
மாதவன் கன்னங்களைத் தடவிப் பார்த்துக்கொண்டார். விளம்பரங்களில் வருவதுபோல் வழு வழுப்பாக இருந்தன. பூரண திருப்தியுடன் இஸ்திரி போட்டு வந்திருந்த உடைகளை உடுத்திக் கொண்டார். கழுத்துப்பட்டையையும் அணிந்துகொண்டு முடிச்சை இறுக்கிக் கொண்டார். வாரத் தொடக்கத்தில் அதிக உற்சாகம் பிறந்தது. இன்னும் ஒருமணி நேரத்தில் நிர்வாக இயக்குனர் முன் இருக்கப் போகிறோம் என்ற எண்ணம் சிறிய மனக் கிலேசத்துடன் ஒரு பெருமிதத்தையும் தந்தது.
அவரை அறியாமல் அவர் பார்வை படுக்கை பக்கம் சென்றது. அனைவர் முன்னிலையில் அவர் விளக்கிப் படிக்க வேண்டிய வருடாந்திர பட்ஜெட்டைத் தாங்கிய மடிக்கணிணி படுக்கை விரிப்பின் மேல் கம்பீரமாய் அமர்ந்திருந்தது. முதல் நாள் இரவு பத்துமணி வரை அமர்ந்து முடித்த பணி ! முழுமை பெற்றிருந்தாலும் இயக்குனர்கள் முன் சமர்ப்பிக்கவேண்டும் என்ற கிலி கொஞ்சம் மாதவனிடம் படரத்தொடங்கியிருந்தது.
காலை உணவிற்கு சாப்பாட்டு மேஜையை மாதவன் அடைந்தபோது அவர் பெண் சௌம்யா உப்புமாவை அள்ளி அள்ளி விழுங்கிக்கொண்டிருந்தாள். பள்ளிக்குப் பறக்கும் அவசரம் ! எவ்வளவு சொன்னாலும் கடைசி நிமிட வேலை ! ஆனால் வழக்கம்போல் ஒரு கையில் மட்டும் புத்தகம். !!
சாப்பிட வைத்த பின்னர் மதிய டி•பனையும் மூவருக்கும் கட்டி வைத்துவிட்டு ஜானகி தலைவாரிக் கொண்டிருந்தாள். மாதவனது தர்மபத்தினி. அவளுக்கும் அலுவலகம் போகும் பரபரப்பு. அவ்வப்போது மேஜை பக்கம் வந்து தானும் வாயில் ஒரு விள்ளலை அள்ளிப்போட்டுக்கொண்டே
‘ நேரமாச்சு ! ‘ என்று பெண்ணை துரிதப்படுத்திக் கொண்டிருந்தாள்.
நாற்காலியை இழுத்துப்போட்டு மாதவன் உட்காரவும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை ஒரு கையால் சௌம்யா திருப்பியதும் ஒன்றாக நடந்தன. மேஜை நுனியில் இருந்த சாம்பார் கிண்ணம் அப்படியே கவிழ்ந்து மாதவன் உடையில் தெறித்தது. சட்டை, பேண்ட், டை என்று எல்லாம் பாழ் ! புற்றுநோயைத் தடுக்கவல்லது என்று படித்ததிலிருந்து ஜானகி வழக்கமாக மஞ்சள் பொடியை வேறு அதிகமாகப் போடுபவள்.
ஏற்கெனவே படபடப்புடன் இருந்த மாதவன் சினத்தின் உச்சிக்கே போனார்.
‘ சாப்பிடும் போதும் புஸ்தகம்… ! ஒவ்வொரு நாளும் பஸ் வந்து அலறினப்பறம்தான் கிளம்பறது… ! மேஜை மேல எது எங்க இருக்குன்னு கூட தெரியாத ஜடம்…. ! ‘
மாதவனது வசைகள் தொடர்ந்துகொண்டிருந்தன. ஏற்கெனவே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த சௌம்யாவின் கண்கள் குளமாயின.
பெண்ணிற்குப் பரிந்து பேச ஜானகி வாயெடுத்தாள்.
