
திருப்பாவை பாடல்16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.
பொருள்:
எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.
விளக்கம்:
ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.
திருவெம்பாவை பாடல்16
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
பொருள்: இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக.
விளக்கம்: ஆன்மிகமும், அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுப் பாடல். நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாகி குளிர்ந்து மழையாகிறது என்ற அறிவியல் கருத்தை மாணிக்கவாசகர் 1200 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார். மேலும், இயற்கையை தெய்வமாக வடித்ததன் மூலம், அதற்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை தெளிவாகச் சொல்லிவிட்டார். இன்று இயற்கையை மதிக்காததன் விளைவை கண்கூடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இனியேனும், இயற்கையை மதிப்போமா!
திருப்பாவை பாடல் 15/திருவெம்பாவை15 – விருட்சம் நாளிதழ்
நன்றி : தினமலர்

One Comment on “திருப்பாவை பாடல்16-திருவெம்பாவை பாடல்16”
Comments are closed.