
தமிழில் : க.மோகனரங்கன்
என் அம்மா
பல ஆண்டுகளாக,
தனது பழைய ஆடைகளை
தூக்கி எறிய மனமில்லாமல்,
நான் அவற்றை தேடிக்
கண்டுபிடிக்கும் வரையிலும்,
வீட்டைச் சுற்றியுள்ள மறைவிடங்களில்
சேமித்து வைத்தார்.
இப்போது நான்
அவர் அணிந்திருந்த
ரோஜா பூக்கள் அச்சிடப்பட்ட
பருத்தி ஆடைகளையும்; ஐம்பதுகளின் பாணியில்
தைக்கப்பட்ட லினன் உடைகளையும்;
எனக்கு விருப்பமான,
அவரது கருப்பு காஷ்மீர்
குளிர்கால மேலங்கியையும்
விரும்பி அணிகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும்,
நானதை உலர் சலவை செய்து,
பொத்தான்களை மீண்டும் தைத்து,
கவனிக்காமல் விடப்பட்டு,
தையல்கள் பிரியத் தொடங்கும் இடங்களிலும்
சாடின் உள்வரி கிழிந்துபோகும் இடங்களிலும்
ஓரத்து நூலை கரிசனத்துடன் இறுக்குகிறேன்;
சமீபத்தில்தான்
அம்மா என்னிடம் சொன்னார்,
அவர் என்னைக் கருவில் சுமந்திருந்த
குளிர்காலத்தில் அணிவதற்காக
அந்தக் அங்கியை வாங்கியதாக.
அன்றிலிருந்து கடுங்குளிரான
ஒவ்வொரு நாளின் காலையிலும்,
நான் அந்தக் அங்கியை
என் மீது போர்த்திக்கொண்டு,
நிகழவிருப்பது குறித்த
ஒரு புத்துணர்வுடன்
காற்றை எதிர்கொள்கிறேன்:
அந்த ஆண்டில்,
இந்த அங்கி எம் இருவரின்
உருவங்களையும்
உள்ளடக்கியிருந்தபோது,
என் அம்மாவும் அப்படித்தான் எண்ணியிருக்க வேண்டும்.