‘ கிண்ணத்தை ஓரமா வச்சதே தப்பு ! அதை அவளுக்கு சொல்லவும் உனக்குத் தெரியல…. ‘
மனைவியையும் சாடத்தொடங்கினார்.
‘ நீங்களுந்தானே பாத்தீங்க ! அதை தள்ளிவச்சுட்டு உங்களால உட்கார முடியலையா.. ? எங்கள ஏன் திட்டறீங்க ? ‘
ஜானகியாலும் அமைதி காக்க முடியவில்லை. வார்த்தைகள் தடித்தன. மாதவன் பாதியிலேயே எழுந்தார். உடை மாற்றிக்கொள்ள வேண்டும். கைக்கடிகாரம் வேறு உபாதையை அதிகரித்துக் கொண்டிருந்தது.
மாதவன் கீழே இறங்கி வரும்போது கதவருகே நின்றபடி சௌம்யா விசும்பிக்கொண்டிருந்தாள். அவரைப் பார்க்காமலேயே ஜானகி வேண்டினாள்.
‘ பஸ் போயிடுத்து ! போகும்போது அவளை ஸ்கூல் பக்கம் விட்டுட்டுப் போயிடுங்க ! எனக்கு வழி வேற ! ‘
‘ மனுஷனை சித்திரவதை செஞ்சே கொன்னுடுவீங்க ! ‘
மறுபடியும் கத்தினார். கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே வண்டியை ஓட்டினார். பள்ளிக்கூடம் வந்ததும் சௌம்யா விழுந்தடித்துக்கொண்டு இறங்கி ஓடினாள். அவரைப் பார்த்து கையைக்கூட அசைக்கவில்லை.
பெருமூச்சு விட்டுக்கொண்டே வண்டியைக் கிளப்பிக்கொண்டு மறுபடியும் கடிகாரத்தைப் பார்த்தார். அதற்குள் செல்பேசி ஒலித்தது… இயக்குனரின் காரியதரிசி…
‘ இன்னும் பத்து நிமிஷத்தில இருப்பேன்… ‘
ஒரு கையால் எடுத்து சொல்லிக்கொண்டே ஆக்சிலேட்டரை அழுத்தி மிதித்தார். சாலை முடிவில் திரும்புவதற்கு முன் பறந்து கொண்டிருந்த அவரது காரை விசிலடித்து போலிஸ்காரர் நிறுத்தினார். மாதவனுக்கு அழுகை வராத குறை..
‘ பள்ளிக்கூடம் இருக்கற இடம்னு தெரியாதா…? தாங்க முடியாத வேகம்…….. ‘
கடுமையான குரலில் அதட்டிக்கொண்டே பேப்பர்…. லைசன்ஸ்… என்று ஒவ்வொன்றாக போலிஸ்காரர் கேட்கத் தொடங்கினார். அவரை ஒருவழியாக சமாளித்து அலுவலகம் அடைந்தார். இயக்குனரின் காரியதரிசி அவர் இருக்கை முன் அமர்ந்திருந்தார். முன்பே வந்திருக்க வேண்டும்..
‘ நீங்க தயார் செஞ்ச பட்ஜெட் நகல் ஒன்னு தாங்க. இல்லாட்டி அதை மின்னஞ்சல் செஞ்சிடுங்க ! எல்லாருக்கும் ஒரு காப்பி வேற தரனும்…. நான் பாத்துக்கறேன். இயக்குனர் அதை ஒரு தடவை உங்ககூட தனியா இருந்து பார்க்கனும்னு சொன்னார் ‘
அவசரம் அவசரமாக இருக்கையில் அமர்ந்துகொண்டவர் திடீரென்று தலையில் கைவைத்துக் கொண்டார்.
‘என்ன சார் ! என்ன ஆச்சு ? ‘
நடந்த களேபரத்தில் மடிக்கணினியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததை அந்தப் பையனிடம் எப்படி சொல்வது என்று அவருக்கே புரியவில்லை. மென்று முழுங்கினார்.
