
தியாக மூர்த்தமான ராம்ரஞ்சனி தேவி
ராம்சுரத்குன்வர் இம்முறை குடும்பத்தோடு சென்று தங்கினார். தங்கிய சிறிது நாட்களிலேயே அங்கேயே இருக்க ஆசைப்பட்டார். ஆனால், பப்பா ராம்தாஸோ, ‘‘ஒஹோ… அப்படியொரு எண்ணமோ’’ என்பதுபோல் பார்க்க மீண்டும் ஊருக்கே புறப்பட்டார்.
ஆனால், ஊருக்கு வந்தும் நிலைகொள்ளாது தவித்தார்.
பகவான் ரமணரின் மகாசமாதிக்குப் பின்னர் நீண்ட தாடியை வைத்துக் கொண்டார். மெல்ல புறப்பட்டு கங்கோத்ரி, ரிஷிகேஷ், யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் என்று தொடர்ந்து பயணங்கள் செய்தார். அங்கும் சாதுக்கள் சந்நியாசிகள் என்று பலரைச் சந்தித்தார்.
வீட்டில் அவர் தங்குவது என்பது அபூர்வமாகிவிட்டது. ஆனாலும், அவ்வப்போது வருவதும் போவதுமாக இருந்தார்.
காதலியையே நினைத்து நினைத்து கண்ணுறங்காது கிடக்கும் காதலனின் ஏக்கம்போல… அந்த தெய்வீக நிலை தனக்கு எப்போது கிட்டும் என்று ஏங்கி ஏங்கித் தவித்தார். காதலி ஏற்றுக் கொள்வாளோ மாட்டாளோ… கொடுத்த வாக்குகள் அனைத்தும் மறந்தாளோ… மீண்டும் தன் மீது காதல் கொள்வாளோ என்று மருகி மருகி மனம் சுருள.. உடல் உருக்கி கிடப்பவன்போல… அந்த தெய்வீகப் பித்து பிடிக்கும் என்று வாக்கு தந்த குருநாதர்கள் சொன்னது அனைத்தும் வீணே போகுமா என்கிற துக்கம் நெஞ்சை துளைத்தெடுத்தது. காதலியின் அண்மையிலேயே கிடக்கத் துடிக்கும் காதலின் விரகம்போல குருவின் கதகதப்பான அடைகாப்பில் இருக்க ஆசைப்பட்டார், ராம்சுரத்குன்வர். இதோ பார் என் தலைவியே என்னுள் நீ நிறைந்திருக்கிறாய்… இதென்ன அவஸ்தை என்று நான் தள்ளினாலும் நகராமல் நிறைந்திருக்கிறாயே… ஏன் இப்படி… என்பதுபோல குருவாகிய நீரே என்னுள் நிறைந்திருக்கிறீர். உங்களுக்குள் நான் இருக்கிறேனா என்பதை யாம் அறியோம். ஆனால், நீங்களே என்னை ஆள்கிறீர்கள்
என்பதை நான் அறியாமல் இல்லை.
உள்ளுக்குள் எவர் இனி நம் குரு என்கிற தீர்மானம் உறுதியாகத் தோன்றாது இருந்தது. அவரும் எங்கெல்லாம் இந்தப் பிரபஞ்சம் தம்மை நகர்த்துகின்றதோ அங்கெல்லாம் நகர்ந்தபடி இருந்தார். வெளியே மெல்ல மெல்ல உருவம் மாறத் தொடங்கியது.
குளிக்காத உடல். சிக்குப் பிடித்த தலை. வெறித்த பார்வை. எங்கேனும் சென்றேயாக வேண்டுமென்கிற மனோநிலை. உள்ளுக்குள்
உருளும் புரளும் தவிக்கும் மனோநிலையை எவரிடம் சொல்வது.
மீண்டும் புறப்படு குன்வர்… என்று உள்ளுக்குள் குரலொன்று ஒலிக்க, பப்பா ராம்தாஸ் நோக்கி பயணமானார். இந்த முறை ஒரு மாதத்திற்கு மேல் இருந்து பார்த்தார்.
