ஜெ.பாஸ்கரன்/“கேரளாவின் காஷ்மீர்”- காந்தளூர் ! (2)

“கேரளாவின் காஷ்மீர்”- காந்தளூர் ! (2)

காந்தளூர் கிராமம் அதன் வளமான விவசாயப் பாரம்பரியத்திற்காகப் பெயர்பெற்றது. குறிப்பாகப் பழங்கள் மற்றும் காய்கறிகள் – காலிபிளவர், முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, ப்ரக்கோலி, அவெக்காடோ, பூண்டு, நிலக்கிழங்கு போன்ற காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகின்றன. மிளகு, ஏலம், இலவங்கம்,(பட்டை) பூண்டு போன்ற மசாலா ஐடங்களும் (spices) உண்டு! குறிப்பிட்ட காலநிலையில் விளையும் பழங்கள் (சீசனல்) – ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரீஸ், ஆரஞ்சு, ப்ளம், பீச் (‘குழிப்பேரி ‘என்று எழுதினால் என்னை அடிக்க வருவீர்கள்; அப்படி ஒரு பெயர் பீச் பழத்திற்கு இருக்கிறது!), நெல்லிக்காய் எனப் பழத்தோட்டங்கள் உள்ளதால், ‘கேரளாவின் பழக் கிண்ணம்’ (Fruit Bowl of Kerala) என்ற பெயரும் காந்தளூருக்கு உண்டு!

காஷ்மீரில் குதிரைச் சவாரியைப் போலவே, காந்தளூர் ஜீப் சவாரியும் த்ரில்லிங்கான அனுபவம்தான். முதலில் நாங்கள் சென்ற இடம் ‘குச்சரம்’ அருவி எனப்படும் காந்தளூர் ஃபால்ஸ். மழையினால் மண் சாலை சேறும், சகதியுமாய் இருந்தது. ஜீப்பின் குலுக்கலில், மேலும் கீழும், இடமும் வலமுமாக ஆடியபடி வந்தோம். சாலையிலிருந்து 200, முன்னூறு மீட்டர் நடந்து, சின்ன சின்னப் பெட்டிக்கடைகளைக் கடந்து வந்தால்,சுமார் 20 மீட்டர் உயரத்திலிருந்து அருவி கொட்டிக்கொண்டிருக்கிறது. இதமான சாரலில் நனைந்தபடி அருகில் சென்றோம். அருவியின் இரைச்சலை மிஞ்சும் ஆரவாரத்துடன் சுற்றுலா வந்திருந்த பள்ளிக்கூடச் சிறுவர்களும், சிறுமிகளும் அருவியை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்! வழுக்குப் பாறைகளைக் கடந்து, மீண்டும் சிற்றருவியாய் ஓடிக்கொண்டிருந்தது தண்ணீர். ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கேற்ப சிறுவர்கள் அருவி நீரில் நனைந்து கொண்டிருந்தார்கள்.

அடுத்து பார்த்த இடம் ‘ஹனி ராக்’ (தேன் பாறை). பாறைகளின் விளிம்புகளில் தேனீக்கள் கூடு கட்டியிருக்கின்றன. வரிசையாக ஏராளமான தேனடைகள் தொங்கிக்கொண்டிருந்தன. காடுகளில் இருக்கும் தேனடைகளிலிருந்து வித்தியாசமானவை இவை என்றார் மனோஜ்.

அங்கிருந்து ‘ஸ்ட்ராபெர்ரி தோட்டம்’ (Strawberry Farm) ஒன்றின் பழங்கள், ஜாம், ஜூஸ் விற்பனை நிலையம் சென்றோம். அரையடிக்கும் குறைவான உயரத்தில் ஸ்ட்ராபெர்ரி செடிகள், பிளாஸ்டில் போர்வை போர்த்தி வரிசையாக நின்றுகொண்டிருந்தன. பிப்ரவரி மாதத்தில் பழங்கள் அறுவடை செய்வார்களாம். ஆரஞ்சு, கொய்யா, சீதாப்பழம், நெல்லிக்காய் என விற்பனை. எதிரே அலமாரிகளில், ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரி ஜாம், ஸ்ட்ராபெர்ரி பிரிசெர்வ், ஸ்ட்ராபெர்ரி கிரஷ், ஸ்க்வாஷ், கேக், தேன் என வண்ணமயமான பாட்டில்களின் கொலு! ‘இதெல்லாம் ஒரிஜினல்ங்க… வேற எதுவும் சேர்க்கறதில்லீங்க…’ என்று சொன்னதில் கிராமத்து சத்தியம் கசிந்தது – கேட்ட விலையைக் கொடுத்துவிட்டு , சற்று கூடுதல் விலைதான் என்ற போதிலும், மகிழ்ச்சியுடன் வெளியேறினோம்.