‘ சார் ! உடம்புக்கு ஒன்னுமில்லையே “
‘ இல்லப்பா ! ‘ அவன் கையைப் பிடித்துக்கொண்டார். ‘ வீட்டில லேப்டாப்பை மறந்து வச்சுட்டு வந்துட்டேன் ! எப்படியாவது ஒரு அரைமணி நேரம் அவர்கிட்ட டைம் கேட்டு வை. சீக்கிரம் வந்துடறேன் ! “
காரியதரிசி என்ன செய்வதென்றே விழித்துக் கொண்டிருக்கையில் மாதவன் மறுபடியும் காரில் ஏறிப் பறந்தார்.
ஒரு வழியாக வியர்க்க விறுவிறுக்கத் திரும்பி வந்து கணிணியும் ஒரு நகலுமாய் நிர்வாக இயக்குனர் அறையை அடைந்த போது அவர் மாதவனை வறுத்தெடுக்க மறக்கவோ தயங்கவோ இல்லை.
‘சீனியர் டைரக்டர்களை காக்க வைக்கனும்னு கங்கணம் கட்டியிருந்தீங்களா….வேலையை முடிக்க முடியலைன்னா அதை வெளிப்படையா சொல்லியிருக்கலாமே …! ‘
அவர் பேசப்பேச மாதவனுக்கு நாக்கைப் பிடுங்கிக்கொள்லலாம் போல இருந்தது. மௌனமாக நகலை அவர் கையில் தந்தார். விவாதத்தின்போதும் அவர் செய்து முடித்துக் கொண்டு வந்திருந்த வேலையும் அதன் உயரிய தரமும்தான் அவரைக் காப்பாற்றியது என்று சொல்லலாம்……..
தலையில் வைத்துக்கொண்டே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தார் என்று தெரியாது. மதிய உணவு வேளையில் நிர்வாக மேலாளர் பிரசன்னா வந்து அவர் தோளைத் தொட்டதும்தான் திடுக்கிட்டு எழுந்தார். வழக்கமாக இருவரும் ஒன்றாக உணவு அருந்துபவர்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் பிரசன்னா ஓய்வும் பெறப்போகிறவர்.
‘ என்ன ஆச்சு மாதவன் ? ஏனிப்படி சுரத்தில்லாம உட்கார்ந்திருக்கீங்க ? ‘
மாதவன் அழாக்குறையாக நடந்ததையெல்லாம் ஒன்று விடாமல் விவரித்தார்.
‘ வேளை சரியில்லை ‘ என்று மாதவன் சொல்ல முடிக்க பிரசன்னா சிரித்தார்.
‘ நல்லவேளை கெட்ட வேளைங்கறதெல்லாம் இந்த மாதிரி சமயத்தில நம்ம எதிர்வினையைப் பொறுத்தது. சூழ்நிலையை நம்ம முட்டில வச்சுக்கனும்னா நம்மளோட எதிர்வினையும் சரியா இருக்கனும். அது சரியில்லாதப்பதான் இந்த மாதிரி நிலைமை !
தப்பா நினைச்சுக்காதீங்க மாதவன் ! நீங்களும் நல்லா படிச்சிருக்கீங்க ! ஏதோ..உங்களவிட வயசானவங்கற முறையில சொல்றேன்..
ஏர்போர்ட்டுக்குப் போறோம். பிளேன் கிளம்ப தாமதம் ஆனா அந்த ஊழியர்களோட சண்டை போடறதையோ, நொந்துபோறதையோ விட்டுட்டு ஏதாவது புஸ்தகம் படிக்கலாம்…. கார் வழியில நின்னு போச்சுன்னா டயரை உதைக்கிறதை விட்டுட்டு யாராவது உதவிக்கு வராங்களான்னு பார்க்கலாம். இரத்தக்கொதிப்பை நாமளே ஏத்திக்கவேண்டாம்..
உங்களுக்கு நடந்ததையே பாருங்க ! சாம்பார் விழுந்தது கிண்ணத்தோட தப்பில்ல ; அதை வச்சவங்க தப்புகூட இல்லைன்னு சொல்லலாம். ஸ்கூல் பஸ் டிரைவர் நிக்கலைன்னு சொல்ல முடியாது. போலிஸ்காரர் உங்களைத் துன்புறுத்தினார்னு பழியை அவர் மேலவும் போடமுடியாது.
