யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்

சுழன்றடிக்கும் ஞானச் சூறாவளி 13

பப்பா ராமதாஸை ராம்சுரத்குன்வர் சந்தித்து விட்டு வந்தது, அவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மாற்றத் தோடேயே மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து ரமண பகவானை தரிசித்தார். இப்படி மீண்டும் மீண்டும் ரமண பகவானைத் தரிசிக்க வேண்டுமென்கிற விழைவு அவரை விரட்டியபடி இருந்தது.
திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் இம்முறை தஹியாவிற்கு திரும்பினார். ஆனால், பழைய ராம்சுரத்குன்வராக இல்லாமல் ஏதோவொரு பெருத்த மாற்றத்தை நோக்கி அவரின் அக உலகம் திரும்பியிருந்தது.
எப்போதுமே தனிமையில் இருக்கவே விரும்பினார். அதிகமான ஜன நடமாட்டத்திலிருந்து விலகினார். ஊரின் எல்லையோரத்தில் மெல்லியதாய் தென்றல் வீசும், மரங்கள் அடர்ந்த இடத்தை நோக்கி இருக்கவே விரும்பினார். அங்கொரு குடிசையில் அமர்ந்து தனியே தவமியற்றினார். அவரின் அகம் மாறத் தொடங்கியது. முகமும் மாறியது. எப்போதாவது குளித்தார். தலை சீவுவதையே மறந்தார். நீண்ட முடியோடும் தாடியோடும் அப்படியே மாதக் கணக்கில் ஊர் முழுவதும் அலைந்தார். இவரை பார்ப்போர் அனைவரும் நின்று வணங்கி விட்டுச் சென்றனர்.
தன்னிடத்தில் எதையும் வைத்துக் கொள்ளாமல் கைகளில் என்னென்ன கிடைக்கின்றதோ எல்லாவற்றையும் எல்லோருக்கும் அளிக்கத் தொடங்கினார். தெருவில் யாரேனும் பிச்சைக்காரரின் குரல் கேட்டால் அவர்களை வீட்டிற்குள் அழைத்து அமர்ந்து இருக்கும் உணவை அளிக்கச் செய்தார்.
ஒருபுறம் குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றுகின்ற கணவராகவும், அதேசமயம் வேறொரு ஆன்மிக தளத்தில் தன்னுள் தானாகவும் சென்றபடி இருந்தார். பள்ளியிலும் தன்னுடைய பணியை சரியானபடிக்கு செய்பவராக இருந்தார்.
அப்போது அவருக்கு மிக நெருக்கமாக இருந்த சௌத்ரி என்கிற நண்பரோடு வயல் வெளிகளில் நடந்தபடி இருந்தார். சட்டென்று அமைதியாக உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார். கண்களில் நீர் வழிந்தபடி இருந்தது.
‘‘‘சௌத்ரி… அதோ பாருங்கள்… அதோ பாருங்கள்’’ என்று குன்வர் வானத்தைக் காட்டினார்.
‘‘என்ன சுரத்குன்வர்… என்ன அங்கே.’’
‘‘அதோ என் குருநாதர் ரமண மகரிஷி தன்னுடைய பெரும் யாத்திரையை துவக்கி விட்டார்.’’ என்று வானத்தை நோக்கி வணங்கினார்.
சௌத்ரிக்கு தூக்கி வாரிப்போட்டது. அதெப்படி ராம்சுரத்குன்வருக்கு இந்த விஷயம் தெரிகின்றது என்று வியந்தார். அடுத்த தினமே ரமண மகரிஷி சித்தியடைந்தார் என்கிற நாடு முழுவதும் ஆன்மீக அன்பர்களுக்கு தெரியத் தொடங்கியிருந்தது.
ராம்சுரத்குன்வர் உடைந்து அழுதார். என்ன செய்வது என்று தெரியாமல் எப்படி வெளிப்படுத்துவது என்று கூடத் தெரியாமல் அலைந்தபடி இருந்தார். இதற்கு நடுவே சௌத்ரியை சந்தித்துப் பேசினார்.
‘‘சௌத்ரிஜி… இந்த உலகம் முழுவதும் துக்கத்தால் நிரம்பிய மனிதர்களைப் பார்க்கின்றேன். துக்கத்தோடேயே தினம் தினம் தங்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் துக்கத்தில் இருக்கிறோம் என்பதைக் கூட அறியாது இருக்கிறார்கள். இந்த துக்கத்திலிருந்து எப்படி வெளியே வருவது என்று கூட தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொள்ளாமல் அலைபாய்கிறார்கள். அவர்களின் முகத்திலும் இதயத்திலும் உண்மையான சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் உண்மையான சந்தோஷத்தை ஆன்மீக மயமான அந்த பெரும் ஆத்ம சந்தோஷத்தை அறிய வேண்டும். அதுவே அனைத்து வித துன்பங்களிலிருந்தும் அனைவரையும் விடுவிக்கும் சக்தியாகும். அதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் இலக்காக வேண்டும். அப்படி எல்லோரையும் தன் கருணையால் கரைசேர்த்த பகவான் ரமணரை நான் இழந்து விட்டேன். இதற்குப் பிறகு குருவை நான் எப்படிக் கண்டடைவது’’ என்று புலம்பினார்.
