ரம்யா வாசுதேவன்/அன்னையாய் அத்தனாய் …3

அந்த அறையில் ஒரு நந்தா-விளக்கு நிதானமாக எரிந்துகொண்டிருக்கிறது. அதன் மெல்லிய பிரகாசத்தில், எம்பெருமானார் தன் திருக்கையில் ஏடுகளை ஏந்தி ஆழ்வார்களின் பாசுரங்களை அநுஸந்தித்தபடி வீற்றிருக்கிறார். அவருடைய திருமேனியின் ஒளி இருள் நீக்கும் ஞானச் சுடராக பிரகாசித்தது.
கூரத்தாழ்வான் தன் தர்மபத்னி ஆண்டாளுடன் மடத்திற்குள் நுழைந்தார் .
ஆழ்வானுக்குத் தன் ஆச்சார்யன் தான் எல்லாம். பஞ்சசம்ஸ்காரத்தின் போது தன் தோள்களில் சங்கு சக்கர இலச்சினைகளைப் பதித்து, தனக்குத் திருமந்திர உபதேசம் செய்த அந்த மகாப்ராணன் இதோ கண்முன்னே அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் ஆழ்வானின் இதயம் விம்மியது. “என்னை ஆட்கொண்ட வள்ளல் இதோ!” என்ற பெருமிதம் அவர் முகத்தில்.
அறையினுள் நுழைந்ததும், எம்பெருமானாரைக் கண்ட அந்த வினாடியே, ஆழ்வான் தன் கைகளைத் தலைமேல் கூப்பி, “ராமானுஜ ஆர்ய திவ்யாஞ்ஞா…” என்று மெல்ல முணுமுணுத்தபடி, அப்படியே தண்டம் இட்டது போல் நிலத்தில் விழுந்து சேவித்தார்.
ஒரு மகா சமுத்திரம் தன் கரையைத் தொடுவது போல, ஆழ்வான் ஆச்சார்யனின் திருவடித் தாமரைகளைத் தன் தலை பட வணங்கினார். ஆண்டாள் அம்மையாரும் மிக உயர்ந்த பக்தியுடன் ஆச்சார்யனைப் பணிந்தார்.
“வாரீர் கூரேசா, எழுந்திரும்!” என்று தன் திருக்கரங்களால் அவரைத் தூக்குகிறார்.
ஆச்சார்யனின் ஸ்பரிசம் பட்டதும் ஆழ்வான் சிலிர்த்துப் போகிறார். விளக்கு எரிகிறது, ஆனால் அங்கே பிரகாசிப்பது அந்த அகல் விளக்கின் ஒளி மட்டுமல்ல; ஆச்சார்யன் மற்றும் சீடனின் அந்தப் பரிசுத்தமான ஆத்ம பந்தத்தின் பேரொளி!
எம்பெருமானார் தன் திருவடிகளில் விழுந்து கிடந்த கூரத்தாழ்வானைத் தூக்கி, தமக்கு அருகிலேயே அமரச் சொன்னார். ஆழ்வானோ, ஆச்சார்யனுக்குச் சமமாக அமர மனமில்லாமல், சற்று தள்ளியே விநயத்துடன் நின்றார்.
எம்பெருமானார் ,””வாரீர் கூரேசா! லௌகிகமான சகல ஐஸ்வர்யங்களையும் துறந்து, ஒரு செல்வந்தராக இருந்த நீர், இன்று வெறும் இரண்டு வஸ்திரங்களுடன் என்னைத் தேடி வந்து நிற்கிறீரே… உமது திருவுள்ளம் வருத்தப்படவில்லையோ ?”
கூரேசன் ,”ஆச்சார்ய தேவே! தேவரீர் அடியேனுக்குச் செய்த பஞ்சசம்ஸ்காரமே அடியேனின் ஆகச்சிறந்த செல்வம். அந்தச் சங்கு-சக்கர இலச்சினைகள் என் தோள்களில் பட்ட போதே, இந்தப் பிரகிருதி (உலக) பந்தங்கள் எல்லாம் அறுந்துவிட்டன. தேவரீருடைய திருவடி நிழலில் ‘கங்கையும் புனிதமாய’ காவிரிக்கரையில் வாழும் இந்தப் பாக்கியம் கிடைக்க, அடியேன் எத்தனையோ ஜென்மங்கள் தவம் செய்திருக்க வேண்டும்.”
தொடர்ந்து ஆழ்வான் சொன்ன அந்த வார்த்தை அங்கிருந்த ஆண்டாள் அம்மையாரையும், எம்பெருமானாரையும் சிலிர்க்க வைத்தது.
