ரம்யா வாசுதேவன்/அன்னையாய்… அத்தனாய்…. -1

“இனிமே உன்ன அடுத்த வருஷம் தான் பார்ப்பேன்,” வகுப்பு தோழி சொன்னாள் .
“ஏன் ?”
“பயந்துட்டியா ? இந்த வருஷம்தான் முடிஞ்சு போச்சே. லீவு முடிஞ்சு அடுத்த வருஷம்தானே பார்ப்போம் . அவளுடைய புத்திசாலித்தனம் புரிய எனக்கு சில நிமிஷங்கள் ஆயிற்று.
நான் , “நீ இப்ப தான் இப்படியா? இல்ல எப்பவுமே இப்படித்தானா “
தோழிக்கு புரியவில்லை . “லீவுல என்ன பண்ண போற?” அவள் கேள்வி எனக்கு புரியவில்லை .
ஸ்ரீரங்கவாசிகளுக்கு டிசம்பர் விடுமுறை வரப் பிரசாதம். அதுவும் புது வருஷம் என்பது ராப்பத்து தொடங்கும் நேரம். இடிபடாமல் அரங்கனை சேவிக்கலாம் . ஆயிரங்கால் மண்டபத்தில் நுழைந்தால் ஆழ்வார்கள் புடைசூழ , அரங்கன் அரையர் சேவிக்கும் பாசுரங்களை கேட்டுக் கொண்டிருப்பான்.
“மூலவர் கிட்ட கூட்டம் ஜாஸ்தியா? பரமபத வாசல் மிதிச்சாச்சா ?”ரெண்டு மாமிகள் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது .
இந்த கோவிலுக்குள் வந்தால் இது தான் குழப்பம். அரங்கனை எப்படியெல்லாம் அனுபவிப்பது என்பதே குழப்பம் . உடையவர் அருகில் கொஞ்ச நேரம் நிற்க இடம் கிடைத்தது . அவரைத் தொட முடியும். அவ்வளவு சமீபத்தில் அவரைப் பார்த்ததில்லை. இவரைத் தொடலாமா? எனக்குள் கேள்வி . எதைக் கேட்டாலும் வாரி வழங்கும் வள்ளல் அவர். அள்ளிக் கொடுப்பதில் தங்கை ஆண்டாளுக்கு நிகரானவர். இருந்தும் அவரைத் தொட அச்சமாக இருந்தது . என் பையை கீழே போட்டேன். அதை எடுப்பதுபோல் குனிந்து அவரைத் தாங்கி நிற்கும் அந்த தோளுக்கு இனியானின் ஓரத்தில் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டேன்.
அரங்கனுக்கு அனுஜன், ராமனுக்கு அனுஜன். அந்த உரிமையில்தான் அப்படிச் செய்தாரோ?
அந்த மடத்தின் வாசலில் சிலர் கூடி இருந்தனர். உடையவரை காண என்றும் யாரேனும் வந்து அவர் முன் தண்டனிட்டு அவர்கள் விண்ணப்பங்களை தெரிவித்து கொண்டிருப்பார்கள்.
உடையவரின் உடல் சற்று தளர்ந்திருப்பினும், முகக் கமலத்தினின்று வீசும் பிரகாசக் காந்தம் எவரையும் நகரவொட்டாது ஈர்த்து அமர்த்தியிருந்தது. இடதும் வலதும் பார்த்துப் பார்த்து பேசும்போது கண்களினூடே சிந்தியபடி செல்லும் ஞானத் தீர்த்தம். கருணா சாகர நயனங்கள். துழாய் தீர்த்தமாய் உள்ளங்கை குவித்து ஸ்வீகரிக்கும் சிஷ்ய சேய்கள். பெற்றுக் கொள்ள இயலுமா என தத்துவச் சிடுக்குகளை கண்டு மருளும்போதெல்லாம், இட்டு நிரப்பியபடி செல்லும் உபதேச அமுதங்கள். சுவடியோடு நான்கு பேர் அமர்ந்தாலும் ஆச்சார்யனின் உபதேசம் வேகமாகத்தான் சுழன்றபடி இருந்தது. யுகாந்திரங்களாக நிலைபெறப் போகும் ஸ்ரீவைஷ்ண்வம் அல்லவா…. அமுதத் தமிழை பேசும்போது குரல் குழைந்தது. கீச்கீச்சென்று சுக வாரிதி வீசியது. சமஸ்கிருதத்தை ஆளும்போது குரல் தேவ காந்தாரமானது. முன்னோக்கி தலை சாய்த்து பேசும்போதெல்லாம் உதிரும் நெற்றித் திருமண். உற்றுப் பார்த்து ஆச்சார்யனின் சங்கல்பம் என்னவோ என்று கூர்மை கூடி நோக்கும் சூட்சும சிஷ்யக் கூட்டம். இந்த திருப்பாதங்கள்தானே பாரதம் முழுதும் நடந்தது என்று திருவடியை தவிர வேறெங்கும் நோக்கா திருவடியார்கள் ஒருபுறம்.