“மட் வால் – மட் ஹவுஸ்”(Mud house) என்ற வீடுகளை ஜீப்பில் போகும்போது பார்த்தோம். இயற்கையான மண் வீடுகள், வேய்ந்த கூரை, சாணம் மொழுகிய தரை என கிராமத்து வீடுகள் – உள்ளே எல்லா மாடர்ன் வசதிகளும் உண்டு!

மோஹன்லால் நடித்த ‘பிரம்மராம்’ படம் ஷூட்டிங் நடந்த இடம் – அந்தப் பெயராலேயே ‘பிரம்மராம் வியூ பாய்ண்ட்’ என அழைக்கப் படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அடுக்குகள், பச்சைப் பசேலென்ற நிலப்பரப்பு, ‘கிரீன் டீ’ புல்வெளிகள், அடர் காடுகள், சூரிய உதயம், அஸ்தமனம் என இயற்கை எழில் கொஞ்சும் இடம். பிக்னிக் செல்பவர்கள், பறவைகள் விரும்பிகள், மெடிடேஷன், யோகா செய்பவர்கள் விரும்பிச் செல்லும் இடம் இது. மரத்தின் மேல் பரண் ஒன்றை அமைத்திருக்கிறார்கள் – ஏறிச்செல்ல கைப்பிடியுடன் ஒரு ஏணி. பரணிலிருந்து சுற்றிலும் பார்த்தால் எங்கும் இயற்கையின் அழகு! கட்டம் கட்டமாகத் தேயிலைத் தோட்டங்கள், வளைந்து செல்லும் பழுப்பு நிற சாலைகள், தூரத்தில் வெள்ளிக் கம்பிகளாய் அருவிகள், அருகில் பல வண்ண மலர்ச் செடிகள் – சிறிது அயர்ந்தால் கவிதை எழுதிவிடும் அபாயம் இருக்கிறது! கீழே ஒரு சிறிய கடையில், தேன், கிரீன் டீ, யூகலிப்டஸ் என அமைதியாக விற்பனை….

திரும்ப நினைத்த போது, உடன் வந்த கலாவின் மன்னியின் செல் போனைக் காணவில்லை… எங்கோ மறந்து வைத்து விட்டார். அந்த நம்பருக்கு டயல் செய்தால், மணி அடிக்கிறது. யாரும் எடுக்கவில்லை. லொகேஷன் போட்டால், 2 கிமீ தூரத்தில் காண்பிக்கிறது. ஸ்ட்ராபெர்ரி ஃபார்ம் சென்றால் அங்கும் இல்லை. மீண்டும் லொகேஷன் போட்டால் நாங்கள் தங்கியிருந்த இடத்தைக் காண்பிக்கிறது. சார்ஜ் போட்டவர் எடுக்க மறந்து விட்டார். போட்டோ எல்லோரும் எடுத்ததால், செல் பற்றிய யோசனை வரவில்லை!

வழியில் சாலை ஓரத்திலிருந்து, எதிரில் இருந்த மலைக்கு ‘zip line’ல் – கம்பியில் தொங்கியவாறு பயணம் செய்வது – சிலர் தொங்கிச் சென்றனர். நாங்கள் அந்த திரில்லிங் அனுபவத்தை ஜீப் ரைடிலேயே பெற்றுவிட்டதால், தங்குமிடத்திற்குத் திரும்பி விட்டோம்.

மாலை நான்கு மணியளவில் நல்ல சூடான வெங்காய பஜ்ஜி, மசாலா டீ கொடுத்தார்கள்! அதற்குள் பனி மூட்டம், மேகக் கூட்டம். பால்கனியிலிருந்து எதுவும் தெரியவில்லை!

இரவு டின்னர் ஆர்டர் செய்து, ஓய்வெடுத்தோம்….

நாளை காலை மறையூர் செல்ல வேண்டும்.

தொடரும்…