பகவான் ரமணரின் இந்த பெரும் இழப்பு அவரை நிலைகொள்ள முடியாமல் தவிக்கச் செய்தது.
திடீரென்று தான் பணியாற்றிக் கொண்டிருந்த பள்ளிக்குச் சென்றார். அந்தப் பள்ளியின் முதல்வரை சந்தித்தார்.
‘‘வாருங்கள் ராம்சுரத்குன்வர்… என்ன விஷயம்’’
‘‘எனக்கு இரண்டு வருடங்கள் விடுமுறை வேண்டும்.’’
‘‘என்ன இரண்டு வருடங்களா… மிக நிச்சயமாக முடியாது. எப்படி இரண்டு வருடங்கள் விடுமுறை அளிப்பது’’
‘‘இல்லையெனில் நான் இந்த வேலையை விட்டே வெளியேறுகின்றேன்.’’
‘‘கொஞ்சம் யோசியுங்கள் சுரத்குன்வர் ஜி. உங்களை நாங்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். நீங்கள் இங்கிருப்பது என்பது எங்களுக்கு பெரும் பலமாக உள்ளது. ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நீங்கள். எல்லோரிடமும் கருணையும் அன்பும் கொண்டு பழகும் உங்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை. நீங்கள் குடும்பஸ்தர். உங்களுக்கும் குழந்தைகள் உள்ளனர். நீங்கள் பரிசீலனை செய்து பாருங்கள்’’ என்று கேட்டார், அந்தப் பள்ளியின் முதல்வர்.
‘‘நீங்கள் என் மீது கொண்டுள்ள அக்கறைக்க்கு மிக்க நன்றி. ஆனால், இங்கு வேறொரு விஷயம் நடந்து கொண்டிருக்கின்றது’’ என்று தன்னுடைய மார்பை தொட்டுக் காண்பித்தார்.
‘‘சரி… உங்கள் இஷ்டம். என்ன வேண்டுமோ செய்து கொள்ளுங்கள்’’ என்றார்.
இவர் பள்ளியை விட்டு வெளியேறுகின்றார் என்கிற விஷயத்தை வீட்டில் சொன்னவுடன் ராம்ரஞ்சனி தேவிக்கு இடி விழுந்தது போல் இருந்தது.
‘‘வேறென்ன செய்யப் போகிறீர்கள். எனக்கு ஏனோ பயமாக உள்ளது. நமக்கு ஒன்றல்ல இரண்டல்ல நான்கு குழந்தைகள் உள்ளனர்’’ என்று ராம்ரஞ்சனி தேவி பதறினார்கள்.
‘‘ஒன்றும் பயப்படாதே தேவி. நமக்கு மேலே மாபெரும் சக்தி ஒன்று என்னையும் உன்னையும் விட மிகமிக கருணையோடு நம்மைக் கவனித்துக் கொள்கிறது. இங்கு உள்ள ஒவ்வொருவரும் ஏதோவொரு பயத்தால் பீடித்தபடி உள்ளனர். கொஞ்சம் அமைதியாக தன்னையும் தன்னைச் சுற்றிலுமுள்ளவர்களை உற்றுப் பார்க்கத் தொடங்கினால் போதும். அந்த மகாசக்தியே அனைத்தையும் நடத்துகின்றது என்பதை அறிந்து கொள்வார்கள். நான் எனும் அகங்காரம் தன்னால் ஏனோ நடக்கின்றது என்று நிச்சயித்து பயமும் ஆசையுமாய் நம்மை அலைகழிக்க வைக்கின்றது. நீ இதை புரிந்து கொள்ளம்மா ரஞ்சனி. என்னுள்ளே வேறொரு உன்னதமான விஷயம் மலர இருக்கின்றது. அந்த மகத்தான சக்தியே அனைத்தினுள்ளும் விளங்குகின்றது. உன்னைப்பற்றி மட்டுமல்ல… என்னைப்பற்றி… நம் குழந்தைகளைப்பற்றி நீ கவலைப்படாதே. எந்த சூழ்நிலையிலும் அது உன்னை காப்பாற்றும்.’’ என்று சுரத்குன்வர் பேசினார்.