மென்மையாய் வாய் பொத்தி அடியார்களில் ஒருவர் எழுந்தார். “அடியேன் தாங்கள் நியமித்தபடி அவரவர் பணிகளை தொடங்கியாகி விட்டது.”
உடையவர், “ஆம் , எல்லாம் நம் ஆச்சார்ய புருஷர்களின் கருணை. நம் ஆளவந்தார் இட்டபணி. அவர் அனுகிரஹத்தினாலே தொடரும் . சொட்டை நம்பி எங்கே ?”
அவர் முன் தண்டனிட்டு அந்தப் பெரியவர் சேவித்தார். உடையவர் , “சொட்டை குலத்தவர் தானே ?” என்றார்.
சொட்டை நம்பி , ” ஆம் . உங்கள் கருணையினால் அனைத்தும் உங்கள் நியமனப்படி நடந்து கொண்டிருக்கிறது. தங்கள் கருணைதான் என்னே?”
உடையவர் சொட்டை நம்பியை உற்றுப் பார்த்தார். தன் ஆசார்யன் ஆளவந்தார் வம்சத்தவர் அல்லவா இவர். விரல் விரலாக விரித்து உபதேசம் அருளியவரல்லாவா…. திருநாட்டை அலங்கரித்து,அதன் முன்னர் என்னை அழகாக்கி அமர வைத்தவரல்லவா… ஆச்சார்ய நினைவுகள் உடையவரின் வலதோரக் கண்ணில் நீர் சொட்டியதை கண்டு சொட்டை நம்பி புரிந்து கொண்டார். விடாது சொட்டை நம்பிகளையே பார்த்தபடி இருந்தார். அவருள் அன்பு பொங்கியது.
சொட்டை நம்பி , ” தங்களது பிரபாவம் தெரியாமல் சிறு குழந்தை போல் பலதும் உங்களிடம் கேட்டிருக்கிறேன். அரங்கனிடம் இல்லாத உரிமை உங்களிடம் உண்டு. “
உடையவர் ,” என்ன ஆயிற்று ஏன் இந்த குழப்பம் ?”
சொட்டை நம்பி திரும்பவும் தண்டனிட்டு சேவித்தார் . கண்ணீர் மல்க கை கூப்பி தன் ஆச்சார்யனிடத்தில், “இந்தச் சம்சார பந்தம் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. அடியேனுக்கு எப்போது மோட்சம் கிடைக்கும்? தாங்கள் எனக்கு அந்த உறுதியை அளிக்க வேண்டும்”
கேட்டே விட்டார். தகுதிபார்க்காது நவநீதமாய அள்ளித்தரும் ஞான வள்ளலுக்கு இதுவல்லவா உன்னதமான பிரார்த்தனை என்று தோன்றியது. தலைதூக்கி ஆஸ்ரமத்தின் உச்சி விட்டம் பார்த்தார். தண்டத்தை கழுத்தருகே நகர்த்தி நேராக்கினார். விட்டம் பார்த்த திருச்சிரசு இப்போது நேருக்கு நேராக ராஜ சர்ப்பம்போல் சொட்டை நம்பியை ஆழ்ந்து பார்த்தது. காண்பது ஆதி சேஷனோ என்று சிலருக்கு எண்ணம் தோன்றி மறைந்தது.
உடையவர் சொட்டை நம்பியை ஆழ்ந்து பார்த்தார் .
உடையவர் ,” ஆளவந்தாரின் வம்சத்திற்கு பயம் வரலாமோ ? ஏன் பயம் ? எதற்கு இந்த சந்தேகம் ?”
சொட்டை நம்பி ,” ஆம் எனக்குள் பெரும் பயம் ஒன்று இருக்கிறது . தாயிடம் கேட்க முடியாததை, தகப்பனாரிடம் உரைக்க முடியாததை ஆச்சார்யனான தாங்களிடம்தானே பகிர முடியும். தாங்கள் நினைத்தால் மட்டுமே , தாங்கள் வாக்கினால் மட்டுமே மோட்சம் சாத்தியம். “
சுழலாகச் சுற்றியிருந்த சீடர்கள் ஆமாம்… ஆமாம்… என்பதுபோல தங்களுக்குள்ளும் தலையசைத்துக் கொண்டனர்.
உடையவர் , “நம்பியே, உங்கள் பாட்டனார் ஸ்ரீ ஆளவந்தார் மிகச்சிறந்த ஞானி. அவர் வம்சத்தில் பிறந்த உங்களுக்கு மோட்சம் கிடைப்பதில் என்ன சந்தேகம்? நீங்கள் கவலைப்பட வேண்டாம்” ..
