
…………………………………….
*வாஜ்பாய் என்றொரு கவிஞர்!*
(படங்கள்: வாஜ்பாய், புத்தக அட்டை, வாமனன்)
வாஜ்பாயின் இந்திக் கவிதைகளைப் பெரிதும் ரசித்தவர் புதுவைப் பல்கலை துணைவேந்தராக இருந்தவரும் பின்னர் திட்டக் குழு அங்கத்தினராகப் பதவி வகித்தவருமான காலஞ்சென்ற டாக்டர் கி. வெங்கட சுப்பிரமணியன்.
அவர் வாஜ்பாயின் கவிதைகள் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக அவரது தேர்ந்தெடுத்த கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். பின்னர் அவற்றைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டார். வாஜ்பாயின் கவிதைகள் சிலவற்றைப் பத்திரிகையாளர் வாமனனும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
…………………………………….
*இலக்கியத்தில் கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, நாவல் என்று பல்வேறு துறைகள் இருக்கின்றன. அவற்றில் கவிதையைத் தான் இலக்கிய சாம்ராஜ்யத்தின் மகாராணி என்கிறார்கள்.
மிகச்சிறந்த வெளியீட்டுத் திறன், அபாரமான மொழி ஆளுமை, உயர்ந்த கற்பனை வளம், எதையும் பரிவுடன் பார்க்கும் மென்மையான மனம் இவையெல்லாம் இருந்தால்தான் ஒருவர் கவிஞராக விளங்க முடியும்.

இத்தகைய அனைத்துப் பண்புகளையும் கொண்டவராக இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்தார் என்பதும், அவர் இந்தி மொழியில் மிகச் சிறந்த கவிஞராக விளங்கினார் என்பதும் நம்மில் பலர் அறியாத செய்தி.
அடல் பிகாரி வாஜ்பாய் தொடர்ச்சியாக அல்ல என்றாலும் இடைவெளி விட்டு, மூன்று முறை இந்தியப் பிரதமராக இருந்தவர்.
முதல் முறை 1996 இல் 13 நாட்களுக்கு மட்டுமே இடைக்காலப் பிரதமராக இருந்தார். அடுத்தமுறை 1998 மற்றும் 1999 களில் 13 மாதங்கள் பிரதமராக இருந்தார். மூன்றாம் முறை 1999 முதல் 2004 வரை முழுமையாக ஐந்தாண்டுகள் பிரதமராக விளங்கினார்.
50 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய அரசின் பாரத ரத்னா, பத்ம விபூஷண் போன்ற உயரிய பட்டங்களைப் பெற்றவர்.

எழுதுவதில் ஆர்வம் கொண்ட அவருக்கு பத்திரிகையாளராக வரவேண்டும் என்பதுதான் இளமைக்கால விருப்பமாக இருந்தது.
`தீன்தயாள் உபாத்யாய் நடத்திய மாதப் பத்திரிகையில் வேலை செய்தவன் நான்` என்று அடிக்கடி அவர் பெருமிதத்தோடு கூறிக் கொள்வார். தாம் வகித்த பதவிகளைத் தாண்டிய இலக்கியப் பெருமை வாஜ்பாயுடையது.
கவிதைப் பெண்ணை நேசிக்கும் தான், இன்னொரு பெண்ணை மணந்துகொண்டு அந்தப் பெண்ணுக்கும் தான் நேசிக்கும் கவிதைப் பெண்ணுக்கும் இடையே சண்டை வருவதை விரும்பவில்லை என்றும், அதனாலேயே தாம் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் அவர் புன்முறுவலுடன் சொல்வதுண்டு.
வாஜ்பாயின் கவிதைகள் வாழ்வின் யதார்த்தத்தைச் சொல்லும் கவிதைகளாகவும் பொதுமக்களின் மனத்திற்கு நெருங்கிய விஷயங்களைப் பேசும் கவிதைகளாகவும் முக்கியமாக எளிய மொழியில் எழுதப்பட்டு ஆழ்ந்த கருத்துக்களைத் தெரிவிக்கும் கவிதைகளாகவும் இருந்தன.
