ரம்யா வாசுதேவன்/அன்னையாய்… அத்தனாய்….2

அத்திகிரியின் அருகிலிருக்கும் அந்த சிறிய ஊருக்கு கூரம் என்று பெயர். பார்க்கும் திசையெல்லாம் செந்நெல் செழுமையோடியிருந்தது. நீண்ட நீண்ட வயல்வெளிகள். கோலம் போட்டது போன்ற சுழிச் சுழி வளைவுகளாக வரப்புகள். வாய்க்காலில் சீரான லயத்தில் ஓடும் நீரின் சுருதியோட்டம். ஆங்காங்கு வெள்ளை கொக்குகள். நாரைகள். அவ்வப்போது உச்சியில் வட்டம் காட்டும் கருட தரிசனம். வயலில் வேலை செய்வோரின் செவிகளில் வந்து விழும் கோயிலின் மணியோசை. அதையும் தாண்டி நாசியை வருடும் அன்னத்தின் வாசனை. தெய்வீகமும் இயற்கையும் கைகோர்த்த அழகிய பூமியே கூரம்.
“எல்லோருக்கும் அன்னப் பிரசாதம் சாதித்து ஆகி விட்டதா?” ஸ்ரீ வத்சாங்கன் என்னும் செல்வந்தர் அங்கு அவரிடம் பணி புரிபவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். நித்தமும் அடியார்களுக்கு இன்னமுது சாதித்த பின்பே உண்ணுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அன்று மிகவும் தாமதமாகி விட்டது.
அந்த அன்ன கூடத்தின் கதவுகளும் ஸ்ரீ வத்சாங்கன் என்னும் கூரேசன் அகத்தின் கதவுகளும் சாற்றப்பட்டது . அன்று இரவு முழுவதும் அவருக்கு உறக்கம் பிடிபடவில்லை. அவரது மனைவி ஆண்டாள் அவரின் தவிப்பைப் பார்த்து குழம்பினாள்.
பொழுது புலர்ந்தது. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில், பனி படர்ந்த வேளையில், பேரருளாளனின் திருவாராதனத்திற்காகத் திருக்கச்சி நம்பிகள் (கஜேந்திரதாசர்) விரைந்து கொண்டிருந்தார். அப்பொழுது கூரத்தின் திசையிலிருந்து தர்மசீலரான கூரத்தாழ்வானைக் கண்டார்.
நம்பிகள் ஆழ்வானை நோக்கி, “வாரீர் கூரேசா! நேற்று இரவு ஆலவட்ட கைங்கர்யத்தின் போது , அத்திகிரி அருளாளப் பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் ஒரு விசேஷமான வினாவினைத் தொடுத்தார்கள்.
திருக்கச்சி நம்பியை கண்டதும் அவரை தண்டனிட்டு சேவித்தார் கூரேசன்.
“பெருமாளும் , தாயாரும் என்ன கேட்டார்கள். ” மிகுந்த ஆவலுடன் கைகூப்பியபடி கேட்டார்.
திருக்கச்சி நம்பி, ” நேற்றிரவு சயன காலத்தின்போது, காஞ்சி மாநகரமே அதிரும்படியாக ஒரு பேரொலி கேட்டதே, அது எதன் ஓசை?” என்று தாயார் வினவினார். அதற்குப் பேரருளாளன், “அது நம் அடியவரான கூரத்தாழ்வான், தன் திருமாளிகையில் அன்றாட ததியாராதனத்தைப் (அன்னதானம்) பூர்த்தி செய்துவிட்டு, கதவுகளை மூடியபோது எழுந்த மங்கல ஒலி’ என்று திருவாய் மலர்ந்தருளினார்,” என்று விவரித்தார்.
கூரத்தாழ்வான் பெரும் நடுக்கமுற்றார்.
அவர் மனம் அவரை துளைத்தது. முன்னிரவு அவருக்கு உறக்கம் வராமல் தவித்ததின் காரணம் புரிந்தது, “அந்தோ! எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் அபச்சாரம் விளைவித்து விட்டேனே! அடியேன் செய்த அற்பமான கைங்கர்யம், அந்தத் திவ்ய தம்பதிகளின் உறக்கத்திற்கே இடையூறாக அமைந்ததா? நம்மிடமுள்ள இந்த லௌகிகச் செல்வம் அன்றோ எம்பெருமானின் கவனத்தை நம் பக்கம் திருப்பி, கர்வத்தை விளைவிக்க ஏதுவாகிறது!” என்று வருந்தினார்.