ஆனால் சோட்டை நம்பி சமாதானம் அடையவில்லை. “ஆளவந்தாரின் வம்சத்தில் பிறந்ததாலேயே எனக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. தாங்களின் திருவடிகளைப் பற்றிக் கொண்ட எனக்கு, நீங்கள் தான் மோட்சத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” .பிடிவாதம் பிடித்தார் ..
உடையவர் எழுந்தார் , சொட்டை நம்பியின் திருக்கரம் பற்றினார் அரங்கனின் இருப்பிடத்திற்கு விரைந்தார் .
சொட்டை நம்பிக்கு ஆச்சாரியனின் ஸ்பரிச சம்மந்தம் பயத்தை அறுத்தது. அவருடன் சேர்ந்து அரங்கனின் கருவறைக்குள் நுழைந்தார்.
அங்கு அந்த வெண்ணை உண்ட வாயன் , நடப்பவை யாவற்றையும் சாட்சியாக பார்த்துக் கொண்டு சயனித்திருந்தான்.
சொட்டை நம்பி தன் நிலையில் இல்லை . உடையவர் சொட்டை நம்பியின் கரத்தை இறுக பற்றியிருந்தார் .
உடையவர் அரங்கனிடம் ,””அரங்கனே! என் ஆச்சாரியாரான ஆளவந்தாரின் திருப்பேரன் இவர். இவருக்கு மோட்சம் அளிக்க வேண்டியது உன் கடமை. இவருக்கு மோட்சம் அளிப்பதாக நீ எனக்கு வாக்குறுதி தர வேண்டும்.”
சொட்டை நம்பி தன்னை மறந்தார் .உடையவரின் வார்த்தை அந்த கர்பக் கிருஹத்தை சூழ்நதது .
பட்டர் மூலம் அசரீரியாக, “சொட்டை நம்பிக்கு நிச்சயம் மோட்சம் உண்டு” என்றபோது கோயிலின் தங்க விமானத்தின் மீது சூரிய கிரணங்கள் பட்டு ஏழேழு பிராகாரமும் ஒளிர்ந்தன.
என்னவொரு ஆச்சார்ய கருணை. அரங்கன் கருணையா…. ஆச்சார்யனின் கருணையா… அரங்கன் ஆச்சார்யன் மூலம் ஏற்கிறானா… ஆச்சார்யன் அரங்கனிடம் கொண்டு சேர்க்கிறானா… இதுவென்ன அவர்களுக்குள் நடக்கும் விசித்திர கருணைப் போட்டி. எவரையும் விடாதே பிடி. கருணைக்குள் கருணையை ஊற வைத்தல் என்றாரே ஒரு ஞானி. அது இதுதானா… யோசித்துக் கொண்டிருக்கும்போதே…. கொட்டு சப்தத்துடன் வேகவேகமாக நம்பெருமான் சாம்பிராணிப் புகை பொங்க வலதோரப் புன்னகையால் என்னை கடந்து கொண்டிருந்தார்.
என் கால்கள் தளர்ந்தன. ஆச்சார்ய…. ஆச்சார்யர்களின் நெடும்பட்டியல் வயலில் முளைத்தெழுந்த கதிர்போல் என்னுள் முளைத்தது. நான் நிகழ்காலம் மறந்து இறந்த காலமும் மறந்து வேறொரு உலகில் அந்த மண்டபத்தின் ஓரத்தில் நான்.
சொட்டை நம்பியின் பூரண சரணாகதியை சொல்வதா…. தெற்கு ஆழ்வானின் கோபுரம் போன்ற உயர்ந்த ஞானத்தை எப்படி உரைப்பது. சுந்தரத் தோளுடையான்… ராமானுஜம்… முதலியாண்டான்…. நடுவில் ஆழ்வான்… கோமடத்தாழ்வான்… திருக்கோவலூராழ்வான்…. நடாதூராழ்வான்… எங்களாழ்வான்…. அனந்தாழ்வான்….சேத்தலூர் சிறியாழ்வான்…. மந்திரம்போன்று நாம் ஜபித்துக் கிடந்தேன்.
பெருஞ்சுற்றை முடித்து விட்டு திருவடியார்களோடு நம்பெருமாள் நேருக்கு நேராக மண்டபத்தில் எழுந்தருளினார்.
நானும் நேருக்கு நேராக அரங்கனோடு மெல்ல பேசத் தொடங்கினேன்

தொடரும்….

One Comment on “ரம்யா வாசுதேவன்/அன்னையாய்… அத்தனாய்…. -1”

Comments are closed.