
ஜெனீபர் வீட்டில் வண்ணவீண்மீனை உயரத்தில் கட்ட
என்னைத்தான் அழைப்பார்கள்..அவர்கள்
வீட்டில் ஆண்துணையில்லை.
இயேசு பிறந்தநாளில்
அக்காவும்..ஜெனீபரும்
சேர்ந்துதான் வாசலில் வண்ணக்கோலமிடுவார்கள்…
அக்கா ஜெனீபரோடு சர்ச்சுக்குப்போவாள்…
ஆயினும் ஜெனீபர் ஒருநாள்கூட கோவிலுக்கு
வந்ததில்லை.
மார்கழிமாதம் முழுவதும்
அக்கா என்னிடம் அன்பாய்
இருப்பாள்…விடிவதற்கு முன்னால் கோலமிடும் வேலையில்
அவளுக்கு என் உதவி வேண்டும்.
நானும் …அப்துல்லாவும்
பஜனைக்கூட்டத்தோடு
வீதயில் அலைந்து வீடு திரும்புவோம்..
கோவில் வெண்பொங்கல்
வாசம் வீடுவரை வந்துபோகும்.
அம்மா தலையில் ஈரம் சொட்ட…சொட்ட
குப்பையைக் கொளுத்தி
குளிர்காயும் எங்களை திட்டிக்கொண்டே கோவிலுக்குப்போவாள்.
திருப்பாவை…திருவெம்பாவையை அப்பா பாட்டிக்காக
உரக்கவாசிப்பார்.

எல்லாக்கோவில்கள் ஒலி
பெருக்கியிலும் சீர்காழிதான் முதலில் இருப்பார்…
டிசம்பர்காலபறவைபோல
கர்நாடகஇசை வந்து கூவிவிட்டுப்போகும்.
ஜெனிபர் வீட்டில் பூக்கும்
டிசம்பர்பூ அத்தனையும்
அக்கா தலையில் தான்
இருக்கும்…
ஆண்டாள் எவ்வளவு கெஞ்சி
நீராடஅழைத்தாலும் அக்கா
மட்டும் காலையில் குளிக்கமாட்டாள்.
பொங்கல் வருவதற்கான அறிகுறியாய்
வெள்ளை…செம்மண்காவிப்பூச்சுகள் தொடங்கிவிடும்.
ஆவாரம்பூக்கள் கதிரொளியில் தங்கமாய் மின்னும்…
அடிக்கரும்பிற்காய் எனக்கும் அக்காவிற்கும்
மோதல் முன்பிருந்தே தொடங்கிவிடும்.
இப்போதும் டிசம்பர் மாதம்
வருகிறது…வாசமில்லா
டிசம்பர் பூக்களைப்போல.
