
ராம்சுரத்குன்வர் யோகிராம்சுரத்குமாராக மலர்ந்தார்
பப்பா ராமதாஸ் ராம்சுரத்குன்வரை அன்போடு நோக்கினார். பப்பா எங்கு சென்றாலும் இவரும் கூடவே சென்றார். ஏதோ ஒரு சக்தி தன்னை பப்பாவோடு இருக்கவே வைத்திருக்கின்றது என்பதை ராம்சுரத்குன்வர் உணர்ந்தார்.
இங்கு நாம் அனைவரும் மிக முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் வாழும் வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது எங்கிருந்தோ குரு என்கிற சப்தம் நம் காதில் விழுகின்றது. அங்கிருந்து நாம் குரு நம்மை என்ன செய்வார் என்கிற விஷயத்தை அறியத் தொடங்குகின்றோம். முதலில் குரு என்பவர் என் வாழ்க்கையில் நான் என்னென்ன வேண்டிக் கொள்கிறேனோ எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அவரைக் குறித்து பிறரால் என்னென்ன விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று சேகரிக்கத் தொடங்குகின்றோம்.
குரு என்பவரின் தன்மை இந்த இடத்தில் மாறத் தொடங்குகின்றது. குரு என்பவர் நம்முடைய வாழ்வில் வேண்டியதை மட்டும் நிறைவேற்றுபவர் அல்ல. அவர் இந்த வாழ்க்கையைத் தாண்டி வேறொன்றையும் பேசுகின்றார் என்பதையும் அறிகின்றோம்.
குரு என்பவர் நமக்குள் நாமாக இருக்கும் ஒன்றையே காட்ட விரும்புகின்றார். நீங்கள் கடவுள் கடவுள் என்று சொல்கிறீர்களே, அந்தக் கடவுள் என்பது உனக்குள்தான் உள்ளது. அதை அறிய வேண்டியதுதான் இந்தப் பிறவியெடுத்ததன் முக்கிய விஷயம் என்பதை மெல்ல மெல்ல எடுத்துச் சொல்கிறார். இப்போது ஒரு பக்கம் நம்முடைய இறைவனை அடைய வேண்டும் என்கிற ஆசையும், மறுபுறம் இந்த வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளையும் சரிசெய்ய வேண்டுமென்ற முனைப்போடு செயல்படுகின்றோம்.
என்னுடைய வாழ்வின் இலக்கு என்னவென்று புரியவில்லை குருநாதா என்று தினமும் நமக்குள் பேசுகின்றோம். இதோ உங்களை எவ்வளவோ பிரச்னைகளைத் தீர்த்து வைப்பவர் என்று சொல்கிறார்கள். அதனால், இந்தப் பிரச்னையை தீர்த்து வையுங்களேன் என்று ஒரு பக்கம் மனம் வேண்டிக் கொள்கிறது. பிரச்னையின் தீவிரம் குறைந்தவுடன் ஞானம் என்றால் என்ன? மனமற்ற எண்ணமற்ற நிலையைத்தானே ஞானிகள் உண்மையான நிலையாக சொல்கிறார்கள் அந்த நிலை எப்போது சித்திக்கும். மனம் அடங்கினால் அதற்கு அப்பாலுள்ள பெரும் சக்தியொன்று இருக்கின்றதே அதுவல்லவா வேலை செய்யும், அது ஏன் இப்போது என்னை வழிநடத்தக் கூடாது.
ராமகிருஷ்ணர் தேவியை மனமுருக கேளுங்கள். உங்களுக்கு காட்சி தருவாள் என்று ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உபதேசங்கள் மொத்தமும் படித்துவிட்டுஞ் ஏன் தேவி எனக்கு காட்சி தரவில்லை. ஒருவேளை அதற்கான தகுதி தனக்கு வரவில்லையா. இல்லை, நான் இன்னும் சரியாக முயற்சிக்க வேண்டுமா… இன்னும் பூஜையையோ அல்லது ஜபத்தையோ அல்லது தியானத்தையோ தீவிரப்படுத்த வேண்டுமா என்று பலகாலம் நினைத்துக் கொண்டிருப்போம். இதற்கு நடுவேயும் நம்முடைய வாழ்வின் இன்பங்களும் துன்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் நம்மால் இன்பங்களை அது சிற்றின்பமாக இருந்தாலும் சரிதான் விடமுடியாமலும் தொடர்ந்து கொண்டிருப்போம்.