கூரேசன் ,” அடியேன், நான் இந்த செல்வத்தினால் அன்னமிட்டாலும், இந்தச் செல்வம் இருக்கும் வரை, மக்கள் என்னை ஒரு ‘வள்ளல்’ என்றுதான் பார்ப்பார்கள். அவர்களுக்கு ஆனதை நான் வைத்துக் கொண்டு கிள்ளி கொடுப்பது தருமம் ஆகுமா? இது எப்பேர்ப்பட்ட அகங்காரம் மமகாரம். எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து நித்தியமான அவன் அனுபவத்தை பெறவே ஆசை. நீங்களே எனக்கு ஆச்சார்யனாக இருந்து வழி நடத்த வேண்டும்.”
கூரேசன் திருக்கச்சி நம்பியிடம் வேண்டினார்.
திருக்கச்சி நம்பிகள், கண்மூடி தன் வரதனை நினைத்தார். அவன் வழி காண்பித்தான்.
திருக்கச்சி நம்பி ” கூரேசா! அரங்கத்திற்குச் செல். அங்கு பெரும்புதூர் முனி உன்னை வழி நடத்துவார். பெறும் பணி காத்திருக்கிறது.”
திருக்கச்சியின் வாக்கை ஆணையாக எடுத்துக் கொண்டு, கூரத்திலிருந்து புறப்பட்டார்.
கூரேசன் “நாம் திருவரங்கம் புறப்படப் போகிறோம். தயாராக இரு.” அவருடைய பத்தினி ஆண்டாளுக்கு பெரும் மகிழ்ச்சி .
ஆண்டாள், “என்று புறப்பட வேண்டும். எப்போது மீண்டும் திரும்புவோம்.”
கூரேசன், “நாம் நித்திய அரங்கவாசம் செய்யப் போகிறோம். அங்கு நமது ஆசார்யன் பெரும்புதூர் மாமுனிக்கு கைங்கர்யம் செய்யப் போகிறோம்.’’
ஆண்டாள், ” இங்கு இருக்கும் பசுக்கள். நித்ய அன்னதானம்?”
கூரேசன் “இவை அனைத்தும் ஊர் மக்களுக்கு சொந்தமானது. நாம் நம்முடையது என்று நினைத்து கிள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தோம். இனி இவை அனைத்தும் அவன் சொத்து. ஊர் மக்களே அனுபவிக்க வேண்டியது.”
ஆண்டாள், கூரேசன் சொல்லை அப்படியே ஏற்றாள். கூரேசனின் பக்தியையும் ஞானத்தையும் நன்கறிந்தவளாக இருந்தாள். தன் கணவர் தன்னிலிருந்து எதையும் பேச மாட்டார். அவனிலிருந்து வருவதையே மொழிவார் என்பதை திண்ணமாக புரிந்தவளாகவும் இருந்தாள். சொல்லுக்கு சொல் தொடுத்து பேசுபவள் அல்ல அவள். அதனால், மௌனமாக அவரின் அடியொற்றி புறப்பட்டாள். ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வனவாசத்திற்கு புறப்படும்போது சீதை அவரை தொடர்ந்து நடந்தபோல ஆண்டாளும் கூரேசனை பின் தொடர்ந்தாள்.
அவர்களிருவரையும் அரங்கம் வரை விட்டுவிட்டு வருவதற்காக அரூபமாக அத்திகிரி பெருமாளும் உடன் பயணித்தபடி இருந்தார்.
கூரத்தாழ்வான் கையில் ஒரு துரும்பைக் கூட எடுத்துக் கொள்ளாமல், “அரங்கனே தஞ்சம்” என்று கூரத்தை விட்டு வெளியேறினார்.
ஆனாலும், ஆண்டாளுக்கு ஏனோ மனது கேட்கவில்லை. தன் கணவர் பிறந்தது முதல் அமுது செய்யப் பயன்படுத்திய அந்தப் பொன் வட்டிலை , திருவரங்கத்தில் அவருக்குப் பணிவிடை செய்ய ஏதுவாகும் என்று கருதினாள். எனவே, அதையும் தன் சிறு மூட்டையில் வைத்துக் கொண்டாள்.
