
அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வில் நான் வாசித்த சிறுகதை மதிப்
லண்டன் நகர வாழ்வையும் , மும்பை வாழ்வையும் அப்படியே படம்பிடித்துக் காட்டி நாயகனுக்கு மட்டும் அல்ல, படிக்கும் வாசகர்கட்கும் தாய் நாட்டுப் பற்றைத்தூண்டும் அருமையான கதை.
ஆரம்பத்தில் லண்டன் நகர அலுவலக வாழ்வு, கணவனும் மனைவியும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டு வாழும் முறை , குழந்தைகள் அதிகாலை எழுந்து ‘டியூப் ரெயிலைப் பிடிக்கும் பரபரப்பு . லண்டன் நகரக் குளிர் , அவர் வார்த்தைகளிலேயே அந்தக் காட்சிகளில் சில இங்கே
உலர்ந்த துணியால் அந்த நேர்த்தியான பீங்கான் தட்டுக்களையும் கோப்பைகளையும் நாதன் துடைத்து முடித்தபோது அவை தங்கமாய் பளபளத்தன. வேலைப்பாடுகள் மிகுந்த அவை இன்று அதிக அழகுடன் மிளிர்வதுபோல் நாதனுக்குத் தோன்றியது..
துணி வெளுக்கும் இயந்திரத்துடன் போராடிவிட்டு பிரேமா வந்தாள்.
நாதன் கண்ணாடி ஜன்னலின் வெளியே நோக்கினார். பனி மூட்டம். பார்வை சில அடிகளே அந்த வெண்பனியை ஊடுருவ முடிந்தது. லண்டன் நகரின் இ யல்பு வாழ்க்கை ! உள்புறம் ஹீட்டர்கள் கதகதப்பைத் தந்தாலும் தங்க¨ளையே கொஞ்சம் சமைத்துக்கொள்கிறோமோ என்ற ஐயம் நாதனுக்கு எழுவதுண்டு.’
ஹீட்ட்டரின் கதகதப்பில் தங்களையே கொஞ்சம் சமைத்துக் கொள்கிறோமோ என்று அடுப்படியில் இருந்தபடியே அவர் எண்ணுகின்ற அந்த வரிகளில் ததும்பும் நகைச்சுவை நம் இதழ்களில் புன்முறுவல் பூக்கச் செய்யும்.
‘குழந்தைங்க தூங்கியாச்சா… ? ‘ படுக்கை அறையை எட்டிப்பார்த்தார்.
மறுநாளிலிருந்து விடிகாலையில் எழுந்து ட்யூப் ரெயிலைப் பிடித்து ஓடும் பரபரப்பை எதிர்கொள்ள இரண்டு குழந்தைகளும் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
அப்படியே அந்த லண்டன் நகரக் குளிரையும் குடும்ப வாழ்க்கையையும் நம்மை உணர வைக்கிறார் ஆசிரியர்.
அடுத்து வர இருக்கிறது ஒரு அதிர்ச்சி. இருபது வருடங்களாக கல்யாணம்,வீடு, குழந்தைகள் என்று லண்டனில் செட்டில் ஆகி விட்ட அவருக்கு இந்தியாவுக்கு உயர் பதவியில் மாறுதல் வர போகிறது என்ற ஊகத்தில் வரும் கலக்கம். அது போன்று லண்டன் வாழ்க்கை பழகிப் போன பலருக்கும் வரும் ஒரு இயல்பான வருத்தம்தான்.
மறுநாள் அலுவலகத்தில் அந்த ஊகம் உண்மை ஆகிறது . உயர் அதிகாரி தாம்சன் சொல்கிறார் .
‘இந்தியாவில் இவ்வளவு விழுக்காடு விற்பனை குறைந்திருக்கிறது. செலவினங்கள் அதிகம். நிகர் இலாபம் குறைவு. அதிகப் பட்டறிவுடன் உண்மையாக உழைக்கும் ஒருவர் அங்கு தலைமை அதிகாரியாக இருப்பது நம்ம கம்பெனிக்கு நல்லது. இதுவரை இருந்தவரை வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டோம்.
தலைமை அலுவலகம் மும்பையில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியரான உங்களை அந்தப் பணிக்கு நியமிப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்….’
தாம்சன் சுருக்கமாக முடித்திருந்தார். நாதன் எதிர்பார்த்ததுதான். சின்ன வயதில் இந்தியாவில் இருந்தபோது ஒரு முறை மும்பை போன நினைவு ! ஜன நெருக்கமும் உள்ளூர் இரயில் போக்குவரத்தும் அவரை மலைக்க வைத்திருந்தது என்னவோ உண்மை .