உள்ளுக்குள் ஒன்றும் ஆகவில்லை. ஏன் ஆகவில்லை என்று மீண்டும் குழம்பினார். பப்பா ராமதாஸ் எந்த தாக்கத்தையும் அவரிடத்தில் ஏற்படுத்தவில்லை. சரி புறப்படலாம் என்று மீண்டும் ஊருக்கு வந்து விட்டார்.
(பின்னாளில் யோகிராம்சுரத்குமார் இதனை, இந்தப் பிச்சைக்காரன் பப்பாவை புரிந்துகொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. அது அறுவடைக்கான காலமாக இல்லை. பப்பாவே தான் யார் என்பதையும், தன் இறைத் தன்மையையும் இந்தப் பிச்சைக்காரனுக்கு காட்டும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. பின்னர், இந்தப் பிச்சைக்காரன் பப்பாவே தன் தந்தையென புரிந்து கொண்டான் என்றார்)
அது 1952ம் வருடம். திடீரென்று சில ஆன்மிக அனுபவங்கள் கிடைக்குப்போல் இருந்ததும், மீண்டும் வாழ்க்கையின் சவால்கள் அவரைப் பிடித்து உலுக்கும்போது சுக்குநூறாகச் சிதறினார். சிலசமயம் தெய்வீகத் தன்மை அவருக்குள் புகுந்து தம்மை அமைதிப்படுத்துவது போன்று சிற்சில அனுபவங்கள் வந்தாலும் அது நிரந்தரமாகாது நழுவிநழுவிச் சென்றது. அப்போதெல்லாம் அருகிலுள்ள புனித தலங்களுக்குச் சென்று நீராடுவதும் மென்மையான தவ வாழ்க்கையுமாக நகர்ந்தது. ஆனாலும், உள்ளுக்குள் நிறைவடையாது இருந்தார்.
இந்த எந்த நிலையும் தனக்கு வேண்டாம். கடவுளின் வாசல் வரை சென்றுவிட்டு பிறகு மீண்டும் பின்னால் வருவது என்று எத்தனை காலமாக இப்படியே செல்வது. யானைப் பசிக்கு சோளப்பொரி போல் அல்லவா உள்ளது என்று முடிவு செய்தார். பலநாட்கள் யோசித்தார். தூக்கம் போயிற்று. வீட்டில் உள்ளவர்களிடத்திலும் பேச்சில்லை. குழந்தைகளை வெறுமே பார்த்தார். மனைவியை மென்மையாகப் பார்த்தார். அருகே அழைத்தார். கண்களில் நீருடன் நின்றார்.
குழந்தைகள், மனைவி அனைவரையும் தஹியாவில் கொண்டுபோய் விட்டார்.
‘‘என்ன ஆயிற்று உங்களுக்கு’’ என்றார், ராம்ரஞ்சனி தேவி.
‘‘இப்படியும் இல்லாமல் அப்படியுமல்லாமல் இருக்கின்றேன் தேவி. ஒரேடியாக வெட்டி அப்பால் போட்டால் பரவாயில்லை. இங்கா… அங்கா… என்று உடலும் மனமும் உதறிக் கொண்டே இருக்கின்றது. நான் சொல்வது புரிகின்றதா. நான் ஏதேனும்
முடிவெடுக்க வேண்டும்.’’ என்றார்.
ராம்ரஞ்சனி தேவி பதறினாள். பரிதாபமாக பார்த்தாள். ஏனோ… அவருக்குள் ஒவ்வொரு நம்பிக்கையாக உடைந்து கொண்டேயிருந்தன. தூக்கி தூக்கி நிறுத்தினாலும் ஒடிந்து விழும் கூரைபோல மனம் தளர்ந்து சாயத் தொடங்கியது.