ரமண பகவான் கூறும் ஆத்ம விசாரத்தை செய்துகொண்டிருந்தாலும் சட்டென்று நமக்குள் இருக்கும் அந்த ஆத்மாவின் தரிசனம் கிடைத்து எப்போது அந்த நிலையில் நிற்போம் என்கிற கவலையும் வந்துபோய்க்கொண்டிருக்கும்.
சரி… அருணாசலனே நமக்கான தெய்வம். அது நம்மை எல்லா வற்றிலும் விடுவிக்கும். வேதாந்தங்கள் கூறும் அந்த நிலையை அடைய நாம் சும்மா இருக்க வேண்டும் என்று ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் நம் மனதை சுற்றியபடி இருக்கும். ஏதோ என்றோ ஒரு நாள் அந்த உயர்ந்த நிலையை பகவான் அளித்துவிடுவார். அதற்கு இந்த நூற்றாண்டில் தோன்றிய மகான்களே காரணம் என்று மனம் தொடர்ந்து பயணித்துக்கொண்டேயிருக்கின்றது.
இதற்கு நடுவில் நம் மனம் மிகமிக சூட்சுமமான ஒரு விஷயத்தைக் கையாளுகின்றது. அதாவது, இவ்வளவு மகான்களும் பக்தி யோகமே சிறந்தது என்று சொல்கிறார்கள் எனவே நான் பக்தி யோகத்தை கைக் கொள்கிறேன் என்று நினைக்கின்றோம். அதற்காக அதனால் கோயிலை நோக்கி நகர்கின்றோம். அல்லது எங்கேனும் க்ஷேத்ரங்கள் நோக்கி நகர்ந்து தியானத்தில் அமர்கின்றோம். அடுத்து கர்ம யோகம்தான் சிறந்தது என்று பல்வேறு அனுஷ்டானங்களை நோக்கி நகர்ந்து இதுவே சிறந்தத என்று அதிலும் ஈடுபடுகின்றோம். ராஜயோகமே சிறந்தது என்று நினைத்து அதிலும் ஈடுபடுகின்றோம். யோகா… பிராணாயாமம்… பிரத்யாகாரம்… தாரணை… தியானம்… சமாதி… என்று மனதை மெல்ல மெல்ல உள்நோக்கிச் செலுத்துகின்றோம். பிராணனையும் மூச்சையும்கொண்டு மனதை அடக்க முயன்று அதுவே சரியான வழி என்று தொடர்ந்து சொல்கிறோம். ஞானயோகம் என்று கைக்கொண்டு வேறெதுவும் வேண்டாம்… மனம் என்று ஒன்று இருக்கின்றதா அது இருந்தால் நிஜமாகவே அது யாருக்கு இருக்கின்றது என்று விசாரித்துப் பார்த்தால் மனமென்று ஒன்று இல்லவே இல்லை என்று அறிந்து கொள்கிறோம். இந்த மனதிற்கு கீழே இந்த மனம் என்பது உருவாவதற்கு முக்கிய காரணமே நான் எனும் எண்ணமேயாகும். அப்படிப்பட்ட இந்த நான் எனும் எண்ணத்தை இது யாருக்கு என விசாரிக்க விசாரிக்க இந்த நான் என்பது மெல்ல தன்னுடைய பிறப்பிடத்தை நோக்கி நகர்கின்றது என்று மனம் புரிந்து வைத்திருக்கின்றது.