கூரேசன் ,”தேவரீர் வெறும் மந்திரத்தை மட்டும் எனக்கு உபதேசிக்கவில்லை; உமது திருவுள்ளத்தையே எனக்குத் தந்துவிட்டீர். தேவரீர் ‘உடல்’ என்றால், அடியேன் உமது ‘நிழல்’. நிழல் தனியாக இருக்க முடியுமோ? அடியேன் தேவரீரின் உடைமை (சொத்து). உடைமையாளனாகிய நீர் எங்கு இருக்கிறீரோ, அங்கே இருப்பதே இந்த உடைமைக்குப் பெருமை!”
எம் பெருமானார் தான் செய்ய வேண்டிய காரியங்களுக்கு உண்டான சத் சம்பந்தங்கள் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து ,அரங்கனின் கட்டளைக்கு காத்து இருந்தார் .நாட்கள் நகர்ந்தது .திருவரங்க கோவில் நிர்வாக சீர்திருத்தத்தை பற்றியும் அரங்கன் அவருக்கு இட்ட பணியை நிறைவேற்ற யோசித்த படி இருந்தார் .
எம்பெருமானார் ,” கூரேசா ! நம் அரங்கனுக்கு நாம் செய்ய வேண்டிய கைங்கர்யம் தடை இல்லாமல் நடக்க வேண்டும் .கோயில் நம்பியே கோயில் காப்பாளராகவும் , கோயிலில் பஞ்சாங்கம், புராணம் வாசிப்பது வேத விண்ணப்பம் செய்வதுமாக இருக்கிறார் .கோவிலோ பெரிய கோவில் நிர்வாக சீர்திருத்தங்கள் பல செய்ய வேண்டும் “
கூரேசன் கூர்மையானர் .கூரேசன் ,” நான் அவரை சந்தித்து தங்கள் திரு உள்ளதை தெரிவிக்கிறேன் “
எம்பெருமானார் ஆழ்வானிடம், “கூரேசா! ஒருவரிடம் ஒன்றை யாசிப்பதற்கு முன்னால், அவருக்கு நாம் மேலான ஒன்றைக் கொடுக்க வேண்டும். உம்மிடம் இருப்பதை அவருக்குத் தாரும்,” என்று பணித்தார்.
ஆழ்வானிடம் இருந்தது என்ன? ஆச்சார்ய பக்தி எனும் மகாநிதி!
ஆச்சர்யனின் திருவாக்கை ஏந்திக் கொண்டார் .கோவில் நம்பிக்கு அவருக்கு தெரிந்ததை எல்லாம் பொழிந்தார் .அவருடைய வார்த்தைகள் கோவில் நம்பியை பெரிதும் மாற்றியது .
ஆழ்வான், “நம்பியே! நீர் இந்தத் திருவரங்கச் செல்வனின் சந்நிதியில் கைங்கர்யம் செய்பவர். ஆனால், அந்த அரங்கனுக்குப் பிரியமான அந்தரங்கக் கைங்கர்யம் எது என்று தெரியுமா?”
கோவில் நம்பி ,”ஆழ்வானே! சாஸ்திர முறைப்படி திருவாராதனம் செய்வதும், வேதங்களை ஓதுவதும் தானே அந்தரங்கக் கைங்கர்யம்?”
ஆழ்வான், (புன்னகையுடன்) “இல்லை நம்பியே! எம்பெருமானுக்குத் தன் திருவடிகளை விட, தன் அடியார்களான ஆச்சார்யர்களின் திருவடிகளே அதிகப் பிரியம். நீர் கோயிலின் சாவிகளை வைத்திருக்கலாம், ஆனால் பரமபதத்தின் சாவியைப் பிடித்துக் கொண்டிருப்பவர் இதோ இங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானார் ஒருவரே!”
காலங்கள் உருண்டோடின. ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகம் செம்மைப்பட வேண்டும் என்ற திருவுள்ளம் கொண்ட எம்பெருமானார், அன்று கூரத்தாழ்வானை அழைத்தார்.
எம்பெருமானார், “கூரேசா! இன்று கோவில் நம்பியின் இல்லத்தில் அவர் தாயாரின் ‘ஏகாஹம்’ (11-ஆம் நாள் சடங்கு). அங்கு தகுதியான வைணவரைத் தேடி கோவில் நம்பி காத்துக்கொண்டிருப்பார். நீர் அங்குச் சென்று அமர்ந்து, அவர் கொடுக்கும் தானத்தை நீர் சுவீகரிக்க வேண்டும்!”
ஆழ்வானுக்கு ஆச்சார்யன் சொல்லே வேதம்.
ஆழ்வான், “சுவாமி! தேவரீர் திருவடி ஆணையைச் சிரமேற்கொள்கிறேன். அடியேன் அங்குச் செல்கிறேன்.”
கோவில் நம்பியின் இல்லத்தில் சடங்குகள் முடிந்தன. அவரும் தகுதியான ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அங்கே தேஜஸ் பொருந்திய கூரத்தாழ்வான் வந்து அமர்ந்தார்.