வாஜ்பாயின் இந்திக் கவிதைகளைப் பெரிதும் ரசித்தவர் புதுவைப் பல்கலை துணைவேந்தராக இருந்தவரும் பின்னர் திட்டக் குழு அங்கத்தினராகப் பதவி வகித்தவருமான காலஞ்சென்ற டாக்டர் கி. வெங்கட சுப்பிரமணியன்.
அவர் வாஜ்பாயின் கவிதைகள் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக அவரது தேர்ந்தெடுத்த கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். பின்னர் அவற்றைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டார். வாஜ்பாயின் கவிதைகள் சிலவற்றைப் பத்திரிகையாளர் வாமனனும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
வாஜ்பாய் பற்பல புத்தகங்களின் ஆசிரியர். அவர் எழுதிய நூல்களில் உரைநடை நூல்களும் உண்டு. கவிதை நூல்களும் உண்டு.
அவரின் முக்கியமான பேச்சுக்களும் பின்னர் தொகுக்கப்பட்டு நூல்களாகியுள்ளன. என்றாலும் அவரது நூல்களில் அதிகம் புகழ்பெற்றவை கவிதை நூல்களே.
முதல்முறையாக அவர் ஆட்சியில் அமர்ந்த போது அவரைப் புதிய பிரதமராகத் தான் மக்கள் நினைத்தார்கள்.
ஆனால் அவரின் கவித்துவமும் ஆழ்ந்த சிந்தனைகளும் நிறைந்த உரைகளையும் கவிதைகளையும் அறிந்து கொண்டவுடன் அவர் புதிய பிரதமர் மட்டுமல்ல, புதிய இந்தியாவின் பிரதமர் என மக்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
வாஜ்பாயின் பேச்சுத் திறனையும் பழகும் தன்மையையும் பார்த்து `இந்த இளைஞர் ஒருநாள் இந்தியாவின் பிரதமராவார்` என்று நேரு முன்னரே சில வெளிநாட்டுப் பிரமுகர்களிடம் சொன்னதுண்டு.
நேருவின் ஊகம் பொய்க்கவில்லை. என்றாலும் மூன்று முறை பிரதமராக இருந்த அவர் எப்போதுமே கவிஞராக இருந்தார்.
இந்தி மொழியின் குறிப்பிடத்தக்க கவிஞராக விளங்கிய வாஜ்பாய், தாம் ஓர் அரசியல்வாதி என்று அறியப்படுவதை விடவும் கவிஞர் என்று அறியப்படுவதையே பெரிதும் விரும்பினார்.
93 வயதுவரை நிறைவாழ்வு வாழ்ந்த அவர், தம் வாழ்வின் கணிசமான காலத்தைக் கவிதை எழுதுவதிலேயே கழித்தார்.
`கய்தி கவிராஜ் கி குண்டலியான், அமர் ஆக் ஹை, மேரி ஐக்ய வன கவிதா, க்யா கோயா க்யா பாயா, மேரி இக்யாவன் கவிதாயேம்` என்பன போன்ற தலைப்புகளில் அவரது பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன. அவை பரவலான பாராட்டையும் இலக்கிய அந்தஸ்தையும் பெற்றவை.
வாஜ்பாய் கவிதைகளின் ரசிகரான ஜகஜித்சிங் என்பவர், அவரது கவிதைகள் சிலவற்றை `சம்வேதனா` என்ற தலைப்பில் இசையமைத்துப் பாடகர்களைப் பாடச் செய்து ஒலிப்பேழையாகவும் வெளியிட்டுள்ளார். இசை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த ஒலிப்பேழை அது.
குவாலியரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் வாஜ்பாய். தாய்மொழி இந்தி. தம் தாய்மொழி மேல் அவருக்கு அபரிமிதமான பற்று இருந்தது. இந்தி மொழியைக் கையாள்வதில் இளமையிலேயே நிபுணராக விளங்கினார்.
