அணைத்துக்கொண்டார்.

ஒருநிமிடம் மௌனமாக இருந்த பரத் சிறிது தயங்கினாலும் பாட்டியை உரிமையுடன் வினவினான்.
‘ பாட்டி! நீங்களும் சுற்றிவந்து நமஸ்கரித்தபோது மனதில் எதையோ வேண்டிக் கொண்டதுபோல் இருந்தது. என்ன வேண்டிக்கொண்டீர்கள் ? ‘
பாட்டி திடுக்கிட்டாள்.
‘ அப்படி ஒன்றும் இல்லை ! எனக்கேன்ன வேண்டும் இந்த வயதில் ? ‘
‘ இல்லை ! ஏதோ வேண்டிக் கொண்டீர்கள் என்பது எனக்குப் புரிந்தது. என்ன என்று எனக்கு மட்டும் சொல்லுங்கள்; பொய் சொல்லக்கூடாது என்று நீங்கள் தானே சொல்லித் தந்தீர்கள் ! ‘
பாட்டியிடம் கற்றதை பேரன் அவருக்கே திருப்பிப் படித்தான்.

பாட்டியின் முகம்தான் பாவமாய் மாறியது. கூற வேண்டிய நிர்பந்தம்.
பரத் கண்களில் அப்படி ஒரு ஆர்வம் மின்னியது.
‘ தாத்தாவை உன்னிடம் அழைப்பதற்கு முன் என்னை முதலில் உன்னிடம் கண்டிப்பாக அழைத்துக்கொள் என்று கடவுளிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டேன் ‘
பரத் கண்களில் திடீரென ஒரு மருட்சி ! ஒருவித அச்சம் !

‘ இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கக்கூடாது என்று நீங்கள்தானே சொன்னீர்கள் ! ‘
‘ ஆமாம் ! உன் வயதில் உனக்கு கேட்பதற்கு நிறைய இருக்கின்றன. எனக்கு இது மட்டும்தான் வேண்டும். அதுதான் மனநிறைவைத் தரும் என்பதால் அதை மட்டும் விரும்பி கேட்டுக் கொண்டேன். ‘

அந்த ஹோமமும் பூஜையும் நீண்ட ஆயுளுக்குக்காகச் செய்வது என்ற கேள்விப்பட்டிருந்த பரத்திற்கு அவரது இறைஞ்சல் புதுமையாக இருந்தது. மனதில் மட்டும் ஒரு சங்கடம் ஆட்கொண்ட உணர்வு. மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றான்.
‘ வயதானால் புரிந்துகொள்வாய் !’ பாட்டி அவன் தலையை அனுதாபத்துடன் வருடிவிட்டாள்.
பாட்டியின் வேண்டுதல் புரிந்ததோ இல்லையோ அவரைப் பற்றி முழுதும் விளங்கியதுபோல் பரத்திற்குத் தோன்றியது.
வியப்புகள் மதிப்புகளாய் மாறிக்கொண்டிருந்தன.

ஜி. குமார்/கால் அரைப் பங்கு – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஜி. குமார்/முதுமையின் இறைஞ்சல்…”

Comments are closed.