‘குடும்பத்தை லண்டனிலேயே விட்டு விட்டுப் போக வேண்டியதுதான். எவ்வளவு சீக்கிரம் திரும்ப முடியும் என்று
பார்க்க வேண்டும்…’ என்று முடிவு செய்து வீட்டுக்குத் திரும்பி தன் முடிவை மனைவியிடம் சொல்ல அவளிடம் இருந்து ஒரு எதிர்பாராத பதில் .
‘ உங்களை விட்டுவிட்டு நாங்க தனியா எப்படி… ? சர்க்கரை வியாதி வேற கொஞ்சம் தலைகாட்டியாச்சு ! தனியா எப்படி சமாளிக்க முடியும் ? மும்பை மாதிரி இடத்தில குழந்தைங்களுக்கு எப்படியும் இண்டர்நேஷனல் ஸ்கூல் இருக்கும். சமாளிக்கலாம்…. ‘
பிரேமா தன் முடிவில் உறுதியாகவும் இருந்தாள்..’
கதையில் இந்த மனைவியின் முடிவுதான் ஆசிரியரை அவர் விரும்பும் பாதையில் கதையை நகர்த்திக் செல்கிறது .’ நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்’ என்ற திரைப்பாடலை நினைவு படுத்துகிறது.
அடுத்து வருவது , இந்திய வாழ்க்கை. அவரது நிறுவனம் அவருக்கு அளித்திருக்கும் உயர்தர வசதிகளும் , அதே நேரம் , மும்பை நகரின் பரபரப்பும், கசகசப்பும் அவருக்கு கொஞ்சம் சிரமமாகத் தெரிவதும். ஆனால் அவர் குடும்பத்தினருக்கு அது பழகிப் போகிறது அவர் மனைவியின் வார்த்தைகளில் இப்படி .
‘சமையல், வீடு துடைக்கன்னு எல்லா வேலைக்கும் ஆள் வச்சாச்சு ! இன்னிக்கு உங்களுக்கு சாப்பாடுகூட நான் வீட்டிலிருந்தே அனுப்பிச்சிட்டேன். நீங்க வெளிய சாப்பிட வேண்டாம். பிரேமாவின்
குரலில் உற்சாகம் கொப்பளித்தது.
‘அப்பறம் நீங்க எனக்கு ஒண்ணும் வீட்டில உதவி செய்ய வேண்டாம். உங்க ஆபீஸ் வேலையைக் கவனிங்க. அதுவே போதும்…. ‘
பிரேமா தொலைபேசியில் கலகலத்தாள்.. நாதனுக்கு மனது கொஞ்சம் லேசானது போல் இருந்தது. இரண்டு நாட்களில் வாராந்திர விடுமுறையில் குழந்தைகளும் ஸ்விம்மிங் சூட்டுடன் விடிகாலையில் எழுந்து செல்வதை ஆச்சரியத்துடன் கவனித்தார்.
‘இங்க அவ்வளவு குளிரும் இல்லை ! இங்கேயே நாலைஞ்சு பசங்களைப் பிடிச்சாச்சு ! அவங்களோட தான் இந்த அமளி !’
பிரேமாதான் விளக்கம் அளித்தாள்.
அதேநேரம் அலுவலகத்தில் ,
ஹார்டுஷிப் அலவன்ஸ் என கடின வாழ்க்கை மேற்கொண்டதற்கு ஒரு பெரிய மாதத்தொகை அளிக்கப்பட்டிருந்தது !!! இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரம் குடும்ப சகிதம் லண்டன் வருவதற்கும் வழி செய்யப்பட்டிருந்தது. தாம்சன் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதாகஇருந்திருக்கலாம்.
அவ்வளவு பெரிய கம்பெனிக்கு அது ஒரு பெரிய சுமையல்ல ! ஆனால் அங்கு அலுவல் நிமித்தம் வசிப்பது ஒரு துன்ப நிலை என்று அளவிட்டிருப்பது அவருக்குப் பெரிய வருத்தத்தைத் தந்தது.
இங்கே நாயகனின் நாட்டுப் பற்றும், நல்ல மனதும் வெளிப்படுகிறது .
வேலை நேரம் குறையவில்லை. பொறுப்பு கூடியிருக்க கொந்தளிப்புகளும் அதிகமாயிருக்கிறது.
தொழில் முறையில் அது வரவேற்கத் தக்கதுதான். ஆனால் வடிகாலாய் ஆன்மீகம் என்ற ஒரு அரிய வஸ்து. அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் ஒரு கலாசாரம்… அவருக்கே அண்மையில் கிடைத்த விழிப்பு. இந்த மண்ணில் எப்படி வாழ்க்கை இடர்பட்டதாக இருக்க முடியும் ?’