‘‘ராம்ரஞ்சனி தேவி… நான் செல்ல வேண்டும். இனி என்னால் இங்கிருக்க முடியாது. உன்னை விடவும் நான் வருத்தமுறுகின்றேன். ஆனால், இங்கு நடப்பதை அறிந்தால், ஒருவேளை என்னுள் நிகழும் அகமாறுதலில் ஒரு துளி உனக்குள் ஏற்பட்டால் நீ இந்நேரம் என்னை ஓடிப்போகச் சொல்லியிருப்பாய். நான் சென்றால் எல்லோரும் என்னைவிட உன்னைத்தான் ஏசுவார்கள். குழந்தைகள் ஏங்கும். நீ என்ன செய்வதென்று தவிப்பாய். ஒவ்வொரு நாளும் தளர்ந்து போவாய் என்று அனைத்தும் அறிவேன். ஆனாலும், என்னுள் நிகழ்வது பிரபஞ்ச காரியம் என்பதை நீ அறிவாயா அன்பே. உன்னுள் தொடங்கிய இந்த அன்பு இனி இந்தப் பிரபஞ்சத்தையே அடைத்து நிற்கப்போகும் என்று மிகத் திடமாக நான் உணர்கின்றேன். ஆனாலும், அது இங்கிருந்து அல்ல… நான் பப்பாவின் காலில் வீழ்ந்து.. நீங்கள் உங்களின் முழு இறைத்தன்மையை என்னுள் செலுத்துங்கள் என்று கேட்கப் போகிறேன். குருவின் துணையின்றி இது நிகழாது. பின்னர் நிகழட்டும் என்று சாதாரண பாமரனாக மாறியிருக்க என்னால் இயலாது. இந்த கடலுக்குள் சென்று நதிபோல என்னுள் பாய, என்னை உடைத்துக்கொண்டு பாய உள்ளுக்குள் பெருஞ்சக்தி தயாராக இருக்கின்றது. அணையின் கொள்ளளவு நிரம்பிவிட்டதைப்போல் உணர்கின்றேன். ஒன்று அதாக உடைய வேண்டும். மனதை உடைத்துக்கொண்டு என்னை என்னுள் மிஞ்சியிருக்கும் ஏதோ ஒன்றை அப்பால் தள்ளிவிட்டு நகர என்னை நெருக்குகின்றது. தேவி உனக்கு புரிகின்றதா. போ… குழந்தைகளை அழைத்து வா… நான் பார்க்க வேண்டும்’’ ராம்ரஞ்சனி தேவி கால்கள் துவள நான்கு குழந்தைகளையும் அவரின் எதிரேகொண்டு வந்து நிறுத்தினாள்.
நான்கும் நான்கு வேதங்கள் போல அவரருகே வந்து நின்றன. எல்லா குழந்தைகளையும் முத்தமிட்டார். தலையைக் கோதினார். பெண் குழந்தைகளின் தலையை வருடினார். அம்மா… அம்மா… என்றார். குழந்தைகள் தந்தையின் நிலையையும் புரியாது தாயின் துயரத்தையும் அறியாது சும்மா நின்றன.
ஆனால், அனைத்தையும் அறிந்த மகாசக்தி அந்த குழந்தைகளுக்குள் நாளை மகானாக உயரப்போகும் கரங்களின் வழியே கருணை எனும் தீர்த்தத்தால் தன்னையே நிறைத்தன.
பிதாஜி… பிதாஜி… என்று தன் மகன் அழைக்கும்போது கொஞ்சம் உடைந்தார். ராம்ரஞ்சனிதேவி பிரமை பிடித்ததுபோல் இருந்தாள்.
‘‘நீங்கள் எப்போதும் அங்குமிங்கும் சென்றுவிட்டு வருவீர்கள்தானே. அதுபோலவே வந்து விடுவீர்கள் அல்லவா. எனக்கு அந்த நம்பிக்கை உண்டு’’ என்று தனக்குத்தானே ஆறுதலாக கூறிக் கொண்டாள்.
அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
மனைவியை அருகே அழைத்தார். அந்த மென்மையான கரங்களின் மீது தன் கரங்களை வைத்தார். கண்கள் மூடினார்.