அவருக்கு இயல்பிலேயே கவிதை மனம் வாய்த்திருந்தது. அவர் இந்தியின் உயர்நிலைக் கவிஞர்களாலேயே கொண்டாடப்படும் ஒரு சிறந்த இந்திக் கவிஞராகப் பின்னாளில் மலர அவர் இளம் வயதிலேயே கொண்ட எழுத்தார்வம் தான் காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
வாஜ்பாய் இந்தியாவின் புகழ்பெற்ற பேச்சாளர்களில் ஒருவர். மணிக்கணக்கில் கேட்பவர்களைக் கட்டிப் போடும் வகையில் உரையாற்றும் வல்லமை கொண்டவர்.
அந்த உரைகளில் இடையிடையே தம் கவிதைகளையும் அவர் மேற்கோளாகக் காட்டுவார். அவர் தம் பேச்சினிடையே தம் கவிதைகளைச் சொல்லும்போதெல்லாம் பலத்த கைதட்டல் எழும். பொதுமக்களுக்கு அவரது கவிதைகளைக் கேட்பதில் ஒரு தனி ஆர்வம் இருந்தது.
ஒருமுறை நோய்வாய்ப்பட்டு நியூயார்க் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அப்போது மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் அவர் மனத்தை ஆக்கிரமித்தன.
மரணத்தைப் பற்றி அவர் இந்தியில் ஒரு புகழ்பெற்ற கவிதையை எழுதியது அப்போதுதான். பலராலும் கொண்டாடப்படும் அந்தக் கவிதையின் தலைப்பு `மரணத்தோடு மோதிவிட்டேன்` என்பது.
அந்தக் கவிதையை வாசிக்கும் போது மரணத்தைப் பற்றி அவர் என்ன வகையான எண்ணங்கள் கொண்டிருந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
மரண பயம் அறவே அவருக்கு இருந்ததில்லை என்பதையும் அந்தக் கவிதையின் வரிகள் புலப்படுத்துகின்றன. அந்தக் கவிதை இதோ:
*மரணத்தோடு மோதி விட்டேன்….*
மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்றுநேற்று வந்தவை அல்ல.
வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனத்தைத் தொலைத்துவிட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம்
நான் ஏன் பயம் கொள்ள வேண்டும்?
மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே!
என்னை எதிர்கொண்டு
நேரடியாகப் பரீட்சித்துப் பார்!
வாஜ்பாயின் இந்தக் கவிதையைப் படிக்கும்போது `காலா! உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன். என்றன் காலருகே வாடா! சற்றே உன்னை மிதிக்கிறேன்!` என மரணத்தைப் பற்றி மகாகவி பாரதியார் பாடிய கவிதை வரிகள் நமக்கு நினைவு வரும்.
தமிழில் நிலையாமையைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் பட்டினத்தார், தாயுமானவர் உள்ளிட்ட பலர் பாடியுள்ளனர்.
`நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு!` என்று வள்ளுவரும் மரணத்தைப் பற்றிச் சொல்கிறார்.
இத்தகைய கவிதைகளின் வரிசையில் வாஜ்பாய் எழுதிய இந்த இந்திக் கவிதையும் இணைகிறது. வாஜ்பாயின் கவிதைகளில் அதிகம் புகழ்பெற்ற கவிதை இது.
`அரசியலை விட தேசம் முக்கியமானது` என்ற கருத்தை வாஜ்பாய் தம் கவிதைகளில் ஓங்கி ஒலிக்கச் செய்தார். தேச பக்தி நிறைந்த சிந்தனைகள் அவரது பல கவிதைகளில் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.
அகிம்சையையே தம் ஆயுதமாகக் கொண்டிருந்த மகாத்மா, வன்முறையால் சுட்டுக் கொல்லப்பட்டார் அல்லவா? இந்தியாவின் வழி அகிம்சை வழி என்பதால் அது அணுகுண்டுச் சோதனை நிகழ்த்தாது என அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எண்ணியிருந்தன.