அவரின் மனமாற்றத்திற்கு அவரது குடும்பமும் ஆன்மீகமும் உதவி செய்வது விரிவாக விவரிக்கப் படுகிறது . சீரடி சாய் பாபா கோயில் சென்று வரும் விபரங்கள் உட்பட.
நாதனுக்கு வெட்கமாக இருந்தது.
ஐந்தரை மணி நேர இடைவெளிக்காக இருப்புகொள்ளாமல் காத்திருந்தார். மதியம் முதல் வேளையாக தாம்சன் காரியதரிசியை அழைத்து அவருடன் பேச விரும்புவதைத் தெரிவித்தார்.
‘ செலவுகளைக் குறைக்க நிறைய வழிகளை யோசித்து வைத்திருக்கிறேன் தாம்சன் ! முதல் வேலையாக எனக்கு இந்த ஹார்டுஷிப் அலவன்ஸ் வேண்டாம். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை லண்டன் வருவதும் அவசியமில்லை.. என்னிடமிருந்தே இந்தக் கட்டுப்பாடுகளை ஆரம்பிக்கிறேன்…’
நாதன் கூறி முடித்தபோது இடி இடிப்பதுபோல் தாம்சன் சிரிப்பது கேட்டது.
‘ நாத் ! நீங்கள்தான் அங்கு தலைமை அதிகாரி ! உங்கள் முடிவுதான் என் முடிவும்…. “
அயல்நாடுகளில் பேசும் முறை அழகாக வெளிப்படுகிறது. பெயரைச் சுருக்கிச் சொல்லும் அந்த முறை, என்னைக் கூட நான் அயல்நாடுகளில் வேலை பார்த்தபோது சிலர் என்னை ‘ நாக்ஸ் ‘ என்று அழைத்த ஞபாகமும் வருகிறது . எனக்கு ‘ஸ்நாக்ஸ் ‘ என்பது போல் இருக்கிறதே என்று நினைத்த ஞாபகமும் வருகிறது. இங்கே நாதன் ‘ நாத் ‘ ஆகி உள்ளார். .
பட்லர் பணியுடன் அவருக்கு வேண்டிய விகிதத்தில் காப்பியை வைத்து விட்டுச் சென்றான்.
சில வருடங்களுக்குப் பிறகு சேமித்த தொகையுடன் இந்தியா வந்து நிரந்தமாகத் தங்க வேண்டும். ஒரு சிறிய தொழிற்சாலையை தொடங்க வேண்டும். இது போன்ற எளியவர்களுக்கு வளர்ச்சியையும் வளமையையும் தர வேண்டும்…. இங்கு என்ன இல்லை…?
மாறி விட்ட நாதன் மனநிலை தெளிவாக வெளிப்படும் இடம் இது .
சிந்தனையுடன் நிதானமாக நாதன் காப்பியை உறிஞ்சினார்.
ஷீரடியிலிருந்து அவர் கொணர்ந்து மேஜைமேல் வைத்திருந்த சிறிய படத்திலிருந்து பாபா.
நமது நாட்டின் சிறப்பான ஆன்மீகத்தின் பெருமையை நமக்கு உணர்த்தி முடிகிறது கதை. அந்த நாயகனின் நாட்டுப்பற்றையும் நயமாக வெளிப்படுத்தி முடிகிறது கதை .
கதையைப் படித்து முடித்தவுடன் தோன்றிய எண்ணம் இது. ஒரு சந்தேகமும் எழுகிறது
இது போன்ற பிரியமான ஆன்மீக மனைவியும், பக்குவமான குழந்தைகளும் , வசதியான அலுவலக வாழ்க்கையும் கிடைத்தால் அயல்நாட்டு வாழ்க்கையை விட்டு பல இந்தியர்கள் இந்தியாவுக்கு மகிழ்ச்சியுடன் இடம் பெயர்வார்கள் என்பது உண்மைதான் என்று சொல்லத் தோன்றுகிறது.. ஆனால் இது போன்ற அமைப்பு அயல் நாடு வாழ் இந்தியர்கள் அனைவர்க்கும் கிடைக்குமா என்ற எண்ணமும் தோன்றுகிறது
ஆனால் சிறந்த எண்ணங்களை நம் மனதில் விதைக்கும் இது போன்ற சிறுகதைகள் நமக்கு நிச்சயம் தேவைதான் என்றும் தோன்றுகிறது . ஆசிரியருக்கு வாழ்த்துகள். அழகியசிங்கருக்கு நன்றி .