கோவில் நம்பி வியப்புடன், “சுவாமி! தேவரீரா இங்கு? நீர் மகா வித்வான், செல்வந்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தச் சடங்கில் வந்து தானம் பெறச் சம்மதித்தது என் பாக்கியம். நீர் எதைக் கேட்டாலும் தரத் தயாராக இருக்கிறேன். உமக்கு என்ன வேண்டும்? பொன்னா? பொருளா?”
ஆழ்வான்,”நம்பியே! எனக்குப் பொன்னும் வேண்டாம், நிலமும் வேண்டாம். நீர் உண்மையிலேயே திருப்தியுடன் தானம் கொடுக்க விரும்பினால், உம்மிடமிருக்கும் அந்த ஸ்ரீரங்கம் கோயில் சாவிகளையும், நிர்வாகப் பொறுப்பையும் எனக்குத் தானமாகத் தர வேண்டும்!”
கோவில் நம்பி அதிர்ந்து போனார். அவர் உயிராகக் கருதிய அதிகாரம் அது. ஆனால், வார்த்தை கொடுத்துவிட்டார். ஆழ்வானின் கண்களில் இருந்த அந்தத் தூய்மை அவரை மாற்றியது.
கோவில் நம்பி , “ஆழ்வானே! இதோ… இந்தச் சாவிகள் இன்று முதல் உமக்குரியவை. என் கர்வத்தை ஒழித்து, இந்தச் சாவிகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.”
சாவிகளுடன் நேராக எம்பெருமானாரிடம் வந்தார் ஆழ்வான். அவர் காலடியில் அவற்றைச் சமர்ப்பித்து, “சுவாமி! அரங்கனின் சாவிகள் இதோ!” என்றார்.
எம்பெருமானார் அந்தச் சாவிகளைப் பார்த்தார், பின் ஆழ்வானைப் பார்த்தார். அங்கே ஒரு பெரிய அற்புதம் நிகழ்ந்தது.
எம்பெருமானார்: “கூரேசா! இந்தச் சாவிகள் எனக்குத் தேவையில்லை. இதன் மூலம் கோவில் நம்பியின் மனதிலிருந்த ‘அகங்காரத்தை’ நீர் அகற்றிவிட்டீர். அதுவே எனக்குப் போதும். இப்போது அவரை இங்கே அழையும்.”
கோவில்நம்பி பணிவுடன் பக்தியுடனும் எம்பெருமானார் முன் வந்து நின்றார். எம்பெருமானார் அந்தச் சாவிகளை மீண்டும் கோவில் நம்பிக்கே கொடுத்தார்.
எம்பெருமானார், “நம்பியே! இந்தச் சாவிகளை நீரே வைத்துக்கொள்ளும். ஆனால் இனி இவை உமது சொத்து அல்ல, இவை அரங்கனின் சொத்து. நீர் இந்தத் திருவரங்கத்தில் நிர்வாகம் செய்யும் போது, எல்லாம் அவன் ஆணைப்படி கைங்கர்யங்களைச் செய்ய வேண்டும். நீர் அதிகாரியல்ல, நீர் அரங்கனுக்குத் தொண்டன்!”
கோவில் நம்பி கதறி அழுதுகொண்டு எம்பெருமானார் திருவடிகளில் விழுந்தார்.”சுவாமி! இத்தனை காலம் நான் இந்தச் சாவிகளை அதிகாரமாகக் கருதினேன். இன்றுதான் இவை தொண்டுக்கான கருவி என்று உணர்ந்தேன். இனி தேவரீர் இடும் கட்டளையே என் உயிர் மூச்சு. உங்கள் திருவடி நிழலில் தேவரீர் இட்ட பணியை சிர மேற்கொண்டு செயல் படுத்துவேன் .”
எம்பெருமானார், “நம்பியே! உமது பாண்டித்தியம் இனி அரங்கனின் புகழைப் பாடப் பயன்படட்டும். நீர் இனி என் சீடன். கைங்கர்யங்களைத் தொடரும்!”
“நானும் நீயும் ஆசிரியரும் மாணவரும் அல்ல; நாம் இரு நண்பர்கள், ஒன்றாக அமர்ந்து இந்த வாழ்வின் ரகசியங்களை ஆராய்கிறோம்.”

“எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே அதிகாரம் இருப்பதில்லை. எங்கே அதிகாரம் இருக்கிறதோ, அங்கே அன்பு இருப்பதில்லை.”
ஜே .கிருஷ்ணமூர்த்தி

தொடர்ந்து வளரும் …

ரம்யா வாசுதேவன்/அன்னையாய்… அத்தனாய்….2 – விருட்சம் நாளிதழ்