ஆனால் 1974இல் பொக்ரானில் அணுகுண்டுச் சோதனையை நிகழ்த்தியது இந்திராகாந்தி தலைமையிலான அரசு. உலகம் முழுவதும் இந்தியாவின் அணுகுண்டு ஒலியைக் கேட்டு வியப்போடு திரும்பிப் பார்த்தது.
புத்த பூர்ணிமா தினத்தன்று இந்த முதல் நிகழ்வு நிகழ்ந்ததால் இந்த நிகழ்வுக்கு `சிரிக்கும் புத்தர்` என்றே பெயர் சூட்டினார்கள். அப்போது இந்திராகாந்திக்கு நேர் எதிர்க்கட்சியில் இருந்த வாஜ்பாய், அணுகுண்டு சோதனையை ஆதரித்தார்.
பின்னர் 1998 இல் நம் தேசம் இன்னொரு முறை அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது. அப்போது பிரதமராக இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். இம்முறை அணுகுண்டு வெடித்தவுடன் பிரபலமானவர்கள் என இரண்டு பேரைச் சொல்லலாம். ஒருவர் வாஜ்பாய். இன்னொருவர் அப்துல் கலாம்.
மென்மையான மனம் படைத்த கவிஞரான அவர் எப்படி அணுகுண்டு சோதனைக்கு ஆதரவளிக்கிறார் என அவரை நேரடியாகவே கேட்டார் ஒரு நிருபர்.
`நம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு மிக மிக முக்கியம். மற்ற நாடுகள் இத்தகைய சோதனைகளைச் செய்துகொண்டிருக்கும் போது நாம் வாளாவிருப்பது சரியல்ல.
அது எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பைப் பாதிக்கலாம். எனவேதான் நான் தேச பக்தியுள்ள கவிஞன் என்ற வகையில் அணுகுண்டு சோதனையை ஆதரிக்கிறேன்!` என அவர் பதில் சொன்னார்.
`நாம் அணுகுண்டு சோதனை நிகழ்த்துவதால் நம் நாட்டின் மீது பிற வல்லரசு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தால் என்ன செய்வது` என்றும் அவரிடம் கேட்கப்பட்டது.
`எந்தத் தடையாலும் நமக்கு எந்தத் தீங்கும் வராது. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் பணியக் கூடாது` எனத் தெள்ளத் தெளிவாகத் தம் கருத்தைச் சொன்னார் வாஜ்பாய்.
பனித்துளியைப் பற்றி ரவீந்திரநாத தாகூர் ஒரு கவிதை எழுதியுள்ளார். `பனித்துளி என்பது தாமரை இலையின் மேலே உள்ள சிறிய நீர்த்துளி. ஏரி என்பது தாமரை இலையின் கீழே உள்ள பெரிய நீர்த்துளி` என்ற, தாகூரின் `ஸ்ட்ரே தாட்ஸ்` என்னும் புத்தகத்தில் வரும் வரிகள் புகழ்பெற்றவை.
பனித்துளியைப் பற்றி வாஜ்பாயும் ஓர் அழகான கவிதையை எழுதியுள்ளார்.
பனிக்கால கர்ப்பத்தினின்று
கிளம்பி வரும் குழவிச் சூரியன்
கிழக்கின் மடியில்
தவழத் தொடங்கும்போது
என் தோட்டத்தில்
ஒவ்வோர் இலையிலும்
பொன்னொளி சுடர் விடுகிறது.
சூரியன் ஒரு நிதர்சனம்.
அவனை இல்லை
என்று சொல்ல முடியாது.
ஆனால் பனித்துளியும்
ஒரு சத்தியம் தானே…
கணநேர சத்தியம்
என்பது வேறு விஷயம்..
அந்தக் கணங்களை நுகரவே
நான் ஏன் வாழக் கூடாது?
`சூரியன் மீண்டும் எழுவான்!
வெய்யிலோ மீண்டும் தோன்றும்!