யோசிச்சுப் பாத்தீங்கன்னா ஒரு சின்ன விஷயம் – சாம்பார் கிண்ணம் இடறி உங்க மேல விழுந்ததுக்கு நீங்க என்ன செஞ்சீங்க என்கிறதலதான் அதுக்குப் பின்னால நடந்ததெல்லாம் இருக்கு…
சாம்பார் கிண்ணம் விழுந்தப்ப உங்க பெண் கலங்கியிருக்கலாம்.
பரவாயில்லைம்மா ! இனிமே ஜாக்கிரதையா இருன்னு சொல்லிட்டு நீங்க உடையை மாத்திட்டு வந்திருக்கலாம். உங்க பெண் ஆசையா உங்களுக்குக் டாடா காமிச்சுட்டு பஸ்ல ஏறியிருப்பா ! ஆபிசுக்கு சீக்கிரம் வந்திருப்பீங்க ! நீங்க பண்ணிவச்சிருந்த வேலையையும் உங்க உண்மையான உழைப்பும் டைரக்டருக்குத் தெரிஞ்சதுதான். அவர் நேரடியாவே உங்களைப் பாராட்டியிருப்பார்… இல்லையா ! ‘
புரியாமல் இல்லை. பிரசன்னா சொல்லும்போது சரியாக மண்டையில் ஏறியதுபோல் இருந்தது. மாதவன் தலையை ஆட்டினார்.
‘ பாருங்க ! பத்துலேந்து பதினஞ்சு பர்செண்ட் வரைக்கும்தான் நமக்குத் தெரியாம ஒரு சூழ்னிலை வரும். கால் பகுதியிலேகூட அரைப் பங்குன்னு சொல்லலாம். மீதி நிலவரத்துக்கு நம்மோட நடவடிக்கைதான் காரணம்… ‘
மாதவனை கையைக்கூட ஆட்டாமல் சௌம்யா ஓடியதுதான் வதைத்துக்கொண்டிருந்தது.
பிரசன்னா இன்னும் அருகில் வந்தார்.
‘ வேற வேலையைத் தேடி நாம் போகலாம். அல்லது நமக்கு ஏதாவதுகூட ஆயிடலாம். வேற ஆள் கம்பெனிக்கு சுலபமா கிடைச்சுடும். ஆனா நமக்கு ஏதாவது ஒன்னுன்னு ஆயிட்டா அந்த இழப்பை தாங்காம அவதிப்படறது நம்ம குடும்பம்தான். நாம ஆபீசுக்கு வந்தவுடனேயே அதிகப் பழக்கம் .. ஏன் முன் பின் தெரியாதவங்க கிட்ட கூட ‘ குட் மார்னிங் ‘ ன்னு முகம் மலர சொல்றோம். யார் காலையாவது தெரியாம மிதிச்சுட்டோம்னாகூட ‘ மன்னிச்சுக்கங்க ‘ அப்படீன்னு தாழ்மையா கேட்டுக்கறோம். .
நம்ம மேலேயே அதிக அன்பு. பற்று, பாரம்னு எல்லாத்தையும் வச்சிருக்கிற மனைவி, மகன், மகள்..ன்னு யார்கிட்டயாவது இப்படி இருக்கோமா… ? சொல்லுங்க ! நமக்கு எவ்வளவோ படபடப்பு இருக்கலாம். குறைந்த பட்சம் நம்மளோட நடத்தை அவங்கள அதிகம் பாதிக்காம நடந்துக்கலாம் இல்லையா…. ?
பிரசன்னவிற்கு இன்னும் எவ்வளவோ பேச வேண்டியிருந்தது. மாதவன் அவர் கைகளை வாஞ்சையுடன் பற்றிக்கொண்டார்.

One Comment on “ஜி. குமார்/கால் அரைப் பங்கு”
Comments are closed.