‘‘ஆனாலும் எனக்கு என்னவோ பயமாகவே உள்ளது. நான் சாதாரணப் பெண். எனக்கு கணவனான நீங்கள் வேண்டும். இந்த குழந்தைகளுக்கு தகப்பனாக நீங்கள் வேண்டும்’’ என்றாள்.
‘‘ராம்ரஞ்சனி தேவி. அதெல்லாம் புரியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறாயா. இப்போது உனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் மெல்ல மெல்ல எல்லாவற்றையுமே நீ புரிந்து கொள்வாய். இன்று நீ வருத்தமாகத்தான் இருப்பாய். ஆனால், சில வருடங்கள் அல்ல பல வருடங்கள் கழித்து நீயொரு புண்ணியாத்மா என்று எல்லோரும் உன்னை கொண்டாடுவார்கள். ஆனால், அதுவரை நீ யார் என்று உனக்கு தெரியாதம்மா. உன்னை எனக்காகவே தேர்ந்தெடுத்து அந்த மகாசக்தி அனுப்பியுள்ளது. அதனால், அது செலுத்தும் வழிக்கே நான் சென்று கொண்டிருக்கின்றேன். அது நிச்சயம் நல்லதில்தான் சென்று முடியும். நாம் விரைவிலேயே கேரளாவிலுள்ள கஞ்சன்காடு என்கிற ஊருக்கு செல்கிறோம். அங்கு நம் குரு பப்பா ராம்தாஸ் அவர்களை தரிசிக்கிறோம். நாளை காலை நான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அங்கு பிரிவு உபசார விழாவை நடத்த இருக்கிறார்கள்’’ என்று முடித்தார்.
ராம்ரஞ்சனி தேவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கணவனின் மீது நம்பிக்கை இல்லாமலும் இல்லை. என் கணவர் சாதாரணர் அல்ல என்று அவருக்கு புரிந்திருந்தது. ஏதேனும் விபரீதமாக நடந்துவிட்டால்… திடீரென்று எங்களை விட்டுப் பிரிந்து விடப்போகிறாரா… அதனால்தான் என்னிடம் இப்படியெல்லாம் பேசுகிறாரா. அவர் உள்ளுக்குள் அந்த மகாசக்தியை உணர்ந்திருக்கிறார் என்பதை நானும் கொஞ்சம் அவரின் பிரகாசத்தை வைத்து அறிகின்றேன். அந்தக் கணத்திலெல்லாம் இப்படி ஒரு மகானே கணவராக இருக்கின்றாரே என்று பெருமிதம் கொள்கிறேன். அதே சமயம், என் எதிர்காலம், வாழ்க்கை, குழந்தை, குடும்பம் என்ன ஆகும். தலைசுற்றுகிறதே… என்று தனக்குள் குழம்பித் தவித்தாள்.
ராம்சுரத்குன்வர் மறுநாள் பள்ளிக்குச் சென்றார், அனைவரும் கூடி நின்று மீண்டும் அறிவுரை கூறினர். சத்திய நாராயண எனும் ஆசிரியர் ஒருவர் அருகே வந்தார்.
‘‘பாபா… இந்தாருங்கள் பாயசம்’’ என்றார். அவர் அப்படிச் சொல்லும்போது அவர் கண்களில் நீர் திரண்டிருந்தது.
‘‘என்ன நாராயண சிங். நீங்கள் அழலாமா’’
‘‘இல்லை பாபா. எங்கள் மீது கருணை காட்டுங்கள். நீங்கள் புத்தராக வருவீர்கள் என்று தோன்றுகின்றது. அப்படி வரும் நாளை இந்தப் பள்ளி… நான்… ஆசிரியர்கள்… மாணவர்கள்… அனைவரும் எதிர்நோக்கி இருக்கின்றோம். உங்களை மறக்க முடியாது பாபா….’’ என்று ராம்சுரத்குன்வரை நாராயண சிங் நமஸ்கரித்தார்.
கோகுலத்தை விட்டும் பிருந்தாவனத்தை விட்டும் பிரிய மனமில்லாமல் சென்ற கண்ணனைப்போல ராம்சுரத்குன்வர் அந்தப் பள்ளியை திரும்பித் திரும்ப பார்த்துக் கொண்டே நடந்தார்.
ராம்சுரத்குன்வர் தன் மனைவியான ராம்ரஞ்சனி தேவியோடும், தனது குழந்தைகளோடும் கேரளாவிலுள்ள தன் குருநாதரான பப்பா ராம்தாஸ் என்கிற மகத்தான ஞானியை நோக்கி பயணமானார்.
பொங்கும் சிரிப்போடும் ராம நாமத்தையே சுவாசமாகக் கொண்ட அந்த மகான் வா… மகனே… வா.. என்று உள்ளுக்குள் வரவேற்கத் தயாரானார்.

One Comment on “யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்”

Comments are closed.