சசிகலா விஸ்வநாதன் கவிதைகள்

டிசம்பர் மாத கவியரங்கத்திற்கு என் கவிதைகள்
🏵️
கவிதை-1
பிரிந்த உறவுகள்

பிரிந்த உறவுகள்
பின்னும் சேருமா?

மறந்த நினைவுகள்
மறுபடியும் தோன்றுமா?

முந்தைய நாளின் கைப்பு
பிந்தைய நாளில் மாறுமா?

நைந்த உறவுகளை தைக்க
கனத்த நூலால் ஆகுமா?

கலைந்த கனவுகள்
காணாமல் போனதே.

நலிந்த நம்பிக்கை
மெலிந்தே போனதே.

வலிந்து பிணைத்து
இணைத்தல் இயலுமா?

அறுந்த மனங்களின்
காந்தும் புண் ஆறுமா?

மருந்தொன்று
கருத்தாய் இட இயலுமா?

விரிந்த மனம் கூடுமா?
நெளிசல் தெளிந்திடுமா ?

வள்ளிசாய் சொல்லிடுவாய்; நீயே
(2)
மனதின்குரல்

ஆற்றிடை அலைகள் போல்;
மனம் இங்கும் அங்கும் அலைய;

மனதில் ஒரு குரல்
நங்கூரமென
அமைந்தது.

வாடைக்காற்றில் அலையும் முல்லைத் கொடிக்கு
கொழு கொம்பென;
மனதின் குரல் நின்றது.

உன் இலக்கே உன் குறி
அதுவே உன் கலங்கரை விளக்கு.
அதை நோக்கியே
உன் நேர் பயணம் இருக்கட்டும்

நெருப்பில் கனலாய்
மண்ணில் வாசமாய்
காற்றின் ஓசையாய்
நீரின் சுவையாய் ஆகாயத்தின் பரவலாய்
சொல்லின் கருத்தாய்
சுடரின் ஒளியாய்
அதுவே உன் வழிகாட்டி.
உன் வழி நீ தேர்
(3)
தனிமை

தனிமை பழகு
தனிமை ஒரு இனிமை
தனித்திருப்பதில்
காண்பீர் ஒரு நிம்மதி.
உள்ளார்ந்த ஒரு நிம்மதி.
நேரம் நம் மனக் கட்டுக்குள் இருக்க;
ஒரு சொல் சொல்ல இடமில்லை எவருக்கும்.
அனுசரித்து, அனுசரித்து,
அயர்ந்து போன வாழ்விலிருந்து
ஒரு விடுதலை.
அனுபவி!
அப்புறம் புரியும்;
அதன் மகத்துவம்