எத்தனை ஞானிகள் உண்டோ அத்தனை ஞானியரின் உபதேசங்களும் புரியத் தொடங்குகின்றது. அவர்கள் அனைவரின் உபதேசங்களும் புத்திப் பூர்வமாக உணர்கிறோமே தவிர அனுபூதியில் ஏன் வரவில்லை என்பதற்கு சாதனை காலங்களில் தீவீரம் வேண்டும்… நம் முயற்சியில் எதுவும் இல்லை… ஆத்மா யாரை வரிக்கின்றதோ அவருக்குத்தான் அது கிட்டும். நம்முடைய மனம் வெறுமனே அறிவுத் திறத்தால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறதே தவிரஞ் அதற்கு உண்மையான ஞானப்பசி வரவில்லை… தலையில் தீப்பிடித்து எரியும்போது எப்படியிருக்கும்மோ அதுபோல ஞானமும் பக்தியும் வைராக்கியமும் இல்லை… எனவே, அவற்றை கைக்கொள்ள வேண்டும் என்று ஒரு சாதகன் நினைக்கின்றான்.
இறுதியாக எல்லாவித ஞான விஷயங்களையும் தன்னுடைய புத்தி நிறைய தேக்கி வைத்துக்கொண்டும், ஒருபுறம் லௌகீகமான உலகாயத விஷயங்களில் ஈடுபட்டுக்கொண்டும், மறுபுறம் அந்த மகத்தான ஆத்ம வஸ்து நம்முள் புகுந்து வழிநடத்தும் என்றும் நாம் பயணப்படுவோம்.
ஆனால், உண்மையான உண்மை என்பது அதற்கு மாறாக இருக்கின்றது.
ஒரு குரு நீங்கள் எந்த பாதையில் இருக்கின்றார் என்று பார்த்தாலும், உங்களுடைய லௌகீகமான உலகம் பற்றி அவர் அறிந்திருந்தாலும், நீங்கள் ஞானம் பெற விரும்புகிறீர்கள் என்று புரிந்திருந்தாலும் உங்களுக்கு எந்த சாவி என்பதை அவர் மட்டுமே அறிவார். உங்களின் பார்வையில் அதற்கு காலம் என்று ஒன்றை நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். என்றோ ஒரு பத்தாண்டுகளுக்காகவோ அல்லது இருபது வருடங்களுக்காகவோ கொஞ்சம் கொஞ்சமாக பக்குவம் பெற்று ஞானம் பெறுவோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் அவர் அறிவார்.
ஆனால், உண்மையான குரு உங்களின் அனைத்து விஷயங்களையும் அறிந்தவராக இருக்கின்றார். சட்டென்று ஒருநாள் உங்களை அழைத்து ஏதோவொன்றை உங்களுக்கு அளிக்கிறார். அவர் அளிக்கும்போது கூட அது என்னால் அளிக்க முடியாது, அது உன்னிடமே இருக்கின்றது என்றுதான் சொல்கிறார். அப்படி கொடுக்கும்போது கூட அவர் என்ன கொடுக்கின்றார் என்று ஒரு சீடனால் சொல்ல முடியாமல் போய்விடுகின்றது.
உண்மையான உண்மை என்று மீண்டும் சொல்வதென்றால் குருவின் முன்னிலையில் ஏதோ ஒன்று நிகழ்கின்றது. ஒருவருக்கு மட்டும் ஏன் நிகழ்கின்றது… இன்னொருவருக்கு ஏன் நிகழவில்லை என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அது புதிராகவே உள்ளது.
அப்படிப்பட்ட புதிருக்கும் புதிரான நாள் அன்று வந்தது.
பப்பா ராமதாஸ் நிறைய பசுக்கள் நிறைந்த அந்தப் பக்கமாக ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தார். ராம்சுரத்குன்வர் அவரைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தார்.
மெல்ல பப்பா திரும்பினார்.
ராம்ரஞ்சனி தேவி தன்னுடைய வீட்டில் குழந்தைகளை நோக்கி இங்கே அனைவரும் அருகே வாருங்கள் என்று அழைத்தார்கள்.
‘‘என்ன வேண்டும் ராம்சுரத்… என்ன வேண்டும் சொல்.’’
ராம்ரஞ்சனி தேவி குழந்தைகள் அனைவரையும் தன் வீட்டு பூஜையறையின் முன்பு உட்கார வைத்தார்கள்.
‘‘இந்த ராம்தாஸ் உன்னுள் இருக்கும் பெருஞ்சக்தியை தூண்ட வேண்டும் என்று விரும்புகிறாயா…’’
‘‘ஏனம்மா இன்று திடீரென்று எங்களை இங்கு பூஜையறையில் அமரவைத்திருக்கிறீர்கள்’’ ஒரு குழந்தை கேட்டது.