நிசப்தமான அந்த நள்ளிரவில், காட்டின் சலசலப்பைக் கேட்டு ஆண்டாள் அம்மையார் சற்றே அச்சமுற்றார்.
ஆழ்வான், “என்னே! அரங்கனை நோக்கி நடக்கும் இந்தப் பயணத்தில், உமது திருமுகத்தில் ஏனிந்த நடுக்கம்? எதைக் கண்டு அஞ்சுகிறீர்?”
ஆண்டாள், “சுவாமி! இந்த அடர்ந்த காட்டில் கள்வர் பயம் இருக்குமோ என்று அடியேன் மனம் சற்றே கலங்குகிறது.”
ஆழ்வான், “பெண்ணே! ‘மடியில் கனம் இருந்தால் அன்றோ வழியில் பயம்!’ நம்மிடம்தான் இழந்தது போக மிச்சம் ஏதுமில்லையே! பின் ஏன் இந்த அச்சம்? உமது மடியில் ஏதேனும் ஒளித்து வைத்துள்ளீரோ?”
ஆண்டாள், “க்ஷமிக்க வேண்டும்! தேவரீர் அமுது செய்வதற்குப் பழகிய அந்த தங்க வட்டிலை, திருவரங்கம் சென்றடைந்த பின் உமது கைங்கர்யத்திற்காகப் பயன்படுத்தலாம் என்று அடியேன் கொண்டு வந்தேன். அதுதான் என் மடியில் கனக்கிறது.”
ஆழ்வான் , “அந்தோ! இதுவன்றோ நமக்கும் அந்தப் பரம்பொருளுக்கும் இடையே நிற்கும் பெரும் திரை! கூரத்திலிருந்த கோடிக்கணக்கான செல்வத்தைத் துறந்த பின்னும், இந்தச் சிறு பொன் துண்டு நம்மைத் தொடர வேண்டுமா? ஆண்டாளே! கள்வர் பயம் என்பது இந்தக் கையில் இருக்கும் வட்டிலால் வருவதல்ல; ‘இது என்னுடையது’ என்ற எண்ணத்தால் வருவது. இதைக் கையில் வைத்திருக்கும் வரை நமக்கு அரங்கன் மேல் பாரத்தை இறக்கி வைக்கும் ‘மகா விசுவாசம்’ ஏற்படாது.”
அந்தத் தங்க வட்டிலை வாங்கி, இருண்ட காட்டிற்குள் “துச்சமாக” எறிந்தார்.
ஆழ்வான்: “இப்போது பாரும் இந்த விந்தையை! பயத்திற்கு காரணமான ‘பொருள்’ போய்விட்டது. இனி நமக்குப் பயமும் இல்லை, பகையும் இல்லை. இனி அரங்கன் ஒருவனே நமக்குத் துணை!”
மாமுனிக்கு பெரும் சந்தோஷம் பொங்கிற்று.


“மனிதன் ஏன் பொருள்களையும் செல்வத்தையும் பிடித்துக் கொள்கிறான்? ஏனென்றால் அவன் உள்ளுக்குள் ஏழையாக இருக்கிறான். உங்களுக்குள் ஒரு வெறுமை இருக்கிறது, அந்த வெறுமையை நிரப்புவதற்காகவே நீங்கள் வீடுகளையும், நகைகளையும், பதவிகளையும் தேடுகிறீர்கள். ஒருவன் எப்போது பொருள்களின் மீது பற்றற்று இருக்கிறான் என்றால், அவன் தனக்குள் முழுமையாக இருக்கும்போதுதான்.
நீங்கள் ஏழையாக இருப்பது என்பது கையில் காசு இல்லாமல் இருப்பது மட்டுமல்ல; எதற்கும் அடிமையாகாமல் இருக்கும் அந்தச் சுதந்திரமே உண்மையான ஏழ்மை (Inward Poverty). எவன் ஒருவன் ‘இது என்னுடையது’ என்று எதையும் உரிமை கொண்டாடவில்லையோ, அவனே உலகிலேயே பெரிய செல்வந்தன். உடைமை (Possession) என்பது ஒரு சிறைச்சாலை; அதுவே உங்கள் பயத்தின் தொடக்கம்.”

One Comment on “ரம்யா வாசுதேவன்/அன்னையாய்… அத்தனாய்….2”

Comments are closed.