ஆனால் என் தோட்டத்துப்
பச்சைப் பசும்புல்லில்
பனித்துளிகள்
எல்லாப் பருவங்களிலும்
காண இயலாது!`
எனப் பனித்துளியின் அழகை ரசித்து அவர் எழுதிய கவிதையை இந்திக் கவிதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
`வெற்றியும் தோல்வியும் வாழ்வின் இரு பகுதிகள். இரண்டையும் நாம் ஒன்றுபோலத் தான் பார்க்கவேண்டும்.` என்று ஒரு கவிதையில் வலியுறுத்திச் சொல்கிறார் அவர்.
`துப்பாக்கிகள் நம் பிரச்னைகளைத் தீர்க்காது. சகோதரத்துவம் ஒன்று மட்டுமே நம் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு.` எனவும் இன்னொரு கவிதையில் அறைகூவுகிறார்.
`நண்பர்களை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அண்டை வீட்டுக்ககாரனை ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே நாம் அண்டை வீட்டுக்காரனிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்` என அவர் பாகிஸ்தானைப் பற்றி அடிக்கடிச் சொல்வதுண்டு.
*போரில்லாத பூமி வேண்டும் என்று ஒரு கவிதையில் பேசுகிறார் வாஜ்பாய்.
`நானிலம் இனி ஒருபொழுதும்
குருதியின் துளிகளைத் தாங்காது!
விளை நிலங்கள் ஏதும் இனி
மரணத்தை அறுவடை செய்யாது!
இனி ஒரு பொழுதும்
வானம் தீமழை பொழியாது
பொழிவது அமெரக்கக் குண்டுகளோ
அன்றி ரஷ்ய வகையினதோ
சிந்தும் ரத்தம் ஒன்றே ஆம்.
போரின் துயரம் நாம் பட்டோம்.
அதன் விதியினின்றும்
நம் சந்ததியைக் காப்போம்!
நாம் இனி
போர் நிகழ விடமாட்டோம்.`
அவரின் இன்னோர் அழகிய கவிதை மக்களில் ஒருவனாக இருப்பதையே தாம் என்றும் விரும்புவதாகச் சொல்கிறது:
`நெடிதுயரத்தில் என்னை ஏற்றி வைக்காதீர்.
நெடிதுயர்ந்த ஒரு மலையில்
மரங்கள் வேர் கொள்ளாது
செடிகொடிகள் வளராது.
புல்லும் கூடப் பிறக்காது.
உயரே செல்லச் செல்ல
ஒரு மனிதனின் தனிமை சுடும்.
அவன் தன் சுமைகளைத்
தானே தாங்கி நிற்கிறான்.`
`என்னுடைய கவிதை மனம், அரசியலின் பதற்றமான சூழல்களில் எனக்கு வலிமை கொடுக்கிறது.` என்று ஒருமுறை தெரிவித்திருக்கிறார் அவர்.
`பதவிக்கு வந்து அதைத் தக்கவைத்துக் கொள்வதை ஒரு சாதனையாக என்றும் நான் கருதியதே இல்லை. பதவியில் இருக்கும்போது நான் என் தேசத்திற்கு என்னென்ன செய்கிறேன் என்பதுதான் சாதனை என்பதை நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.` என்றும், `ஜனநாயகத்தின் வலிமைதான் நம் தேசத்தின் பெருமிதம். அதை ஒருபோதும் நாம் இழந்துவிடக் கூடாது.` என்றும் அவர் அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
`சொல்லச் சொல்ல நாவினிக்கும், கேட்கக் கேட்கக் காதினிக்கும், நினைக்க நினைக்க மனம் இனிக்கும் கவிதைகள் வாஜ்பாயின் கவிதைகள்` என்று வாஜ்பாய் கவிதைகளின் ரசிகர்கள் அவரது கவிதைகளைக் கொண்டாடுகிறார்கள்.
வாஜ்பாய் காலமாகிவிட்டார். ஆனால் அவரது கவிதைகள் என்றும் அழிவதில்லை.
…………………………………….