‘‘தெரியவில்லையம்மா… ஏனோ என் மனதில் நிம்மதி பரவியிருக்கின்றது. உங்கள் தந்தையின் அருகாமையை மிக நெருக்கமாக நான் உணர்கின்றேன். எத்தனை கவலை இருந்தாலும் இன்று ஏனோ எனக்குள் ஒரு நிம்மதி பரவியபடி இருக்கின்றது குழந்தை. கைகளை கூப்பிக்கொண்டு அமருங்கள். கண்களை மூடுங்கள். நான் சொல்வதைத் திரும்பச் சொல்லுங்கள்…’’
பப்பாவின் எதிரே குழந்தைபோலும் ராம்சுரத் குன்வர் அமர்ந்திருக்க, அங்கே ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தாய் ஒருத்தி தன் குழந்தைகளோடு தெய்வத்தின் முன்பே அமர்ந்தாள்.
‘‘பப்பா… உங்களை விட்டுப் பிரிய என்னால் முடியாது எங்கு சென்றாலும் உங்கள் நினைவே என் நெஞ்சைப் பிழிகின்றது.
உடலாக அங்கிருக்கின்றேன். பெரும் பிரியமும் அன்பும் கொண்ட என் உள்ளம் எப்போதும் உங்களையே சுற்றுகின்றது’’ என்று கைகூப்பி கண்கள் கலங்கி அழுதார்.
‘‘ராம்சுரத் நான் இப்போது சொல்வதை நீ திரும்பச் சொல் பார்ப்போம்.’’
ராம்சுரத் குன்வரின் மனம் அசையாது நின்றது. ஒட்டுமொத்த மனதின் கவனமும் பப்பாவிடமிருந்து என்ன வரப்போகின்றது என்று காத்திருந்தது. அந்த மனம் எதையும் வேண்டும் என்றும் கோரவில்லை. வேண்டாம் என்றும் விலக்கவில்லை. அது எதையும் அடைய வேண்டும் என்று நினைக்கவில்லை. அடையத்தான் போகின்றோம் என்கிற எண்ணமும் இல்லை. முற்றிலும் மனதின் ஒட்டுமொத்த ஓய்ச்சலும் ராம்சுரத்குன்வருக்கு அடங்கிப் போயிருந்தது. வெளியே எதையும் பற்றாது… எதை நோக்கியும் அலையாது குருவின் ஆணைக்காக மிகமிக தீவிரமாக என்ன வருகின்றதோ அதை அப்படியே பிடித்துக் கொள்வது என்கிற நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் ராம்சுரத்குன்வர் இருந்தார்.
இதோ சொல் பார்ப்போம்… என்று ராம்சுரத்குன்வரின் தீர்க்கமான கண்களை நோக்கி…‘‘ ஓம் ராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்’’ என்றார்.
அந்த வார்த்தைகளை மீண்டும் ராம்சுரத்குன்வர் சொல்லத் தொடங்கினார். ‘‘ஓம் ராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்’’ என்று நிதானமாகச் சொல்லும்போது ஓம் எனும் வார்த்தை அம்புபோல் பாய்ந்து உள்ளே சென்றது. ராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம் என்கிற வார்த்தைகள் அங்கு வார்த்தைகளாக விழுந்தாலும் அந்த வார்த்தைகள் வெடிப்பதைப்போல் இருந்தது.
அந்த வார்த்தை அங்கு வார்த்தையாக இல்லை. அந்த எழுத்துக்குள் அண்ட பேரண்டத்தை அசைக்கும் சக்தியை அழுத்தி வைத்து பப்பா செலுத்துவதுபோல் இருந்தது. இந்த நாமம் எல்லா பெயர் நாம ரூபங்கள் அனைத்தையும் ஒன்றாக்கிக் காட்டியது. சில்லு ஓடுபோல் சிதறியிருந்த மனம் கிடுகிடுவென்று ஒன்றானது. மனதை இந்த நாமமானது உறிஞ்சியது. மனம் உறிஞ்சப்படும்போது எதிரேயுள்ள உலகம் வெறும் பிம்பங்களாக இருப்பதும். இந்த மனமே இவை எல்லாவற்றையும் உருவாக்கியிருப்பதையும் அப்படி உருவாக்கியிருக்கும் இந்த உலகத்தை இந்த நாமம் உறிஞ்சி தன்னுள் தானாக ஏந்திக்கொண்டு உள்ளே சென்று மறைந்தது.
