
அடர்ந்த கருமைக்கும்,
பூரண வெண்மைக்கும்
இடையேதான்
ஊசலாடி நகர்கிறது
வாழ்க்கை.
பூச்சற்ற உண்மையைப்
புறந்தள்ளும் மனம்
பூசிய பொய்யை
ஏனோ நாடுகிறது.
பூசி மெழுகி
ஒரு பொய்யை உருவாக்க
பூசாத உண்மையொன்று
தேவைப்படுகிறது.
பழத்துக்கு உள்ளிருக்கும்
விதை போல,
ஒளிக்குள் மறைந்திருக்கும்
இருள் போல,
ஒவ்வொரு பொய்க்குள்ளும்
ஒளிந்து இருக்கிறது
ஓர் உண்மை.
பூச்சற்ற சுவர்
தொடக்கத்தை,
உழைப்பை,
செல்ல வேண்டிய தூரத்தை
என உண்மைகளை
நினைவுபடுத்தும் மணியாய்
ஒலித்துக்கொண்டே
இருக்கிறது.
பூச்சு திர்ந்த சுவரோ
உயிர்கள் இல்லாத கூட்டின்,
தவறவிட்ட கடமையின்,
முடிந்துபோன வாழ்வின்,
நினைவுச் சின்னமாய்
நிற்கிறது.
பூச்சுக்கும்
பூச்சு உதிர்தலுக்குமான
இடைவெளியில்
ஒரு பூவாய் மலர்ந்து
வாடி உதிர்ந்து விடுகிறது
வாழ்வு!
