
புத்தக அறிமுகம் 28
ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் – (விருட்சம் வெளியீடு – 9444113205, 9176613205)
பகவான் ரமணரைப் பற்றி எழுதும் எந்தப் புத்தகமும் அவரைக் குறித்து அவர் காலத்தைச் சேர்ந்த பலர் அளித்த தகவல்களின் அடிப்படையில்தான் இருக்கும். சர்வ நிச்சயமாக பகவான் முழங்கிய சரிதம், சம்பவங்கள், அனுபவங்கள் இவற்றிலிருந்து சில துணுக்குச் செய்திகளை இந்நூலில் வாசிக்கலாம். மிக எளிமையான நடையில், சுவாரஸ்யமான தகவல்களைத் தொகுத்திருக்கிறார் ஶ்ரீதர் சாமா. பகவானின் அருட்கடலில் மூழ்கி, தேர்ந்தெடுத்த முத்துக்களைக் கோர்த்து அழகிய மாலையாக அளித்திருக்கிறார் இந்நூலாசிரியர்.
“பகவானே, உங்கள் கூட இருப்பவர்கள் சிலரே சில சமயம் விநோதமாக உங்கள் கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார்களே, நீங்கள் அவர்களைத் தடுக்க மாட்டீர்களா?” – பகவானிடன் கேட்கப்பட்ட கேள்வி.
பகவானின் பதில்: “நம்மைச் சரி செய்வது உலகைச் சரி செய்வது ஆகும். சூரியனின் வேலை ஜொலிப்பது மட்டுமே. யாரையும் திருத்துவது இல்லை. அது ஜொலிக்கும் வேலையை ஒழுங்காகச் செய்தால் உலகே வெளிச்சத்தால் நிரம்பும். நம்மை நாமே திருத்துவது உலகிற்கே வெளிச்சம் கொடுப்பது மாதிரி”.
“உண்மையான மெளனம்தான் இடையறாத பேச்சு”
“தான் சந்தோஷமாக இல்லாமல் ஒருத்தன் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாது.”
“உன் வேலை இருத்தல்தான். இதுவாகவோ அதுவாகவோ அல்ல. வெறுமனே இருத்தல் மட்டுமே. சந்தோஷம் நம்மில்தான் இருக்கிறது. நம் இருப்புக்கு அதுவே அடிப்படை”
ஆசிரமத்தின் எண்ணெய் விளக்கு திடீரென அணைந்து, சில நிமிடங்கள் இருள் சூழ்ந்தது. யாரோ மறுபடி விளக்கேற்றினார்கள். 3 வயது சுவாமிநாதன் என்பவன் உடனே, “முன்னே வெளிச்சம் இல்லை, பகவான் தெரியலை. இப்ப வெளிச்சம் வந்தது, பகவான் தெரியறார்” என்கிறான். பகவான், “ஆமாம், அஞ்ஞானத்தில் பகவான் தெரியமாட்டார். ஞானம் உதித்தபின் தெரிவார்” என்றார்.

சமையலும் ஒரு (ஆன்ம) சாதனையே – வியற்காலை மூன்று மணிக்கே எழுந்து, ஆசிரம சமையற்கட்டில், காய்கறி நறுக்குவது போன்ற வேலைகளைச் செய்து கொடுப்பார். அவர் ஒரு பிரமாதமான சமையல் நிபுணர். ‘அனைத்தும் அண்ணாமலையாரின் சொத்து, எதையும் வீண் செய்ய நமக்கு உரிமை இல்லை’ என்று சொல்லி, கீழே விழுந்த தானியங்களைப் பொறுமையாகப் பொறுக்கி, எங்கே சேர்க்க வேண்டுமோ அங்கே சேர்ப்பார். முருங்கை, வெங்காயம், பூண்டு போன்ற எதுவும் அவர் சமையலுக்கு விலக்கல்ல. அவ்வளவு பொறுமையாகவும், சுவையாகவும் ஒவ்வொரு பதார்த்தத்தையும் செய்வார். எல்லோருடனும் அமர்ந்து, எல்லாவற்றையும் கலந்து கட்டி, ஏதோ மருந்து போல சாப்பிடுவார்.
அரசியல் தொடர்புடைஇய ஒருவர், பகவானிடம் ‘குடும்பக் கட்டுப்பாடு – birth control – பற்றி பகவான் என்ன நினைக்கிறார்?’ என்று கேட்டார். “Death control” பற்றி நீர் என்ன நினைக்கிறீர்?’ என்று பகவான் எதிர்க் கேள்வி கேட்டார். விதண்டாவாதங்களை பகவான் ஆதரித்தது இல்லை.
ஒரு பக்தர் ‘என்னைச் சிலர் திட்டுகின்றனர்’ என்று மறுபடி மறுபடி பகவான் முன்னிலையில் சொல்லிக்கொண்டிருந்தார். பகவான் பதில் பேசவில்லை. பின்னர் பகவான் சொன்னது: “திட்டுபவர்கள் உடம்பைத்தானே திட்டுகிறார்கள். அதைத் திட்டுவதில் என்ன தவறு? ஒன்று நினவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களைப் போற்றுபவர்கள் நட்பில்தான் கவனம் தேவை. திட்டுபவர்கள் உங்களுக்கு நன்மையே செய்கிறார்கள். நம்மை ஏமாற்றுவது இல்லை”
பகவானின் பெண் சீடர்கள், சொந்த வாழ்க்கையில் தோல்வி கண்டாலும், ஆன்ம பலத்தில் பகவானின் ஆசிகள் பெற்று சிறந்து விளங்கினர். எச்சம்மாள், சூரி நாகம்மாள், சுப்பலக்ஷ்மி அம்மாள் போன்றோரின் ஆன்மீக அனுபவங்கள் வியக்க வைப்பவை.
மஸ்தான் சுவாமி, டாக்டர் நி பி மீஸ், ஶ்ரீ சத்குரு அண்ணாமலை சுவாமிகள், விஸ்வநாத சுவாமி, சகன்லால் யோகி, டாக்டர் வி.ஸி.கிருஷ்ணமூர்த்தி ஐயர் (ஆசிரம மருத்துவர், பகவானின் கடைசி மூச்சுவரை உடனிருந்தவர்), முகவைக் கண்ண முருகனார், காவ்ய கண்ட கணபதி, கமலா நீலா போன்றவர்கள் பகவானுடன் நடத்திய ஆன்ம விசாரங்கள் தத்துவார்த்தமானவை, சுவாரஸ்யமானவை!
பசு லக்ஷ்மி, முதல் பிட்சை, பிணந்தூக்கிகள், தசமன் கதை என புத்தகம் முழுவதும் பகவானின் உபதேச முத்துக்கள்.
பகவானைப் பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ள ஆவலைத் தூண்டும் அருமையான புத்தகம்.
.