‘‘என் அப்பா… நான் இதற்குப் பிறகு இவளைப் பார்ப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. எத்தனை ஜென்மமாக எனக்கு இவள் மனைவி என்று தெரியவில்லை. ஆனால், இந்த ஜென்மத்தில் என் மனைவியாக நீ அனுப்பியிருக்கிறாய். சாட்சாத் அந்த அம்பா மாகேஸ்வரியின் அனுக்கிரகம் பெற்றவள் இவள். அதிர்ந்து கூட என்னை கூடுதலாக ஒரு சொல்லை சொன்னதில்லை. இனி இவள் தாய் மட்டுமல்ல. அவளே தந்தையும் ஆவாள். அவள் என் இருப்பை உணர்ந்தபடி இருக்க நீயே துணையிருக்க வேண்டும். இங்கு இவளை பாவம் என்று சொல்ல மாட்டேன். புண்ணியவதி என்று வணங்கவே தோன்றுகின்றது. எனக்காக தன்னை கரைத்துக் கொண்டவள். தியாக ரூபம். நான் பிரம்மத்தை தேடுகின்றேன் என்பதுகூட அல்ல. இதோ பிரம்மத்தை அடையவிக்கும் ஒருவனுக்காக சகலத்தையும் விட்டுவிடும் நிலையில் இவள் தானே நிற்கிறாள். கர்ம யோகி இவளே. தாயும் இவளே. தந்தையும் இவளே. தியாக மூர்த்தமே இங்கு ராம்ரஞ்சனி தேவியாக வந்து நிற்கிறாள். இவர்களெல்லாம் தியாகத்தையே தியானமாகச் செய்பவர்கள்… என்னுள்ளும் ஏதோ ஒன்று உடைந்து அவளை அடைகின்றது. என் அன்பும் தேடலும் தவிப்பும் அவளும்
அறிவாள். ஆனால், உலகம் நாளை வரும்போது என்ன செய்வதென்று அறியாது தவிப்பாள். என் தகப்பனே… அவளை நீ காப்பாற்று என்று கோரமாட்டேன். ஏனெனில், நீ அவளுக்குள் சுடர்விட்டு நிற்கிறாய். அந்த ஆதரவு உள்ளதென அறியச்செய் என்பதே என் பிரார்த்தனை’’ என்று கண்களில் பொங்கும் கண்ணீரோடு இனி இந்த உலகம் எனதல்ல என்று குழந்தைகள் மனைவி ஊர் உலகம் என்று ஒவ்வொரு கயிறும் அறுந்து விழ… அறுந்து விழ… எது தன்னை விட்டு விலகுகின்றது என்றுகூட அறியாமல் தூரத்தில் நகர வீட்டின் வாயிலில் குழந்தைகள் மனைவி அனைவரும் மறைய பப்பா ராமதாஸ் என்கிற குருவை நோக்கி இந்த முறை மிகுந்த நம்பிக்கையோடு புறப்பட்டார்.
பப்பா ராமதாஸ் இந்த முறை சிம்மம் போன்று தெரிந்தார். பஜனை அறையில் அமர்ந்திருந்தவரை நோக்கி நேராக வணங்கி நிமிர்ந்தார்.
தனிஅறையை அவருக்கென்று ஒதுக்கினார்கள்.
தன் தந்தையின் மீது அமர்ந்த குழந்தைபோல ராம்சுரத்குன்வர் ஆனந்தமாகவும் மிகுந்த பாதுகாப்போடும் தான் இருப்பதாக உணர்ந்தார்.
அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சிம்மத்தின் பலம் சிம்மத்திற்குத் தெரியும் என்பதுபோல பப்பா ராம்தாஸ் ராம்சுரத்குன்வரை அருகே அழைத்தார்.
ராம்சுரத்குன்வரின் உடல் உதறியது. தோளைத் தொட்டவுடன் மெல்ல அடங்கினார்.
என்ன சொல்வதென்று சொல்லவும் தெரியாமல் கேட்கவும் தெரியாமல் தன்னுள் நிகழும் மாற்றத்தை ராம்சுரத்குன்வர் சொல்லத் தொடங்கினார்.
அருணாசல சிவம் அவர்களுக்கு மத்தியில் ராமாசலமாக அமர்ந்தது.
- விசிறி வீசும்
- https://daily.navinavirutcham.in/?p=31721

One Comment on “யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன் – 14”
Comments are closed.