பப்பாவைப் பார்க்க அங்கு பப்பா இல்லாமல் பப்பா என்கிற உடல் இல்லாமல் அண்ட பேரண்டத்தை ஏந்திக்கொண்டுள்ள விவரிப்பதற்கு அப்பாற்பட்ட விஸ்வரூப தரிசனத்தை கண்டார். அங்கு பப்பா என்கிற உடலாக இல்லாமல் தந்தை என்கிற பெரும் சக்தி இருப்பதை அறிந்தார். தனக்குள் மனம் என்ற ஒன்றை அந்த ஓம் ராம் ஜெயராம் ஜெய்ஜெய் ராம்… என்கிற நாமமானது எரித்து விட்டிருந்தது. இந்த உடலாக இல்லாமல் எல்லாமாகவும் தான் இருப்பதைக் கண்டார்.
ராம்சுரத்குன்வர் என்கிற அந்த சிறிய உடலானதும் மனமானதும் செத்துப் போயிற்று. வெளியே உடலாக இருந்தாலும் உள்ளுக்குள் இந்த உடலையே நான் என்று நினைத்திருந்த மனம் செத்துப்போனது. அது ராம ஜபத்தால் விழுங்கப்பெற்றது. இனி இது ராம்சுரத்குன்வர் இல்லை. ராம்ரஞ்சனி தேவி என்கிற பெண்ணின் கணவன் இல்லை. நான்கு குழந்தைகளுக்கான தகப்பனும் இல்லை. சகோதரர்களுக்கான சகோதரனும் இல்லை.
ஆதியிலிருந்த எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கும் அந்த சத்தியம் ராம்சுரத்குன்வரை நிறைக்கத் தொடங்கியது. வார்த்தைகளுக்கு அப்பால்… விவரித்தலுக்கு அப்பால்… எங்கோ ஒரு சிகரத்திற்கெல்லாம் சிகரமான பெரும் ஞான நிலையில் தளும்பிக் கொண்டிருந்தார்.
ராம்ரஞ்சனி தேவி குழந்தைகளை நோக்கி கண்களில் தாரை தாரையாக கண்ணீரோடு ‘‘ராம ஜெயராம ஜெயஜெய ராம ஓம் ராம ஜெயராம ஜெயராம ஜெயஜெய ராம் ஓம்…’’ என்று பாட அந்தக் குழந்தைகள் தன் மழலைக் குரலில் பாடப்பாட தங்களைப் பெற்ற ராம்சுரத்குன்வர் என்கிற தகப்பன் மகத்தான ஞானத்தின் சிகரத்தில் ஏறிக் கொண்டிருப்பதை பப்பா சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
ராமம் என்கிற பிரம்மம் அந்தக் குடும்பத்திற்குக் கடன்பட்டிருப்பதாக அதுவே நினைத்தது.
ராம்சுரத்குன்வர் அந்த இறைசக்தியைத் தாங்க முடியாமல் அழுதார். மெல்ல எழுந்தார்.
ராம்ரஞ்சனி தேவிக்குள்ளும் ஏதோ ஒருவிதமாக ராம பட்டாபிஷேகம் நிறைவுற்ற நிம்மதியில் நமஸ்கரித்தாள். குழந்தைகளையும் நமஸ்கரிக்கச் சொன்னாள்.
ராம்சுரத்குன்வர் எதிரேயுள்ள மலையை நோக்கி நடக்கத் தொடங்கினார். பிரபஞ்சமே அவராக நடப்பது போன்றிருப்பதை அறிந்து சிலையானார். பப்பா… மெல்ல தோளின் மீது கைபிடித்து அழுத்த மீண்டும் அந்த மலையின் உச்சியை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
- விசிறி வீசும்
